நெல்லிக்குப்பம் மவுண்ட் ஹிரா அகாடமி மாணவர்களின் கல்வி ஆர்வத்தை வளர்க்கும் விதமாக பாடத்திட்டம், இணைப் பாடத்திட்டம் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. பாடநூல்களைத் தாண்டி கற்றலே முழுமையான கல்வி என்பது அதன் குறிக்கோள். அதன் ஓர் அங்கமாக 2021 அக்டோபர் மாதம் நிகழ்வொன்றை அது ஏற்பாடு செய்திருந்தது. மனித குலம் அனைத்திற்கும் முழுமையான முன்மாதிரியாகத் திகழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை மாணவர்கள் படித்து உணர “நபிகளாரின் நற்குணங்கள்”, “நபிகளார் – ஒரு முழுமையான முன்மாதிரி” என்ற தலைப்புகளில் 3, 4, 5 ஆம் வகுப்பு மாணவர்கள் மத்தியில் பேச்சுப் போட்டியை அது நடத்தியது.
கொரோனா பேரிடரினால் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்ததால், பேச்சுப் போட்டிக்கான உரையை ஐந்து நிமிடங்களுக்கு மிகைப்படாத விடியோவாக பதிவு செய்து அனுப்பும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. மாணவ-மாணவியர் பெரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது உரைகளை அனுப்பி வைத்திருந்தனர். தேர்வுக்குழு அவை அனைத்தையும் கண்டு பரிசீலித்து முதல் மூன்று பரிசுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுத்தது.
முதல் பரிசு பெற்றவருக்கு நூருத்தீன் எழுதிய “தோழர்கள் – முதலாம் பாகம்”
இரண்டாம் பரிசு பெற்றவருக்கு N.B. அப்துல் ஜப்பார் எழுதிய “நபி பெருமானர் வரலாறு”
மூன்றாம் பரிசு பெற்றவருக்கு நூருத்தீன் எழுதிய “தோழியர்”
ஆகியன வழங்கப்பட்டன.
ஆர்வத்துடன் பங்கேற்ற பிற மாணவர்களுக்கு ஆறுதல் பரிசாக புத்தகங்களும் அனைவருக்கும் சான்றிதழ்களும் அளிக்கப்பட்டன.
இந்நிகழ்விற்கு உதவி புரிந்த சகோ. நூருத்தீன் அவர்களுக்கு மவுண்ட் ஹிரா அகாடமியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நமது நல்லறங்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள இறைஞ்சுகிறோம்.
-ஃபெரோஸ்கான்