சத்திய இஸ்லாமும் சமாதி வணக்கமும்

by admin

தினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் இப்பரந்த உலகைக் குறிப்பாக அரப் நாட்டை அக்கிரமம், அட்டூழியம், குடி, சூது, கொலை, கொள்ளை, வியபிசாரம், விக்கிரக ஆராதனை, பல தெய்வவழிபாடு எனும் அந்தகாரப் பேரிருள் கவ்வியிருந்தது. சர்வ உலக இரட்சகர் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் தோன்றி, “இஸ்லாம்” என்ற ஜோதியால் அவ்விருளை அகற்றி, ஏக தெய்வக்கொள்கை என்ற ஒளியைப் பரத்தினார்கள் என்பதை அறியாதார் நம்மில் யாருமிலர்.

அந்த ஏக தெய்வக் கொள்கையை ஏற்ற அன்றைய முஸ்லிம்களின் நிலை யாது? அக்கொள்கையையே ஏற்றிருக்கும் இன்றைய முஸ்லிம்களாகிய நமது நிலை யாது? அக்கொள்கை காரணமாக அன்று அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டிருந்த எண்ணற்ற அனுக்கிரகங்களும், பலாபலன்களும் இன்று நமக்கேன் கிடைப்பதில்லை? அக்கொள்கையை ஏற்றதனால் அவர்கள் அன்று உயர் நிலையில் இருந்தனர்; அதையே ஏற்றுள்ள நாம் ஏன் இன்று இழி நிலையில் இருந்து வருகிறோம்? இவைகளை நாம் ஒவ்வொருவரும் இன்று கட்டாயம் சிந்தித்தாக வேண்டியிருக்கிறது.

சுருங்கக் கூறின், இஸ்லாத்தின் மூலக் கொள்கையாகிய தூய்மையான (இறையின்) ஏகத்துவத்தில் களங்கம் ஏற்படுத்தியதே அந்நிலைக்குக் காரணம். நமது இஸ்லாமோ மிகத் தெளிவான அனுபவ சாத்தியமுள்ள ஏகத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் இயற்கை வாழ்க்கைத் திட்டமாக இருக்கிறது. இஸ்லாமிய வாழ்க்கை நடத்துவதற்காக இவ்வியற்கை அனுஷ்டானத் திட்டங்களை வாழ்க்கைச் சம்பந்தப்பட்ட சகல விவகாரங்களிலும் அனுஷ்டித்தாக வேண்டும். இம்மை மறுமையில் வெற்றி தரத்தக்க முறை இஃதொன்றே.

“மனிதன் உயர் நிலையையும், மேன்மை வெற்றியையும் அடைவது இறைவன் வகுத்த வாழ்க்கைத் திட்டத்தை அனுசரிப்பதையும், மனிதக் கடமைகளை ஆற்றுவதையும் பொறுத்திருக்கிறது,” என்ற நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் அரிய வாக்கியம் இக்கருத்தையே தெளிவுபடுத்துகிறது. ஹஜ்ரத் அபூபக்ர், ஹஜ்ரத் உமர், ஹஜ்ரத் உஸ்மான், ஹஜ்ரத் அலீ (ரில்வானுல்லாஹி) ஆகிய குலஃபாஉர் ராஷிதீன்களின் வாழ்க்கை முறை இதை அனுசரித்தே இருந்தது. அன்று எல்லோராலும் அரசியல், பொருளாதாரம், கூட்டரவு, நன்மை புரிதல், வணக்கம் போன்ற உலக மார்க்க காரியங்கள் அனைத்திலும் சத்திய இஸ்லாம் காட்டிய வழிமுறைகள் அனுஷ்டிக்கப்பட்டு வந்தன. அதன் காரணமாகவே அன்று எங்கும் அல்லாஹ்வின் அருள்மாரி பொழிந்துகொண்டிருந்தது. மானிட கோடிகள் எல்லாம் சுகக்ஷேமத்துடன் நிம்மதியாக வாழ்ந்தனர்.

