11. தேடுங்கள்! கண்டு அடைவீர்!!
அறிஞர் தாவூத்ஷாவின் வாரிசுகளை நான் தேடியதற்குப் பல காரணங்கள். தாவூத்ஷாவின் வாரிசுகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது முதல் காரணம்! கண்டுபிடித்தால், தாவூத்ஷா
பற்றியச் செய்திகளை அவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமாகப் பெற முடியும். அப்போது, மற்றவர்கள் எழுதிய குறிப்புகளை வைத்துக் கொண்டு, அரைத்த மாவையே அரைத்தது போல் இருக்காது!
“தாருல் இஸ்லாம்” இதழும், தாவூத்ஷா எழுதிய நூல்களும் அவர்களிடம் கிடைக்கக் கூடும் என்று ஒரு நப்பாசை! தாவூத்ஷா நூறு நூல்கள் வரை எழுதி அச்சிட்டு வெளியிட்டு இருந்தாலும், இன்னும் 30-40 நூல் அளவுக்கு அச்சிட்டு வெளியிட அவர் கையெழுத்துப் பிரதிகள் தயார் செய்து வைத்திருந்தார். அந்த பிரதிகள் கிடைக்கக் கூடும் என்று ஓர் ஆசை.
நாட்குறிப்பு (டைரி) எழுதும் வழக்கம் தாவூத்ஷாவுக்கு உண்டு. அந்த “டைரிகள்” கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு.
ஆனால், வாரிசுகளைக் கண்டுபிடித்தும், தாவூத்ஷாவின் கையெழுத்துப் பிரதிகளோ, “டைரி”யோ கிடைக்கவில்லை.
“தாதையர் விளக்கம்” என்று தாவூத்ஷா குறிப்பு எழுதி வைத்திருந்தார். “தாய் தந்தையர்” என்பதையே “தாதையர்” என்று அவர் குறிப்பிட்டார். இது அவருடைய மூதாதையரைப் பற்றிய குறிப்புகள். அவருடைய பாட்டனார் முதல், பேரப் பிள்ளைகள் வரை அவரது பரம்பரை பற்றிய விவரங்களைக் குறித்து வைத்திருந்தார். அவர்களின் பிறப்பு இறப்பு, திருமணம், வேறு சுவையான நிகழ்ச்சிகளைத் திரட்டி, எழுதிக் கொண்டே வந்தார்.
‘இந்தக் குறிப்பாவது கிடைக்குமா?’ என்று தேடிய போது, இது, அமெரிக்காவிலுள்ள அவருடைய பேரன் நூருத்தீனிடம் இருப்பது தெரிந்தது!
“இதில் பல சுவையான செய்திகள் இருக்கின்றன. தாத்தா (தாவூத்ஷா) காலத்துக்குப் பின் தோன்றியப் புதிய ‘கிளை’களை எழுத விரும்புகிறேன்” என்று அவர் சொன்னார்.
கிணற்றில் போட்டக் கல்லு போல இருந்து என்ன பயன்? அதன் சுவையான பகுதிகளையாவது அச்சிட்டு வெளியிட்டால், “தாவூத்ஷா இலக்கியம்” பெருகுமே!
தாவூத்ஷாவுக்கு 3 மகன்கள், 4 மகள்கள். முதல் மகன் சம்சுதீன் குழந்தைப் பருவத்தில் இறந்து விட்டது. அடுத்த மகன் அப்துல் ஜப்பார். இளைய மகன் நசீர் அகமது. மகள்கள் ரமீஜா பேகம், நபீசா பேகம், ஜெய்புன்னிசா பேகம், சிராஜ் பேகம்.
(அனைவரும் இறந்து விட்டனர்.)
பிள்ளைகளுக்குத் தலைப்பு எழுத்தாகத் தனது பெயரை தாவூத்ஷா வைக்கவில்லை. தன் தந்தையின் பெயரை வைத்தார். “ந. பா.” (N. B. – நறையூர் பாப்பு இராவுத்தர்) என்பது பிள்ளைகளின் முன் எழுத்து. அந்த அளவுக்குத் தந்தை மீது அவருக்குப் பாசம்!
