ஷஜருத்தூர் என்.பி. அப்துல் ஜப்பார்

by admin

“இறைவன் தூய்மையானவன் என்பதை தூய்மையாகப் படைக்கப்பட்ட மனிதன் முதற்கண் ஏற்றுக்கொள்ளக் கட்டுப்பட்டிருக்கிறான். எந்த நிமிடத்தில் மானிடன் இதை ஏற்கத் தவறிவிடுகிறானோ; மறுத்து விடுகிறானோ; மறந்து விடுகிறானோ அந்த நிமிடமே தூய்மை இழந்து ஆபாசமான அழுக்குகளைத் தன் நெஞ்சத்தில் குடிபுகுமாறு செய்துவிடுகிறான்.

இவ்வாறு ஒருவன் தனது உள்ளத்தை மாசுறுமாறு செய்வதிலிருந்து விடுபட வேண்டுமானால் ‘தூய்மை மிக்கது’ என்னும் பொருளுள்ள ‘தய்யிப்’ ஆகிய கலிமாவைமனமார உச்சரிக்க வேண்டியது அவசியமாகிறது. அழுக்குப் படிந்த துணியை சோப்பு அல்லது ‘டிட்டர்ஜன்ட்’ எனும் சோப்புத் தூள் எப்படித் தூய்மைப்படுத்துகிறதோ, அதே விதமாகக் கலிமாத் தய்யிப் என்னும் பரிசுத்த நம்பிக்கை யாவரின் மாசுபடிந்த உள்ளத்தையும் தூய்மை அடையச் செய்துவிடுகிறது. 100க்கு 100 உள்ளத் தூய்மையை உண்டுபண்ணும் சக்தி பெற்றிருக்கும் காரணமாகத்தான் ‘லாஇலாஹ இல்லல்லாஹ்; முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்னும் கலிமா வாசகம் ‘தய்யிப்’ என்றழைக்கப்படுகிறது. அதாவது, இந்த நம்பிக்கை குடிபுகுந்த உள்ளம் 100 சதவீதம் தூய்மை பெறுகிறது.

பிறவி முதல் ஒவ்வொரு துறையிலும் வகையிலும் கலப்படம் களைந்து பரிசுத்தமாக வாழ்ந்து, தூய்மையைக் கடைபபிடித்து, முழுத் தூய்மையாக இறைவனடி சேர வழி கற்பிக்கும் மார்க்கம் ஒன்றே ஒன்றுதான் உலகில் உண்டு. அதுதான் இஸ்லாம். சுத்த சாந்திய மயமான இஸ்லாம் இவ்வுலகில் 100 சதவீதம் தூய்மையைப் புகட்டி ஒரு மூமினை அப்பழுக்கற்றவனாக ஆக்கிவிடும் காரணத்தால்தான் அப்பட்டமான தூய்மை நிலவும் சுவர்க்கத்தை மறுவுலகில் அனுபவிக்க அவன் 100 சதவீதம் அருகதை பெற்றுவிடுகிறான்; முழு வெற்றி அடைந்துவிடுகிறான். (குர்ஆன் 23ஆவது அத்தியாயத்தின் தொடக்க வாசகங்களை ஊன்றிப் படித்து உண்மையுணருங்கள்).

எனவே, 100 சதவீதம் தூய்மைதான் இஸ்லாம். இப்படி 100க்கு 100 முழுப் பரிசுத்தம் புகட்டும் வல்லமை பெற்ற மற்றொரு மார்க்கம் உலகிலில்லை. தங்கக் கட்டியில், குடிநீரில், மூச்சுவிடும் காற்றில் எல்லாம் உள்ள குறைகளை அகற்ற எவராலும் முடியாது. ஆனால், இஸ்லாத்தை ஏற்ற எந்த ஆன்மாவும் ‘தூய்மை 100 சதவீதம்’ என்னும் முத்திரையை ஈருலகிலும் அழுத்தமாய் பொறிக்கப் பெற்றுவிடுகிறது. இது 100 சதவீதம் உண்மை.

