இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா – 9

by admin

9. பெண்கள் விடுதலை

இஸ்லாம் பெண்களுக்குச் சம உரிமை அளித்திருக்கிறது. ஆனால், அது முஸ்லிம் சமுதாயத்தில் நடைமுறையில் இருக்கிறதா?

1925 ஆம் ஆண்டில் “நம் சகோதரிகள்” என்ற தொடர் கட்டுரையை தாருல் இஸ்லாம் இதழில் தாவூத்ஷா எழுதினார். 1925 டிசம்பர் இதழில் அவர் எழுதியிருப்பது:

“ஆண்டவன் நம் சகோதரிகளைக் காற்றும் வெளிச்சமும் கூட நுழையாத அறைகளிலும் வீடுகளிலும் போட்டு அடைத்து வைக்கும்படி எவ்விடத்திலேனும் கட்டளையிட்டிருக்கிறானா? இல்லவே இல்லை. பெண்மணிகளையும் சம உரிமை உள்ளவர்களாக நடத்தும்படி ஏவியுள்ளான்.

“அவனுடைய திருத்தூதரும் நம்முடைய ஞானகுருவுமாகிய முஹம்மது நபி (ஸல்) அவர்களாவது இவ்விதம் இருட்டறையில் அடைத்து வைக்க அனுமதி அளித்திருக்கிறார்களா? ஆனால், அதற்கு மாறானவற்றையே உபதேசித்தும் அனுஷ்டித்தும் காட்டியிருக்கிறார்கள்.”

நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களுக்கு ஏன் உரிமை வழங்கினார் என்ற வரலாற்றையும் இக்கட்டுரையில் தாவூத்ஷா தெரிவிக்கிறார். அவர் தொடர்ந்து எழுதுகிறார் –

அரேபியப் பெண்கள்

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் அரேபியர்கள் பெண்களை மிகவும் கேவலமாக மதித்தார்கள். பெண் குழந்தைகளைப் பிறந்தவுடன் உயிரோடு புதைத்துக் கொன்று விடுவார்கள். ஆண் குழந்தைகளை பேணி வளர்த்து வந்தார்கள். இத்தகையக் கொடிய சிசுக் கொலையில் ஈடுபட்டிருந்த அவ்வரக்கர்களையும் நாயகம் (ஸல்) அவர்கள் நேர்வழியில் ஆக்கினார்கள்.

பின்னர் அவர்களைப் பார்த்து, “உங்கள் மனைவியரை அடிக்க வேண்டாம். நீங்கள் சாப்பிடும்போது உங்கள் மனைவியையும் சாப்பிடச் செய்யுங்கள். நீங்கள் உடுத்திக் கொள்ளும்போது அவளையும் உடுத்திக் கொள்ள செய்யுங்கள். அவளது கன்னத்தில் நீங்கள் அறையக் கூடாது. அவளை வைதலும் மனவருத்தத்தால் விலக்கி வைப்பதும் தகாத காரியமாகும்” என்று உபதேசித்தார்கள்.

அப்போது அவர்களின் தோழர்களில் ஒருவர், “இதைக் கேட்டது முதல் எல்லாப் பெண்களும் தங்கள் கணவன்மார் மீது அதிகாரம் செலுத்தத் தொடங்கி விட்டார்கள்” என்று சொன்னார்.

அதற்கு நபி பெருமானார் (ஸல்) அவர்கள், “அதிகமான பெண்கள் தங்கள் கணவன்மாரின் கொடுமையைப் பற்றிப் புகார் செய்ய என் குடும்பத்தாரிடம் வந்திருக்கிறார்கள். தங்கள் மனைவியை அடிக்கும் கணவன்மார் நல்ல மனிதர்கள் அல்லர். ஒரு பெண் பிள்ளையை அனாதையாக அலைந்து திரியும்படி விட்டு விடுகிறவன் என் மார்க்கத்தில் சேர்ந்தவன் ஆகான்” என்று விடையளித்தார்கள்.

நம் சகோதரிகளை அடிமைகள் போல் அடைத்து வைத்து, அதையே கெளரவமென்று கருதும் நாமும், அத்தகைய தாராள சிந்தையுள்ள நபி பிரானின் (ஸல்) மார்க்கத்தினர் தாமோ?

