சங்கப் பரிட்சையும் தங்கப் பதக்கமும்

by admin

தாவூத் ஷா – சிறந்த பத்திரிகாசிரியரும் நூலாசிரியருமான இவர் கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவிலில் கி.பி. 1885 மார்ச்சு 29 ஞாயிற்றுக்கிழமை பிறந்தார். தந்தை பாப்பு ராவுத்தர் ஒரு வணிகர். அன்னை குல்சூம் பீவி. பெற்றோரின் ஒரே மகனாகிய இவர், கி.பி. 1899-இல் கும்பகோணத்தில் உள்ள நேட்டிவ் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அப்பொழுது இவருக்கு தோழராக விளங்கியவர், பிற்காலத்தில் பிரபல கணித மேதையாக விளங்கிய இராமானுசம் ஆவார். அவருக்குத் தமிழ் வராது. இவருக்கு (தாவூத் ஷா) கணக்கு வராது. எனவே, இருவரும் நண்பர்களாக விளங்கியதில் வியப்பில்லை.

இராமனுசாச்சாரியிடம் தமிழ்க் கல்வி பயின்ற தாவூத் ஷா, நன்னூல் முதலான இலக்கண நூல்களையும், கம்ப ராமாயணம் முதலிய இலக்கிய நூல்களையும் நன்று கற்று, ராமாயணத்தில் பல்லாயிரம் விருத்தங்கள்வரை மனனம் செய்துகொண்டார்.

1903-இல் இவர் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் போது, தந்தை இறக்க, இவர் மனம் தளராது படித்து கல்லூரியில் சேர்ந்து பயிலலானார். அப்பொழுது இவருக்கு தமிழில் பேராசிரியராக இருந்தவர், உ.வே. சாமினாதய்யர். தொடக்கத்தில் இரசாயனப் பாடத்தை எடுத்துப் படித்த இவர், இரசாயனப் பேராசிரியராக இருந்த ஆங்கிலேயருக்கும் தமக்கும் அடிக்கடி கருத்து வேற்றுமை ஏற்பட்டதன் காரணமாக, தத்துவப்பாடம் எடுத்து டாக்டர் எஸ். ராதா கிருஷ்ணனிடம் பயிற்சி பெற்றார். கல்லூரியில் நடக்கும் எழுத்து, சொல் போட்டிகளில் கலந்து பரிசு பெற்றதோடு, தமிழ்ச் சங்கப் பரிட்சையிலும் வெற்றி பெற்று பொற்பதக்கம் பெற்றார். இதனை அக்காலப் பத்திரிகை ஒன்று, ‘சங்கப் பரிட்சையும், தங்கப் பதக்கமும்’ என்று மகுடமிட்டு வரைந்தது.

பி.ஏ. பட்டம் பெற்று மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகத்தில் எழுத்தராகச் சேர்ந்த இவர், படிப்படியாக உயர்ந்து ஒன்பது ஆண்டு காலத்தில் சப் மாஜிஸ்திரேட்டாகப் பதவி ஏற்றார். இக்காலை ஒத்துழையாமை இயக்கம் ஏற்பட இவர் அப்பதவியைத் துறந்து வெளியேறினார். தம் சொந்த ஊரில் முஸ்லிம் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கத்தை நிறுவி, அதன் ஆதரவில் ‘தத்துவ இஸ்லாம்’ என்ற பெயரில் ஒரு மாத இதழை வெளிக் கொணர்ந்தார். இதுவே, 1923-இல் ‘தாருல் இஸ்லாம்’ என்னும் புதுப் பெயருடன் வெளிவரலாயிற்று.

1921-இல் காஜா கமாலுதீன் சென்னை வந்திருந்த போது, அவர் இவரை பெரிதும் விரும்பி தம்முடன் இஸ்லாமியப் பிரசாரம் செய்ய ஐரோப்பா வருமாறு அழைக்க, அவ்விதமே சென்று, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய இடங்களில் இஸ்லாமியப் பிரசாரம் செய்து பலரை இஸ்லாத்தில் இணைத்துவிட்டு. ஓராண்டுக்குப்பின் தாயகம் திரும்பினார்.

