ஜெர்மனியின் பெர்லினிலுள்ள பல்கலைக்கழத்தின் பேராசிரியர் டாக்டர் டார்ஸ்டன் (Torsten Tschacher). இவரது பாடத்துறை இஸ்லாம். தெற்காசியாவில் குறிப்பாக ‘தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் இஸ்லாம்’ என்பதில் தனது கவனத்தைச் செலுத்தி ஆராய்ச்சிகள் பல செய்துள்ளார்.
சென்னை வந்துள்ள இவர் செப்டம்பர் 4, 2018 செவ்வாய்க்கிழமை மாலை தரமணியிலுள்ள ரோஜா முத்தையா நூலக அரங்கில் “Extraordinary Translations and Commentaries of Quran in Tamil” என்கிற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதைப் பார்த்தபோது Professor டார்ஸ்டனுக்கு இத் துறையில் இருக்கும் உள்ளார்ந்த ஞானம் தெரிய வந்தது. பிரமிப்பை ஏற்படுத்தியது. அவரது ஆர்வமும் ஆய்வும் உழைப்பும் பாராட்டத்தக்கவை.
தமிழில் குர்ஆன் மொழிபெயர்ப்பு என்பதை பேசுபொருளாக எடுத்துக்கொண்டால் பா. தாவூத்ஷா அவர்களின் பங்களிப்பையும் உழைப்பையும் தொடாமல் கடந்துவிட முடியாது என்பதை Professor டார்ஸ்டனின் உரை அழுத்தந்திருத்தமாய் உணர்த்தியது. அவரது ஒரு மணி நேரப் பேச்சில் பா. தாவூத்ஷாவைப் பற்றிய தகவல்களும் அவரது குர்ஆன் மஜீத் பொருளுரையும் விரிவுரையும் நூலின் விபரங்களும் பெறுமளவு ஆக்கிரமித்திருந்தன. மட்டுமின்றி, பா. தாவூத்ஷாவுக்கு சிங்கப்பூரில் அவரது எதிரிகள் அளித்த தொல்லைகளையும் எதிர்ப்பையும் அதைத் தொடர்ந்து கோர்ட்டில் நடைபெற்ற வழக்கு விபரங்களையும் மூல ஆதாரங்களுடன் பேராசியர் டார்ஸ்டன் விவரித்தது பெரும் ஆச்சரியம்; அரிய தகவல்கள்.
அனைவருக்கும் புரியும் வகையிலான எளிய ஆங்கிலமும் வெறுமே புள்ளிவிவரங்களும் தகவல்களும் தெளிக்கப்பட்ட வகுப்புப் பாடம் போலன்றி கதைபோல் அமைந்துள்ள உரையும் நிச்சயம் பெரும் சுவை. Prof. Dr. Torsten Tschacher உரையின் விடியோ பதிவு அனைவரும் தவறாமல் காணவேண்டிய ஒன்று. அதை இங்கே பகிர்ந்துள்ளேன்.
இந்த நிகழ்வையும் விடியோ பதிவையும் சகோதரர் நதீம் அனுப்பி வைத்திருந்தார். என்னிடம் உரையாடினார். இந் நிகழ்வைத் தொகுத்து வழங்கிய சகோதரர் கோம்பை எஸ். அன்வர் என்னைத் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களைப் பகிர்ந்து கொண்டார். அவரின் முன்னுரையும் நதீமின் செய்திக் கட்டுரையும் கீழே பகிரப்பட்டுள்ளன. அவர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
-நூருத்தீன்
oOo
அரேபிய பாலைவனத்தில் பரவிக் கொண்டிருந்த தொடக்க காலத்திலேயே இஸ்லாம் தமிழகத்தை வந்தடைந்தது மட்டுமின்றி, தமிழ் இஸ்லாமிய சமூகம் தமிழ் இலக்கியத்திற்கு கணிசமான பங்களிப்பையும் செய்தது. இருப்பினும், புனித குரான் தமிழில் முழுமையாக மொழிபெயர்க்கப்பட 20ஆம் நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டியதாகி விட்டது. இத்தனைக்கும் அரபி ஒன்றும் தேவ பாஷையில்லை.