அப்துல் ஜப்பார்
மூத்த மகன் அப்துல் ஜப்பார் இப்போது இல்லை என்றாலும், குறிப்பிட வேண்டியவர் ஆவார். இவர் எல்லா வழியிலும் தந்தையைப் பின்பற்றியவர். தந்தையைப் போலவே “பி.ஏ.” பட்டதாரி. “நாச்சியார்கோவிலின் இரண்டாவது பி.ஏ.” என்று “தாருல் இஸ்லாம்” இதழில் தாவூத்ஷா பெருமையாக எழுதினார்.
தந்தையைப் போலவே தமிழ்ப் புலமையும், ஆங்கில அறிவும் நிறைந்த இவரை அரசு வேலைக்கு தாவூத்ஷா அனுப்பவில்லை. தனக்கு உதவியாகத் தன்னுடன் வைத்துக் கொண்டார். எங்கே போனாலும் மகனையும் உடன் அழைத்துச் சென்றார்.
இலங்கையில் நடந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள இருவரும் சென்றார்கள். இதுபற்றி “எமது இலங்கைச் சுற்றுப் பயணம்” என்ற கட்டுரையை 1953 ஜனவரி இதழில் அப்துல் ஜப்பார் எழுதினார்.
“தாருல் இஸ்லாம்” இதழை நடத்தவும் ஜப்பார் மிகவும் உதவினார். தாவூத்ஷாவின் முதுமைக் காலத்தில் இவரே இதழை நடத்தினார். இலங்கைப் பயணக் கட்டுரையின் தொடக்கத்தில், “தாருல் இஸ்லாம் பத்திரிகை ஆசிரியர்களான நாங்கள் இருவரும் மிலாது விழாவில் கலந்து கொள்ள இலங்கைக்குப் போய் வந்தோம்” என்று கூறுகிறார்.
“ஷஜருத்துர்” என்ற வரலாற்று நாவலையும் தொடராக இதழில் எழுதினார். பின்பு இது நூலாகவும் (இரண்டு பாகம்) வெளிவந்தது. நூல் வெளியீடுகளையும், “ஷாஜகான் புக் டிப்போ”வையும் பார்த்துக் கொண்டார். சகோதரி ரமீஜாவின் கணவர் நடத்திய “முஸ்லிம் முரசு” இதழின் ஆசிரியர் குழுவிலும் இடம் பெற்றிருந்தார்.
தாவூத்ஷா கடைசிக் காலத்தில் இவருடைய வீட்டில்தான் இருந்தார். அப்துல் ஜப்பாரின் மனைவி பெயர், பல்கீஸ் பீவி. இந்த அம்மையார், தந்தையைப் போல, மாமனாரைப் பரிவுடன் கவனித்துக் கொண்டார்.
மூத்த பேரன் பாரூக்
அப்துல் ஜப்பாருக்கு 4 மகன்கள். இரண்டாவது மகனின் பெயர் பாரூக். தாவூத்ஷாவுக்கு முதுமையில் உடனிருந்து உதவியவர், பாரூக். அவர் இறந்தபோது இவர் 23 வயது இளைஞர். எனவே அவரைப் பற்றி விரிவாகப் பேச இவரால் முடிகிறது. பாரூக் பேசுகிறார்:-
“பெரியாரும் தாவூத்ஷாவும் நெருக்கமாக இருந்தார்கள். கலைஞர் ‘தாருல் இஸ்லாம்’ வாசகர். அவரது முதல் கவிதை ‘தாருல் இஸ்லாம்’ இதழில் அச்சேறியது. தாவூத்ஷாவைப் பற்றி பல கூட்டங்களில், குறிப்பாக முஸ்லிம் லீக் கூட்டம், மிலாது விழாக்களில் கலைஞர் பேசியிருக்கிறார். ‘என் ஒருகையில் குடி அரசும், இன்னொரு கையில் தாருல் இஸ்லாமும் இருக்கும்’ என்று கலைஞர் கூறுவார்.
எஸ்.எஸ்.வாசன், சி.ஆர்.சீனிவாசன் இருவரும் தாவூத்ஷாவிடம் பாசமாக இருந்தார்கள். இதனால் ஆனந்த விகடன், சுதேசமித்திரன் இதழ்களை அவருக்கு இலவசமாக அனுப்பி வைத்தார்கள்.
