திருநரையூர் தாவூத்ஷாவின் தமிழ்

by admin

இந்திய முஸ்லிம்களை ஒற்றைக் கருத்துடைய, ஒரே மாதிரி வாக்களிக்கக் கூடிய இறுக்கமான சமூகமாகக் கட்டமைப்பது இந்து பாசிசவாதிகளின் செயல்பாடுகளில் ஒன்று. இது விஷமத்தனமான, உள்நோக்கத்துடன் கூடிய ஒரு முயற்சி என்றபோதிலும் சிலர் அறியாமையின் காரணமாகவும் இதுபோன்ற கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால், முஸ்லிம் சமூகத்திற்குள் அகில இந்திய அளவிலும் சரி, தமிழக அளவிலும் சரி பல்வேறு சந்தர்ப்பங்களில் மார்க்க ரீதியான பிரச்சினைகளுக்காகவும், அதைத் தாண்டியும் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன.

சென்ற நூற்றாண்டின் முதற் பாதியில் இங்கு நடைபெற்ற இரு முக்கியமான விவாதங்களுக்குக் குடந்தைக் கருகிலுள்ள திருநரையூரைச் சேர்ந்த பா. தாவூத்ஷா அவர்கள் காரணமாக இருந்துள்ளார்கள். இஸ்லாமில் கலந்துபோயிருந்த மூடநம்பிக்கைகளை மட்டுமின்றி வளமான பாரம்பரியம் மிக்க தமிழ் மொழியிருக்க அரபுத் தமிழில் மார்க்க நூல்களை வெளியிடுவதையும் எழுதுவதையும் தாவூத்ஷா கடுமையாகக் கண்டித்தார். திருக்குர்ஆனைத் தமிழில் ஆக்கிய தாவூத்ஷா அரபி மதரஸா எதிலும் பயின்றவராகத் தெரியவில்லை. மைய நீரோட்டக் கல்விக் கூடங்கள் வழியாக பி.ஏ. பட்டம் பெற்றிருந்த தாவூத்ஷா மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தமிழ்த் தேர்வில் முதற்பரிசு பெற்றவருங்கூட. சுயமரியாதை இயக்கம், தனித் தமிழ் இயக்கம் ஆகியவை எழுச்சி பெற்றுக்கொண்டிருந்த ஒரு காலக்கட்டத்தில் வாழ்ந்தவர் அவர் என்பதும் சிந்திக்கத் தக்கது.

“அரபுத் தமிழ்” என்று இங்கே உருவாக நேர்ந்த பின்னணியை, வங்கத்தில் இவ்வாறு உருவான “இஸ்லாமிய வங்காளி”யுடன் ஒப்பிட்டு, “தமிழ் முஸ்லிம்களும். அச்சு ஊடகமும். பதிப்பு முயற்சிகளும்” என்கிற எனது கட்டுரையில் (வம்சி புக்ஸ். திருவண்ணாமலை, 2006) விரிவாக எழுதியுள்ளேன். சமஸ்கிருதம் கலந்த ‘சாது பாஷை’யாக மேற்தட்டு வங்காளி என்று கட்டமைக்கப்பட்டபோது அரபு, பெர்சியன். உருது கலந்த மக்களின் பேச்சு மொழியிலிருந்து இஸ்லாமிய வங்காளி கட்டமைக்கப்பட்டது. பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் திரும்பத் திரும்பக் குறிப்பிட்டதுபோல் இங்கிருந்த தமிழ் இந்து மதக் கறைபடிந்த ஒன்றாக இருந்தாலும், சமஸ்கிருதம் கலந்த பேச்சுமொழி ஒன்றை கலாச்சாரத் துறையில் ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்கள் ஊடகங்களின் வழயாகக் கட்டமைத்துக் கொண்டிருந்த நிலையிலும் இங்கே முஸ்லிம்கள் மத்தியில் அரபு, பெர்சியம் கலந்த அரபுத் தமிழ் வழக்கத்திலிருந்ததை நாம் புரிந்துகொள்கிறோம். ‘துலுக்கத் தமிழ்’ என்றும் இது வழங்கப்பட்டது. பாரிஸ் நகரிலுள்ள தேசிய நூலகத்தில் 44 ஓலைகள் அடங்கிய ‘துலுக்கத் தமிழ் மொழிபெயர்ப்பு’ என்றொரு கையெழுத்துப் பிரதி உள்ளது. வேறொன்றுமில்லை. ஒரு சிறிய இந்துஸ்தானி – தமிழ் அகராதி பெயர்க்கப்பட்டுள்ளன.

