32. ஜுலைபீப் (جـلـيـبـيـب)
மதீனாவில் வாழ்ந்துவந்த அன்ஸாரிக் குடும்பம் ஒன்றின் வீட்டிற்கு ஒருநாள் திடீரென வருகை புரிந்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். வரலாற்று ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்படாத குடும்பம் அது. தங்கள் வீட்டு வாசலில் முகமன் கூறி முஹம்மது நபியவர்கள் வந்து நிற்பது கண்டு பரபரத்துப் போனார் அந்தக் குடும்பத் தலைவர். மகிழ்ச்சியில் அவருக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.
பரஸ்பர குசல விசாரிப்புக்குப் பிறகு, தாம் வந்த செய்தியைச் சொன்னார்கள் நபியவர்கள், “நான் உங்கள் மகள் திருமண விஷயமாய் வந்திருக்கிறேன்”
‘அல்லாஹ்வின் தூதர் என் மகளை மணமுடிக்க விரும்புகிறாரா?’ பரபரத்துக் கிடந்தவர் ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப் போனார். “அல்லாஹ்வின் தூதரே! எத்தகு ஆச்சரியமும் மகிழ்ச்சியுமான செய்தி இது!. எங்களது கண்களுக்கு குளிர்ச்சியான காட்சி அமையப் போகிறது!”
அவரது பதில் அவர் தப்பர்த்தம் புரிந்து கொண்டார் என்பதை நபியவர்களுக்கு உணர்த்தியது. விளக்கம் சொன்னார்கள், “நான் தங்கள் மகளை எனக்குப் பெண் கேட்டு வரவில்லை”
“வேறு யாருக்கு?” உற்சாகம் கீழிறங்கிய குரலில் கேட்டார் அந்த அன்ஸாரி.
“ஜுலைபீபுக்குத் தங்கள் மகளைப் பெண் கேட்டு வந்தேன்”
அந்த பதிலைக் கேட்டு அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘என்னது ஜுலைபீபுக்கா?’ புருவம் உயர்ந்து விழிகள் பிதுங்கின அந்த அன்ஸாரிக்கு. அந்த அதிர்ச்சியில் அர்த்தம் இருந்தது.
oOo
இதுவரை வெளியான தோழர்களின் பெயர்களையெல்லாம் கவனித்திருக்கிறீர்களா? ஒவ்வொருவர் பெயருடனும் அவரின் தந்தைப் பெயர், குலப்பெயர், கோத்திரப் பெயர் போன்ற ஏதாவது ஒன்று, அல்லது அனைத்தும் நீளமாய் ஒட்டிக் கொண்டிருக்கும். குலம், கோத்திரம் என்பதெல்லாம் அறியாத ஸாலிம் என்ற தோழருக்குக்கூட அவரின் முன்னாள் எசமானன் பெயர் சேர்ந்து கொண்டு, இன்னாரால் விடுவிக்கப்பெற்ற ஸாலிம் என்று ஓர் அடையாளம் தொக்கி நின்றது. அதுதான் அவர்களது வளமை, பெருமை எல்லாம்.
அத்தகைய அடையாளம் எதுவுமே இன்றி ஒருவர் மதீனாவில் வாழ்ந்து வந்தார். ஜுலைபீப்! ஒரே வார்த்தை – ஒரே பெயர். அவ்வளவுதான். அந்தப் பெயரும்கூட அவரின் பெற்றோர் இட்ட இயற்பெயர் இல்லை., காரணப் பெயர்.! இறைவசனம் 33:59இல் ‘ஜில்பாப்’ எனும் சொல்லை பிரயோகித்திருப்பான் இறைவன். தமிழில் அதற்கு முக்காடு, முன்றானை, தாவணி என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். இந்த ஜில்பாப் என்பதன் குறுஞ்சொல் ஜுலைபீப். அதாவது ‘குட்டை தாவணி’. ஜுலைபீப் மிக மிகக் குள்ளமானவர். அதனால் அவருக்கு அந்தப் பெயர் வந்து ஒட்டிக் கொண்டு அப்படியே நிலைத்துப் போய்விட்டது. உயரம்தான் குள்ளமென்றால் அவரது தோற்றமும் எந்த ஒரு கவர்ச்சியும் இன்றி இருந்திருக்கிறது. அதனால் ‘தமீம்’ (அழகற்றவன்) என்றும் அவரை அழைத்திருக்கிறார்கள்.
