இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா – 11 (2)

by admin

ஷாஜகான்

திருப்பந்துருத்தியிலிருந்து அய்யம்பேட்டைக்குப் போனோம். தஞ்சையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

பாரூக்கின் தம்பி ஷாஜகான் வீடு இங்கு இருக்கிறது. அவர் காலமாகி விட்டார்.

வீட்டில் அவர் மனைவி, மகள் இருந்தார்கள். பாரூக்கும் எங்களுடன் வந்து உதவி செய்தார்.

இங்கே எங்களுக்குப் புதையல் கிடைத்தது!

ஒரு மர பீரோவில் நிறைய நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன! ஆனால், தாவூத்ஷா எழுதிய நூல் ஒன்று கூட இல்லை! எல்லாம் அவர் பயன்படுத்திய நூல்கள்! “தாருல் இஸ்லாம்” இதழ்களும் இல்லை!!

வேறு என்ன புதையல்?

தாவூத்ஷாவின் குடும்ப “போட்டோ ஆல்பம்” ஒன்று கிடைத்தது! மிகப் பழைய படங்கள்! ‘டிஜிட்டல் கேமிரா’வில் நகல் எடுத்துக் கொண்டோம். இந்த நூலில் நீங்கள் பார்க்கும் படங்கள் அங்கு கிடைத்தவை தான்.

ஜீ.வி. நாயுடு என்ற ‘போட்டோ கிராபர்’ எடுத்த படங்கள் இவை. அவர் புகைப்படங்கள் எடுப்பதில் தங்கப்பதக்கம் பரிசு பெற்றவர். நாகப்பட்டினத்தில் இருந்தார்.

தாவூத்ஷா எப்போது அழைத்தாலும் நாச்சியார்கோயிலுக்கு அல்லது சென்னைக்கு வந்து படம் எடுத்துக் கொடுப்பார். இதனால் இவரை “நம்முடைய சொந்த போட்டோ கிராபர்” என்பார், தாவூத்ஷா.

ஷாஜகானுக்கு 2 மகன்கள், ஒரு மகள்.

ஆர்வலர் நூருத்தீன்

ஜப்பாரின் கடைசி மகனான நூருத்தீன், அமெரிக்காவில் இருக்கிறார். தாவூத்ஷாவின் எழுத்துகளைப் பாதுகாக்க வேண்டும், பரப்ப வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு இருக்கிறது. தாவூத்ஷா பற்றிய குறிப்புகள் அனைத்தும் இவரிடந்தான் இருக்கின்றன என்று நாம் சந்தித்த எல்லாரும் சொன்னார்கள். நூருத்தீனிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டோம்.

நாம்: தாவூத்ஷாவின் நூல்கள், தாருல் இஸ்லாம் இதழ்கள் உங்களிடம் உள்ளனவா?
நூருத்தீன்: என்னிடம் எதுவும் இல்லை.

நாம்: ஒரு பீரோவில் பூட்டி வைத்திருக்கிறீர்கள் என்கிறார்களே?
நூருத்தீன்: அய்யம்பேட்டையில் பார்த்தீர்களே, அதுதான்!

நாம்: தாவூத்ஷா எழுதிய ‘டைரி’கள் உங்களிடம் உள்ளனவா?
நூருத்தீன்: டைரி இருப்பதே எனக்குத் தெரியாது.

நாம்: அவரது கையெழுத்துப் பிரதிகள் உங்களிடம் இருக்கின்றனவா?
நூருத்தீன்: எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. வீடுகள் மாறியதில் தவறி விட்டன என்றார்கள்.

நாம்: தனது பரம்பரை பற்றித் ‘தாதையர் விளக்கம்’ என்ற குறிப்பைத் தாவூத்ஷா எழுதி வைத்தாராமே?
நூருத்தீன்: ஆமாம், அது மட்டும் என்னிடம் இருக்கிறது. அதில் பல சுவையான விவரங்கள் இருக்கின்றன. இப்போது பேரப் பிள்ளைகள், கொள்ளுப் பேரப் பிள்ளைகள் என்று பரம்பரை பெருகி விட்டது. இவர்களைப் பற்றியக் குறிப்புகளையும் எழுதிச் சேர்க்க, அந்தக் குறிப்பை நான் அமெரிக்காவுக்கு எடுத்து வந்தேன்.

நாம்: தாவூத்ஷா பற்றியக் குறிப்புகள் அதில் உள்ளனவா?
நூருத்தீன்: அவருடைய தந்தை, பாட்டன், ஓட்டன், முப்பாட்டன், அவருடைய முந்தைய பாட்டன் என்று முன் தலைமுறை ஐந்து பேரைப் பற்றி எழுதியிருக்கிறார். அதாவது, ஹைதர் அலி காலத்திலிருந்து குடும்ப வரலாறு தொடங்குகிறது. தன்னைப் பற்றியும் தாவூத்ஷா விரிவாக எழுதியிருக்கிறார். தன்னுடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகளின் வாழ்க்கையில் ஆண்டுதோறும் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளையும் குறித்து வைத்துள்ளார்.

நாம்: நல்ல ஆவணமாக இருக்கும் போலிருக்கிறதே. அதில் நல்ல செய்திகள் இருந்தால் அச்சிட்டு வெளியிடலாமே?
நூருத்தீன்: நல்ல யோசனை. மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசிக்கிறேன்.