நரையூர் தாவூத்ஷா இத்தகைய மொழிப் பிரயோகத்தைக் கடுமையாக எதிர்த்தார். இங்குள்ள மரைக்காயர்களும். ராவுத்தர்களும் பயன்படுத்தும் இந்தத் தமிழைப் படிக்க நேர்ந்த, தமிழறிந்த யாரும் வெட்கத்தால் தலைகுனிவார்கள் என்றார். இத்தகைய தமிழுக்குக் காரணமானவர்களாகிய ஆலிம்களை தமிழறியாதவர்கள் என்று கூறியதோடு ‘காஃபிர்களின் மொழியைக் கற்றுக்கொள்வதற்கு வெட்கப்படுபவர்கள்’ என்றும் கூறினார். அரபுத் தமிழை அசிங்கமான அடுப்பாங்கரைத் தமிழ் என்று கூறிய தாவூத்ஷா அப்போது தமிழ்நாட்டில் நடைபெற்ற ‘மஜ்லிஸ்-உல்-உலமா’ மாநாட்டில் ஆங்கிலத்திலும் இந்துஸ்தானியிலும் பேசுவதையும் கண்டித்தார். இத்தகைய நூற்களை வெளியிட்ட அன்றைய வெளியீட்டாளர்களையும் அவர் விட்டு வைக்கவில்லை.

தாவூத்ஷா ஆசிரியராக இருந்து நடத்திய ‘தாருல் இஸ்லாம்’ என்னும் இதழ் குறிப்பிடத்தக்க ஒன்று. ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்திலுள்ள இவ்விதழின் ஒரு தொகுதியைப் பார்க்க நேரிட்டபோது அது பேசியிருந்த தலைப்புகளைப் பார்த்து வியந்துபோனேன். அரபுத் தமிழுக்கெதிரான மேற்குறித்த சாடல் தாருல் இஸ்லாம் (ஜனவரி 1, 1923) இதழில் வெளிவந்துள்ளது. காஜா கமாலுத்தீனுடன் இணைந்து ‘தத்துவ இஸ்லாம்’ என்றொரு இதழையயும் தாவூத்ஷா 1920 களில் நடத்தியுள்ளார்.

கருத்தொற்றுமை உடையவர்களுடன் இணைந்து அவர் உருவாக்கிய ‘நாச்சியார் கோவில் முஸ்லிம் சங்கம்’ இஸ்லாத்தில் கலந்து போன தர்ஹா வணக்கம் முதலான நம்பிக்கைகளைக் கடுமையாகச் சாடியது. தூய மதம் என்கிற பொருளில் ‘சுத்த சத்ய சன்மார்க்கம்’ என்பதாக அது தன்னை அறிவித்துக்கொண்டது. இந்து மத பாணியில் கந்தூரி விழா நடத்தல், காது குத்துதல், பெயர் வைத்தல் முதலான நிகழ்ச்சிகளை ஆடம்பரமாக நடத்துதல், பெண்களின் காதுகளில் பெருந்துளைகள் இட்டு அல்லிகொத்து அணிவித்தல், பஞ்சா கொண்டாட்டம் முதலிய எல்லாவற்றையும் ‘தாருல் இஸ்லாமும்’ முஸ்லிம் சங்கமும் கண்டித்தன. நாச்சியார் கோவில் சங்கம் சார்பாக வெளியிடப்பட்ட ‘முஸ்லிம் சங்க முத்ரா கமலம்’ (1920) மற்றும் ‘முஸ்லிம் சங்க மறுகமலம்’ என்னும் இரு நூற்களும் அச்சங்கம் வெளியிட்ட துண்டறிக்கைகளின் தொகுப்புகள். கிலாஃபத் இயக்கம் குறித்த துண்டறிக்கைகளும் அவற்றில் உண்டு.