உயரம் படு குள்ளம்; கவர்ச்சியற்ற தோற்றம்; அவர் என்ன வமிசம், என்ன குலம் என்பதும் தெரியாது; அவரின் பெற்றோர் யார் என்பது பற்றியும் எந்தத் தகவலும் இல்லை. அவர் ஓர் அராபியர் என்பதை மட்டும் அனைவரும் அறிந்திருந்தார்கள். இப்படியான ஒருவர், குலப்பெருமை மாண்புகள் மிகுந்த ஒரு சமுதாயத்தின் மத்தியில் வாழ நேர்ந்தால் எப்படியிருக்கும்?
அனாதரவான ஒரு பிறவியாக, கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்கானவராக மதீனாவில் வாழ்ந்து திரிந்து கொண்டிருந்தார் ஜுலைபீப். ஆறுதல், அக்கறை, பரிவு என்று எதுவுமே அவர் அறிந்ததில்லை. யாரும் அவரை ஒரு பொருட்டாகக்கூடக் கருதியதில்லை. பொருட்டற்ற ஒரு மனிதனாய் சமூகத்தில் வலம் வருவது எவ்வளவு கொடுமை?
நாம் அறிந்தோ அறியாமலோ நம் மனம் நம்மைப் பற்றிய அங்கீகாரத்துக்கு ஏங்கிக் கொண்டுதான் இருக்கிறது. உதாசீனம் ஏற்படுத்தும் காயம் இருக்கிறதே, அது மிகப்பெரிசு. அதற்குமேல் இகழ்ச்சி, கிண்டல், நையாண்டி என்றெல்லாம் ஒரு மனிதன் சந்திக்க நேர்ந்தால் அவனது மனோ நிலையும் அவனது தன்னம்பிக்கையும் எந்த நிலையில் இருக்கும்? இதற்கெல்லாம் ஆளாகிக் கிடந்தார் ஜுலைபீப்.
அஸ்லம் எனும் கோத்திரத்தைச் சேர்ந்த அபூபர்ஸா என்றொருவர் இருந்தார். அவருக்கு மட்டும் ஜுலைபீபின் மேல் வெறுப்பு ஒருபடி அதிகம். தன் வீட்டின் பக்கம்கூட அவர் நெருங்கக் கூடாது என்று நினைத்திருந்தவர் அவர். ஆண்களிடமிருந்து ஏளனமும் இகழ்ச்சியும் தொந்தரவும் அதிகம் இருந்ததால் பெண்களுக்கு மத்தியில் ஜுலைபீப் அடைக்கலம் தேடியிருந்திருப்பார் போலிருக்கிறது. அதை அறிந்திருந்த அபூபர்ஸா தன் மனைவியிடம் தெளிவான கட்டளையே இட்டிருந்தார். “இதோ பார் ஜுலைபீபை உங்களுக்கு மத்தியில் நான் பார்க்கக்கூடாது. அப்படி நான் பார்த்தேன், அவருக்கு நிகழ்வதே வேறு. பொல்லாதவனாகி விடுவேன் நான்”
எவ்வித மதிப்போ மரியாதையோ இன்றி ஏதோ ஒரு ஜடப்பொருள்போல் ஜுலைபீபின் காலம் கடந்து கொண்டிருந்த வேளையில் மதீனா வந்தடைந்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். மக்கள் மத்தியில் இஸ்லாம் வேரூன்ற ஆரம்பித்தது. கூடவே அன்பு, அரவணைப்பு, சகோதரத்துவம் போன்ற சொற்கள் எல்லாம் புதுப்பொலிவு அடைய ஆரம்பித்தன. கருணையின் வடிவான நபி, மக்களின் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் மதிப்பளிக்கும் அந்த இறைத் தூதர், ஜுலைபீபை அக்கறையாய் இழுத்து அரவணைத்துக் கொண்டார்கள். அன்ஸாரியாகப் பரிணமித்தார் ஜுலைபீப்.