ஆனால், என்று கிலாபத்தைச் சர்வாதிகாரம் ஆட்கொண்டதோ அன்றே உலக விவகாரங்களுடன் மார்க்க சம்பந்தம் இருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. உலக விவகாரங்களிலிருந்து மதம் ஒதுக்கித் தள்ளப்பட்டது. ஒன்றுபட்டிருந்த மார்க்க – உலக சம்பந்தம் துண்டிக்கப்பட்டு விட்டது. சுருங்கக் கூறுமிடத்து, இயற்கை மதமாகிய சத்திய இஸ்லாம் சக்கரவர்த்திகளின் கைப்பொம்மையாக அமைந்துவிட் டது.

அது சமயம் இஸ்லாத்தை முற்றும் உணர்ந்து, அதனுடைய உண்மைத் தோற்றத்தைக் கண்டறிந்திருந்த உலமாவெனும் அறிஞர்கள் தங்களின் முன்னோர் வெகு சிரமப்பட்டுத் தளரா ஊக்கத்துடன் முஸ்லிம்களின் உள்ளங்களில் உண்டு பண்ணியிருந்த இஸ்லாமிய உணர்ச்சியைக் குன்றவிடாதிருக்கப் பெரிதும் முயற்சி எடுத்துக்கொண்டனர். ஆனால், அதிகார பலத்தினால் அவ்வறிஞர்களின் முயற்சிகள் ஒடுக்கப்பட்டன. சத்திய இஸ்லாமிய பிரசாரம் செய்த காரணத்திற்காகச் சிலருக்குச் சாட்டையடி பரிசாக அளிக்கப்பட்டது. சிலர் சிறைக்கோட்டத்திற்கு அனுப்பப்பட்டனர். சிலர் உயிர்வதையும் செய்யப்பட்டனர். இவை சரித்திரம் பகரும் சான்று.

அம்ரு பில் மஃரூப் – நன்மைகளை ஏவி, நஹ்யி அனில் முன்கர்தீமைகளை விலக்குதல் என்ற இஸ்லாத்தின் லட்சிய உணர்ச்சி எது வரை ஆலிம்களின் மனங்களில் இடம் பெற்றிருக்குமோ அதுவரை தாங்கள் மனம் போனவாறெல்லாம் சுகபோகங்களை அனுபவித்துத் தாந்தோன்றி வாழ்க்கை நடத்த முடியாது என்பதை அன்றைய சுல்தான்கள் அறிந்திருந்தனர். ஆகவே, ஆலிம்களுக்கு உலக ஆசைகளைக் காட்டி, அவர்களைத் தங்கள் வயப்படுத்திக் கொண்டனர். இதன் பயனாகவே தங்களை “மார்க்கக் காப்பாளர்கள்” எனப் பறைசாற்றிக்கொண்டிருந்த ஆலிம்களில் சிலரைத் தவிர்த்து மற்றவர்கள் அந்த சுல்தான்களின் கைப்பொம்மைகளாகச் சமைந்து விட்டனர். அந்த சுல்தான்களை மகிழ்விப்பதற்காக இஸ்லாம் மார்க்கத்தின் உண்மை உருவைக் குலைத்து, இறை வேதத்திற்கும் திருநபி (ஸல்) அவர்களின் அரிய வாக்கியங்களுக்கும் தவறான விளக்கம் தர ஆரம்பித்தனர். 

இதன்றி, மற்றொருபுறம் முஃஜிஜா, கராமத் எனும் அதிசய சம்பவங்களைக் கூறிப் பாமரர்களைத் தம் பக்தி வலையில் சிக்க வைத்தனர். பாமரர்களின் இதயங்களில் செயலாற்றாமை, உணர்ச்சியின்மை, கடமையாற்றாமை ஆகியவைகளை உண்டு பண்ணும்படியான வஃஜு, குத்பா, உபன்னியாசங்கள் செய்ய ஆரம்பித்தனர். இதன் காரணமாக, பாமரர்களிடம் குறிப்பாக, கல்வியறிவு இல்லாதவர்களிடம் தஃவீஜ் அணிந்து கொள்ளுதல், நேர்ச்சை செய்தல், காணிக்கை செலுத்தல், பெரியார்களின் சமாதிகளில் ஒன்று கூடுதல் போன்ற ஆதாரமற்ற உயிரில்லாச் செயல்களே இஸ்லாமாக அமைந்துவிட்டன.