தாவூத்ஷாவால் கடுமையாகத் தாக்கப்பட்ட ஆலிம்கள் சும்மா இருப்பார்களா? மவுலவி எஸ்.எஸ். முஹம்மத் அப்துல் காதிர் சாஹிப் பாக்கவி அவர்களின் ‘ஹிஃபாசத்துல் இஸ்லாம்’ மற்றும் ‘அல் கலாம்’ முதலான இதழ்கள் தாவூத்ஷாவைச் சாடின. அன்று மேலெழுந்து வந்து கொண்டிருந்த அஹமதியா இயக்கத்தை எதிர்த்தும் இயங்கிய இவ்விதழ்கள் தாவூத்ஷாவை ஒர ‘அஹமதியா’ எனவும் முத்திரை குத்தின.

தாவூத்ஷாவை நான் முழுமையாகப் படிக்கவில்லை எனினும் படித்துள்ள சிலவற்றை வைத்து அவரை அஹமதியா இயக்கத்தினர் எனக் கூற இயலவில்லை. ஜே.வி.பி. மோரும் இப்படித்தான் கூறுகிறார்.

சூஃபிகள் செய்ததாகக் கூறப்படும் ‘அற்புதங்களை’ எல்லாம் சாடி எழுதி வந்த தாவூத்ஷா, முஹம்மது நபிகளை இறுதி இறைத்தூதர் என்றே ஏற்றுக்கொண்டார். எனவே அவரை அஹமதியாவாகக் கருத இயலாது என்றே நினைக்கிறேன். 1920களில் திருக்குர்ஆனை தாவூத்ஷா மொழியாக்கத் தொடங்கியபோது லாகூர் மவுலவி முஹம்மதலியின் ஆங்கிலப் பெயர்ப்பிலிருந்தே அதைத் தமிழாக்கினார். தவிரவும் மேற்படி மவ்லவி அவர்களின் ஹதீஸ் தொகுப்பையும் (ஸஹீஹுல் புகாரி, நாயக வாக்கியம்) அவர் மொழியாக்கி வெளியிட்டிருந்தார். மவ்லவி முஹம்மதலி அவர்கள் 1914 ஆம் ஆண்டு வாக்கில் அஹமதியா இயக்கத்திலிருந்து விலகித் தனிபாதையை அமைத்துக்கொண்டார். இந்த அடிப்படையிலேயே தாவூத்ஷாவை ஒரு அஹமதியா என மற்றவர்கள் குற்றம் சாட்டியிருக்கக் கூடும்.

தாவூத்ஷாவின் திருக்குர்ஆன் மொழியாக்கம் 1962லிருந்து 1971க்குள் ஆறு தொகுதிகள் வெளிவந்தன. ஏழாம் தொகுதி இதுவரை வெளிவராமலுள்ளது எனத் தெரிகிறது.

தாவூத்ஷாவின் இன்னொரு ஆர்வம் நமக்கு வியப்பளிக்கிறது. ‘ஹிப்னாட்டிஸம்’ குறித்தும் மனேவசியக்கலை குறித்தும் பல நூற்களை அவர் எழுதி இஸ்லாமிய மார்க்கம் குறித்த நூற்களுடன் அவற்றையும் வெளியிட்டுள்ளார். மனோவசியக் கலையைக் கற்று வாழ்வில் வெற்றி பெறுமாறு விளம்பரங்களும் செய்துள்ளார். “மெஸ்மரிஸ-ஹிப்னாட்டிஸ சம்பந்தமான சகல வித்தைகளையும் வெகு சுத்தமாகக் கற்று இவ்வுலக வாழ்க்கையில் மஹா பெரிய ஜெயசீலராய் உயர்ந்து நிற்கவும்”, “இணையற்ற வெற்றியை ஈட்டவும்” செய்யுமாறு அவ்விளம்பரங்கள் பகர்கின்றன.

