துன்பத்திற் கெல்லையில்லை

by admin

பா. தாவூத்ஷா மறைவையொட்டி கவிஞர் சாரணாகையூம் இன்ஸான் என்ற பத்திரிகையில் எழுதிய கவிதை இது. அண்ணன் ஜவாத் மரைக்கார் இலங்கையிலிருந்து இன்று அனுப்பி வைத்திருந்தார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. (நூருத்தீன்)


துன்பத்திற் கெல்லையில்லை
(தாவுத்ஷா இரங்கற்பா)

திக்கெல்லாம் தமிழ்மணக்க(த்)
திருமறையின் விளக்கமதை,
எக்காலும் பெயர்விளங்க
எடுத்தெமக்குத் தந்தசெம்மல்
இக்காலக் கட்டமதில்,
இறந்திட்ட செய்தியது
துக்கத்தில் ஆழ்த்துகின்ற
துன்பத்திற் கெல்லையில்லை.

தாருலிசு லாமென்ற
தீன்மார்க்க ஏடுதனை(ப்)
பாருக்குள் பல்லாண்டு,
பகையேற்று வீரமுடன்
மாறாநற் கருத்துக்களை
மக்கள்முனம் வைத்துவெற்றி,
ஏறுநடை போட்ட செம்மல்,
எமை விட்டுச் சென்றனனே!

தனக்கென்று ஓர் நடையை(த்)
தமிழன்னை மடிமீது
குணங்கண்டு ஏற்றிவைத்து
எழுத்துலகில் கோலோச்சி,
மணம் பரப்பி வந்தபெரு
மாமனித மேதையவர்
அணிசெய்த மணிபீடம்
ஓலமிடக் காண்கின்றேன்.

விஞ்ஞான ரீதியிலே
விளக்கமதைச் சொல்லி, மக்கள்
அஞ்ஞானம் போக்குதற்கு
ஆற்றிவந்த தற்சேவை
எஞ்ஞான்றும் அழிவதற்கு
இடமில்லை இஃதுண்மை:
மெய்ஞ்ஞானப் பேரொலியே
மனம்நொந்தென் இரங்கற்பா.

-கவிஞர் சாரணாகையூம்

Related Articles

Leave a Comment