சென்ற நூற்றாண்டில் காதியானில் தோன்றிய மிர்ஜா குலாம் அஹ்மத் நபியே யென்று ‘காதியானீ அஹ்மதிகள்’ வாதித்து வருவது குறித்து எமக்குப் பற்பல அன்பர்கள் வீனா விடுத்து விளக்கம் கோருகிறார்கள். இதற்கு வேண்டிய விளக்கத்தை நாம் நுந் தாருல் இஸ்லாம் வாயிலாகப் பலகாலும் துலக்கியுள்ளோம். 1916 முதலே நாம் செய்து வந்துள்ள ஆழிய ஆராய்ச்சியின் பயனாக, மிர்ஜா சாகிப் ஒரு நபியே அல்ல என்றும், அவர் ஒருகால் ஹி. 14-ஆம் நூற்றாண்டின் சீர்திருத்தக்காரராய் இருந்திருக்கலாம் என்றுமே முடிவு கட்டியுள்ளோம். காதியானீகள் சப்பைக் கட்டுக் கட்டும் சான்றுகளெல்லாம் அவர்களது யுக்தி வாதமே யன்றி மிர்ஜா சாகிபை நபி யென்று ருஜுப்படுத்தும் சரியான அத்தாக்ஷிகளாய் இல்லை. சிற்சில குர்ஆன் திருவாக்கியங்களுக்குத் தங்கள் மனம்போலே பொருள் கூறி, அவற்றின் உண்மைக் கருத்துக்களைத் திரித்து, அவர்கள் தங்கள் குருநாதரை நபியே யென்று மெய்ப்பித்துக் காட்டப் பகீரதப் பிரயத்தனமெல்லாம் எடுத்து வருகிறார்கள். ஒரு சில சாமான்ய மக்களைத் தவிர்த்துக் கற்றறிந்த மேதாவிகள் அவர்களது வியாக்யானத்தைச் சிறிதும் ஏற்பது கிடையாது. குர்ஆன் ஷரீபின் ‘நேசக் கக்ஷியினர்’ என்னும் 33-ஆவது அத்தியாயம், 40-ஆவது ஆயத்தில் வந்துள்ள ”காத்தமன் னபிய்யீன்” என்னும் சொற்றொடரில் காணப்படும் காத்தம் (முத்திரை). என்னும் பதத்துக்கு “இறுதியாக வைக்கப்படும் முத்திரை (seal) என்று கருத்துக் கொள்ளாது ஸ்டாம்ப் (stamp) என்று தாத்பரியம் கூறி, நபி முஹம்மத் (ஸல்) தங்களுக்குப் பின்னே. வரும் சிற்சில அடியார்களுக்கு முத்திரை (ஸ்டாம்ப்) குத்தி, உருவக முறையில் நபிமாரை, அல்லது நிழல் போன்ற நபிமாரை — “புரூஜீ நபி”களை அல்லது “ளில்லீநபி”களை — உண்டுபண்ணி விடுகிறார்கள்” என்று அந்த அஹ்மதீகள் யுக்திவாதம் புரிவார்கள். இது சாமான்ய மக்களை வழிகெடுக்கும் குதர்க்கமாகும்.
குர்ஆன் ஷரீபின் 33:40-ஆவது ஆயத் கூறுவது. இதுவாயிருக்கிறது: “உங்களுள்ளே எந்த மனிதற்கும் முஹம்மத் (ஸல்) தந்தையல்லர்; ஆனல், அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களின் (இறுதி) முத்திரையாகவும் விளங்குகிறார்; மேலும், அல்லாஹ்வே சகல விஷயங்களையும் (நன்கு] அறிகிறவனாயிருக்கிறான்.” இவ் வாயத்தை நாம் இப்பொழுது ஆழ ஆராய்ந்து பார்க்கக் கடவோம்.