குடந்தையிலுள்ள பழைய நூற் காப்பகமான ‘சிவகுருநாதன் நூலகத்தில்’ சில வாரங்களுக்கு முன்னர் தாவூத்ஷா எழுதிய ‘இஸ்லாம்’ என்னும் நூலை நான் வாசித்தபோது அவரின் தமிழில் சொக்கிப்போனேன். ‘சித்திரப் படங்களுடன்’ எனப் பெயர்தாங்கிய இந்நூல் ‘ஷாஜஹான் புக் டெப்போ’வால் (30, சாந்தோம், சென்னை-04) வெளியிடப்பட்டுள்ளது. நான் வாசித்தது (1948 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 16 ஆம் பதிப்பு. முதற்பதிப்பு அக்டோபர் 1924 இல் வெளிவந்துள்ளது. அடுத்தடுத்து வந்து ஒவ்வொரு பதிப்பும் மேலும் விளக்கங்களுடன் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது. கால் நூற்றாண்டில் 16000 பிரதிகள் அச்சிடப்பட்டு விற்பனையாகியுள்ளதாகக் குறிப்பு உள்ளது. தமிழகம் தவிர இலங்கை, பர்மா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்த தமிழறிந்த முஸ்லிம்கள் பலரும் இந்நூலை வாங்கிப் பயன்பெற்றுள்ளனர். பதினாறாம் பதிப்பின் விலை இரண்டு ரூபாய் எட்டணா. “ஹனபீ, ஷாபீ மத்ஹபுகளுக்குரியது. ‘தாருல் இஸ்லாம்’ ஆசிரியரும் குர் ஆன் மொழிபெயர்ப்பாளருமாகிய அல்ஹாஜ் பா. தாவூத்ஷா பி.ஏ. அவர்களால் தையாரிக்கப்பட்டது” என முதற் பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளது. ஷாஜஹான் புக் டெப்போ வெளியிட்டுள்ள பதினான்கு நூற்களின் விளம்பரம் இன்னொரு பக்கத்தில் உள்ளது. நபிகள் நாயக மான்மியம், ஸஹீஹுல் புகாரி. தப்ஸீர் அல்ஹம்து விரிவுரை, மஹான் முஹம்மது நபி் (ஸல்), அபூபக்கர் சித்தீக், உதுமான், நாயகத்தின் நற்குணங்கள், இஸ்லாமிய ஞானபோதம், ஈமான் (இஸ்லாத்தின் மூலக் கொள்கைகள்) நாயக வாக்கியம், இஸ்லாம் இணையிலாச் சாந்தி, குத்பா பிரசங்கம். ஜீவ வசிய பரம ரஹஸ்யம் (மனோ வசியம் தொடர்பானது, மூன்றாம் பதிப்பு) ஆகியன அவ்விளம்பரத்தில் கண்டுள்ள நூற்கள்.

நூலின் நோக்கத்தை முதற் பதிப்பின் முன்னுரையிலிருந்து அறிகிறோம். அது

“இஸ்லாம் மார்க்கத்தில் ஈமான் என்னும் சித்தாந்த பாகமும், இஸ்லாம் என்னும் அனுஷ்டான பாகமும் இரண்டு முக்கிய அம்சங்களாயிருக்கின்றன. இவற்றுள் முதலாவதாகிய ஈமானைப் பற்றிய விவரம் இத்தமியேனால் முன்னரே ஒரு தனி நூலாக விரித்துரைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இஸ்லாம் என்னும் அனுஷ்டானத்துக்குரிய தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய நான்கு முதன்மையான விஷயங்களைப் பற்றிய விளக்கமொன்றும் இதுகாறும் இத் திராவிட பூமியில், இங்குள்ள நாட்டு மொழியாகிய நந்தமிழில் செவ்விதாய் ஒருவராலும் எழுதப் பட்டிலது. இக்குறையை நீக்குவான் வேண்டியும், அரபுக் கலையில் அனுபவமில்லாத இத் தமிழ்நாட்டு முஸ்லிம் மக்களுக்கும் இஸ்லாத்தைப் பற்றி அறிய விரும்பும் இதர மத ஸகோதரர்களுக்கும் ஒரு சேர உதவி புரிவான் வேண்டியும் ‘இஸ்லாம்’ என்னும் இச்சிறு நூலை ஏதோ ஒருவிதமாக எழுதி முடித்திருக்கிறேன்.”