காத்துக் காத்துப் பூத்துப் போயிருந்த கண்களுக்கோர் விருந்தாகவும் தகர்ந்துபோய்க் கிடந்த தர்மநெறி தழைத்தோங்கவும் எதிர்கால உலகம் சகல துறைகளிலும் முன்னேற்றம் பெறவும் தரணியின் தவப் புதல்வராம், மக்காவின் குலமகனாம், மதீனாவின் மணிவிளக்காம் மாநபி – இறைவனின் இறுதித் தூதர் நகருக்குள் பிரவேசித்தார். அது வெள்ளிக்கிழமை. வைகறை நேரம். வானுலகோர் வாழ்த்த யதுரிப் வாசிகள் துள்ளி மகிழ, அந்த வட்டாரம் என்றும் கண்டிராத மகத்தான வரவேற்பு விழா கட்டவிழத்துக் கொண்டது. விவரிக்க முடியாத அத்துணை விசித்திரமான நல்வரவேற்பு அந்நபிக்கு அன்று அங்கு வழங்கப்பட்டது என்று சுருக்கமாகச் சொல்லி முடிப்போம். இப்படிப்பட்ட ஒரு பட்டணப் பிரவேசம் எப்போழுதும் எங்கும் நடந்திருக்க முடியாது என்று அக்கால வரலாற்றாசிரியர்கள் அன்றைய நிகழ்ச்சியை வருணித்தெழுதியிருக்கிறார்கள்.

யதுரிப், நபி புகுந்த நன்னகராக ஆயிற்று. அன்றே யாவரும் தங்கள் நகரின் பெயரை முன்பு நாம் அறிவித்தவாறு மதீனத்தின் நபி என்று மாற்றிவிட்டார்கள்.

நகருக்குள் பிரவேசித்த நபியை நிரந்தர விருந்தினராக ஏற்றுக்கொள்ளும் மகத்தான பாக்கியம் தத்தமக்கும் கிட்டவேண்டும் என்றே அத்தனை மதீனாவாசிகளும் ஆசைப்பட்டார்கள். பெருந்தனம் படைத்த வர்த்தகர்கள், செல்வமும், செல்வாக்கும் மிக்க அதிபர்கள் பரம ஏழைகள் நடுத்தரக் குடும்பத் தலைவர்கள் ஆகிய ஒவ்வொருவருமே நபியை ஏற்றுக்கொள்ளப் போட்டியிட்டார்கள். எந்த ஒருவரின் அழைப்பை ஏற்றாலும் மற்ற அனைவர்க்குமே அதிருப்திதான் ஏற்படும் என்கிற சூழ்நிலை உருவாகியிருக்கிறது. முன்பு சுமார் 18 ஆண்டுகட்கு முன்னால் எல்லா மக்கா குலத்தினரையும் திருப்திப்படுத்தி ஹஜ்ருல் அஸ்வத் கல்லைக் கஅபா ஆலயச் சுவர் மீது பொருத்திவிட்ட அண்ணல் நபிக்கு இப்போது இப்படி ஒரு சோதனை.

”நண்பர்களே…! தோழர்களே…! உங்கள் நல் விசுவாசத்திற்கு எப்படி நன்றி நவில்வதென்றே எனக்கு ஒன்றும் புலப்படவில்லை. இந்நகருக்குள் நான் கால் நடையாக நடந்துவந்துதான் பிரவேசிக்க வேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால், என் நண்பர்கள், நான் வாகனத்தின் மீது அமர்ந்துதான் பட்டணப் பிரவேசம் நிகழ்த்த வேண்டும் என்று பணித்துவிட்டார்கள். எனவே நான் என்ன முடிவுக்கு வந்திருக்கிறேனென்றால் இந்த ஒட்டகத்தை எவரும் தடுக்க வேண்டாம். இது நடந்து எந்த இடத்தில் போய்த் தானாகவே நிற்கிறதோ அந்த இடத்தின் எதிரிலுள்ள இல்லத்தில் நான் இறங்கிவிடுகிறேன். இதுதான் நல்லது. அல்லாஹ்வுக்குத் தெரியும் தன்னுடைய நபியை எந்த இடத்தில் இறக்கிவிடவேண்டும் என்று”.

‘ஒட்டகத்துக்கு வழிவிடுங்கள்’ என்னும் கட்டளை பிறந்ததும் அங்கிருந்த அத்தனை பேருக்கும் பெரிய மின் அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனென்றால்… புதினம் போல் விறுவிறுப்பாகத் தொடர்கிறது, ‘நபி பெருமானார் வரலாறு’.