திருநபியவர்கள் (ஸல்) பெண்மணிகளைப் பற்றி, “பெண்கள் ஆண்களின் இரட்டைப் பிறவியாயிருக்கிறார்கள்” என்று புகழ்ந்திருக்கையில், அப்பெண்மணிகளை அடைத்து வைத்திருக்கும் நாம் நல்ல முஸ்லிம்கள் ஆவோமா?” என்று கேட்கிறார் தாவூத்ஷா.

சுதந்திரமாக

அவருக்கு 4 மகள்கள். நாலு மகள்களையும் முழுமையான உரிமைகளுடன் சுதந்திரமாக வளர்த்தார்.

அந்தக் காலத்தில் முஸ்லிம் பெண்கள் பள்ளிக் கூடத்துக்குப் போய்ப் படிப்பதில்லை. அரபிப் பள்ளியில் சேர்ந்து திருக்குர்ஆன் ஓத மட்டும் கற்றுக் கொள்ளுவார்கள். பள்ளிக்கூடத்தில் சேர்ந்து நாலு, ஐந்து வகுப்புப் படித்த முஸ்லிம் பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

தாவூத்ஷா தன்னுடைய 4 மகள்களையும், பள்ளிக்கூடத்தில் சேத்ந்தார். பள்ளி இறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) வரை படிக்க வைத்தார்.

நான்கு மகள்களுமே நல்ல எழுத்தாற்றல், பேச்சாற்றல் உள்ளவர்களாக விளங்கினார்கள். தாவூத்ஷா சில நேரம் அவர்களுடன் அரசியல், சமுதாயப் பிரச்சனைகளை விவாதிப்பது உண்டு.

தாருல் இஸ்லாம் இதழை நடத்துவதில் நாலு மகள்களுமே தந்தைக்கு உதவியாக இருந்தார்கள். குறிப்பாக மூத்த மகள் ரமீசா தாருல் இஸ்லாம் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாள் விழாக்களில் கலந்து கொண்டு பேசினார். மணமான பின் கணவர் தொடங்கிய “முஸ்லிம் முரசு” இதழின் நிர்வாக ஆசிரியராக இருந்தார்.

கடைசி மகளான சிராஜ் பேகம் 1956 இல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவின்போது சென்னை வானொலியில் பேசிய செய்தி “தாருல் இஸ்லாம்” இதழில் இருக்கிறது.

தனியே பறந்தார்

நான்கு மகள்களையும் நல்ல இடத்தில் மணம் செய்து கொடுத்தார் தாவூத்ஷா. யாருக்கும் வரதட்சணை கொடுக்கவில்லை. யாரையும் “வீட்டோடு மாப்பிள்ளை”யாக வைத்துக் கொள்ளவில்லை. திருமணம் முடிந்ததும் பெண்ணை அழைத்துக் கொண்டு போய்விட வேண்டும் என்று சொன்னார்.

முதல் மூன்று மகள்களுக்கு உள்நாட்டு மாப்பிள்ளைகள் கிடைத்தார்கள். கடைசி மகள் சிராஜ் பேகத்துக்கு மட்டும் மலேசியா மாப்பிள்ளை.

அந்நாளைய வெளிநாட்டு மாப்பிள்ளைகள் திருமணம் முடிந்ததும் பெண்ணை விட்டுவிட்டு வெளிநாட்டுக்குப் போய் விடுவார்கள். இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை வந்து, ஓரிரு மாதம் இருந்து விட்டுப் போவார்கள்.

ஆனால், ‘பெண்ணை கையோடு அழைத்துப் போய் விட வேண்டும்’ என மலேசியா மாப்பிள்ளைக்கு தாவூத்ஷா நிபந்தனை விதித்தார். அவரும் ஒப்புக் கொண்டார். ஆனால், திருமணம் முடிந்ததும் அவசரமாக மலேசியாவுக்குப் போக வேண்டியதாகி விட்டது. போனவர் உடனடியாகத் திரும்பி வரவில்லை. இதற்கு இடையே சிராஜ் பேகம் குழந்தை உண்டானார். கைக் குழந்தையை எடுத்துக் கொண்டு, தனியே விமானம் ஏறி, மலேசியாவுக்குப் பறந்து, கணவருடன் சேர்ந்தார்.

கலப்பு மணம்

சில முஸ்லிம் இளைஞர்கள் பிற சமயப் பெண்களை மணந்து கொண்டு தாவூத்ஷாவிடம் வாழ்த்துப் பெற வருவார்கள். அவரும் அவர்களை வரவேற்று வாழ்த்துவார். இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டு, மார்க்க வழியில் வாழும்படி யோசனையும் கூறுவார்.

