இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா – 7

by admin

7. “குத்பா” பிரசங்கம்

தாவூத்ஷா எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட நூல்களில் மிகச் சிறப்பாகக் குறிப்பிடப்படும் நூல், “குத்பா பிரசங்கம்” என்ற நூல்.

அந்நாளில் பள்ளிவாசல்களில் குத்பா பிரசங்கம் அரபு மொழியில் நடைபெறும். அதைத் தமிழில் நடத்த வேண்டும் என்று தாவூத்ஷா போராடினார்.

“நாமே இத்தகைய குத்பா பிரசங்கம் ஒன்றைத் தாய்மொழியில் எழுதி வெளியிட வேண்டும் என்று நண்பர்கள் பலரும் கேட்டுக் கொண்டார்கள். ஆதலால் குர்ஆன் மொழிபெயர்ப்பு வேலைக்கு இடையே குத்பா சொற்பொழிவுகளையும் எழுதி வெளியிட்டேன்” என்று தாவூத்ஷா கூறியுள்ளார்.

குத்பா பிரசங்கம்

“குத்பா” என்பதற்கு உரையாற்றுதல், சொற்பொழிவு என்று பொருள். என்றாலும், பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு முன் இமாம் நிகழ்த்தும் சொற்பொழிவை குத்பா பிரசங்கம் என்பது குறிக்கும்.

குத்பா பிரசங்கத்தின் முக்கிய நோக்கம்: சமுதாய மக்களை ஒன்று கூடச் செய்வது, சமயக் கருத்துகளை விளக்குவது, அன்றாட நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறி, மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வழிகாட்டுவது. மக்களுக்கு நல்ல அறிவுரைகள், ஆலோசனைகள் கூறுவது. நாயகம் (ஸல்) இப்படித்தான் குத்பா பிரசங்கங்களைச் செய்தார்கள்.

தமிழில்

தாவூத்ஷாவின் காலத்தில் பள்ளிவாசல்களில் அரபு மொழியில் குத்பா சொற்பொழிவு நடைபெறுவது வழக்கம். இதை அவர் கடுமையாக எதிர்த்தார். தமிழில் நடத்த வேண்டும் என்றும் எழுதினார், பேசினார், போராடினார்.

தமிழில் எப்படி குத்பா சொற்பொழிவு செய்ய வேண்டும் என்று அவர் எழுதிக் காட்டினார். ஓராண்டில் 52 வெள்ளிக் கிழமைகள்; இரண்டு பெருநாள் ஆகும். இந்த 54 நாளைக்குமாக 54 சொற்பொழிவுகளை எழுதினார். அதை நூலாக அச்சிட்டு வெளியிட்டார். 368 பக்கம் கொண்ட பெரிய நூல். ஆனால், விலை ஒன்றரை ரூபாய் தான்.

விளம்பரம்

இந்த நூலைப் பற்றிப் பெரிய அளவில் விளம்பரம் செய்தார். 1953 ஜூன் தாருல் இஸ்லாம் இதழில் வெளிவந்த விளம்பரம்:

“பள்ளிவாசல்களில் கூடியிருப்பவர்கள் குறட்டை விட்டுத் தூங்கிய போதிலும் அரபு மொழியிலேயே குத்பாவை ஓதி, அவர்களைத் தாலாட்டி மேலும் உறங்க வைத்தாலும் வைக்கலாமேயொழிய ஜும்ஆ பிரசங்கங்களைத் தாய்மொழியில் புரியக் கூடாது என்று தொண்டை கிழியக் கத்தித் திரிந்த முரடர்களின் காலம் அஸ்தமித்துப் போய்விட்டது.

தமிழ்நாட்டிலே முதன் முதலாகத் தமிழ் மொழியில் குத்பா பிரசங்கம் என்னும் நூலை நாம் 1930 ஜனவரியில் வெளியிட்டுப் பெரும் புரட்சியை உண்டு பண்ணினோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த அபூர்வ குத்பா பிரசங்க நூலின் மூன்றாம் பதிப்பு இப்போது வெளிவந்துள்ளது.

