தமிழில் ஹதீஸும் பா. தா. வின் சேவையும்

by admin

னக்கு அரபீயோ, உர்தூவோ, பார்ஸீயோ தெரியாதாகையால், என் மார்க்கத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆங்கிலத்தில் வடநாட்டார் வெளியிட்டு வரும் நூல்களை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கையில், ‘A Manual of Hadith’ என்ற நூல் வெளிவந்தது கேட்டதும், 10 ரூபாய்க்கு மேல் கொடுத்து ஆவலுடன் 3 வருஷங்களுக்குமுன் வரவழைத்தேன்.

அது வந்து, அதைப் பார்த்த அன்றே, ‘இதைத் தமிழில் ஆக்கிக் கொடுக்க, பா. தா. அவர்கள் வனவாசங் கொண்டிருக்கின்றாரே! வேறு யார் தமிழ்நாட்டில் பா. தா. வைப்போல் இஸ்லாமிய நூல்களைத் தமிழிலாக்கிக் கொடுப்பவர் இருக்கின்றார்? இறைவனே!’ என்று நினைத்து ஏங்கினேன்.

என்னைப் போன்ற பலஹீனர்களின் ஏக்கத்தை இறைவன் கேட்டான் போலும்! வனவாசங்கொண்ட பா. தா. மறுபடியும் நகரவாசியாகி, மேற்படி ஆங்கில நூலை நமக்கு அழகிய முறையில் தமிழில் இரண்டோர் வருஷங்களுக்குள் கொடுத்துவிட்டார் என்றால், எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே யானாலும், மௌலானா பா. தா. அவர்களுக்குக் கொடுக்கவேண்டியதை நாம் கொடுக்கக் கடமைப் பட்டுள்ளோமல்லவா?

நாம் அவருக்குச் செய்ய வேண்டிய கடனாவது:

அவரைக் “காதியானி”, மதப் புரட்டன் என்றெல்லாம் கூறிக்கொண்டு இருந்தாலும், அவர் தமிழ் முஸ்லிம்களுக்குச் செய்த சேவையை நாணயத்துடனாவது ஒப்புக்கொள்வோமாக. அவர் லாஹூர் அஹ்மதீகள் ஆங்கிலத்தி லாக்கினதைத் தமிழில் நமக்குக் கொடுத்து வந்தாலும், அவருடைய வேலையிலாவது, எழுத்திலாவது, பேச்சுக்களிலாவது எங்காவது காதியானைப் பற்றியோ, அஹ்மதவர்களைப் பற்றியோ நபியென்று மறதியாகக்கூடப் பிரஸ்தாபித்ததாக யாராவது காட்ட முடியுமா?

அவரைப் பற்றி எங்குமுள்ள புகாரில் உண்மை ஏதாவது இருக்கின்றதா? என்று பல தடவை பா. தா. அவர்களைப் பிறாண்டிப் பார்த்ததில், மிர்ஜா குலாம் அவர்களைப் பற்றிப் புகார் கூறினார்களே ஒழிய, அவர்களை நபியென்று பின்பற்றுவதாகவோ, பின்பற்ற வேண்டுமென்றோ சொல்லவே இல்லை; இல்லை.

இந்நிலையில் பொறாமையும் புழுக்கமும் கொண்ட ‘முல்லாக்களின்’ ஆதிக்கத்திலுள்ளவர்கள் தாம் பா. தா. அவர்களுக்குக் கெட்ட பெயரைச் சூட்டுகின்றார்கள் என்று ஏற்படுகின்றது. காரணம், இவர்கள் சோம்பேறி வாழ்க்கையில் மண்விழும் அளவுக்குப் பா. தா. வின் தமிழ் நூல்கள் இளைஞர்களின் கண்களைத் திறந்துவிட்டன வென்பதே!

அறிவும், அனுபவமும், ஆராய்ச்சியும் அற்றவர்கள் தாம் இவ்வாறு நடந்து கொள்ளுகின்றார்கள் என்றால், அவையுள்ளவர்களும் இவ்வாறு நடந்துகொள்ளுவதுதான் வருந்தத் தக்க விஷயம்.

ஒரு இஸ்லாம் ஆசிரியர் கூறுகின்றார், ‘பா. தா. வுக்கு இஸ்லாமிய ஞானம் வேண்டுமானால், இஸ்லாமிய நூல்களைத் தமிழலாக்க வேண்டுமானால், அரபீ, உர்தூ, பார்ஸீ பாஷைகளில் பாண்டித்தியம் வேண்டும். அஃதில்லாத இவர் இஸ்லாமிய ண்மைக் கருத்துக்களை எப்படித் தமிழில் எடுத்துக்காட்ட முடியும்?…’ என்று.

மற்றோர் முஸ்லிம் ஆசிரியர் கூறுகின்றாராம்: ‘பா. தா. காதியானிகளின் நூல்களைப் பின்பற்றித் தமிழில் ஆக்கி வருவதால், சஹீஹ் புகாரீக்கு மதிப்புரை கொடுப்பது கூடாது’ என்று.