நபியவர்கள் உருவாக்கிய சமூகத்தில் குலம், கோத்திரம், அந்தஸ்து, செல்வாக்கு, புறத் தோற்றம் போன்ற மாயைகள் மனிதனின் ஏற்றத் தாழ்வை நிர்ணயிக்கும் அளவுகோலாய் அமையவில்லை. எல்லாம் மனம். அதனுள் புதையுண்டு கிடக்கும் இறை நம்பிக்கை. அதன் பலனாய்ப் பொங்கியெழும் நல்லறங்கள். அவை, அவை மட்டுமே அளவுகோல். சமூகத்தின் அனைத்துப் போலி அம்சங்களையும் வெட்டிச்சாய்த்து அவை முன்னுரிமை பெற்றன. ஒருவன் யார் என்று அவனது உண்மையான அடையாளத்தை அவை அறிவித்தன.
மிருகங்களுக்கே பரிவு காட்டச் சொன்ன நபியவர்கள், இஸ்லாமிய வட்டத்துள் வந்துவிட்ட தோழர் ஒருவரை எப்படிப் புறந்தள்ளுவார்கள்.? அவருக்கும் வாழ்க்கை உண்டு, அதற்கு ஓர் அர்த்தமும் உண்டு என்பதை உணர்த்த, தாமே கிளம்பிச் சென்றார்கள் பெண் கேட்க.
ஜுலைபீப் பற்றி அனைத்தும் அறிந்திருந்த பெண்ணின் தந்தை அதிர்ந்தார், ‘என்னது ஜுலைபீபுக்கா?’ அல்லாஹ்வின் தூதரிடம் தமது மறுப்பை முகத்துக்கு நேராக எப்படிச் சொல்வது என்று தெரியாமல் சட்டெனச் சமாளித்தார், “பெண்ணின் தாயாரிடம் நான் கலந்து ஆலோசிக்க வேண்டுமே”
நழுவி தம் மனைவியிடம் வந்தார். “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உன் மகளுக்கு திருமணம் நடைபெற விரும்புகிறார்கள்”
அதைக் கேட்டவருக்கு தம் கணவருக்கு ஏற்பட்ட அதே ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டன. “ஆஹா! எத்தகைய நற்செய்தி இது. நமது உள்ளங்களுக்கு எத்தகைய உவப்பு வந்து சேர்ந்திருக்கிறது”
“அவசரப்படாதே. நபியவர்கள் தாம் மணமுடித்துக் கொள்ள நம் மகள் வேண்டும் என்று கேட்கவில்லை. அவளை ஜுலைபீபுக்குப் பெண் கேட்டு வந்திருக்கிறார்கள்”
அதிர்ச்சியில் உறைந்துவிட்டார் அந்தத் தாய். கிளியை வளர்த்து ஜுலைபீப் கையில் கொடுப்பதாவது? “முடியாது. முடியவே முடியாது. ஜுலைபீபுக்கு நம் மகளை அளிக்க முடியாது” தீர்மானமாகச் சொன்னார் அந்தத் தாய்.
வெளியே காத்திருக்கும் நபியவர்களிடம் செல்வதற்குத் தந்தை திரும்பியபோது, தாயின் உரையாடலைக் கேட்க நேர்ந்த மகள் அவசரமாய் வந்தார். குறுக்கிட்டார்.
“யார் என்னை மணமுடிக்கக் கேட்டது?” தாய் மகளிடம் அனைத்தையும் விவரித்தார்.
நபியவர்களிடமிருந்து கோரிக்கை வந்துள்ளது; அதைத் தம் தாய் திட்டவட்டமாய் மறுத்துள்ளார் என்பதை அறிந்ததும் மிகுந்த குழப்பமும் வேதனையும் அடைந்தார் அந்தப் பெண்.