தாவூத்ஷாவின் தமிழ் ஊடாக இன்னும் கொஞ்சம் இஸ்லாத்தை அறிவோம். 1920களில் புழக்கத்திலிருந்த தமிழ்நடை குறித்த நினைவுடன் இதைப் படித்தல் நலம். கூடியவரை அரபுச் சொற்களை அவர் தவிர்ப்பது புரிகிறது. எனினும் அவசியமான இடங்களில் பயன்படுத்தும்போது வடிவும் ஒலியும் சிதையாது அதைச் செய்ய முயல்வதும் தெரிகிறது. அன்றைய வழக்கப்படிச் சமஸ்கிருதச் சொற்களை நிறையப் பயன்படுத்துவதற்கு அவர் தயங்காததும் விளங்குகிறது.

“இம் மதத்தின் கொள்கைப்படி இறைவன் இவ்வுலகில் யாதொரு விதமாகவும் அவதரிப்பதில்லை. அவதரிக்க அவசியமுமில்லை. அவனுக்கு ஒப்பானவரேனும் மிக்கானவரேனும் இப்பிரபஞ்சத்திலே ஒருவருமில்லை. அவனே சகல லோகங்களுக்கும் ஸாஷாத் பரமகர்த்தனாயிருக்கின்றான். எல்லா உலகங்களிலுமுள்ள எல்லாப் பொருள்களும் அவ் அல்லாஹுத் தஆலாவின் சிருஷ்டியாகவும் அவனுடைய அடிமைகளாகவும் உடைமைகளாகவுமே இருந்து வருகின்றன. இப்படிப்பட்ட இணையற்ற ஏக இறைவன் இகம், பரம் என்னும் இரு லோகங்களுக்கும் எஜமானனாகவும் சர்வ வியாபியாகவும் சரியான நீதிபதியாகவும் சர்வலோக ரஷகனாகவும் சர்வலோக சரண்யனாகவும் சுவனத்திலும் புவனத்திலுமுள்ள சர்வ சராசரங்களுக்கும் சர்வாதிகாரியாகவும் சுயமே அமைந்திக்கிறான். இத்தன்மைத்தாய ஆதியந்தமில்லாத அனாதி அல்லாஹுத் தஆலாவாகிய நித்தியனானனவன் அருள் நிறைந்தவனாகவும் அன்பு மலிந்தவனாகவும் காணப்படா நின்றான். அவனே அண்டகோளத்திலுள்ள சராசரி சிருஷ்டிகளுக்கெல்லாம் இணையற்ற நண்பனாகவும் ஏகபராபர நிராமயனாயும் என்றென்றும் நிரமலனாயிருக்கிறான். எல்லோருக்கும் நல்வழி காட்டியாகவும். நம்மனைவர்க்கும் நியாயாதிபதியாயுமுள்ள நிரஞ்சனாயும் அவன் காணப்படுகிறான்.

