இதர மதங்களை இகழும்படி இஸ்லாம் போதிக்கவில்லை

by admin

“இஸ்லாம் ஒரு இயற்கை மதம்; ஈடிணையற்ற சாந்தி மார்க்கம். இதர மதஸ்தர்களை இதழ்வதோ தூஷிப்பதோ முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித கொள்கைகளுக்கு அடுக்காச் செயல்களாகும்.

இஸ்லாத்தின் சீரிய தத்துவங்களை எடுத்தோத வேண்டியது நமது கடன். அதில் பற்றுக் கொண்டவர்கள் அதைப் பின்பற்றலாம். மக்களை வற்புறுத்தி வலிந்திழுக்க வேண்டியதில்லை. ஆரம்பத்தில் ஐந்து பேர் தானும் பின்பற்றுவதற்குத் தயங்கிய இம்மதம் இன்று பூவுலகத்தின் ஐந்திலொரு பகுதி மக்களை வசீகரித்திருக்கிறது. இதரர்களையும் கவர்ந்து ஏக சகோதரத்துவத்தை நிலைநாட்ட இஸ்லாத்தின் இயற்கை சக்தியே வலிமையுடையது” என்று இஸ்லாமிய தத்துவ வித்தகரும் ‘தாருல் இஸ்லாம்’ ஆசிரியருமான அல்ஹாஜ் பா. தாவூத்ஷா கடந்த வெள்ளிக்கிழமை கற்பிட்டியில் வெகு விமரிசையாக நடைபெற்ற நபி தின விழாவில் பேசினார்.

விழாவிற்கு அன்பர் பூபதிதாஸர் தலைமை வகித்துப் பேசுகையில் முஹம்மது நபி அவர்கள், மனிதர்கள் மனிதர்களாய் வாழ்வதற்கு வழி வகுத்தவர்கள் என்றும் இந்த நாட்டில் வாழப்பிறந்த மக்கள் கர்ப்பத்தடை முதலியவற்றில் ஈடுபட்டு ஜன உற்பத்தியைக் குறைத்து விடலாகாதென்றும் இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் இனம் தொகையில் குறைந்து கொண்டு போவதால் அவர்கள் உற்பத்தியை அதிகரித்து என்றாவது ஒரு நாள் ஒரு தமிழரோ ஒரு முஸ்லிமோ இந்த நாட்டின் பிரதம மந்திரியாக வரவேண்டும் என்றும் கூறினார்.

‘தாருல் இஸ்லாம்’ உதவி ஆசிரியா ஜனாப் ஜப்பார், திரு எஸ். டி. சிவ நாயகம், ஜனாப் வி. எம். ஷம்சுத்தீன், திரு மரியாம் பிள்ளை ஆசிரியர் ஆகியோரும் இவ்விழாவில் கலந்து சொற்பொழிவாற்றினர்.

சுதந்திரன், 14-12-1952
(இச்செய்தியை சகோ. கடற்கரய் மத்தவிலாச அங்கதம் அனுப்பியிருந்தார். அவருக்கு மனமார்ந்த நன்றி)

oOo

Related Articles

Leave a Comment