நாம்: தாவூத்ஷா எழுதிய “குர்ஆன் மஜீத் பொருளுரையும் விளக்கவுரையும்” ஏழாம் பகுதி உங்களிடம் இருக்கிறதாமே? அதை அச்சிட்டு வெளியிடலாமே?
நூருத்தீன்: எனக்கும் ஆசைதான். ஆனால், எனக்குத் தயக்கமாக இருக்கிறது.

நாம்: என்ன தயக்கம்?
நூருத்தீன்: அந்த தமிழ்நடை இன்று எடுபடுமா? முதல் ஆறு பாகம் வைத்திருப்பவர்கள் மட்டுமே ஏழாம் பாகம் வாங்குவார்கள். அரை நூற்றாண்டுக்கு முன்வெளிவந்த ஆறு பாகங்கள் இப்போதும் எத்தனை பேரிடம் இருக்கும்? எத்தனை பேர் வாங்குவார்கள்? பெருஞ்செலவு செய்து, வீணாகிவிடக் கூடாதே! அதுதான் வேறு ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்.

நாம்: என்ன திட்டம்?
நூருத்தீன்: இது கணினிக் காலம். ஏற்கனவே அச்சான ஆறு பகுதிகள், இன்னும் அச்சாக வேண்டிய ஏழாம் பகுதி எல்லாவற்றையும் கணினியில் ஏற்றிவிடப் போகிறேன். அந்த வேலை நடந்து கொண்டிருக்கிறது. விருப்பம் உள்ளவர்கள், தேவைப்பட்டவர்கள் கணினியில் எடுத்துக் கொள்ளலாம். அதுபோல ‘தாதையர் விளக்கம்’ கையெழுத்துப் பிரதியையும் கணினியில் ஏற்ற இருக்கிறேன். இதற்காக ஒரு இணையதளம் தொடங்கியிருக்கிறேன். www.darulislamfamily.com

நாம்: நீங்கள் ஒரு எழுத்தாளர். இதனால்தான் தாத்தா தாவூத்ஷாவின் எழுத்துகளைக் காப்பாற்றிப் பாதுகாக்கும் ஆர்வம் உங்களிடம் ஏற்பட்டிருக்கிறது போலிருக்கிறது. தாவூத்ஷாவைப் பற்றி ஏதாவது சொல்லுங்களேன்.
நூருத்தீன்: அவர் காலமானபோது நான் ஐந்து வயது சிறுவன். எனவே, அவரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. என் பெரிய அண்ணன் பாரூக்கிடம் கேட்டால் நிறைய சொல்லுவார்.

நாம் : அவரைப் பார்த்து விட்டோம்.
நூருத்தீன் : என் அம்மா சொன்ன ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.

நாம் : சொல்லுங்கள்
நூருத்தீன் : தாத்தா (தாவூத்ஷா) எங்கள் வீட்டில்தான் இருந்தார். என் அம்மா அவரைக் கவனித்துக் கொண்டார்கள். காலமாவதற்கு சில நாள் முன்பு அவரிடம் ஒரு மாறுதல் ஏற்பட்டது. என் அம்மா சாப்பாடு கொண்டு போனால் ‘சாப்பிட்டு விட்டேனே’ என்று தாத்தா சொல்லுவாராம். ‘இப்போதுதானே சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்’ என்று அம்மா சாப்பாட்டைக் காட்டுவார்களாம். ‘பச்சை தலைப்பாகை கட்டிய மூன்று பேர் வந்தார்கள். நாங்கள் நால்வருமாக அமர்ந்து சாப்பிட்டோமே’ என்று தாத்தா கூறுவாராம். அதை அம்மா தன் தோழியிடம் சொல்லியிருக்கிறார்கள். ‘அவர் ஞானி ஆகிவிட்டார்’ என்று தோழி கூறியுள்ளார். இதை என் அம்மா என்னிடம் தெரிவித்தார்.

திருக்குர்ஆனைத் தமிழில் மொழிபெயர்த்து விளக்கவுரை, விரிவுரை எழுதியவர் தாவூத்ஷா. இஸ்லாமியத் தத்துவங்களை விளக்கிப் பல நூல்கள் எழுதியவர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டங்களில் பேசியவர். பலருடன் வாதிட்டவர். பழுத்த பழமாகி, ஞானி ஆகிவிட்டார் போலிருக்கிறது.

நூருத்தீன் அமெரிக்காவில் கணினிப் பொறியாளராகப் பணியாற்றுகிறார். அவருக்கு 2 மகள்கள். மனைவியும் மகள்களும் அவருடன் அங்கே இருக்கிறார்கள். கடந்த பத்து ஆண்டாகச் சென்னையில் அம்மா அப்பா பெயரில் ஒரு அரபிப் பள்ளி நடத்திக் கொண்டிருக்கிறார். அரபி மொழியைக் கற்றுக் கொள்ள விரும்பும் பையன்களுக்கு அரபி இலக்கண இலக்கியம் கற்றுத் தரப்படுகிறது.

தாத்தா தாவூத்ஷா போல, தந்தை ஜப்பார் போல, நூருத்தீனும் ஓர் எழுத்தாளர். இவர் எழுதிய சிறுகதைகள் ஆனந்த விகடன், சமரசம், முஸ்லிம் முரசு, இணைய வலை இதழ்களில் வெளி வந்துள்ளன.

(தொடரும்)

நூல்: இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா

ஆசிரியர்: முனைவர் அ. அய்யூப்

Related Articles

Leave a Comment