காத்தம் என்பது (1) முதன் முதலாக முத்திரை என்றும், (2) அடுத்தபடியாக ஒரு வஸ்துவின் ‘முடிவு’ அல்லது ‘இறுதிப் பகுதி’ அல்லது ‘இறுதிக் கட்டம்’ என்றும் பொருள்படும். காத்திம் என்ற சொல்லுக்குரிய முதற் பொருளே, மேற்கூறிய (2)- ஆவது கருத்தாய் இருக்கிறது. அஃதாவது, காத்தம் என்னும் பதம், ‘முத்திரை’ என்றும், காத்திம் என்னும் பதம் ‘முடிவு’ அல்லது ‘இறுதிப் பகுதி’ அல்லது ‘இறுதிக் கட்டம்’ என்றும் முக்கியமான கருத்துக் கொள்ளும் என்றறியக் கடவீர்கள். முஹம்மத் (ஸல்) அவர்களே நபிமார்கட் கெல்லாம் இறுதியானவர்களெனக் கருதப்பட்டு வருவது வழக்கம்; வரலாற்று முறைப்படியும் இப் பெருமானாருக்குப் பின்னே இன்றுவரை இனியொரு நபியும் அவதரித்திலர் என்பது வெளிப்படை. எனினும், மேற்கூறிய 33:40-ஆவது ஆயத்தில், இறைவன் காத்திம் என்னும் சொல்லை உபயோகிக்காமல், காத்தம் என்னும் சொல்லையே வழங்கியிருக்கிறான். என்னெனின், வெறு ‘முடிவு’ என்பதைவிட ‘நபிமார்கட்கெல்லாம் முத்திரை’ என்பதே மிக ஆழமான தாற்பரியத்தை நல்கக் கூடியதாயிருக்கிறது. உண்மையிலே, இச்சொல் — காத்தம் — ‘முடிவு’ என்பதுடனே, ‘நபித்துவத்துக்குரிய சகல அம்சங்களின் சம்பூர்ணம்’ என்னுங் கருத்தையுங் கூடச் சுட்டிக் காட்டுவதாயிருக்கிறது; இன்னம், இச்சொல், நந் திருநபியவர்களின் சிஷ்யர்கள்பால், ‘நபித்துவத்துக்குரிய ஒரு சில ஆசீர்வாதங்கள் தொர்டர்ந்து வருமென்னும் உட்கருத்தையும் தன்னகத்தே அடக்கிக்கொண்டிருக்கிறது. நம் பெருமான் (ஸல்) ‘நபிமார்கட்கெல்லாம் முத்திரை’யா யிருக்கிறார்கள்; என்னெனின், இப் பெம்மானுடனே நபித்துவத்தின் நோக்கம், அஃதாவது, மானிட இனத்தை நேர்வழியில் நடாத்துதற்கு வேண்டிய சட்ட திட்டங்களில் இறை நாட்டம் — அவனது இஷ்டம் — குர்ஆன் ஷரீபிலே பரிபூரண சட்டமாய் வெளியாக்கப்பட்டதில் முடிவாக நிறைவேறிவிட்டிருக்கிறது. இன்னம், இந்த நபிகட்டிலகம் (ஸல்) ‘நபிமார்கட்கெல்லாம் முத்திரை’யா யிருக்கிறார்கள்; எவ்வாறெனின், நபிமார் மீது சொரியப்படும் சிற்சில அருட் கொடைகள் அவர்களுடைய சீடர்கள் பாலும் தொடர்ந்து நடைபெற்று வரவேண்டுவனவா யிருக்கின்றன.
நபித்துவ உத்தியோகமென்பது, மன்பதைகளை நேர்வழியிலே நடாத்திச் செல்ல அவசியமாய்த் தேவைப்படுகிறது; மக்களினத்துக்கு ஒரு சட்டத்தை —ஷரீஅத்தை— அளிப்பதனாலேனும், முன்னேயிருந்த சட்டத்தில் காணப்பட்ட குற்றங் குறைகளக் களைந்தெறிவதனாலேனும் கால முற்போக்குக்கேற்ற புதிய சீர்திருத்தத்துக்கு அத்தியாவசியமாயுள்ள புதியவற்றைப் புகுத்துவதனாலேலும் மானிட இனத்தை அந் நபி நேர்வழியில் நடாத்திச் செல்லலாம். இவ்வாறாய புதிய சட்டம் அல்லது புதிய சீர்திருத்தம் பண்டைக்காலத்தில் பரிபூரணமாய் அருளப்பட்டிருக்க மாட்டாது; என்னெனின், பிற்காலத்தில் பல்வேறு மக்களிடையே பல்வேறு சூழ்நிலைகளில் அருளப்பட வேண்டியிருந்த சட்டதிட்டங்களனைத்தும் முற்காலத்திலே அருளப்பட்டிருப்பது முடியாது. இக் காரணத்தாலேதான் அடிக்கடி இப்பாருலகுக்கு நபிமார்கள் அங்கங்கே அந்த அந்தச் சூழ்நிலைக் கேற்றாற் போலே அனுப்பப்பட்டு வந்துள்ளார்கள். ஆனால், திரு நபி முஹம்மத் (ஸல்) அவர்கட்கு அருளப்பட்ட சட்டதிட்டம் எல்லா நாட்டு எல்லாவித மக்களுக்கும் எல்லாக் காலத்துக்கும் பொருத்தமுள்ளதாகவும் போதுமானதாகவும் அமைந்துவிட்டிருப்பதால், இன்னம் இச்சட்டம் என்றைக்கும் அழிவுறாவாறு பாதுகாப்பும் செய்து வைக்கப்பட்டிருப்பதால் புதிய நபி ஒருவர் நம் இறுதி நபிக்கு இப்பாலே தோன்ற வேண்டிய அவசியமில்லாது போய்விட்டது; குர்ஆன் ஷரீப் இங்கிருக்க, இனியொரு புதிய சட்டம் (ஷரீ௮த்) தேவையின்மையால், இனியொரு புதிய நபியும் தேவையேயில்லை யென்றறிக.
மேற் கூறியவற்றால் இவ்வாறு நீங்கள் தவறாயெண்ணி விடாதீர்கள். அஃதாவது, இறைவனுடைய பொறுக்கி யெடுக்கப்பட்ட நல்லடியார்கள் மீது அவனால் அருளப்பட்டு வந்த அருட் கொடைகள் இனிவரும் நல்லடியார்கட்கு அருளப்படவே மாட்டாவென்று எண்ணத் துணிவது கூடாது. குர்ஆன் ஷரீபின் சம்பூர்ண சட்டத்துக்குப் பின்னே மானிட கோடிகட்கு வேறொரு புதிய சட்டம் தேவையென்பதே யில்லைதான்; ஆயின், ஆண்டவனுடைய அருட்கொடை மட்டும் இன்றும் இனி என்றும் நம்மக்கட் பூண்டுக்குத் தேவைப்பட்டே நிற்கின்றன. குர்ஆன் ஷரீபுக்கு இப்பாலே வேறொரு புதிய ஷரீஅத் வரத் தேலையே யில்லை யென்றாலும், மக்களினத்தை அந்தக் குர்ஆன் ஷரீஅத்திலே கொணர்ந்து நிறுத்த அடிக்கடி ஆன்றோர்கட்கும் சான்றோர்கட்கும் ஆண்டவனது அருட்கொடை விகாசம் தேவைப்பட்டே வருகிறது. இதற்கு வேண்டிய நபி பெருமான் திருவாக்கைப் பாருங்கள்:
லம் யப்க மினன் னுபுவ்வ(த்)தி இல்லல் முபஷ்ஷராத் — (நன்மாராயம் — சுபச் செய்தியைப் — பெறுவதொன்றைத் தவிர்த்து நபித்துவத்தில் ஏதும், எஞ்சி யிருக்கவில்லை) என்பது அதுவாகும். நபித்துவம் முடிவுற்று முத்திரையிடப் பெற்று விட்டது. ஆனல், அதனைச் சார்ந்துள்ள ஓர் அருட்கொடையாய பஷாரத் தெனப்படும் நன்மாராயம் பெறுவது மட்டும் நபி பெருமான் சீடர்களிடத்து என்றென்றும் நடைபெற்றே வரும். எனவேதான், எம் பெருமானார் (ஸல்) இச்சீடர்களுக் கெல்லாம். “பாரமார்த்திக ஞான பிதா’” என்றழைக்கப் பெறுகிறார்கள். நபி பெருமானுக்குரிய இறையருட் கொடைகளில் ஒன்றாய பஷாரத்தைப் பெறுவது இவர்களுடைய சீடர்கட்கெல்லாம் உரிய அனுக்ரகமா யிருத்தினாலே இச் சீடர்களெல்லாம் அந்தப் “பாரமார்த்திக ஞான பிதா”வின் ஞானவாரிஸ்களென்று அழைக்கப்பெறுகிறார்கள். எனவேதான், நுபுவ்வத்தென்பது முடிவடைந்து விட்டாலும், பஷாரத் தென்னும் நன்மாராயம் மட்டுமே என்றென்றும் நடைபெறக் கூடியதா யிருக்கிறதென்பது செவ்வனம் அறியக் கிடக்கிறது.
மீக் கூறியவாற்றா லெல்லால் விளங்கக் கிடப்பது யாது? நபிமார்கட்கெல்லாம் இறுதி முத்திரை (final seal) ஆகிய நபி முஹம்மத் (ஸல்) அவர்கட்குப் பின்னே நபி யெவரும் —பழைய நபியோ, புதியநபியோ— அவதரிப்பது முடியாது; அது கூடவும் கூடாது. அவ்வாறு எவரேனும் எந்தக் கருத்தைக் கொண்டேனும் தம்மை யொரு நபியென — ளில்லீ நபி, புரூஜி நபி என்றேனும் — உரிமை பாராட்டுவது தகாது; தகாது. அவ்வாறு உரிமை கொண்டாடுவது தீனுல் இஸ்லாத்துக்கே விரோதமாகும். ‘மிர்ஜா குலாம் அஹ்மத் ஒரு முஜத்தித் — சீர்திருத்தக்காரர் — என்பவரே யன்றி, எவ்வாற்றானும் ஒரு நபியாய் இருக்கவேயில்லை’ என லாகூர் மெளலானா முஹம்மதலீ எவ்வித ஐயந்திரிபு மில்லாத முறையிலே மெய்ப்பித்துக் காட்டியுள்ளார். இதன் சார்பாக 1955, நவம்பர் தாருல் இஸ்லாத்தின் 3-ஆம் பக்கத்தில் வெளியான “முஹம்மத் (ஸல்) எவர்க்கும் தந்தை யல்லர் என்னுங் கட்டுரையையும் படித்துப் பயனடைவீர்களாக. அஃது இதன் கீழே தரப்படுகிறது:
முஹம்மத் (ஸல்) எவர்க்கும் தந்தையல்லர்
குர்ஆன் ஷரீபின் 33:40 ஆயத், “உங்களுள்ளே எந்த மனிதற்கும் முஹம்மத் தந்தையல்லர்; ஆனால், அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுள் (இறுதி) முத்திரையாகவும் விளங்குகிறார்: மேலும் அல்லாஹ்வே சகல விஷயங்களையும் (நன்கு) அறிகிறவனா யிருக்கிறான்,” என்று கூறுகிறது. இதன் கருத்தென்ன வென்றால், அந் நபியவர்கள் (ஸல்) எந்த மனிதனுக்கும் தந்தையாக விளங்கவில்லை யென்பதுடன், ஆண்டவனின் இறுதி முத்திரையைப் பெற்ற கடைசி நபியாகவும் விளங்கி வருகிறார்கள் என்பதாகும்.
அம்மஹான் நபிமார்களுள் கடைசி நபியாக விளங்கி வருவதுடன், ஆண்டவன் ௮ம் மகத்துவ மிக்க பெருமானாரை நபிமார்களுள் முத்திரையாகவும் விளங்கச் செய்துள்ளான் என்பதன் தாத்பர்யம் என்னவென்றால்: வஹீ வாயிலாய் இறைவன் இறக்கிய வேதஞான வெளிப்பாடுகள் முஹம்மத் (ஸல்) காலத்துடன் முடிவடைந்து விட்ட தெனினும், ஆண்டவன் குர்ஆன் மூலமாக இறக்கி வைத்த சட்டங்கள் தொடர்ந்து என்றென்றும் நீடித்து நிலைக்கத் தக்க பெற்றி மிக்கனவாய் விளங்குகின்றன. அவ்வாறு சாசுவதமாய்த் தொடர்ந்து செயலாற்றத் தக்க சக்திபொருந்திய வேதத்தைப்பெற்றுத் தந்த இறுதி நபி (ஸல்) முத்திரையாக (காத்தமாக) விளங்குகிறார்கள் என்பதன் கருத்து, அம் மஹானை இறுதி நபியாக ஏற்றுகொண்ட மூமின்களுக்கு இறைவன் நல் வழியையே காண்பிப்பான் என்பதாகும். அஃதாவது, நபிபிரான் (ஸல்) எவர்க்கும் தந்தையா யில்லையெனினும், அவர்களை அல்லாஹ்வின் இறுதி முத்திரையாக ஏற்றுக் கொண்டுவிட்ட அனைவர்க்கும் அவனுடைய அருளும் பிரகாசமும் தொடர்ந்து நீடித்துவரும் என்பதே கருத்து.
மார்க்கத்தின் சட்டங்களை மனித இன வளர்ச்சிக் கேற்ற பருவத்துக் கொப்ப இறைவன் அவ்வப்போது நபிமார்கள் வாயிலாக மண்ணிடை யனுப்பி வந்தான். ஆனால், முஹம்மதின் (ஸல்) காலத்துடன் மானிட இனவளர்ச்சி சரியான பக்குவ நிலையை அடைந்து விட்டமையால், முஹம்மத் (ஸல்), ‘இறுதி நபி’ யாகவும், குர்ஆன் இறுதி வேதமாகவும் அமைந்து விட்டார்கள்; அன்றியும், அவர்கள் பரிபூரண முத்திரையாகவும் விளங்குகிறர்கள். ஆண்டவன் வஹீ வாயிலாய் வேத ஞானங்களை அறிவிப்பதைத்தான் நிறுத்திக் கொண்டானே யன்றி, அவ்விறுதி அறிவிப்பை ஏற்றுக் கொண்ட நல்லடியார்களான அவ்லீயாக்களுக்கும், சீர்திருத்தக்காரர்களுக்கும், நேர்வழி காண்பிப்போர்க்கும் தன் அருட்கொடையைச் சதா சொரிந்துகொண்டே இருக்கிறான்.
எனவே, இறுதி நபியவர்கள் யாருக்குமே தந்தையாக விளங்கா விடினும், எல்லா மூமின்களுக்கும் நல்வழி காண்பிக்கும் முத்திரையாகத் திகழ்ந்து வருகின்றார்களென்றே இறைவன் அந்த ஆயத்தில் ஐயந்திரிபற அறைந்துவிட்டிருக்கிறான், என்றறியக் கடவீர்கள்.
-பா. தாவூத்ஷா
தாருல் இஸ்லாம், டிசம்பர் 1956, பக்கம் 38-41