ஈ.வே.ரா. பெரியாரின் வாழ்த்து மடல்

by admin

“தாருல் இஸ்லாம்” என்ற வாரப் பத்திரிகையையும், இதன் ஆசிரியர் திரு. தாவூத்ஷா, பி.ஏ., அவர்களையும் நினைக்கும் தோறும் நினைக்கும் தோறும் நாம் கழிபேருவகை அடைகின்றோம்.

“தாருல் இஸ்லாம்” பத்திரிகையும், இதன் ஆசிரியரும் நம் கூட்டத்தைச் சார்ந்தவர்கள். நாம் எப்படி இந்து சமயத்தில் மதத்தின் பெயரால், வேதத்தின் பெயரால், சாத்திரங்களின் பெயரால், புராணங்களின் பெயரால், பழக்க வழக்கங்களின் பெயரால் நடைபெறும் புரட்டுகளை வெட்ட வெளிச்சம் ஆக்குகின்றோமோ, அத்தன்மைத்தே “தாருல் இஸ்லாம்” பத்திரிகையும் இதன் அறிவிற்சிறந்த ஆசிரியரும் தம் சமயத்தின் பேரால் உள்ள புரட்டுகளையும் குருட்டு நம்பிக்கைகளையும் மூடப் பழக்க வழக்கங்களையும் ஒழித்து, மக்கள் அறிவு வளர்ச்சியையும், சுய மரியாதையையும் அடையத் தம்மாலான முயற்சி செய்து வருகின்றார்கள்.

இந்நிலையிலும் இக்கொள்கையிலும் உள்ள பத்திரிகைகளோ, பத்திரிகாசிரியர்களோ பாமர மக்களின் செல்வாக்கையும் நம்பிக்கையையும் எளிதில் பெற்றுவிட முடியாது என்றே சொல்ல வேண்டும். எனினும், உறுதியும் பயமின்மையும் பிடிவாதமும் கொண்டு நடந்து வந்தால், மக்கள் உண்மை நிலை உணரத்தக்க அறிவுநிலை அடைந்தவுடன் அக்கொள்கைகள் பயனளிக்காமற் போகாவென்பது நமது துணிபு.

இம்முடிவுக்கு எடுத்துக்காட்டாக நமது “தாருல் இஸ்லாம்” பத்திரிகையையும், இதன் ஆசிரியருமாகிய நமது நண்பர் ஜனாப் பா.தாவூத்ஷா சாகிபு அவர்களையும் சொல்லலாம். எப்படியெனின், ஜனாப் தாவூத்ஷா அவர்கள் நமது நாட்டில் நடைபெறும் பெரும்பான்மையான பத்திரிகாசிரியர்கள் போல யாதொரு கொள்கையுமற்று வெறும் வயிற்றுப் பிழைப்பையும் தம் சுயநல வாழ்க்கையையுமே கருத்தாகக் கொண்டு பத்திரிகை நடத்த முன் வந்தவரல்லர். இவர் ஆங்கிலத்தில் பி.ஏ. பட்டம் பெற்றவர். அதிகாரத்தில் மதிக்கத் தகுந்ததான மாஜிஸ்திரேட் உத்தியோகத்தில் இருந்தவர். நாட்டினுடையவும், சமூகத்தினுடையவும் சுய மரியாதைக்குப் பெரிய ஆபத்து நேர்ந்திருக்கின்றது என்பதை அவர் உணர்ந்தவுடன் சட்டென்று தம் உத்தியோகத்தை ராஜிநாமா கொடுத்து உதறித் தள்ளிவிட்டுச் சற்றும் முன்பின் யோசியாமல் பொதுத் தொண்டில் இறங்கிவிட்டவர். இவர் இதுவரை உத்தியோகத்திலேயே இருந்திருந்தால் குறைந்த அளவு மாதம் 600, 700 ரூபாய் சம்பளம் பெறக்கூடிய ஒரு டிப்டி கலெக்டராகவாவது, பிரசிடென்சி மாஜிஸ்திரேட்டாகவாவது வந்திருப்பார்.
“தாருல் இஸ்லாம்” பத்தாம் ஆண்டு நிறைவு விழா மலருக்கு ஈ.வெ.ரா. பெரியாரும், “திராவிடன்” ஆசிரியர் கண்ணப்பனும் கூட்டாக அனுப்பியருந்த வாழ்த்துச் செய்தி.

திரு. தாவூத்ஷா அவர்கள் மற்றப் பத்திரிராதிபர்களைப் போலக் கிளிப்பிள்ளையாக இருந்து மற்றவர்கள் சொன்னதையே சொல்லிக் கொண்டிராமல் நாட்டினுடையவும், மக்களுடையவும் சீர்கேட்டிற்குக் காரணமாயுள்ள மதசம்பந்தமான குறைபாடுகளை உணர்ந்து, தைரியமாய் அவைகளில் இருக்கும் குற்றங்களையும் பிடிவாதங்களையும் மூட நம்பிக்கைகளையும் களைந்தெறிய முயற்சித்தார்.

இத்துறையில் இவர் இறங்கியவுடன் அவருக்குச் சற்றுச் செல்வாக்குக் குறைய ஆரம்பித்தது. பாமர ஜனங்களுடைய பழிக்கும் ஆளாகவேண்டி வந்தது. என்றாலும் நண்பர் தாவூத்ஷா சற்றும் கலங்காமல், தமது நிலையையும் மாற்றிக்கொள்ளாமல் உறுதியுடன் நின்று வேலை செய்துவந்தார். நாடெங்கும் சுற்றிப் பிரசாரம் செய்தார். ஐரோப்பிய தேசம் முதலிய வெளிநாட்டுக்கும் போய்வந்தார். மத்தியில் அநேக கஷ்ட நஷ்டம், பழி வசை முதலியவைகளுக்கும் ஆளானார்.

இவருடைய நிலைமாறாத கொள்கையால் இப்போது நல்ல செல்வாக்குள்ளதும் மதிக்கத்தக்கதும் ஒவ்வொருவரும் வாராவாரம் எதிர் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுமான ஒரு பத்திரிகையின் ஆசிரியராய்த் துலங்குகின்றார். இம்முயற்சியில் தமது நாட்டையோ, சமூகத்தையோ, கொள்கைகளையோ ஒரு சிறிதும் விட்டுக் கொடுத்தவர் அல்லர் என்பதையும் குறிப்பிடக் கடமைப் பட்டிருக்கின்றோம். எனவே, நண்பர் தாவூத்ஷா அவர்களும், அவரது உயிர்த்துணையும் ஒப்பற்ற ஆயுதமுமாகிய “தாருல் இஸ்லாமும்” இந்நிலையிலேயே நீடுழி வாழ ஆசைப்படுகிறோம்.

ஈ.வே. இராமசாமி நாயக்கர்.
ஜே.எஸ. கண்ணப்பர்.


“தாருல் இஸ்லாம்” பத்தாம் ஆண்டு நிறைவு விழா மலருக்கு ஈ.வெ.ரா. பெரியாரும், “திராவிடன்” ஆசிரியர் கண்ணப்பனும் கூட்டாக அனுப்பியருந்த வாழ்த்துச் செய்தி.

Related Articles

Leave a Comment