மூமின்களின் அன்னையர்

by admin
முஹம்மது நபி (ஸல்) வரலாறு கட்டுரைப் போட்டியில்
முதல் இடம் பெற்ற கட்டுரை

ல்ஹம்துலில்லாஹ்! மறுமை ஈடேற்றத்திற்கு மனித குலம் அனைத்திற்கும் அழகிய முன் மாதிரியாக அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரது குடும்பத்தினர் மீதும் சத்திய சஹாபாக்கள் மீதும் அன்றும் இன்றும் என்றும் அன்னாரது வழியைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

சென்ற தலைமுறையினருக்கு நேரம் இருந்தது. ஆனால் படிப்பதற்கு தமிழில் போதிய இஸ்லாமிய நூல்கள் இல்லை. இன்றைய தலைமுறையினருக்கு புத்தக வடிவத்திலும் வலைத்தளங்கள் வாயிலாகவும் எகப்பட்ட தமிழ் இஸ்லாமிய நூல்கள் பரந்து விரிந்து கிடக்கின்றன. ஆனால் படிப்பதற்குத்தான் நேரம் இல்லை; ஆர்வமும் இல்லை.

கல்வியைத் தேடி பயணம் செய்பவர்களுக்கு சுவனத்தின் வழியை அல்லாஹ் இலகுவாக்குவான்” என்பது நபி மொழி (நூல்: முஸ்லிம்)

மூமின்களின் அன்னையர்கள் என்றழைக்கப்படும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவிமார்களைப் பற்றியாவது இன்றைய தலைமுறையினர் கொஞ்சம் தெரிந்து கொள்ளட்டும் என்ற எண்ணத்தில் தொகுக்கப்பட்டதே இக்கட்டுரை.

தகவல்கள் திரட்ட மிகவும் உபயோகமாக இருந்த நூல்: ‘தமிழ் மாமணி’ அதிரை அஹ்மத் அவர்கள் எழுதிய “நபி (ஸல்) வாலாறு” எனும் நூல்.

1. கதீஜா பின்த் குவைலிது பின் அஸது (ரலி)

இவர் குரைஷி குலத்தவர்; அஸது கிளையைச் சார்ந்தவர். நற்பண்புகளால் “தாஹஜரா” (தூய்மையானவர்) என்றழைக்கப்பட்டவர்.

இரண்டு முறை திருமணமாகி இரண்டு முறையும் கணவனை இழந்து விதவையானவர். இரு கணவர்களின் மூலம் கிடைத்த திரண்ட செல்வத்தை வைத்து வணிகம் செய்வதில் தம் வாழ்நாளை அமைத்துக் கொண்டவர்.

மக்கத்து மாந்தர்களிடையே நேர்மைக்குப் பெயர்போன ‘அல் அமீன்’ என்றழைக்கப்படும் ஏழை இளைஞர் முஹம்மதுவை தமது வாணிபக் குழுவில் அமர்த்திக் கொள்கிறார்.

25 வயது இளைஞர் முஹம்மதுவின் நேர்மையும் நாணயமும் வியாபாரத் திறமையும் 40 வயது நிறைந்த கதிஜா அம்மையாரை ஈர்த்தது. இரு வீட்டாரும் கூடிப் பேசி திருமணத்தை நடத்தி வைக்தனர். மஹர் (மணக் கொடை) இருபது ஒட்டகைகளை இளைஞர் முஹம்மது வழங்கினார்.

இத் தம்பதியரின் இல்வாழ்க்கை ஒருமித்த கருத்துடன் 25 ஆண்டுகள் நீடித்தது. இக்கால கட்டத்தில் வேறு பெண்ணை மணப்பது பற்றி முஹம்மது அவர்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இத்தம்பதியருக்கு காஸிம், அப்துல்லாஹ் என்ற இரு ஆண்பிள்ளைகளும் ஜைனபு, ருகய்யா, உம்முகுல்தூம், ஃபாத்திமா ஆகிய நான்கு பெண்பிள்ளைகளும் பிறந்தனர். ஆண் பிள்ளைகள் இருவரும் குழந்தை பருவத்திலேயே இறந்துவிட்டனர்.

நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்ட “முதல் முஸ்லிம்” கதீஜா (ரலி) அவர்களே! அன்னை கதிஜா அவர்கள் தமது 65 ஆவது வயதில் மரணம் எய்தினார்.

2. சவ்தா பின்த் ஜம்ஆ (ரலி)

மக்கத்து குரைஷி குடும்பங்களுள், ‘பனூ ஆமிர் இப்னு லுஅய்’ எனும் குடும்பம் குறிப்பிடத்தக்கதாகும். இக்குடும்பத்தினர் பலர் நபித்துவத்தின் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக வாழ்ந்தனர்.

இக் குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியர் சக்ரான் இப்னு அம்ரும் என்பாரும் அவர் மனைவி சவ்தா பின்த் ஜம்ஆவும் இஸ்லாத்தை ஏற்ற பிறகு குரைஷிகளின் கொடுமைகளைத் தாங்க முடியாமால் அபிசீனியாவிற்கு சென்றனர்.

மக்காவில் நிலைமை சரியாகிவிட்டது என்ற பொய்த் தகவலை நம்பி அபிசீனியாவிலிருந்து மக்காவிற்கு திரும்பி வந்து சங்கடத்தில் மாட்டிக் கொண்டனர். தளர்ந்த நிலையிலிருந்த சக்ரான் மக்காவில் உயிரிழந்தார். சவ்தா அம்மையார் விதவையானார்.

அன்னை கதீஜா (ரலி) அவர்களின் மறைவிற்குப்பின் குடும்பத் தலைவியின்றி தள்ளாடும் மாநபியின் குடும்பத்தைக் கவனித்துக் கொல்வதற்காக விதவை சவ்தா அம்மையாரை மணந்து கொள்ளும்படி தோழக்களும் குடும்பத்தினரும் மாநபி (ஸல்) அவர்களுக்குப் பரிந்துரைத்தனர்.

அப்பரிந்துரையை ஏற்று, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ஷவ்வால் மாதத்தில் தம்மைவிட ஐந்து வயது மூத்தவரான விதவை சவ்தா அம்மையாரை மறுமணம் செய்து கொண்டார்கள்.

3. ஆயிஷா பின்த் அபூபக்ரு (ரலி)

மாநபி (ஸல்) அவர்களின் மிக நெருங்கிய தோழர் அபூபக்ரு சித்தீக் (ரலி), அவரது மனைவி உம்மு ரூமான் (ரலி).

இத்தம்பதியினருக்குப் பிறந்தவர்கள் அஸ்மா, ஆயிஷா ஆகிய இரு பெண் மக்களும் அப்துல்லாஹ் எனும் மகனும் ஆவார்கள்.

நபித்துவத்தின் பதினோராவது ஆண்டில், மக்காவில் ஆறு வயது சிறுமியாக அயிஷா இருந்தபோது, நபி (ஸல்) அவர்களுடன் திருமண ஒப்பந்தம் செய்து வைக்கப்பட்டார்கள். ஆனாலும் தாய் வீட்டிலேயே வளர்ந்து வந்தார்.

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து ஏழு மாதங்கள் கடந்த பின், ஆயிஷா (ரலி) அவர்களை மக்காவிலிருந்து மதீனாவிற்கு வரவழைத்து, அவருடன் குடும்ப வாழ்க்கையைத் துவங்கினார்கள்.

பிற்காலத்தில் இஸ்லாமிய சட்ட நுணுக்கங்களில் வல்லுனராகவும் அதிக அளவில் ஹதிஸ் கிரந்தங்களை அறிவித்தவர்களாகவும் ஆயிஷா (ரலி) அவர்கள் விளங்கினார்கள்.

4. ஹஃப்ஸா பின்த் உமர் பின் அல்கத்தாப் (ரலி)

மாநபி (ஸல்) அவர்களின் மற்றுமொரு நெருங்கிய தோழர் உமர் பின் கத்தாப் (ரலி). அவர்களின் புதல்வியார் ஹஃப்ஸா பின்த் உமர் அவர்களின் கணவர் குனைஸ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கடுமையாகக் காயமுற்று, மதீனா திரும்பி சிகிச்சை மேற்கொண்டும் பலனின்றி இறப்பெய்தினார்.

இளம் வயதில் விதவையாகிப் போன தம் மகள் ஹஃப்ஸாவுக்கு மறுமணம் செய்துவைக்க விரும்பினார்கள் உமர் (ரலி) அவர்கள். மிகச் சிறந்த மணாளனை தேடிக்கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அவ்வாறு யாரும் கிடைக்கப் பெறாமல் கவலைக்குள்ளானார்கள்.

இதை அறிய வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள், ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு ஹஃப்ஸாவை பெண்கேட்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

5. ஜைனபு பின்த் குஜைமா (ரலி)

மக்காலின் குரைஷிக் குலத்தைச் சேர்ந்த ஜைனபு அவர்கள் ஆரம்பகால முஸ்லிம் பெண்டிர்கள் சிலருள் ஒருவர்.

ஏழை, எளியோர் மீது இரக்கம் கொண்டவராக இருந்ததால், ‘உம்முல் மசாக்கீன்’ (ஏழைகளின் தாய்) என்றழைக்கப்பட்டார்.

இவரது முதற் கணவர் பத்ருப் போரிலும் இரண்டாவது கணவர் உஹதுப் போரிலும் ஷஹீதானார்கள். ஆகவே இரண்டு “ஷஹீதுகளின் மனைவி” என்ற பேற்றைப் பெற்றார்.

ஏறத்தாழ அறுபது வயதை எட்டியிருந்து இந்த அபலைப் பெண்ணின் நிலை கண்டு இரக்கமுற்ற அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ஹிஜ்ரீ நான்காம ஆண்டு இவரை திருமணம் செய்து கொண்டர்கள். அதன் பிறகு ஏழெட்டு மாதங்கள் மட்டுமே உயர் வாழ்ந்தார்.

அன்னை கதிதா (ரலி) அவர்களைப் போன்றே, நபியவர்களின் வாழ் நாளிலேயே, ஜைனபு (ரலி) அவர்களும் மரணத்தைத் தழுவினார்கள்.

6. உம்மு சலமா (ரலி)

உம்மு சலமா என்ற பெயரில் அறியம்படும் ஹிந்த பின்த் அபீ உமய்யாவும் அவருடைய கணவர் அபூசலமாவும் தொடக்கக் கால முஸ்லிம்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

அபிசீனியா சென்று, மீண்டும் மக்கா திரும்பி, குரைஷிகளின் கொடுமைக்கு உள்ளானார்கள். மிகுந்த தியாகங்களுக்குப் பிறகு மாநபி (ஸல்) அவர்களின் அனுமதியுடன் யத்ரிபுக்கு போய்ச் சேர்ந்தனர்.

உஹது போரில் கடுமையாகக் காயம்பட்டு, நோயுற்றுப்போன அபூசலமா சிகிச்சை பலனின்றி சில நாள்களில் இறந்து போனார். விதவையாகிப் போன வயது முதிர்ந்த உம்முசலமாவையும் அவரது நான்கு பிள்ளைகளையும் தாம் கவனித்துக் கொள்வதாகப் பொறுப்பேற்ற அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரீ நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் உம்மு சலமாவை திருமணம் செய்து கொண்டார்கள்.

இவ்வம்மைலா 84 வயது வரை வாழ்ந்து, பல நபி மொழிகளை அறிவித்து புகழ்பெற்றவராவார்.

7. ஜைனபு பின்த் ஜஹ்ஷ் (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது அத்தை உமைமா பின்த் அப்துல் முத்தலிபின் மகள் ஜைனபு பின்த் ஜஹ்ஷ் (ரலி).

நபிகள் பெருமானார் (ஸல்) தமது வார்ப்பு மகனாக ஏற்றுக் கொண்டிருந்த அடிமை ஜைது இப்னு ஹாரிதா (ரலி) அவர்களுக்கு, தமது அத்தை மகள் ஜைனபுவை திருமணம் முடித்து வைத்தார்கள். ஆனால் இத்திருமணம் வெகு நாள்கள் நிலைக்கவில்லை. கருத்து வேறுபாடு தோன்றி இருவரும் இல்வாழ்க்கையை முறித்துக் கொண்டனர்.

வளர்ப்பு மக்கள் உண்மை மக்களாக மாட்டார்கள் (அல்குர்ஆன் 33:4-5) என்னும் இறை வேத வசனம் இறங்கிற்று. இதனை நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடைமுறைப் படுத்திக் காட்டுவதற்காக, வளர்ப்பு மகனிடமிருந்து மண முறிவு பெற்ற ஜைனபு அவர்களை இறுதி இறைத் தூதருக்கு அல்லாஹ்வே திருமணம் செய்ய வைத்தான் (அல்குர்ஆன் 33:37).

இத்திருமணம் ஹிஜ்ரீ ஐந்தாம் ஆண்டில், அகழ்ப் போருக்குப் பிறகு நடந்தது. அப்போது ஜைனபு (ரலி) அவர்களின் வயது 35.

8. ஜுவைரிய்யா பின்த் அல்ஹாரித் (ரலி)

பனீ முஸ்தலிக் கோத்திரத்தாருடன் நடந்த போரின் வெற்றிக்குப் பிறகு முஸ்லிம்கள் பிடித்து வந்த போர்க் கைதிகளுள் ஜுவைரிய்யா என்ற இள மங்கையும் ஒருவர்.

தாபித் பின் கைஸ் (ரலி) என்ற நபித் தோழர் பெருந்தொகை கொடுத்து இப்பெண்னை உரிமையாக்கிக்கொண்டார்.

இதை விரும்பாத ஜுவைரிய்யா, தாம் பனீ முஸ்தலிக் கோத்திரத்தின் தலைவரின் மகள் என்றும் யாராவது ஈட்டுத் தொகை கொடுத்து தம்மை மீட்க மாட்டார்களா என்றும் அண்ணல் நபிஸல்) அவர்களிடம் முறையிட்டார்.

அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள், தாம் கூடுதலாக ஈட்டுத்தொகை கொடுத்து விடுவித்து தமது மனைவியாக ஆக்கிக்கொள்வதற்கு சம்மதமா எனக் கேட்டார்கள். இதை முழு மனதுடன் ஜுவைரிய்யா ஏற்றுக் கொண்டார்.

இத்திருமணம் ஹிஜ்ரீ ஆறாம் ஆண்டு, ஷாபான் மாதத்தில் நடை பெற்றது.

பின்னாட்களில், பனீ முஸ்தலிக் போர்க் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு, உரிமை வழங்கப்பட்டனர், தலைவர் அல்ஹாரித் உட்பட அக்கோத்திரத்தினர் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

9. உம்மு ஹபீபா ரம்லா பின்த் அபூஸுஃப்யான் (ரலி)

இஸ்லாத்தின் பரம எதிரியாக இருந்த அபூஸுஃப்யானின் மகள் உம்மு ஹபீபா என்ற ரம்லாவும் அவரது கணவரும் அபிசீனியாவிற்கு குடிபெயர்ந்த ஆரம்ப கால முஸ்லிம் தம்பதி ஆவார்கள்.

அபிசீனியாவில் கணவர் கிறஸ்தவராக மதம் மாறிய பிறகும் உம்மு ஹபீபா இஸ்லாத்தில் உறுதியாக நிலைத்திருந்து, தனித்து வாழ்ந்து வந்தார். சில காலத்திற்குப் பிறகு அவரது கணவர் உபைதுல்லாஹ் அங்கேயே இறந்தும் போனார்.

அப்போது மக்காவில் இருந்த நபி பெருமானார் (ஸல்) அவர்கள் இதனை அறிய வந்தவுடன் உம்மு ஹபீபாவைத் தமக்கு திருமணம் செய்து வைக்குமாறு அபிசீனியாவின் ஆட்சியாளர் நஜ்ஜாஷிக்கு தூது அனுப்பினார்கள்.

இவ்வேண்டுகோளை ஏற்ற நஜ்ஜாஷி மன்னர், நபியவர்களுக்கு உம்மு ஹபீபாவை அங்கேயே திருமணம் செய்து வைத்தார்கள்.

மதீனாவில் இஸ்லாமியப் பேரரசு வேரூன்றிய பின் ஹிஜ்ரீ ஏழாம் ஆண்டில் அபிசீனியாவில் தஞ்சம் புகுந்துள்ள முஸ்லிம்களை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வரவழைத்தார்கள்.

இக்குழுவினருடன் உம்மு ஹபீபாவும் மதீனாவிற்கு வந்து நபி பெருமானாருடன் இல்லறம் நடத்தினார்கள்.

10. சஃபிய்யா பின்த் ஹுயை (ரலி)

கைபரில் யூதர்களுக்கு எதிராக நடந்த போரில் வெற்றி பெற்ற முஸ்லிம்களுக்குப் போர்க் கைதிகள் பதிர்ந்தளிக்கப்பட்டனர்.

அதில் ஹுயை என்ற யூதத் தலைவரின் 17 வயது அழகு மகள் சஃபிய்யாவும் ஒருவர். திருமணமாகி சில நாள்களே ஆன நிலையில் விதவையானவர்

நபித் தோழர் ஒருவருக்கு அடிமைப் பங்கீட்டில் ஒதுக்கப்பட்ட சஃபிய்யாவை நபி பெருமானார் (ஸல்) அவர்கள் உரிய விலை கொடுத்து வாங்கி மணம் புரிந்து கொண்டார்கள்.

ஹிஜ்ரீ ஏழாம் ஆண்டின் துவக்கத்தில், கைபரிலிருந்து மதினாவிற்கு திரும்பும் வழியிலேயே இது நிகழ்ந்தது.

11. மைமூன் பின்த் அல் ஹாரித் (ரலி)

நபி பெருமானாரின் சிறிய தந்தை அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களை மணைவியார் உம்முல் ஃபழ்லுலின் இளைய சகோதரி மைமூனா. இளம் வயதிலேயே விதவையானதால் மூத்த சகோதரியின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தார்.

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் அடுத்த ஆண்டில் தோழர்கள் புடைசூழு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா மாநகர் சென்று மூன்று நாள்கள் தங்கி உம்ரா செய்தார்கள். மதீனா திரும்பும் வழியல் ‘சநிஃப்’ என்ற இடத்தில் முகாம் இட்டிருந்தார்கள்.

அப்பாஸ். அவர்கள் குடும்பத்துடன் மக்காவிலிருந்து புறப்பட்டு அங்கு வந்து முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டார். தம் மனைவியின் விதவை சகோதரி மைமூனாவை அங்கு வைத்து நபி பெருமானாக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.

இந்நிகழ்வு ஹிஜ்ரீ ஏழாம் ஆண்டு துல்கஃதா மாதத்தில் நடந்தேறியது.

நபி பெருமானார் (ஸல்) அவர்கள் வலக்கை சொந்தக்காரிகளாக்கிக் கொண்டவர்கள்.

1. மரியா அல் கிப்த்தியா (ரலி)

எகிப்து தேசத்தை ஆண்டு கொண்டிருந்த கிறித்தவ மன்னன் ஜுரைஜ் பின் மீனா அல் முகவ்கிஸ்ஸை இஸ்லாத்தின் பக்கம் அழைத்து மடல் எழுதி தூது அனுப்பினார்கள் நபிகள் நாயகம் (ஸல்).

அம்மன்னன் மதம் மாறாவிட்டாலும், மடல் கொண்டு வந்த தூதுவரை கௌரவப்படுத்தினான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகளையும் கொடுத்தனுப்பினான்.

எகிப்து மன்னரிடமிருந்து அன்பளிப்பாக கிடைக்கப் பெற்ற மாரியா அல் கிப்த்தியா என்ற அழகிய பெண்ணை , பெருமானார் (ஸல்) அவர்கள் தம் வலக்கை சொந்தக்காரியாக்கிக் கொண்டார்கள்.

இத்தம்பதியருக்கு இப்ராஹீம் என்ற ஆண் குழந்தை பிறந்தது. ஹிஜ்ரீ பத்தாம் ஆண்டு துவக்கத்தில் சிறுவர் இப்ராஹீம் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.

அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டதும், மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் நல்லுபதேசம் செய்ததும் இந்நிகழ்வின் போதுதான்.

2) ரைஹானா பின்த் ஜைது பின் அம்ரு (ரலி)

பனீ குறைழாப் போரில் முஸ்லிம் படைகள் வெற்றி கண்டபின், போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட பெண்களும் பிள்ளைகளும் முஸ்லிம்களிடையே பங்கு வைத்துக் கொடுக்கப்பட்டனா்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பங்கிற்கு கிடைத்த, பனீநளீர் குலத்தைச் சேர்ந்த ரைஹானா எனும் பெண் இஸ்லாத்தைத் தழுவினார்.

அப்பெண்ணை மணந்து கொள்ள நபியவர்கள் விருப்பம் தெரிவித்த போது, “உங்கள் ஆளுகையில் மட்டும் இருக்கும்படி விட்டுவிடுங்கள்” என்று ரைஹானா கேட்டுக் கொண்டார். அப்பெண்ணின் விருப்பத்தை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

oOo

நான்கிற்கும் மேலான மனைவியர்களை மணம் புரிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹுதஆலா சிறப்புச் சலுகை அளித்திருந்தான். நபிகளாரின் மனைவியர்கள் மூமின்களுக்கு அன்னையர்களாக இருக்கின்றனர் என்று அல்லாஹ் தனது திருமறையில் (திருக்குர்ஆன் 33:6)அவர்களுக்கு உயர்வான அந்தஸ்தை வழங்கியிருக்கிறான்

வீட்டிற்குள் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் குடும்பத் தலைவராக, கணவராக, தந்தையாக, போதகராக எப்படி வாழ்ந்தார்கள் என்ற வரலாறு இவ்வன்னையர்கள் மூலமாகத்தான் உலகிற்குத் தெரியவந்தது.

அத்தகைய சிறப்பு மிக்க மூமின்களின் அன்னையர்களைப் பற்றி இதன் மூலம் தெரிந்து கொண்டதற்கு அல்லாஹ்வுக்கு நன்றி கூறிக் கொள்வோம். இதைப் படித்தவா், கேட்டவர் அனைவர் மீதம் அல்லாஹ்வின் சாந்தியும் சமாானமும் உண்டாகட்டும். ஆமீன்.

-சையத் ஃபைரோஸ் (ரஸியா மைந்தன்)

Related Articles

Leave a Comment