எழுதியவர்

சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், துணிச்சலான பத்திரிகை ஆசிரியர், நூல் ஆசிரியர், பதிப்பாசிரியர், விமர்சகர் என்ற பல சிறப்புகளுக்குரிய அந்தக் காலத்துப் பட்டதாரி அப்துல் ஜப்பார் அவர்கள். தமிழகப் பத்திரிகையுலக முன்னோடி ஆசிரியர், பா.தாவூத்ஷா சாகிப் பி.ஏ. அவர்களின் புதல்வரான அவர், ‘என்.பி.ஏ.’ என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்தவர்.

தாருல் இஸ்லாம்

அரை நூற்றாண்டு கால எழுத்துத்துறை அனுபவமுடைய பழுத்த எழுத்தாளரான என்.பி.ஏ. 1941 இல் சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. மாணவராக இருந்தபோதும், அதற்குமுன் கிறிஸ்துவக் கல்லூரியில் பயின்ற சமயத்திலேயும் தமிழ்மொழிப் புலமைக்கான பரிசுகளைப் பெற்றார். பள்ளி மாணவப் பருவத்திலேயே ‘தாருல் இஸ்லாம்’ இதழில் எழுதத் தொடங்கினார். 1940 இல் ஒரு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றார். மாநிலக் கல்லூரியின் சிறப்புப் பரிசு ஒன்றை 1911 இல் அவருடைய தந்தையார் பா.தாவூத்ஷா சாகிப் பி.ஏ.யும் 30 வருடங்களுக்குப் பிறகு 1941இல் என்.பி.ஏ.வும் பெற்றது மறக்க முடியாத ஒரு நினைவு என்று கருதுகிறார்.

தம் தந்தையாரின் ‘தாருல் இஷ்லாம்’ மாத இதழின் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்து சிறு கதைகளையும், கட்டுரைகளையும், விமிர்சனங்களையும் ஏராளமாக எழுதிக் குவித்தார், என்.பி.ஏ. தந்தையாருடன் திருக்குர்ஆன் விரிவுரை எழுதி வெளியிடும் பணியையும் தொடர்ந்து மேற்கொண்டார். நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றையும் சிறப்பாக எழுதி வெளியிட்டார்.

சிறுகதை

‘அறங்காவற்காரி’ ஒரு சிறுகதையின் தலைப்பு இது. பல ஆண்டுகளுக்கு முன்பு பிரசுரமான அந்தச் சிறுகதைக்கு வாசகர்கள் அமோகமான பாராட்டு வழங்கியிருந்தார்கள். சில எழுத்தாளர்களாலும் ‘அறங்காவற்காரி’ பாராட்டப்பட்டிருந்(தாள்)தது.

‘அறங்காவற்காரி’ சிறப்புச் சிறுகதை ரசித்துச் சித்திக்கும்படியாய் இருந்தது. 1953 இல் தாருல் இஸ்லாம் படித்தபோது இருந்த நடை, பழமையின் இனிமையைக் காண முடிந்தது. இதுபோல் பழைய எழுத்தாளர்களின் எழுத்தோவியங்களை அவ்வப்போது வெளியிட்டால் நன்றாயிருக்கும்’ என்று வாசக அன்பர் ஒருவர் விமர்சித்திருந்தார்.

கதாசிரியர் யார்? மற்றொரு விமர்சனம் காட்டிக் கொடுத்தது. ‘என்.பி.அப்துல் ஜப்பார் அவர்களின் கைவண்ணத்தைப் படிக்கும்போது தாருல் இஸ்லாம் பத்திரிகையைப் படித்தது போன்றே இருந்தது. பேராசிரியரின் சாகாவரம் பெற்ற ஜீவ இலக்கியங்கள் தாருல் இஸ்லாத்தில் வெகு சில உண்டு. அவற்றை மறுபடியும் இடம்பெறச் செய்தால் இக்கால இளந்தலைமுறையினருக்குப் பெரிதும் பயன்படும் என்பது அந்த அறிமுகம்.