தாமதத்திற்கு காரணம் ஒருவேளை புனித நூலாக இருப்பதால் ஏற்பட்ட தயக்கமாக இருக்கலாம். பல்வேறு காலங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப் படாமல் இல்லை. 17ஆம் நூற்றாண்டில் ஞானி தக்கலை பீர் அப்பா “ஞானப் புகழ்ச்சி”யில் திருக்குரானின் முதல் சூராவாகிய அல் பாத்திஹாவை பாடலாக்கியுள்ளார். தொடர்ந்து அர்வி எனப்படும் அரபுத் தமிழில் (அரபு எழுத்தில் எழுதப்படும் தமிழ்) குறிப்பாக காயல்பட்டணத்தில் மொழிபெயர்ப்பு / விளக்கவுரை செய்யப்பட்டது. சீர்திருத்த சிந்தனையுடன் தஞ்சை பகுதி முஸ்லிம்கள் அழகு தமிழில் முயன்றனர். இவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி அறிஞர் பா.தாவூத் ஷா, தமிழில் மொழிபெயர்க்க முனைந்தார். “காதியானி” என்று கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி சிங்கப்பூரில் வழக்கு எதிர்கொள்ளும் நிலைக்கு ஆளானார்.
இன்று பல்வேறு திருக்குரான் தமிழ் மொழி பெயர்ப்புகள் இருக்கும் காலகட்டத்தில், திருக்குரானை மொழிபெயர்ப்பது சரியா? தவறா? என்று ஒரு காலத்தில் காரசாரமான வாதங்கள் நடந்தன என்பதே பலருக்கும் ஆச்சரியமளிக்கலாம். இருப்பினும் “ஏன் மொழி பெயர்க்க கூடாது” என்று வாதிட்டவர்களின் காரணங்கள் சுவாரஸ்யமானவை. இந்த விவாதங்களையும், பல்வேறு மொழி பெயர்ப்பு முயற்சிகள் குறித்தும் அருமையானதொரு உரையை ஜெர்மனிய அறிஞர் முனைவர் டார்ஸ்டன் அண்மையில் சென்னையில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஆங்கிலத்தில் நிகழ்த்தினார்.
-கோம்பை எஸ். அன்வர்
oOo
பட்டபடிப்பின்போது வாசிப்புச்சுவை ஆங்கிலம் நோக்கி திரும்பியபோது முதல்முறையாக Sacred Books of the East குறித்து கேள்விப்பட்டேன். இருபதாயிரம் பக்கங்கள் மொத்தம் 50 தொகுதிகள் பழங்காசு சீனிவாசன் அவர்களின் தனிநபர் சேமிப்பில் கண்டு வியந்திருக்கிறேன்.
இஸ்லாம், இந்து, பௌத்தம் என பழம்பெரும் மதங்களின் புனிதப் பிரதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் திட்டம் பிரிட்டிஷ் ஆட்சியின்போது வகுக்கக்கப்பட்டது. Friedrich Max Müller (1823 – 1900) தலைமையில் முப்பது அறிஞர்கள் கொண்ட குழுவொன்று 1880 – 1910 -க்கு இடைப்பட்ட முப்பதாண்டுகளில் வெற்றிகரமாக அப்பணியை முடித்தது. உபநிடதம், ஸென்அவெஸ்த், தம்மபதம் என கிழக்குஞானம் கிட்டத்தட்ட அனைத்தும் ஐம்பது தொகுதிகளாக ஆங்கிலத்தில் கிடைக்கிறது. அவற்றில் திருக்குர்ஆனுக்கு E. H. Palmer (1840 – 1882) செய்த மொழிபெயர்ப்பும் அடங்கும்.