“அல்லாஹ்வின் தூதரிடமிருந்து வந்துள்ள கோரிக்கையை நிராகரிக்கிறீர்களா? என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்துதான் பேசுகிறீர்களா? இறைத் தூதரின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள். நிச்சயமாய் நமக்கு எந்தவிதக் கேடும் வந்து சேராது”
பெற்றோர் ஒருபுறம் இருக்கட்டும். தம் கணவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று ஒரு பெண்ணுக்குக் கனவும் எதிர்பார்ப்பும் இருக்கும்? அப்படியெல்லாம் முழுத் தகுதியுடன் இல்லாமல் சற்றுக் கூடுதல் குறைச்சலாக மணமகன் வந்து அமைந்தாலும் பரவாயில்லை; ஏற்றுக் கொள்வதில் பிரச்சினையிருக்காது. அப்படியெல்லாம் இல்லாமல் அவலட்சணம் என்பது மட்டுமே தோற்றத் தகுதியாய் இருக்கும் ஒருவருக்கு வாழ்க்கைப்பட துணிவதற்கு அசாத்திய மனோதிடம் வேண்டும். அதையும் நபியவர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக ஏற்றுக்கொள்வது என்பது, அடிபணிதல் என்பதன் உச்சக்கட்டம். அடிபணிந்தார் அந்தப் பெண்.
அதற்குமுன் ஒரு வசனம் சொன்னார்.
oOo
இந்நிகழ்வுக்குச் சிலகாலம் முன் ஒரு திருமணம் நடைபெற்றது. தம் அத்தை உமைமா பின்த் அப்துல் முத்தலிபின் மகள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் ரலியல்லாஹு அன்ஹாவை, தம்மிடம் அடிமையாய் இருந்தவரும் பின்னர் தாம் மகனாய்ப் பாவித்தவருமான ஸைத் இப்னுல் ஹாரிதா ரலியல்லாஹு அன்ஹுவுக்கு மணமுடித்து வைத்தார்கள் நபியவர்கள். நிற, குல ஏற்றத் தாழ்வுகள், ஆண்டான், அடிமை என்பதெல்லாம் இஸ்லாத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாய் அமைந்த திருமணம் அது. பின்னர் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் அந்தத் திருமணம் முடிவுக்கு வந்ததும், பிறகு ஸைனப் ரலியல்லாஹு அன்ஹா நபியவர்களுக்கே வாழ்க்கைத் துணையாய் அமைந்ததும் தனி விவரங்கள்.
ஆரம்பத்தில் ஸைதுடன் திருமணம் புரிந்துகொள்ள ஸைனப் ரலியல்லாஹு அன்ஹா ஒப்புக்கொள்ளவில்லை. குரைஷியரின் உயர்குலத்தவரான தாம், அடிமையாய் இருந்த ஸைதை மணந்து கொள்வதா? என்று அவருக்கு அதிகமான தயக்கம் இருந்தது. அப்பொழுது முக்கியமான இறைவசனம் ஒன்று வந்து இறங்கியது.
“மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை…” (33:36).
அதைக் கேட்ட ஸைனப் (ரலி) தம் சுய விருப்பு, வெறுப்புகளை ஓரமாய் ஒதுக்கிவிட்டு உடனே அத்திருமணத்திற்கு உடன்பட்டார்கள். அந்தக் குறிப்பிட்ட விஷயத்தில் அறிவுறுத்தும்படியாக அந்த வசனம் வந்து அமைந்தாலும் நம் உலக வாழ்வின் எந்த விஷயத்திற்கும் அதுதான் அடிப்படை என்பது நாம் மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்.
குர்ஆன் வசனங்களை வாழ்க்கையாய் வாழ முற்பட்ட சமூகமில்லையா அது; எனவே, இந்த வசனத்தை அந்த நேரத்தில் தம் பெற்றோருக்கு ஓதிக் காண்பித்தார் அந்த அன்ஸாரிப் பெண். வாயடைத்துப் போயினர் அவர்கள்.
“அல்லாஹ்வின் தூதர் எனக்கு எது நலம் விளைவிக்கும் என்று அறிவுறுத்துகிறார்களோ அதற்கு முழு திருப்தியுடன் அடிபணிகிறேன்” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.
நபியவர்களுக்கு அந்தப் பெண்ணின் எதிர்விளைவு தெரியவந்தது. அகமகிழ்ந்தவர்கள் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். “யா அல்லாஹ்! அவளுக்கு நன்மைகளை ஏராளமாய் வழங்குவாயாக. அவளது வாழ்க்கையை கடினமானதாகவும் துன்பமானதாகவும் ஆக்கிவிடாதே”
ஒருவரின் வாழ்க்கை சிறப்புற நபியவர்களின் துஆவைவிட சிறந்த பரிசு எது? ஜுலைபீபை முழுமனத் திருப்தியுடன் மணம் புரிந்து கொண்ட அந்தப் பெண் மரணம் அவர்களைப் பிரிக்கும்வரை உவப்பாய் இல்லறம் புரிந்துள்ளார்.