அறங்காவற்காரி வாசகர்களை வெகுவாகக் கவர்ந்ததற்கு பல காரணங்கள் உண்டு. கதையின் மையக்கருத்து வலுவானது. திருமணம் ஆனதும் கணவன் வெறிபிடித்து ஓடிவிட்டால் மனைவி என்ன செய்வாள்? இளம்பெண் ஜீனத் அந்தச் சோதனைக்கு ஆளானாள். கணவனின் உடைமைகளைக் காவற்பொருளாகக் காக்கும் கடமையில் ஈடுபடுகிறாள். ஓடிப்போன கணவனுக்கு ஜீனத் கொடுத்து வரும் மதிப்பு படிப்பவர் நெஞ்சைத் தொடுவது இயல்புதான். கற்பனை என்று சொல்ல முடியாத அளவுக்கு உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தினால் ‘அறங்காவற்காரி’ உருவாக்கப்பட்டிருப்பாளோ என்று எண்ணும் அளவுக்கு கதை அமைந்திருந்தது.

ஷஜருத்தூர்

என்.பி.ஏ. அவர்களின் இலக்கிய சாதனைக்குச் சிகரமாக அமைந்தது. மிகப் பெரும் சரித்திர நாவலான ஷஜருத்தூர். ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களில் 35 ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய ஷஜருத்தூர் இஸ்லாமியத் தமிழ் நாவல் இலக்கியத்தில் ஒரு முக்கியத் திருப்புமுனை. தாருல் இஸ்லாம் மாத இதழில் தொடர்கதையாக வந்து, இரு பாகங்களில் நாவலாக வெளிவந்த ஷஜருத்தூர் மகத்தான ஒரு படைப்பு என்றாலும், அதற்கு உரிய அங்கீகாரம் கிடைத்ததாகச் சொல்வதற்கில்லை. பரவலான அறிமுகமும். விளம்பரமும் அந்த நாவலுக்கு கிட்டவில்லை என்பதே அதற்குக் காரணம்.

சிலுவைப் போர்க்காலப் பின்னணியில் மிகப் பெரிய முயற்சியுடனும் ஆழ்ந்த ஆராய்ச்சிகளுடனும் ஷஜருத்தூர் படைக்கப்பட்டிருக்கிறது. அதுபற்றி என்.பி.ஏ. சொல்கிறார்: ‘ஷஜருத்தூர் நாவலை நான் எழுத ஒரு முக்கியக் காரணம், பி.ஏ. வகுப்பில் நான் படித்த ஐரோப்பிய வரலாறு. காரிருளில் மூழ்கி சாதாரண மனித நாகரிகங்கள் கூட அறிந்திராத ஐரோப்பிய கிறித்துவர்கள் சிலுவைப் போர்களின் காரணமாக முஸ்லிம்களுடன் கொண்ட தொடர்பினாலேயே அகவெளிச்சம் – புறவெளிச்சம் பெற்றனர். அப்படியிருந்தும் மேனாட்டுக் கிறித்துவர்கள் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் இழித்தும் பழித்தும் எழுதி வந்தள்ளனர். அந்த ஆசிரியர்களின் ஆணவம்தான் என்னை இந்த நாவலை எழுதத் தூண்டிற்று’.

ஷஜருத்தூர் துருக்கியிலிருந்து எகிப்தில் குடியேறிய ஓர் அடிமைப்பெண். ஆனால், அசாத்தியமான அறிவாளி. சலாஹுத்தீனின் வம்சத்தில் வந்த சாலிஹ் ஐயூபி மன்னருக்கு மறுதாரமாக வாழ்க்கைப்பட்ட அவள், வெளிநாட்டுப் போரில் ஈடுபட்டிருக்கும்போது எகிப்தின் ஆட்சியை ஷஜருத்தூரே கவனிக்கிறாள். மன்னர் அகால மரணம் அடைகிறார். கிறித்துவப் படைகள் கெய்ரோவை நெருங்கிவிட்டன. மன்னர் மரித்த செய்தியை மறைத்து முஸ்லிம் படைகளுக்கு ஊக்கமூட்டி போரில் வெற்றி பெறுகிறாள். இதுவே எட்டாவது சிலுவைப் போர். பிரெஞ்சு மன்னன் எட்டாவது லூயி காவலில் வைக்கபடுகிறான். சரித்திரம் தொடர்கிறது… ஷஜருத்தூர் பல போராட்டங்களுக்குப் பிறகு அரியணை ஏறுகிறாள். வரலாற்றில் அரியணை ஏறிய முதல் முஸ்லிம் பெண்ணரசி அவளே. ஆபத்து சூழ்கிறது. ஒரு பெண் ஆட்சி செலுத்தக்கூடாது என்று அக்கால கலீபா ‘பத்வா’ பிரகடனப்படுத்த ஷஜருத்தூர் ஒரு சமையல்காரரை மணந்து பொம்மை அரசராக அவரை அமர்த்தி, தானே ஆட்சி புரிகிறாள். மீண்டும் போராட்டம். இறுதியில் அவமானகரமான முறையில் ஷஜருத்தூர் படுகொலை செய்யப்படுகிறாள்.