ஆலிம்கள் சொல்லுவதாகவும், தமக்கு அப்படித் தோன்றா விட்டாலும், … தர்ம சங்கடம் வேண்டாமென்று கூறி, ‘மதிப்புரை எழுதவல்லை; பா. தா. வின் நன்மையை உத்தேசித்து…’ என்று.

இவர்களுக்காக அழுவதா, வருந்துவதா? என்று தோன்றவில்லை. ‘ஆசிரியன்’ ஆன பிறகு தயவு, தாக்ஷிண்யம், பயம், பக்தி எதற்காக என்றுதான் விளங்கவில்லை. உள்ளதை உள்ளபடி, தன் ஆராய்ச்சியில் தோன்றுவதை மதிப்புரையாகக் கொடுக்க வேண்டியதுதான் தன் கடன் என்று உணராதவர்களெல்லாம் ஆசிரியர்கள், என்றால்….!

நான் படித்துப் பார்த்தேன், ஆங்கில நூலையும், பா. தா. வின் தமிழ்ப் பதிப்பையும். எந்தப் பக்கத்திலும், எந்த மூலையிலும் காதியான்—அஹ்மதீ வாசனையே வரக் காணவில்லை. வந்தால் அதை எடுத்துக் கூறத்தயங்குபவர்கள், உண்மையைக் கூறத்தயங்குபவர்கள், முஸ்லிமாக, இல்லை, மனிதவர்க்கத்தினராக இருக்க முடியுமா?

இஸ்லாமிய நூலில் ‘காதியானி’ வாசனை இருப்பது முஸ்லிம்களுக்குக் கூடாது என்று எண்ணும் ஆசிரியர்கள், அதை எடுத்துக் கூறாமல் இருந்து விடுவதால், இவர்கள் தங்கள் கடமையைச் செய்து விட்டதாக நினைத்துக்கொண்டால், இவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளுகின்றார்கள் என்பதை இவர்கள் உணர வேண்டும். நிற்க.

‘தமிழ் சஹீஹ் புகாரீ’யை அதிகமாக உபயோகப் படுத்திக் கொள்ளப் போகின்றவர்களில் நான் முதன்மை ஸ்தானம் பெறவேண்டுமென்ற ஆவல்கொண்டவனாயிருக்கின்றேன். ‘குர்ஆன் விளக்கம்’ எழுதப் பா. தா. வின் ஐவாஹிருல் பர்க்கான் போதாதே என்று ஏங்கியிருந்தேன். பூர்த்தியான தமிழ்க் குர்ஆன் இன்ஷா அல்லாஹ் சீக்கிரம் மேற்படி பா. தா. மூல்யமாகவே வர இருக்கின்றது. ‘ஹதீஸ் விளக்கம்’ என்பதைத் தொடர்ந்து வெளியிடப் பா. தா. வின் ‘நபிகள் நாயக வாக்கியம்’ போதவில்லையே என்று ஏங்கியிருந்தேன். ‘சஹீஹ் புகாரீ’யை அதே பா. தா. கொடுத்துதவி விட்டார். ‘இறுதிய ஜகத் குரு சரித்திரம்’ எழுத அதே பா. தா. வின் ‘நபிகள் நாயக மான்மியம்’ பூர்த்தியாவில்லையே என்றிருந்தேன். அதுகூட இன்னம் இரண்டோர் மாதங்களில் கைக்குக் கிட்டப் போவதாகப் பா. தா. வே, சொன்னார்கள்.

ஆயிரமாயிரக் கணக்கில் ஆலிம்கள், ஹாபிஸ்கள், அல்லா மாக்கள் நிறைந்த நம் தமிழ்நாட்டில் உம்மீ, அரபீ, உர்தூ, பார்ஸீயறியாத பா. தா. செய்த அளவில் ஐந்து சதவிகித மேயும் சேவையாவது தமிழ் முஸ்லிம்களுக்குச் செய்திருப்பதாக யாராவது துணிந்து காட்டமுடியுமா?

நான் பா. தா. வுக்கு வக்காலத்து வாங்கிப் பேசுபவன் என்று சுலபமாகச் சொல்லிவிடலாம். நான் ‘சாத்தானுக்கும் அவன் உரிமையை வழங்கி விடவேண்டும்’ என்னும் கட்சியைச் சேர்ந்தவன். பா. தா. விடம் ஆயிரம் குறைகளைக் காண்பிப்பதானாலும், தமிழ் முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய அறிவைக் கொடுத்ததுபோல் மற்றோர் முஸ்லிமைக் காட்ட முடியுமானால், விஷயம் வேறு. குறையற்ற இன்ஸானுமுண்டோ? இறுதி நபியவர்களின் குறையை அவரைப் பின்பற்றியவர்கள் எடுத்துக் கூறத் துணியார்கள் என்பதை உணர்ந்து தான் போலும், அல்லாஹ்வே, குர்ஆனிலேயே (சூரெ – அபஸ) அவருடைய குறையை எடுத்துக் காட்டி எச்சரித்திருக்கின்றான் என்றால், அப்பால்…?

-குலாம்


தாருல் இஸ்லாம், நவம்பர் 1947
பக்கம்: 9 – 10

Related Articles

Leave a Comment