முற்றிலும் இறைவனுக்கும் அவன் தூதருக்கும் என்று கட்டுப்பட்டுவிட்டதால் அதன் முழுக் கூலியையும் மறுமைக்கு நிச்சயப்படுத்திவிட்டான் போலிருக்கிறது அந்த அல்லாஹுதஆலா. அந்தப் பெண்ணின் பெயர்கூட வரலாற்றுக் குறிப்புகளில் இடம்பெறாமல் தன்னடக்கத்தில் ஒளிந்துவிட்டது. ஆனால் பிற்காலத்தில் அந்தப் பெண் விதவையானதும் மதீனாவில் இருந்த அன்ஸார்கள் அவரை மறுமணம் புரிந்து கொள்ளப் போட்டியிட்டிருக்கின்றனர். நபியவர்களின் சிறப்புப் பிரார்த்தனைக்கு உட்பட்டவர் என்ற தகுதியும் அவரது அடிபணிதலும் அவரது தகுதியை எங்கோ உயர்த்திவிட்டிருந்தது.
oOo
நபியவர்களின் தலைமையில் படையெடுப்பு ஒன்று நிகழ்வுற்றது. இஸ்லாத்தின் எதிரிகளுடன் நிகழ்வுற்ற போர்களில் ஒன்று அது. போர் முடிந்ததும் போரில் உயிரிழந்தவர்களைப் பற்றி விசாரித்தார்கள் நபியவர்கள்.
தோழர்களிடம், “நீங்கள் யாரையாவது இழந்துவிட்டீர்களா?” இன்னின்னவர் உயிரிழந்தார் என்று தம் உறவினர்கள், தோழர்களின் பெயர்களெல்லாம் சொன்னார்கள் அவர்கள்.
படைப்பிரிவின் மற்றொரு பகுதியினரிடம் விசாரித்தார்கள். அவர்களும் அதைப் போலவே பதில் அளித்தனர். அடுத்தொரு பிரிவினர் தங்கள் மத்தியில் உயிரிழப்பு ஏதும் இல்லை என்று தெரிவித்தனர்.
அனைத்தையும் கேட்டுவிட்டு பதில் அளித்தார்கள் நபியவர்கள். “ஆனால் நான் ஜுலைபீபை இழந்துவிட்டேன். களத்தில் அவரைத் தேடுங்கள்”
விரைந்து எழுந்து தேடினார்கள் தோழர்கள். யுத்தக் களத்தில் உதிரம் உறைந்து கிடந்தார் ஜுலைபீப். அவரைச் சுற்றி ஏழு எதிரிகள் இறந்து கிடந்தனர். அவர்களைக் கொன்று, போரில் வீரமரணம் அடைந்திருந்தார் அவர். உருக்குலைந்த குறுகிய உருவம் பிரம்மாண்டத்தைத் தழுவிக் கிடந்தது. நபியவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட, அங்கு விரைந்து வந்தவர்கள், “இவர் என்னுடையவர்; நான் அவருடையவன்” எனக்கூறி, வலியுறுத்தும் விதமாய் அதையே மேலும் இருமுறை கூறினார்கள்.
பிறகு அது நடந்தது. தாமே தம் கையால் ஜுலைபீபை ஏந்திக் கொண்டு நடந்தார்கள் நபியவர்கள். இதைவிட பெரும்பேறு என்ன வாய்த்துவிட முடியும் ஒரு மனிதனுக்கு. சற்று ஆழ்ந்து யோசித்தால் நகக்கண்ணும் சிலிர்க்கலாம். பிறகு தாமே குழி தோண்டி அதில் ஜுலைபீபைக் கிடத்த, நல்லடக்கம் நடைபெற்றது.
உருவத்தைப் போலவும் பெயரைப் போலவும் சுருக்கமாய் வாழ்ந்து மறுமையின் நிகரற்ற பெருமைக்கு உரியவராகிப் போனார் ஜுலைபீப்,
ரலியல்லாஹு அன்ஹு!
oOo
சத்தியமார்க்கம்.காம்-ல் 31 மே 2011 அன்று வெளியான கட்டுரை