முஸ்லிம் சம்பிரதாயங்களை முழுமையாக அறிந்தவராக, தவறாமல் கடைப்பிடிப்பவராகத் தாவூத்ஷா இருந்தார். எம்.ஜி.ஆர். நடித்த ‘ராஜா தேசிங்கு’ படத்தில் ஒரு திருமணக் காட்சி. அதைப் படமாக்கும்போது அருகிலிருந்து ஆலோசனை கூறும்படி தாவூத்ஷாவை அழைத்தார்கள். உடல் நலம் இல்லாமல் இருந்த அவரால் போக முடியவில்லை. என் தந்தையை (அப்துல் ஜப்பார்) அனுப்பி வைத்தார். அவர் போய், அந்தத் திருமணக் காட்சி முஸ்லிம் மார்க்கப்படி இருக்கிறதா என்று மேற்பார்வை பார்த்துவிட்டு வந்தார்.
மனைவி மீது தாவூத்ஷா மிகுந்த அன்பு வைத்திருந்தார். எப்போதும் “மைமூன் பீவி” என்று முழுமையாகப் பெயர் சொல்லி இனிமையாக அழைப்பார். அன்பு இருக்குமே அல்லாமல், அதிகாரம் இருக்காது, “வாருங்கள், போங்கள்” என்று மரியாதையாகப் பேசுவார். என் தந்தையும் இதே வழியைப் பின்பற்றினார்.
தாவூத்ஷா ஏதாவது தவறு செய்து விட்டால், யாராக இருந்தாலும், உடனே மன்னிப்புக் கேட்டு விடுவார். எவ்வளவு சிறியவராக இருந்த போதும் மன்னிப்புக் கேட்கத் தவற மாட்டார். ஒருமுறை மனைவியிடம் மன்னிப்புக் கேட்டார். இதனால் மனைவி கோபித்துக் கொண்டு, சாப்பிட மறுத்து விட்டார். நாலாம் வகுப்பே படித்திருந்த பாட்டி ‘பொறுத்துக் கொள்ளம்மா’ என்றுதான் சொல்லியிருக்க வேண்டும் என்று வாதாடினார். தாவூத்ஷா மன்னிப்பைத் திரும்பப் பெற்றுக் கொண்ட பின்புதான் பாட்டி சாப்பிட்டார்.
தாவூத்ஷாவுக்கு ‘டைரி’ எழுதும் பழக்கம் உண்டு. நிறையக் கட்டுரைகள் எழுதி வைத்திருந்தார். அடிக்கடி வீடு மாறியதில் எல்லாம் காணாமல் போய்விட்டன.
நான் சிறுவனாக இருந்தபோது சாந்தோமில் வசித்தோம். பின்பு பாலமுத்து தெரு, பச்சையப்ப செட்டி தெரு, அலிசாலி சாகிப் தெரு, மஅரூப் சாகிப் தெரு என்று வீடு மாறிக் கொண்டே இருந்தோம். தாயார் சாகிப் தெருவுக்கு அருகிலுள்ள மஅரூப் சாகிப் தெரு வீட்டில்தான் தாவூத்ஷா காலமானார். அதன் பின்னும் பல வீடுகள் மாறினோம். ரூ.40 முதல் ரூ.4000 வரை வாடகை கொடுத்தோம். என் தந்தையார் காலத்திலும் வாடகை வீடுதான்.
தாவூத்ஷா கீழே விழுந்து, கால் எலும்பு முறிந்து படுக்கையான காலத்திலிருந்து பக்கத்திலிருந்து நான் அவருக்கு உதவி செய்தேன். பள்ளிக்கூடம் கூடப் போகவில்லை. ஏழாம் வகுப்புடன் என் படிப்பு நின்று விட்டது. தாவூத்ஷாவுக்கு முழுநேரமாகப் பணிவிடை செய்தேன். இதனால் மனம் நெகிழ்ந்து போன அவர், நாச்சியார்கோயில் கடைத்தெருவில் தனது பெயரில் இருந்த கடையை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார். எனது திருமணத்தின்போது அந்தக் கடையை விற்க வேண்டியதாகி விட்டது.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதற்கு எடுத்துக்காட்டாக தாவூத்ஷா வாழ்ந்தார். பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து, தன் காலத்திலேயே திருமணமும் செய்து வைத்தார்.