அவருடைய பேரன் ஒருவரே தன்னுடன் கல்லூரியில் படித்த பிற சமயப் பெண்ணை காதலித்து மணந்து கொண்டார். இரகசியமாகத் தனிக்குடித்தனமும் நடத்தினார். இது தெரிந்ததும், தாவூத்ஷா அவர்களை அழைத்து, இஸ்லாமிய முறைப்படி நிக்காஹ் செய்து கொள்ளக் கூறி, மார்க்க வழியில் வாழும்படி வாழ்த்தினார்.

பெண்கள் கல்லூரி

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதி அரசராக இருந்த பசீர் அகமது, சென்னையில் பெண்களுக்காக ஒரு கல்லூரியை நிறுவினார்.

இதற்கு முஸ்லிம் உலமாக்களிடம் பலத்த எதிர்ப்பு. “பெண்களுக்குக் கல்லூரி அமைக்கக் கூடாது. இது மார்க்கத்துக்கு விரோதமானது” என்று கண்டனக் குரல் எழுப்பினார்கள்.

அப்போது தாவூத்ஷா, நீதியரசர் பசீர் அகமதுக்கு முழு ஆதரவளித்தார். பெண்களுக்கு கல்லூரி அமைப்பதை ஆதரித்துப் பேசினார்; அறிக்கைகள் வெளியிட்டார்; தாருல் இஸ்லாம் இதழில் காரசாரமாக எழுதினார்.

பெண்களுக்குக் கல்வி வேண்டும் என்பதற்குத் திருக்குர்ஆனில் இருந்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வார்த்தைகளில் இருந்தும் ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூறி, தாவூத்ஷா ஆதரவு திரட்டினார்.

கல்லூரி நிறுவப்பட்டு இப்போது சிறப்பாக நடந்து வருகிறது. அந்தக் கல்லூரிதான் சென்னை தேனாம்பேட்டையிலுள்ள எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரி.

முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்

இன்று எத்தனையோ முஸ்லிம் பெண்கள் எழுத்தாளர்களாக விளங்குகிறார்கள். அந்த நாளில் இது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று. முதல் தமிழ் முஸ்லிம் பெண் எழுத்தாளரையும் தாவூத்ஷாவே உருவாக்கினார்.

நாகூரைச் சேர்ந்த சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணிதான் எழுத்தாளரான முதல் தமிழ் முஸ்லிம் பெண். அவர் எழுதிய முதல் சிறுகதை, 1929 ஆம் ஆண்டு தாருல் இஸ்லாம் இதழில் வெளிவந்தது!

தாருல் இஸ்லாம் வாசகியான சித்தி ஜுனைதா பேகம் தனது முதல் சிறுகதையை முஸ்லிம் பெண்களின் உரிமைக்குப் போராடிய தாவூத்ஷாவுக்கு அனுப்பி வைத்தார். ஒரு பெண் எழுதிய சிறுகதை என்றதும், தாவூத்ஷாவுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! “முஸ்லிம் பெண்கள் கூடக் கதை எழுதத் தொடங்கி விட்டார்கள்” என்று பெருமிதத்துடன் சிரித்தார். அந்தக் கதையை தாருல் இஸ்லாம் இதழில் உடனே வெளியிட ஏற்பாடு செய்தார்.

சித்தி ஜுனைதா பேகம் படிப்பறிவு இல்லாதவர். தாருல் இஸ்லாம் படித்துத்தான் செந்தமிழைக் கற்றுக் கொண்டார். எழுதவும் தொடங்கினார். பிற்காலத்தில் நிறையச் சிறுகதைகளும், பெருங்கதைகளும் எழுதினார்.

முஸ்லிம் பெண்களைத் தமிழ் படிக்க வைத்தது, தாருல் இஸ்லாம் தான். அதன் இனிய செந்தமிழ் நடை பெண்களைப் படிக்கத் தூண்டியது. தாருல் இஸ்லாம் படித்த பெண்கள் விடுதலை வேட்கை பெற்றார்கள்!

(தொடரும்)

நூல்: இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா

ஆசிரியர்: முனைவர் அ. அய்யூப்

Related Articles

Leave a Comment