கற்பனைக் கலப்பின்றி நீண்டதொரு காவியம்போல் அடுக்கடுக்காகச் சரித்திரச் சம்பவங்களைத் தொடுத்து விறுவிறுப்பும், சுவையும் குன்றாமல் ஷஜருத்தூரைப் படைத்திருக்கிறார் என்.பி.ஏ. மகத்தான அந்தச் சரி்த்திர நாவல் குடத்திலிட்ட விளக்காவே இருந்து வருகிறது. ஷஜருத்தூரின் புதிய பதிப்பு வெளிவர யார் முன் வருவார் என்பது ஆசிரியரின் ஆதங்கம்.

கட்டுரைக் குவியல்

கதைகளுக்கு முதன்முதலாக இடமளித்த முஸ்லிம் தமிழ் இதழ் ‘தாருல் இஸ்லாம்’ என்பது ஆய்வாளர்களின் கருத்து. அதை உறுதிப்படுத்தும் வகையில் பொறுப்பாசிரியர் அப்துல் ஜப்பார் கதைகளை எழுதியுள்ளார். தாருல் இஸ்லாம் பத்திரிகைக்கும் சிறுகதை இலக்கியத்தின் தாயகமான ‘மணிக்கொடி’ பத்திரிகைக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது என்பது பி.எஸ்.ராமையா எழுதிய ‘மணிக்கொடிக் காலம்’ என்னும் நூலிலிருந்து தெரிய வருகிறது எனக் குறிப்பிடுகிறார், பேராசிரியர் மு.ஹம்ஸா.

சிறுகதை. தொடர்கதைகளை எடுப்பான ஓவியங்களுடன் பிரசுரிப்பதிலும் அவர் கவனம் செலுத்தினார். அல்லா பிச்சை ராவுத்தர் முதலான அப்துல் ஜப்பாரின் சிறுகதைகள் பாதுகாக்கப்படவில்லை.

‘N.B.A.’ வரைவது என்ற வாசகத்துடன் தாருல் இஸ்லாம் இதழில் கட்டுரைகள், மதிப்புரைகளைப் பெரும் எண்ணிக்கையில் அவர் எழுதினார்.

ஓர் எடுத்துக்காட்டு: தமிழகத்துக்குத் தனிப்பெருமையளிப்பது, மண்ணைப் பொன்னாக்குவது, கரியைக் காசாக்குவது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது எது தெரியுமா? அதுவே… நெய்வேலிப் பழுப்பு நிலக்கரி (‘N.B.A.’ வரைவது)

“பிரதம மந்திரி நெஹ்ருஜி சென்ற 20.5.57 அன்று இலங்கையிலிருந்து திரும்பி வரும் வழியில் நெய்வேலி என்னும் ஊரில் பழுப்பு நிலக்கரித் திட்டச் சுரங்க வேலையைத் துவக்கிவைத்துவிட்டு வந்தாரென்னும் செய்தியை நீங்கள் பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். இந்தக் கட்டுரையிலே பழுப்பு நிலக்கரி என்றால் என்னவென்பதையும். எந்த அளவுக்கு அது தோண்டியெடுக்கப் படுமென்பதையும், இந்திய அரசாங்கத்தின் சுரங்க இலாகா எத்துணை ஆர்வத்தைச் செலுத்தி, எத்தனை கோடிக்கணக்கான ரூபாய்களை நல்ல விதத்தில் செலவிட்டு நெய்வேலித் திட்டத்தை நிறைவேற்றி முடிக்க ஆர்வங்கொண்டிருக்கிறதென்பதையும், தமிழகம் தனியான ஒரு மதிப்பைப் பெற்றுக் கொள்ள இந்தத் திட்டம் எத்துணை தூரம் துணை நல்குமென்பதையும் ஈண்டு கவனிப்போம்… ஆறு பக்க கட்டுரையின் தொடக்கமாக அவர் எழுதிய முதல் இரண்டு வாக்கியங்கள் இவை. அன்றைய தமிழ் நடையில் எழுதப்பட்ட கட்டுரையென்றாலும் சிறந்த வரலாற்றுப் பதிவாக அமைந்துள்ளதைப் படித்துணரலாம்.

