“கண்ணாடிக் கூண்டுகளைக் காட்டுகிறேன், வாருங்கள்” என்று ஓரிரு மாதங்களாகச் சொல்லிக் கொண்டிருந்தார் நண்பர் ஷஃபாத்.

‘என்னத்த பெரிய கண்ணாடி கூண்டு?’ என்ற அசிரத்தை ஒரு பக்கம்; சரியான நேரம் அமையாதது ஒரு பக்கம். வாய்ப்பு தட்டிக்கழிந்தவாறே இருந்தது. இந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, இழுத்துப் பிடிக்காத குறையாக என்னை ஷஃபாத் அழைத்துச் சென்று விட்டார்.

சியாட்டில் நகரின் மையப் பகுதியில் (downtown) கால் வாசிப் பகுதிகள் Amazon-இன் ராஜாங்கம். கட்டடம் கட்டடமாகத் தனது அலுவலகங்களை அது விரிவாக்கிக் கொண்டே போய், அதன் அலுவலகம் இல்லாத சாலைகள் downtown-இல் உண்டா என்பதே சந்தேகம். புதிது புதிதாக நெடிய கட்டடங்களை கட்ட ஆரம்பித்த ‘அமேஸான்’ தன் பெயருக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்ததோ என்னவோ, நகர மையப் பகுதியில் சிறிய செயற்கைக் காடு ஒன்றை உருவாக்கி விட்டது. The Spheres எனப்படும் மூன்று பெரிய கண்ணாடி கூண்டுகள். அதற்குள் அரிய வகை செடிகள், மரங்கள். செடிகள் என்றால் வெறுமே பூந்தொட்டியில் வைத்து நீருற்றும் வகைகளல்ல. 40,000 வகை அரியு தாவரங்கள். அதில் முக்கியமானது Rubi Tree. கலிஃபோர்னியாவிலிருந்து பத்திரமாக எடுத்து வந்து, அலுங்காமல், குலுங்காமல் கண்ணாடி கூண்டுக்குள் இறக்கி, நட்டிருக்கிறார்கள். அதற்கான மெனக்கெடலும் உழைப்பும் இந்த விடியோவைப் பார்த்தபோதுதான் புரிந்தது.

ஷஃபாத் அமேஸான் ஊழியர். தமது விருந்தினராக என்னை உள்ளே அழைத்துச் சென்று சுற்றிக்காட்டினார். நிச்சயமாக வித்தியாசமான அனுபவம். பசுமையான சூழல், செயற்கை நீரோடைகள், அழகிய வடிவமைப்பு என்று The Spheres அழகு. Botanical அறிவு எதுவுமில்லாத என் மரமண்டைக்கே அந்தச் சூழல் ரம்மியமாகத்தான் இருந்தது. கண்ணாடிக் கூண்டுகளுக்குள் மரம், செடிகளுக்கு இயைந்த வகையில் ஒரே சீரான தட்பவெப்பத்தை நிர்வகிக்கிறார்கள். ஒவ்வொரு செடிக்கும் பெயர் எழுதி, கூடவே தொடாமல் பார் என்று எச்சரிக்கை வாசகம். நீச்சல் குளங்களில் போடப்பட்டிருக்குமே கால் நீட்டி சாய்ந்திருக்கும் வகையிலான இருக்கைகள் அப்படி சில உச்சியில் கூரைக்குக்குக் கீழே உள்ளன. அமேஸான் ஊழியர்கள் அதில் அமர்ந்தும் வேலை பார்க்கலாம் என்றார் ஷஃபாத். எனக்கென்னவோ மதிய உணவிற்குப் பிறகு நிம்மதியான தூக்கம் போடுவதற்கு அது வெகு தோதாக இருக்கும் என்று தோன்றியது.

மேசை, நாற்காலி, குறுகிய office cube, கம்ப்யூட்டர் என்பதெல்லாம் படு போர். ஊழியர்களின் மூளையை ஊக்குவிக்க ஏதேனும் செய்ய வேண்டும் என்பது கூகுள், மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேட்களின் அண்மைய நோக்கம். அதன் ஒரு பகுதி அமேஸானின் இந்த The Spheres. அமேஸான் ஊழியர்கள் தங்களது லேப்டாப்புகளை எடுத்துக்கொண்டு இங்கு வந்து அமர்ந்து வேலை பார்க்கலாம். ஊழியர்கள் ஒன்று கூடி அலுவலைப் பேச, விவாதிக்க திறந்த அறை. எல்லாம் இந்தச் செயற்கைக் காட்டுக்குள். மனித மூளை இயற்கையோடு தொடர்புடைய சூழலில் இருந்தால் சிறப்பாக இயங்கும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன என்கிறது The Spheres. காடுகளை அழித்து நகரங்களை உருவாக்கிவிட்டு, நகரங்களுக்குள் செயற்கைக் காடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். மனிதனுக்குள் எங்கோ ஒரு மூலையில் குற்றவுணர்ச்சி இருக்கத்தான் செய்கிறது.

மற்றொரு முக்கியமான விஷயத்தையும் தெரிவித்தார் ஷஃபாத். அங்குதான் ‘சிங்கம்’ வந்ததாம். பொய்யில்லை. தமது அகரம் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்ட சியாட்டிலுக்கு வந்த சிவகுமாரின் மைந்தர் அமேஸானில் பணிபரியும் இந்திய ஊழியர்களைச் சந்திக்க அங்கு வந்திருக்கிறார். எப்படியோ தனது காட்டிற்கள் சிங்கத்தைக் கொண்டு வந்துவிட்டது அமேஸான்.

-நூருத்தீன்

இந்நேரம்.காம்-இல் ஜுலை 8, 2018 வெளியானது.


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment