இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா – 10

by admin

10. வெற்றி வீரர்

தமிழ்நாட்டில் ஒரே இஸ்லாமியச் சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்த தாவூத்ஷா, 1969 பிப்ரவரி 24 ஆம் நாள் சென்னையில் தன் மூத்த மகன் அப்துல் ஜப்பாரின் வீட்டில் காலமானார்.

பேச்சும் மூச்சும் சமுதாயச் சீர்திருத்தமாக வாழ்ந்த அவரது இறுதி மூச்சு நின்ற போது, அவருக்கு 84 வயது.

பி.ஏ. பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேறி, அடுத்த சில மாதங்களில் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியராகத் தாவூத்ஷா வாழ்க்கையைத் தொடங்கினார். ஆங்கிலத்தில் நல்ல ஆற்றல் இருந்ததால் மிக வேகமாக முன்னேறி, சப் மாஜிஸ்திரேட்டாக உயர்ந்தார். துணை கலெக்டர் தேர்வுப் பட்டியலில் அவரது பெயர் இருந்த போது, அரசு ஊழியத்தைத் தூக்கி எறிந்து விட்டு, முழு நேர சமுதாயப் பணியில் இறங்கினார். “என்னுடன் உத்தியோகம் ஏற்றவர்களுள் பலர் கலெக்டர்களாகவும் டெபுடி கலெக்டர்களாகவும், வேலை பார்த்து ஓய்வு பெற்று, உபகாரச் சம்பளம் பெற்று உல்லாசமாக வாழுகிறார்கள்” என்று தாவூத்ஷாவே கூறியுள்ளார்.

சமுதாயப் பணிக்கு ஓர் இதழ் தேவை என்று, 1919 ஆம் ஆண்டு நாச்சியார்கோயிலில் இதழ் தொடங்கினார். 1923 இல் அந்த இதழ் சென்னைக்கு வந்து, “தாருல் இஸ்லாம்” என்ற பெயரில் 1957 ஆம் ஆண்டு வரை 38 ஆண்டு காலம் நடந்தது. அவரைக் கொடி போல அந்த நாள் இதழ்களின் ஆயுள் ஆறு மாதம்தான். தாவூத்ஷாவோ, நாச்சியார்கோயிலையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், 38 ஆண்டு காலம் இதழ் நடத்தியிருக்கிறார்.

“இதழ் நடத்துவது என்பது நெருப்பு ஆற்றை நீந்திக் கடப்பது போல” என்று அமரர் ஆதித்தனார் கூறுவார். ஓராண்டு, ஈராண்டு அல்ல; முப்பத்தெட்டு ஆண்டு நெருப்பு ஆற்றில் நீந்திய தாவூத்ஷா, என்ன பாடுபட்டிருப்பார்! நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்கிறது!

“தாருல் இஸ்லாம் பத்திரிக்கை எத்துணைப் பெரிய பொருளாதார நெருக்கடியுடனே நடைபெற்று வந்துள்ளது என்பதை உள்ளுணர்ந்தவர்கள் நன்கு அறிவார்கள். இதனைத் தூக்கிப் பிடிக்க என் மனைவி மைமூனும் என் மகன் அப்துல் ஜப்பாரும் எத்துணைத் தியாகம் செய்திருக்கிறார்கள் என்பதை அல்லாஹ் ஒருவனே அறிவான்” என்கிறார் தாவூத்ஷா.

தந்தையைப் போலவே ஜப்பாரும் ஒரு பி.ஏ. பட்டதாரி. ஆனால், அரசு வேலைக்குச் செல்லவில்லை. தந்தைக்குத் துணையாக “தாருல் இஸ்லா”மில் பணியாற்றினார். “அப்துல் ஜப்பாருடன் சர்க்கார் அலுவலில் ஈடுபட்ட சகபாடிகள் அநேகர் இப்போது மாதச் சம்பளம் ரூ. 500 அல்லது 650 பெறுகிறார்கள். பல்லாண்டு கால எங்கள் சமூக சேவையால், இறைவன் பாதையில் உழைத்து வருவதன் பயனாக நாங்கள் நிலபுலங்களோ, வீடு வாசல்களோ வாங்கி விடவில்லை” என்று தாவூத்ஷா கூறியுள்ளார். உண்மையைச் சொன்னால், தாவூத்ஷாவும், அவர் மகனும் காலம் முழுக்க வாடகை வீட்டில் குடியிருந்தார்கள்.

விலை போகவில்லை

தாவூத்ஷாவுக்குப் பணத் தேவை இருந்ததுதான். அவரது குடும்பம் அவர் கண் முன்னேயே வறுமையில் வாடியது. ஆனாலும், அவர் விலை போகவில்லை! அவரது கொள்கையை விடவில்லை! சமுதாயச் சீர்திருத்தத்தில் பின் வாங்கவில்லை! தாருல் இஸ்லாமை நிறுத்தவில்லை.

வறுமையுடன் தாவூத்ஷா போராடினார். எதிர் நீச்சல் போட்டார்! பணத் தேவைக்காகத் தனது சேவையை விலை கூறவில்லை. தன்னலமற்ற தொண்டு செய்தார். இஸ்லாமிய சமுதாயத்தை மூடக் கொள்கைகள் என்னும் இருட்டிலிருந்து மீட்டு எடுக்கத் தன்னையே அர்ப்பணம் செய்து கொண்டார்!

இதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொல்லலாம்.

தாவூத்ஷா தனது 70ஆவது வயதில் “திருக்குர்ஆன் மஜீத் பொருளுரையும் விரிவுரையும்” எழுதத் தொடங்கினார். அந்தத் தள்ளாத வயதில் பசியும் பட்டினியுமாக ஆறாண்டு காலத்தை இதற்குச் செலவிட்டார். 76வது வயதில் எழுதி முடித்தார்.

அதை அச்சிட்டு வெளியிட ரூ.50 ஆயிரம் தேவைப்பட்டது. அப்போது மலேசியாவில் ஒருவர் அதை ஒரு இலட்சம் ரூபாய்க்கு விலைக்குக் கேட்டார். தான் அச்சிட்டு வெளியிட்டுக் கொள்ளுவதாகக் கூறினார். ஆனால், தாவூத்ஷா இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

அப்போது அவர் என்ன சொன்னார், தெரியுமா? “இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு ஏழைகள் உட்பட எல்லா மக்களுக்கும் போய்ச் சேர வேண்டும். ஒரு இலட்ச ரூபாய் கொடுத்து வாங்குகிறவர் குறைந்தது பத்து ரூபாயாவது விலை வைப்பார். இவ்வளவு விலை கொடுத்து வாங்க, ஏழை மக்களால் முடியாது!”

தாவூத்ஷா அச்சிட்டு ஒவ்வொரு தொகுதியும் ரூ.6 விலையில் விற்பனை செய்தார்.

தாவூத்ஷா தனக்கு என்றோ, தாருல் இஸ்லாம் இதழுக்கு என்றோ நிதி திரட்டியது இல்லை. திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட மட்டும் நிதி சேர்த்தார்.

வெற்றி பெற்றார்!

தாவூத்ஷாவின் தாங்க முடியாத துன்பங்களுக்கெல்லாம் காரணம், அவர் ஒரு காதியானி என்றும் “காபீர்” (நாத்திகன்) என்றும் உலமாக்கள் விடாது பிரசாரம் செய்ததுதான்!

“அக்காலத்தில் இந்த ஏழை நல்ல வேலை செய்ய வொட்டாது முல்லாக்களும் முழு மக்களும் இல்லாத தொல்லைகள் எல்லாம் இழைத்து வந்தார்கள். இந்த ஏழைக்கு எதிராக எத்தனை பத்திரிகைகள்! எத்தனை ‘பத்வா’கள்! எத்தனை ஏசல் மாலைகள்! எத்தனை வசை மொழி நோட்டீசுகள்! எத்தனை கிரிமினல் கேஸ்கள்! எத்தனை சிவில் தாவாக்கள்! அம்மம்மா! என்ன கடுமை! என்ன கொடுமை!!” என்று தாவூத்ஷாவே நெஞ்சம் குமுறுகிறார்.

இத்தனை எதிர்ப்புகளையும் சமாளித்துத் தாவூத்ஷா வீர நடை போட்டார். “எத்தனையோ எதிர்ப்புகளுக்கு இடையே தாவூத்ஷா இணையில்லா வெற்றி பெற்றிருக்கிறார் என்பது உண்மை. எண்ணற்ற இளைஞர்கள், இதர சமயத்தவர்கள், பத்திரிகைகள் எல்லாம் போற்றும் அளவுக்கு அவர் புனிதப் பணியாற்றியுள்ளார். ‘தாவூதியாக்கள்’ என்று தனிக் கூட்டத்தையே உருவாக்கியிருக்கிறார்” என்கிறார், பேராசிரியர் தை. கா. காதர் கனி.

தாவூத்ஷாவின் சமய சமுதாயப் பணிகளைப் பாராட்டி, கொழும்புவில் உள்ள தன்சீம் என்ற இஸ்லாமிய அமைப்பு அவருக்கு “இஸ்லாமிய மாவீரர்” (“இஸ்லாமிக் ஹீரோ”) என்ற விருதுப் பதக்கம் வழங்கிச் சிறப்பித்தது.

ஆறு பணிகள்

தனது சமுதாய சீர்தித்தத்தை “ஆறு பணிகள்” என்று தாவூத்ஷாவே பட்டியல் போட்டிருக்கிறார். அவை:-

  1. முதன்மையானது புரோகிதர் (உலமாக்கள்) ஆட்சியின் பெரும் வீழ்ச்சி.
  2. தாய்மொழியாம் தமிழ் மொழியிலேயே தீன் இஸ்லாத்தின் விசயங்களை எல்லாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற உணர்ச்சி பெற்று வருகிறார்கள்.
  3. குத்பா உரை தமிழில் நிகழ்த்தப் பெறுகிறது.
  4. முஸ்லிம் பெண்களுக்கும் தமிழ்க் கல்வியும் ஆங்கிலக் கல்வியும் கற்பிக்க வேண்டும்.
  5. முஸ்லிம் பெண்களுக்கு உரிமைகள் அளிக்க வேண்டும்.
  6. தேசிய விவகாரங்களில் பிராமணர் வலையில் விழாமல் தடுத்தது.

இந்தக் கொள்கைகள் வெற்றி பெற்றிருப்பதை இன்று கண் கூடாகப் பார்க்கிறோம். திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகள் பல வந்து விட்டன. சவூதி அரசாங்கமே ஒரு திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியிட்டிருக்கிறது.
பள்ளிவாசல்களில், தமிழ்நாட்டில் மட்டுமல்ல துபாயில் கூட, குத்பா உரை தமிழில் நிகழ்த்தப்படுகிறது. அரபிக் கல்லூரிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்கள் கணினிகள் கற்கிறார்கள். முஸ்லிம் பெண்கள் இடையே எம்.பி.ஏ. எம்.சி.ஏ.களை சர்வ சாதாரணமாகக் காண முடிகிறது.

வெளிக் கொண்டு வர!

இதற்கெல்லாம் காரணமான சமுதாயப் போராளி தாவூத்ஷாவை இன்று மக்கள் மறந்து விட்டார்கள். ‘மறந்து விட்டார்கள்’ என்பதை விட முஸ்லிம் மக்களிடமிருந்து ‘மறைத்து விட்டார்கள்’ என்று கூறுவது சரியாக இருக்கும்! ஜே.எம். சாலி, பேராசிரியர் தை.கா. காதர் கனி போன்ற ஓரிருவர் மட்டுமே இன்னும் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஈரோட்டுப் பெரியார் போன்று இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா அவர்களது பணிகளையும் வரலாற்றையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன். அதற்கான ஆதாரங்களைத் தேடிப் புறப்பட்டேன்.

தாவூத்ஷா எழுதிய நூல்கள் ஒரு சில நூலகங்களில் இருக்கின்றன. எங்கள் நீடூர் நூலகத்தில் கூட உள்ளன. ஆனால், அவர் நடத்திய தாருல் இஸ்லாம் இதழ்களைப் பார்க்க இயலவில்லை. அதை இரகசியமாக வாங்கிப் படித்தவர்கள், படித்ததும் கிழித்து விட்டார்கள்.

இதற்கு விதிவிலக்கு கோட்டக்குப்பத்தில் (புதுவை) உள்ள அரபிக் கல்லூரி நூலகம். அங்கு தாருல் இஸ்லாம் இதழ்களை பைண்டிங் செய்து பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். நூலகர் காஜி ஜைனுல் ஆபிதீன் கண் போல் காத்து வருகிறார். ஆராய்ச்சியாளர்களுக்குக் கொடுத்து உதவுகிறார்கள்.

நானும் கோட்டக்குப்பம் போய்ப் பார்த்தேன். தாவூத்ஷாவின் வரலாற்றை எழுதும் அளவுக்கு எனக்குச் செய்திகள் கிடைக்கவில்லை.

தாவூத்ஷாவின் வாரிசுகள் எங்கே இருக்கிறார்கள்? அவர்களைச் சந்தித்தால் பயனுள்ள செய்திகள் கிடைக்குமா?

அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கக் கிளம்பினேன்!

(தொடரும்)

நூல்: இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா

ஆசிரியர்: முனைவர் அ. அய்யூப்

Related Articles

Leave a Comment