மதிப்புரை

நூல் மதிப்புரைகளையும் N.B.A. எனும் பெயரிலேயே எழுதி வந்தார். 1957 ஜூன் தாருல் இஸ்லாம் இதழில் அவர் விமர்சித்த 3 நூல்கள்.

-‘சினிமா ராணியின் அற்புதக் கதை’
ஆசிரியர், V.N. ரங்கசாமி ஐயங்கார். மஞ்சுளா பப்ளிஷர்ஸ், சென்னை-5 103 பக்கங்கள்; விலை ரூ.1.25

-தீரர் தக்கின் நூ
ஆசிரியர் ஏ.என்.எஸ். ஹஸ்புல்லா கான், அனார்க்கலி இலக்கிய மன்றம், 56 மொகல் வீதி, இரங்கூன். 169 பக்கங்கள்; விலை கியா 3.00

-நாஸரும் சூயஸும்
ஆசிரியர் எஸ.எஸ். அப்துல்லா, பி.காம்.இ சாஸன் பதிப்பகம், 64, மெயின் ரோடு, சென்னை-13. 80 பக்கங்கள்; விலை ரூ.1

தமது நடையில், பாணியில், விரிவாகவும் சுவையாகவும் அவர் எழுதியுள்ள மதிப்புரைகள் ரசித்துப் படிக்கத்தக்கவை.

கண்டிப்பு

நல்ல விமர்சகரான என்.பி.ஏ. இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு முரணாக எழுதப்படம் படைப்புகளைக் கண்டிப்பதில் சளைக்காதவர். 1957-ல் ஆனந்த விகடன் வார இதழின் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற ‘சிவப்பு விளக்கு’ என்ற சிறுகதை இஸ்லாத்துக்கு மாறானது என்று கண்டித்து எழுதினார். கதாநாயகன் அப்துல்லா அவனுடைய சகோதரியின் மகள் சுலைகாவைக் காதலிக்கிறான். அப்துல்லாவின் தாயார் அது பொருந்தாக் காதல் என்று கண்டித்துவிட்டு மரிக்கிறாள். கள்ளத் தோணியில் கடத்தல் தொழில் புரியும் அப்துல்லாவைக் காப்பாற்றிவிட்டு சுலைகாவும் இறந்து போகிறாள்.

”நல்ல கட்டுப்பாடு! காதலுக்கு குறுக்கே நிற்பது குர்ஆனாக இருந்தால் என்ன? அல்லாஹ்வாக இருந்தால் என்ன? அவை யாவம் வாழ்வைத் தீய்க்க வந்த எதிரிகள்.” என்று சுலைகா குமுறுவது உள்ளிட்ட சில பகுதிகளை மேற்கோள் காட்டி, என.பி.ஏ. விரிவாகக் கண்டனம் செய்தார்.

தாருல் இஸ்லாம் பத்திரிகையுடன் ஷாஜகான் புக் டிப்போவையும் தொடர்ந்து நடத்தி வந்தார், அப்துல் ஜப்பார்.

”வாழ்வின் பெரும் பகுதியைத் திருக்குர்ஆன் விரிவுரை வரையும் பொருட்டு பன்னூறு நூல்கள் பயில்வதிலும், ஆராய்வதிலும் செலவிட்டவன் நான். கைப்பொருள்கள் கரைந்தன. கண்ணும் பழுத்து பட்டுவிட்டது. குர்ஆன் மஜீத் பொருளுரை, விரிவுரை, கடைசிப் பகுதியும் இன்னும் வெளிவரவில்லை” என்கிறார், என்.பி.ஏ. அங்கீகரிக்கப்பட வேண்டிய பல அரும்பணிகளைச் செய்தவர் அவர்.