“தாருல் இஸ்லாம்” அலுவலகம், தனது நூல்களின் உரிமை ஆகியவற்றை, தனது எழுத்துப் பணிக்கு ஊன்றுகோலாக இருந்த என் தந்தைக்கு கொடுத்தார். தான் பயன்படுத்திய வெள்ளி ஊன்றுகோலையும் தந்தார்.
தாவூத்ஷா நகைச்சுவையை நன்கு ரசிக்கக்கூடியவர். அவரும் சிரிக்கச் சிரிக்கப் பேசக் கூடியவர். ஒருமுறை வீட்டிலிருந்த பழைய பேப்பர்களைக் கழிக்க, தெருவில் சைக்கிளில் போன ஒரு பழைய பேப்பர் வியாபாரியைப் பாட்டி (தாவூத்ஷாவின் மனைவி) அழைத்தார். வியாபாரி வந்து வாசலில் அமர்ந்தார். பழையப் பேப்பர்களைப் பாட்டி அள்ளிக் கொண்டு வந்து போட்டார். வியாபாரி கைத் தராசில் நிறுத்து விட்டு, “நாலு வீசை இருக்கிறது, அம்மா” என்றார்.
“நல்லாப் பாரப்பா, பத்து வீசையாவது தேறும்” என்று பாட்டி சொன்னார்.
“நீங்களே பாருங்கம்மா” என்று வியாபாரி தராசைத் தூக்கிக் காட்டினார். “சரியா நாலு வீசை இருக்கிறதம்மா”
இந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டே, வீட்டுக்குள்ளிருந்த தாவூத்ஷா வெளியே வந்தார். “என்ன, மைமூன் பீவி, என்ன விவகாரம்?” என்று கேட்டார்.
“இவ்வளவு பேப்பரும் பத்து வீசை இருக்கும்ங்க. இந்த ஆள் நாலு வீசைதான் இருக்கிறது என்று நிறுத்துக் காட்டுகிறார்” என்று பாட்டி சொன்னார்.
அதைக் கேட்ட தாவூத்ஷா கலகல என்று சிரித்தார். “மைமூன் பீவி! இந்த ஆட்கள் இந்தத் தராசில் என்னைக் கூட நிறுத்து, ‘நாலு வீசை இருக்கிறார்’ என்று சொல்லி விடுவார்கள்!” என்று மேலும் சிரித்தார். இவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதே வியாபாரி சொல்லாமல் கொள்ளாமல் நழுவி விட்டார்!
இந்த நிகழ்ச்சியை தாவூத்ஷா ‘டைரி’யில் எழுதி வைத்திருந்தார். அந்த டைரியை நான் படித்தேன். அவர் எழுதிய சில ‘டைரி’களை அவரது அனுமதியுடன் நான் படித்திருக்கிறேன். ஒருமுறை ஒரு மருமகன் காரசாரமாகப் பேசி விட்டார். மருமகன் என்பதால் தாவூத்ஷா எதுவும் பேசவில்லை.
‘சாதாரணமாக முரடன் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இவர் பலாக்காய் முரடனாய் இருக்கிறாரே!’ என்று டைரியில் குறித்து வைத்தார்.
ஒருமுறை பேரப்பிள்ளைகளுடன் தாவூத்ஷா ‘வாக்கிங்’ போனார். திரும்பும்போது தர்பார் ஓட்டலில் தேநீர் குடித்தார். பணம் கொடுக்க பர்சை தேடினால், காணோம். ‘நாளை பணம் கொடுத்துவிட்டு வாங்கிக் கொள்ளுகிறேன்’ என்று வெள்ளிக் கைத்தடியைக் கொடுத்து விட்டு வந்தார். ‘ஞாபக மறதியாக ஜிப்பாவை மாற்றிப் போட்டுவிட்டு ஓட்டலுக்குப் போய் விட்டேன். அதற்கு இது சரியான தண்டனை’ என்று டைரியில் குறித்து வைத்தார்.
தாவூத்ஷா மலேசியாவுக்குப் போன போது ஒரு நண்பர் விருந்து கொடுத்தார். பிரியாணி விருந்து, தாளிச்சா, பாயசம் என்று நல்ல விருந்து, நண்பர் மட்டும் தன் பக்கத்தில் ஒரு கிண்ணத்தை மூடி வைத்திருந்தார். சாப்பிடும்போது மூடியைத் திறந்து, ஒரு விரலால் கிண்ணத்தைத் தொட்டுக் கொண்டார்.