ஆதலால் அந்நிஷ்களங்கனைப் போன்றவனைப் போன்ற தெதுவும் இவ்வண்டத்திலே எங்குமில்லை; என்றுமில்லை. அவன் ஆணுமல்ல, பெண்ணுமல்ல. ஆனால், அலியுமல்ல. அவனுக்கு மனைவியாதல், மக்களாதல் ஒன்றுமேயில்லை. அவனுக்குச் சுய துக்கமென்பன கிஞ்சித்தும் கிடையா. அயர்ச்சியேனும் அரையுறக்கமேனும் அவனைச் சாருவதில்லை. அவன் இவ்வண்ணத்தான், இவ்வுருவினான் என்று வார்க்க முடியாத, பகுக்க முடியாத ஏகாண்ட அரூபியாயிருக்கிறான். அவனிலிருந்தே சித்து, அசித்து (பிரகிருதி, ஆன்மா) எல்லாம் தோற்றமாயிருக்கின்றனர். பின்னால் அவனிடமே எல்லாம் சென்று ஒடுங்குகின்றன. வானங்களுக்கும் பூமிக்கும் அவனே ஒரு ஜோதியாயிருக்கிறான். பரிசுத்தமானவன். புகழுக்குரியவன். கம்பீரம் நிறைந்தவன். எவருடைய மனோவாக்குக் காயங்களுக்கும் எட்டாத மிக மிகப் பெரியவன். ஆதியந்தமில்லாத அரூபியானவன். ஆதியும் அந்தமும் அவனாயிருப்பவனே அல்லா(ஹ்). அவனொருவனே நித்தியன், சத்தியன்.

இஸ்லாம் மார்க்கத்தின் பிரகாரம் ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னுமா போன்றே, எத்தேயத்துமுள்ள எல்லாவித மனிதகோடிகளும் ஏக சகோதர கோஷ்டியைச் சார்ந்தவர்களாகவே கருதப்படுகிறார்கள். ‘எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம்’. மேன் மக்களென்றும், கீழ்மக்களென்றும், அரசரென்றும், அடிமையென்றும், தனவந்தனென்றும் தரித்துரவானனென்றும், உயர்ஜாதியென்றும், தாழ்ந்த ஜாதியென்றும், வெள்ளையனென்றும், கருப்பனென்றும் ஒருவிதமான வேறுபாடும் கொண்டாடப்படுவதில்லை. மனித கோடிகளுக்கு இன்றியமையாத ஜனநாயகத்துக்குரிய குடியரசுக் கொள்கையையே இம்மார்க்கம் தனக்கு அடிபீடமாக அவலம்பித்துக்கொண்டிருக்கிறது. இன்னமும் அம்மார்க்கத்தில் புரொகிதர்களென்றும் ஒரு தனிப்பட்ட பூஜாரி (அல்லது பாதிரி) வகுப்பினர் ஒதுக்கிவைக்கப்பட்டில்லை. மத விஷயத்தில் முதிர்ந்த ஞானமடைந்திருக்கும் எவரும் எப்படிப்பட்ட இலௌகிக, வைதிக காரியங்களையும் துணிந்து செய்ய அருகதையுடையவராகிறார். இன்னும் இம்மார்க்கத்தில் எங்கெங்குமுள்ள எல்லா மனிதர்களும் ஆண்டவனுடைய சமசிருஷ்டியென்றே சாதாரணமாய்க் கருதப்பட்டிருக்கின்றமையால் இதில் தீண்டாமை, பாராமையென்றும் மகா கொடிய வைசாகங்கள் அடியோடு விலக்கப்பட்டிருக்கின்றன. மனிதர்கள் எத்தொழிலைச் செய்து வந்த போதிலும், எப்படிப்பட்ட அந்தஸ்திலிருந்து வந்தபோதிலும் இம்மார்க்கத்தில் குலப்பெருமை யென்பதும், ஜாதியிருமாப்பென்பதும் ஒருசிறிதும் பாராட்டப்படுவதில்லை. சர்வலோக நாயகன் முன்னே சகல மனிதர்களும் ஒரே இனமாகத்தான் கருதப்படுகிறார்களென்றும் இச்சமயம் உரத்துக் கூறுகிறது.

இஸ்லாம் என்பது இயற்கையான ஒரு சாந்திமயமான சன்மார்க்கமாகும். இம்மார்க்கம் முக்கியமாக ஏகேசுவரக் கொள்கையையும், ஏக சகோதரத் தன்மையையுமே அதிகமாக எல்லா மனிதர்களுக்கும் எடுத்தோதுகிறது. ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ இதுவே இஸ்லாம் எனப்படுகிறது. எவ்விதத் துர்க்குணங்களுமின்றி எல்லாவித நற்குணங்களும் ஒருங்கே அமையப்பெற்ற ஏகநாயகனாகிய இணையற்ற இறைவன் அல்லாஹுத் தஆலாவையே தோட்டி முதல் தொண்டமான் வரை சகல ஜனங்களும் சதா ஜபித்தும், பஜித்தும். பூஜித்து வருதல் வேண்டுமென்கிறது இம்மதம்”.