இந்தப் புத்தகத்தைக் கையில் ஏந்தி மின்பரில் ஏறும் இமாம் வேறு எவர் துணையுமின்றி குத்பாவை அழகாகவும், அமைப்பாகவும், அந்தஸ்தாகவும், கேட்பவர் சற்றுமே உறங்க முடியாத படியும் சரளமாகப் பிரசங்கம் புரியலாம்.

தற்கால அரசியலுக்கொத்த குத்பாக்களாகச் சில பிரசங்கங்கள் இப்புதிய மூன்றாம் பதிப்பில் சேர்த்து அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.”

இந்த விளம்பரத்திலிருந்தே குத்பா பிரசங்க நூலைப் பற்றிய பல செய்திகளை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

ஆதாரங்கள்

மூன்றாம் பதிப்பு வெளிவந்திருப்பது இந்நூலின் சிறப்பையும், இந்நூலுக்கு உலமாக்களிடம் இருந்த வரவேற்பையும் காட்டுகிறது.

உலமாக்களுக்கு மட்டுமல்ல; எல்லோருக்கும் பயன்படும்படி இந்நூல் எழுதப்பட்டிருந்தது. வேறொரு விளம்பரத்தில் தாவூத்ஷா சொல்கிறார்:

“இந்த குத்பா பிரசங்கம் ஜும்ஆவில் ஓதுவதற்கு மட்டுமே பயன்படும் என்று எண்ணிவிட வேண்டாம். இந்தப் பெரிய நூலில் மகா அரிய பெரிய விசயங்கள் எல்லாம் சேர்க்கப்பட்டு இருப்பதால், இது நம் முஸ்லிம் ஆண், பெண் அனைவருக்குமே சதா பயன்படும். இது மிக நவீன முறையில் எழுதப்பட்டிருப்பதால், நம் சோதர, சோதரிகள் லெளகிக வைதிக வாழ்க்கையில் பெரும் பயனும் புத்துணர்ச்சியும் பெறுவர். குத்பா தாய்மொழியில் ஓதலாம் என்பதற்கு இதில் ஆதாரங்கள் காட்டப்பட்டுள்ளன”

நீதிமன்றத் தீர்ப்பு

குத்பா சொற்பொழிவைத் தாய்மொழியில் நிகழ்த்தலாமா? இது பற்றி 2000 ஆம் ஆண்டில் கேரளாவில் ஒரு வழக்கு நடந்தது.

கேரளாவில் ஒரு பள்ளிவாசலில் மலையாள மொழியில் குத்பா சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. அதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக்குத் தொடுத்தார். நீதிபதி கே.ஏ.அப்துல் கபூர் விசாரித்து, 7.4.2000 அன்று தீர்ப்புக் கூறினார்.

“பள்ளிவாசலில் மலையாள மொழியில் குத்பா சொற்பொழிவு நிகழ்த்தலாம். அதைத் தடை செய்ய எந்தக் காரணமும் இல்லை” என்று நீதிபதி கே. ஏ. அப்துல் கபூர் தனது தீர்ப்பில் சொன்னார்.

“குத்பா பற்றி குர்ஆனில் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபு மொழியில் குத்பா பிரசங்கம் செய்தார். ஏனென்றால், அவர் அரேபியர்களுக்காக உரை நிகழ்த்தினார்” என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

“நபியே! ஒவ்வொரு தூதரும் தம் மக்களுக்குத் தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு, அவருடைய மக்களின் மொழியைக் கொண்டே போதனை புரியுமாறு நாம் அவர்களை அனுப்பி வைத்தோம்” என்று திருக்குர்ஆன் (14:4) கூறுகிறது.

(தொடரும்)

நூல்: இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா

ஆசிரியர்: முனைவர் அ. அய்யூப்

Related Articles

Leave a Comment