“என்னங்க, அது?” என்று தாவூத்ஷா கேட்டார்.
“கருவாட்டுக் குழம்புங்க! எந்த சாப்பட்டுக்கும் எனக்குக் கருவாட்டுக் குழம்பு வேண்டும்” என்று நண்பர் அசடு வழிந்தார். “பிரியாணிக்கும் கருவாட்டுக் குழம்பா!” என்று தாவூத்ஷா சிரிக்க, மற்ற நண்பர்களும் சிரித்து விட்டார்கள்!
வானொலிப் பேச்சு
தாவூத்ஷா பெண் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்தார். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தார்கள்.
தாவூத்ஷா, என் தந்தை இருவரும் பலமுறை வானொலியில் பேசியிருக்கிறார்கள். என் கடைசி அத்தையும் (தாவூத்ஷாவின் 4வது மகள்) வானொலியில் உரையாற்றியிருக்கிறார்.
நான் நகரசபை பள்ளிக்கூடத்தில் படித்தேன். ஏழாம் வகுப்புக்கு மேல் படிப்பு ஏறவில்லை. என் தாயாரின் தகப்பனார் நூர்ஜகான் என்னை அவரது ஊருக்கு (திருப்பந்துருத்தி) அழைத்துப் போய்ப் படிக்க வைத்தார். அப்போதும் 8ம் வகுப்புக்கு மேல் படிப்பு ஏறவில்லை. ‘படிக்காத மக்கு’ என்று எல்லாரும் என்னை ஒதுக்கி வைக்க, தாவூத்ஷா மட்டும் என்னை தன் அருகில் வைத்துக் கொண்டார். இதனால் அவருக்குப் பணிவிடை செய்யும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
‘படிப்பு இல்லையே என்று கவலைப்படாதே. எனக்கு ஊன்றுகோலாக இருக்கத்தான் அல்லாஹ் உன்னை இப்படிப் படைத்து விட்டான்’ என்று ஒருமுறை தாவூத்ஷா என்னிடம் சொன்னது இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அனுதாபக் கூட்டம்
தாவூத்ஷா மறைந்த பின் சென்னையில் கலைவாணர் அரங்கில் அனுதாபக் கூட்டம் நடந்தது. கலைவாணர் அரங்கில் ஒரு முஸ்லிம் பெரியவரின் மறைவுக்கு நடந்த முதல் அனுதாபக் கூட்டம் இதுதான்.
“தாருல் இஸ்லாம்” வெளிவந்த காலத்தில் பல முஸ்லிம் இதழ்கள் வெளிவந்தன. அந்த இதழ்களில் சினிமா விளம்பரம் வெளியிடுவதில்லை; சினிமா விமர்சனமும் எழுதுவதில்லை. ஆனால், தாவூத்ஷா, கால மாறுதலைப் புரிந்து கொண்டு, தாருல் இஸ்லாம் பத்திரிகையில் சினிமா விளம்பரம் வெளியிட்டார். சினிமா விமர்சனமும் எழுதினார். நேரம் கிடைக்கும்போது அவரே படம் பார்த்து, விமர்சனம் எழுதி வெளியிட்டார்.
“மொஹலே ஆஜம்” என்ற இந்திப் படம், சந்திரலேகா, வஞ்சிக்கோட்டை வாலிபன் போன்ற படங்களின் விமர்சனம் தாவூத்ஷா எழுதியது. ஜெமினியின் “மூன்று பிள்ளைகள்” படம் பார்க்க பத்திரிகைக் காட்சிக்கு அவர் போயிருந்தார். படம் முடிந்ததும், “படம் எப்படியிருக்கிறது?” என்று ஒருவர் கேட்டார். “மூன்று பிள்ளைகளைக் காட்டிலும், படம் தொடங்கும்போது காட்டிய இரண்டு பிள்ளைகள் (ஜெமினியின் சின்னம்) நன்றாக இருந்தது!” என்று தாவூத்ஷா சிரித்துக் கொண்டே சொன்னார்.
எதிர்ப்பு
தாவூத்ஷா நல்ல தமிழில் எழுதினார். இதனால் கலைஞர், நாவலர், கவி கா.மு. ஷெரீப் போன்றவர்கள் வாசகர்களாக இருந்தார்கள்.