அடிக்குறிப்பாக, ”இப்படியான். இந்நிறத்தான். இவ்வண்ணத்தான் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே” என்கிற தமிழ்ப் பாடலையும் தாவூத்ஷா சுட்டிக் காட்டுகிறார்.

தொடர்ந்து-ஒளூ, பாங்கு, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ். பலியின் தாத்பர்யம், ஜீவகாருண்யம், எனப் பல்வேறு அம்சங்களையும் கவித்துவமிக்க சொற்களில் விளக்குகிறார். தொழுகை முதலானவற்றை விளக்குவதற்குப் பதினாறு கோட்டோவியங்களும் உள்ளன.

‘பலியின் தாத்பர்யமென்ன?’ என அவர் கூறுவதைச் சுருக்கம் கருதி இங்கே தவிர்க்கிறேன். இஸ்லாத்தின் சிறப்பம்சமாக அதன் ஏகத்துவக் கொள்கையை மட்டும் குறிப்பிடாமல் சமத்துவத்தையும் அவர் அழுத்தம் கொடுத்து விளக்குவது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

ஒரு மொழி என்பது பயன்படுத்துவதற்கு முன்னதாகவே பல்வேறு கருத்துக்களையும் சுமந்து நிற்கிறது. அம்மொழியினூடாக மாற்றுக் கருத்தைச் சொல்லும் போது கவனமாகச் செய்யும் பட்சத்தில் அது தாங்கி நிற்கும் பழங்கருத்துக்களை மறைமுகமாக மறுக்கும் பாணி சில நேரங்களில் தானாகவே நிறைவேறுகிறது. தாவூத்ஷாவின் இஸ்லாம் குறித்த வரையறை அது குறித்த ஒரு அறிமுகமாக மட்டுமின்றி இம்மண்ணின் மரபு சார்ந்த இறைக் கருத்துக்கள் குறித்த ஒரு மறுப்பாகவும் அமைவது கண்கூடு. ஆனாலும், ‘வைதீகம்’, ‘ஈஸ்வரன்’ முதலான சொற்கள் அழுத்தமான மதக் கருத்துக்களைத் தாங்கி நிற்பவை என்பதை நாம் மறந்து விடலாகாது. அரபுச் சொற்களை நீக்கி அவ்விடத்தில் நமது மரபுச் சொற்களைப் பெய்யும்போது இந்த எச்சரிக்கை நமக்குத் தேவை. ‘திரு’, ‘மறை’ முதலான சொற்களைப் பயன்படுத்துவது குறித்த மறுபரிசீலனை அவசியம். இந்திய மரபுப்படி வேதங்கள் என்பன அடித்தள மக்களுக்கு ‘மறை’த்து வைக்கப்பட்டவை. ஆனால், அல்குர்ஆனோ எல்லோருக்கும் உரியது. யாருக்கும் மறைத்துவைக்கப்பட்டதல்ல.

”தமிழ்நாட்டு முஸ்லிம்கள் உண்மை முஸ்லிம்களாக வாழ்வதற்கும், அவர்கள் மத சம்பந்தமான, வாழ்க்கையில் முன்னேற்ற சம்பந்தமான சகல துறைகளிலும தலை சிறந்து எழுவதற்கும்” என பிரகடனப்படுத்திக் கொண்டு இதழையும், எழுத்தையும் பயன்படுத்தப் போராடி வாழ்ந்திருந்த தாவூத்ஷா அவர்களின் எழுத்துக்கள் மறு பதிப்பிற்கும் மறு பரிசீலனைக்கும் உரியவை.

ஆக்கம்: அ. மார்க்ஸ்

நன்றி: சமநிலையச் சமுதாயம், ஜுலை 2007.

 

Related Articles

Leave a Comment