லண்டனில் இருக்கும் போது இவருக்கு திருக்குர்ஆனைத் தூய தமிழில் ஆக்கி வெளியிட வேண்டுமென வேணவா உந்த, அவ்விதமே தாயகம் திரும்பியதும் திருக்குர்ஆனின் சில அத்தியாயங்களை ‘ஜவாஹிருல் புர்கான்’ என்னும் பெயருடன் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதற்கு மார்க்க விற்பன்னர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பின்னர் இவர் “தாருல் இஸ்லாம்” பத்திரிகையை அரசியல் பக்கம் திருப்பினார். தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து சென்னை மாநகராட்சியில் ஆல்டர்மேனாக ஆன இவர், கி.பி. 1940இல் முஸ்லிம் லீகில் சேர்ந்து பணியாற்றினார். இது இவருக்கு ‘தமிழ்நாட்டு ஜின்னா’ என்ற பட்டத்தை ஈட்டித் தந்தது.

லாகூர் மௌலவி முகம்மது அலி தாம் ஆங்கிலத்தில் எழுதிய திருக்குர்ஆனின் மொழி பெயர்பைத் தமிழில் மொழி பெயர்த்துத் தருமாறு இவரை வேண்ட, அவ்விதமே செய்து அதனை அச்சிடுவது பற்றி உடன்பாடு செய்யத் தம் மகன் அப்துல் ஜப்பாருடன் 1947 ஏப்ரலில் லாகூர் சென்றார். ஆனால், திரும்பி வந்து அதனை அச்சியற்றுவதற்கான ஏற்பாடு செய்யுமுன் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை ஏற்படவே அம்முயற்சி தடைப்பட்டது.

பின்னர், தாமே முயன்று குர்ஆன் மஜீத் பொருளுரையும் விரிவுரையும் வரைய முற்பட்டு தம்முடைய எண்பதாவது வயதில் அதை வரைந்து முடித்தார். அதில் 26 அத்தியாயங்கள் இதுவரை வெளியாகி வந்துள்ளன.

இதைத் தவிர இவர் நூறு நூல்கள் வரை எழுதியுள்ளார். ‘அல்புலைலா வலைலா’ என்ற அரபுக் கதைகளைக் கூட இவர் மொழி பெயர்த்து வைத்துள்ளார்.

இவருக்கு கம்ப ராமாயணத்தில் சிறந்த புலமை இருந்தது. அவர் அரசு அலுவலராக இருந்த காலத்தில் ஓரிரவு தம் சிப்பந்திகள் பின்னே வர ஒரு கிராமத்தில் தெரு வழியே சென்ற சமயம் அங்கு சீதா கல்யாண உபன்யாச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த பாகவதர் உடல்நலக் குறைவால் வராத பொழுது இவரையே அவரென மக்கள் எண்ணி மரியாதையுடன் வரவேற்று மேடை மீது ஏற்றி விட, இவர் நிலையை உணர்ந்து மிதிலைக் காட்சிப் படலம் தொடங்கி மிகவும் அற்புதமாக விளக்கம் நல்கி, இரவு இரண்டு மணிக்குத் தம் பேச்சை முடித்தார். அப்பொழுதுதான் இவர் ஒரு முஸ்லிம் என்று உணர்ந்தனர், ரசிகர்கள். அங்கிருந்த வைதீகர் ஒருவர் உணர்ச்சி மீக்குற்று ‘கம்ப ராமாயண சாகிப் வாழ்க!’ என்று தமிழிலும், வடமொழியிலும் இவருக்கு வாழ்த்துரை வழங்கினார் என்பர்.

இவர் ஒருமுறை ஹஜ் செய்துள்ளார். இவர் தமிழுக்குச் செய்த சேவையைப் பாராட்டி கி.பி. 1963-இல் தமிழ் எழுத்தாளர் சங்கம் இவருக்குக் கேடயம் வழங்கி கௌரவித்தது.

இவரை ‘முஸ்லிம்களின் தமிழ் மறுமலர்ச்சித் தந்தை’ என்று கூறலாம். இவர் தமிழ் இலக்கிய உலகில் தோன்றி வழுவற்ற தூய தமிழில் எழுதவும் பேசவும் செய்த பின்தான் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது என்பதை எவராலும் மறுக்க இயலாது.

நன்றி: ஆசிரியர் அப்துல் ரகீம் அவர்கள் ஆக்கிய “இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்” மூன்றாம் பாகம், இரண்டாம் பதிப்பு, 2006

Related Articles

Leave a Comment