நற்கூலி

தந்தையார் பா.தாவூத்ஷா வழியில் இதழியல், பதிப்பியல் பணியில் இறுதிவரை ஈடுபட்டிருந்தார் நாச்சியார்கோவில் தந்த இப்பட்டதாரி. அவருடைய புதல்வர் நூர்தீன் ஒருமுறை எழுதினார்:

“என்.பி. அப்துல் ஜப்பார் போன்ற முன்னோடி எழுத்தாளர்களை. சமுதாயப் பணியாளர்களை யார் நினைவில் வைத்திருக்கிறார்கள்..?” எனும் கட்டுரையின் இறுதி வாசகங்கள் என்னை நெகிழ வைத்து. கண்களில் நீரை வரவழைத்துவிட்டன. மிகவும் உண்மையான வாசகங்கள். தங்களைப் பொன்ற ஒரு சில நல்லுள்ளங்களைத் தவிர என் தந்தையிடம் தூய அன்பு கொண்டிருந்தவர்கள் யார் யார் என நினைத்துப் பார்க்கிறேன். என் தந்தை, பாட்டனார் (பா.தாவூத்ஷா, பி.ஏ.) ஆகியோரின் மார்க்க அறிவும், தமிழ் அறிவும் a very perfect knowledge என்பது நான் உணர்ந்த உண்மை”.

“தந்தையுடன் என் வாழ்ந்த அனுபவம் முப்பது வருடங்களே. எனக்கு ஏறத்தாழ ஐந்து வயது ஆகியபோது பாட்டனார் இறந்து போனார்கள். இப்பொழுது என் முப்பது வயதில் தகப்பனார்…! அவர்கள் இவ்வுலக வாழ்வில் சொகுசு என ஏதொன்றும் அனுபவித்ததாக எனக்கு நினைவேயில்லை. தவிர, வறுமையைத் தீவிரமாக எதிர்கொண்டு எங்களை ஆளாக்கினார்கள் என்பதே உண்மை. ஆனால், எத்துணை வறுமை பீடித்தபோதும் அவர்களிடம் இருந்த அசாத்திய இறை நம்பிக்கை… பல சந்தர்ப்பங்களில் மறுநாள் செலவுக்கு இல்லாத் நிலையில் கூட.. என் தாயாரின் கேள்விக்கு. சிறு புன்னகையுடன் “அல்லாஹ் பார்த்துக்குவான்” எனச் சொல்லிவிடுவார்கள்”.

“ஆனால், யாராவது வீடு தேடி வந்து 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் கொடுத்து குர்ஆன் அல்லது புத்தகங்கள் வாங்கிச் செல்வார்கள். என் தந்தை சொன்னதுபோல், அல்ஹம்து லில்லாஹ், எங்களை அல்லாஹ் ஒருவேளையும் பட்டினி கிடக்க விட்டதில்லை”.

தமிழ் இலக்கியம் படிக்கும்பேது அறிவார்ந்த புலவர்கள் வறுமையில் உழன்று அரசனைப் பாடி பொருள் பெற்றதைப் படித்திருக்கிறேன். என் தந்தை இறைவனையே நினைத்து அவன் பாதையிலேயே அறிவைப் பிரயோகப்படுத்தி இருந்துவிட்டார்கள். அதற்குரிய நற்கூலியை அவர்கள் மறுமையில் அவனிடம் பெற்றுவிட்டால் போதுமானது. அதற்கே நான் மிகவும் ‘துஆ’ செய்து வருகிறேன்.

அமெரிக்காவில் வாழும் புதல்வர் நூர்தீன், தந்தை என்.பி.ஏ.யின் படைப்புகளைப் பாதுகாக்கும் முயற்சியில் முனைந்திருக்கிறார். எழுத்தாளருமான நூர்தீன் தந்தையார் நூல்களையும். பாட்டனாரின் தொகுப்புகளையும் கணினியிலும், இணைய தளத்திலும் இடம்பெறச் செய்ய முன்வந்துள்ளது நற்செய்தி. தாருல் இஸ்லாம் இதழ்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.


சமநிலையச் சமுதாயம் எனும் பத்திரிகையில், தமிழ் முஸ்லிம் படைப்பாளிகளின் சாதனைகளை நினைவு கூர்ந்து, “இலக்கிய இதழியல் முன்னோடிகள்” என்ற தலைப்பில் ஜே.எம். சாலி அவர்கள் எழுதி வருகிறார்கள். அந்த வரிசையில் பிப்ரவரி 2008 இதழில் என்.பி. அப்துல் ஜப்பார், பி.ஏ., அவர்களைப் பற்றி வெளியான கட்டுரை இது.

 

Related Articles

Leave a Comment