தாவூத்ஷாவின் சீர்திருத்தக் கருத்துகளுக்கு சில முஸ்லிம்களிடம் கடும் எதிர்ப்பு இருந்தது. அவர் திருக்குர்ஆனை தமிழில் மொழி பெயர்த்தபோது ‘காபீர்’ (ஒரே கடவுள் என்ற நம்பிக்கை இல்லாத) மொழியில் மொழிபெயர்க்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பு. அது போல, ‘இஸ்லாம்’ என்ற நூலைப் படங்களுடன் வெளியிட்டார். இதற்கும் எதிர்ப்பு. ‘மணவாழ்க்கையின் மர்மங்கள்’ என்ற நூலுக்கும் எதிர்ப்பு. ஆனால், பின்பு, எதிர்த்தவர்களே தமிழ் குர்ஆன், படங்களுடன் இஸ்லாம் நூல்கள், இல்லற வழிகாட்டி நூல்கள் வெளியிட்டார்கள்.
நாகூர் அனிபா
தாவூத்ஷாவின் எழுத்துகளைப் பற்றி சொல்லும்போது, இசை முரசு நாகூர் அனிபாவின் நினைவு வருகிறது. அவர் தாவூத்ஷாவின் பரம ரசிகர். தாவூத்ஷாவின் எழுத்தும் பேச்சும் அவருக்கு மிகவும் பிடிக்கும். அவரது இனிய தமிழ்க் குரலை தாவூத்ஷாவும் ரசிப்பார்.
தாவூத்ஷா இறந்த பின், அவருடைய பேரன் (என்னுடைய தம்பி) ஷாஜகானுக்கு வேலை வேண்டி நாகூர் அனிபாவிடம் சிபாரிசுக்குப் போனோம். அப்போது அவர் எம்.எல்.சி.யாக இருந்தார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைக்கு ஆள் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அனிபாவிடம் சொன்னோம். அவரது சிபாரிசின்பேரில் ஷாஜகானுக்கு வேலை கிடைத்தது.
வேலை கிடைத்து விட்ட விவரத்தைத் தெரிவித்து அவருக்கு நன்றி கூறினோம்.
“உங்கள் தந்தை (தாவூத்ஷா) தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் அரும் பணியாற்றியிருக்கிறார். சமுதாயத்துக்கும் பெருந்தொண்டு புரிந்திருக்கிறார். அவரது தமிழ், சமுதாயத் தொண்டுக்கு எனது சிறியக் கைமாறுதான், இது”.
நாங்கள் இருவரும் கண்களில் நீர் மல்க அவருக்கு சலாம் கூறி விடை பெற்றுக் கொண்டோம்.
சுத்தம்
தாவூத்ஷாவுக்கு எந்த இடமும் சுத்தமாக இருக்க வேண்டும். வீடு மட்டுமல்ல, வீதியும். நாங்கள் குடியிருக்கும் வீதி, குப்பை கூளமாக இருந்தால், உடனே அதிகாரிகளுக்கு தெரிவித்து, சுத்தப்படுத்தச் செய்வார். ரெயிலில் தண்ணீர் வசதி இல்லாவிட்டால், ஸ்டேசன் மாஸ்டரிடம் சொல்லி, தண்ணீருக்கு ஏற்பாடு செய்வார்.
தாவூத்ஷாவின் சமகால எழுத்தாளர்கள் சினிமா உலகில் நுழைந்து, பாடல் ஆசிரியர்களாகவும் திரைக்கதை ஆசிரியர்களாகவும் ஆனார்கள். நிறைய சம்பாதித்து, கார், மாளிகை என்று வசதியாக வாழ்ந்தார்கள். வேறு சில எழுத்தாளர்கள் எதை எதையோ எழுதிப் பணம் சேர்த்தார்கள். ஆனால், தாவூத்ஷா மட்டும் கொள்கையில் குறியாக இருந்தார்.
பணத்துக்கு ஆசைப்படவில்லை. பணம் சம்பாதித்தால் அதைக் காப்பாற்றுவதே குறிக்கோளாகி விடும் என்று கூறுவார்.
(தொடரும்)
நூல்: இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா
ஆசிரியர்: முனைவர் அ. அய்யூப்