William Lane (1801 – 1876); John Medows Rodwell (1808–1900); Henri Pirenne (1862–1935); Thomas Walker Arnold (1864–1930); Philip Khuri Hitti (1886 – 1978) போன்ற பலரை கீழைத்தேயவாதிகள் என்று கேள்விப்பட்டிருப்போம். அவர்கள் எழுதிய நூல்கள் உலகெங்கும் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் உள்ளன. வில்லியம் லேனின் அரபு – ஆங்கில அகராதி எட்டுத் தொகுதிகளுடன் இன்றுவரை பயன்பாட்டிலுள்ளது.
மேலே குறிப்பிட்ட அர்னால்ட் “The preaching of Islam” என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவர், அலிகர் பல்கலைக்கழகத்தில் பத்தாண்டுகாலம் பேராசிரியராக இருந்தார், Shibli Nomani (1857 – 1914); Allama Iqbal (1877 – 1938); Sulaiman Nadvi (1884 – 1953) ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். அதேபோல் தமிழ்ப் பணியில் தம்மை அர்ப்பணித்த Bartholomäus Ziegenbalg (1682 – 1719); Francis Whyte Ellis (1777 – 1819); Robert Caldwell (1814 – 1891); G. U. Pope (1820 – 1908) ஆகியோரின் கொடை தமிழ் இலக்கியத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை.
சரி, இது கடந்தகால வரலாறு மட்டுமேயென்று கருதியிருந்தேன். இல்லை, போர்ச்சுகல் நாட்டிலிருந்து வந்த வீரமாமுனிவர் (1680 – 1742) போன்று இன்றைக்கும் நம் தமிழ்மண் வெளிநாட்டு அறிஞர்களை ஈர்த்தபடியே உள்ளது என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
ஆம், கடந்த செப்டம்பர் 4-ந்தேதி சென்னை தரமணியிலுள்ள ரோஜா முத்தையா நூலக அரங்கில் Torsten Tschacher என்கிற ஜெர்மானிய பேராசிரியர் Extraordinary translations and commentaries of Quran in Tamil என்கிற தலைப்பில் பேசினார்.
சரளமான, எளிய ஆங்கிலம். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு குழந்தைத் தமிழில் பதிலளித்தார். அரபி நன்றாக படிக்கிறார், கூட அரபுத் தமிழும். இந்த தேடலில் இலண்டன் அருங்காட்சியகத்தின் பழைய பிரதிகளைத் தேடிப்பிடித்திருக்கிறார். இலங்கை, தமிழ்நாடு, பர்மா, சிங்கப்பூர், மலேசியா என தமிழ் முஸ்லிம்கள் வாழ்ந்த ஊர்கள்தோறும் பயணித்திருக்கிறார்.
ஆ.கா. அப்துல் ஹமீத் (1876 – 1955); பா. தாவூத்ஷா (1885 – 1969); உத்தமபாளையம் அப்துல் காதிர் பாகவி (1901 – 1979) ஆகியோருக்கு முன்பும் பின்பும் தமிழில் நடந்திருக்கிற திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகளை விரிவாக ஆய்வு செய்திருக்கிறார். இதற்கான விரிவான ஏற்பாடுகளை கோம்பை அன்வரும் ரோஜா முத்தையா நூலக இயக்குனர் சுந்தர் கணேசனும் செய்திருந்தனர். இன்றைக்கு திருக்குர்ஆன், ஹதீஸ் மொழிபெயர்ப்புத் துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் பலருக்கும் இந்த நிகழ்ச்சி குறித்து முன்கூட்டியே தகவல் தந்தும் அவர்கள் கலந்துகொள்ளாதது வருத்தமாக இருந்தது. இருந்தாலும் எதிர்ப்பார்த்தைவிட அதிகமான சிந்தனையாளர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள் வந்திருந்தது மனதுக்கு நிறைவாகவே இருந்தது.
Prof. Torsten Tschacher அவர்களின் மின்னஞ்சல் torsten.tschacher@fu-berlin.de
-கொள்ளு நதீம், ஆம்பூர்.