இச்செயல்களில் பெருமிதமாகச் சமாதி வணக்கமே உச்ச நிலையை அடைந்திருந்தது. சமூக, பொருளாதார, அரசியல் சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ளவும், கஷ்ட நிஷ்டூரங்கள் போன்ற பிணிகளைப் போக்கிக்கொள்ளவும், தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும் பாமர முஸ்லிம்கள் தர்காஹ்வின் பக்கல் திருப்பப்பட்டனர். இவ்வாறு, தெய்வவேதமாம் திருமறை குர்ஆனையும், தெய்வத் தூதர் திருநபி (ஸல்) அவர்களின் திருவாக்கியங்களையும் உணர்ந்து சிந்திக்கும் தன்மை அடியோடே ஒழித்துக் கட்டப்பட்டது. அப்பாமரர்களின் நம்பிக்கையும், அபிமானமும் இணை துணையற்ற, தனித்தோனான ஏக வல்லோன் அல்லாஹ்வை விட்டும், அவன் சொற்படி நடந்து அவன் அருள் பெற்ற அவனுடைய நல்லடியார்களாகிய அவ்லியாக்களின் மீது திருப்பப்பட்டு விட்டது. 

அவ்லியாக்களின் சமாதிகளை ஜியாரத்துச் செய்தும், அவர்கள் பேரில் காணிக்கை, நேர்ச்சை செய்தும் கொள்ளாதவரை தமக்கு ஏற்பட்டிருக்கும் சங்கட மெதுவும் தீராது என்றும், தேவைகள் பூர்த்தியாகா வென்றும் அப்பாமரர்களின் மனங்களில் பசுமரத்தாணி போல் பதிய வைக்கப்பட்டன. இப்பெரியார்கள் எவ்வாறு திரு குர்ஆனையும், ஹதீதுகளையும் நன்குணர்ந்து அவ்விரண்டின்படி முற்றும் ஒழுகி, நோய் நொம்பலங்கள், கஷ்ட நிஷ்டூரங்கள் ஏற்பட்டுவிடும் காலங்களில் அவைகளையெல்லாம் நீக்கித் தரச் சர்வ சக்தன் அல்லாஹ்விடமே பிரார்த்தித்து வேண்டிக் கொண்டிருந்தனர் என்பதைப் பாமர மக்கள் உணராதிருக்கப் பல உபாயங்கள் செய்யப்பட்டன. இக்கருத்தை உணர்ந்திருந்த அனேகரின் இதயங்களிலிருந்து இக்கருத்து ஒழிக்கப்பட்டது. இவ்வாறு சமாதி வணக்கம் உச்சஸ்தானத்தை அடைந்துவிட்டது.

அக்காலப் போலிப் பீர்மஷாயிகுகள் மக்களை மயக்கிவிடும் தங்களுடைய வளர்ந்த தாடிகள், நீண்ட ஜுப்பாக்கள், குருட்டு நம்பிக்கை கொண்ட குபேர கும்பல்களின் ஆகாராதிகளால் வளர்ந்த கொழுத்துப் பெருத்த சரீரங்கள், கண்களைக் கவரும் விதவித உயர்ந்த ஆடைகள் போன்றவைகளின் மூலமாக முஸ்லிம்களில் பெரும்பான்மையினரைத் தம் மாய வலையில் சிக்க வைத்துக் கொண்டனர். நேர்ச்சை, காணிக்கை செலுத்தல்; துஆ கேட்குவித்தல்; தஃவீஜ் அணிதல்; மயிலிறகு அடிக்கச் செய்தல்; கூண்டு கொடியேற்றம் நடத்தல்; உத்தமப் பெரியார்களின் சமாதிக்கு முன் சண்டாளிகளாகிய தாசிகளின் கூத்தாட்டம், பாட்டு, சங்கீதக் கச்சேரிகள் நடத்தல் போன்ற சத்திய இஸ்லாத்திற்கு விரோதமான அனாசாரங்களைக் கையாண்டு, தங்களை இஸ்லாத்தின் உண்மை அனுஷ்டானங்களிலிருந்து தப்புவித்துக் கொள்ள விரும்பும் செல்வம் படைத்த முரீதுகளுக்கு மாத்திரம்தாம் அந்தப் போலிப் பீர்மஷாயிக் சாஹிப்களின் ஆத்மார்த்த உபன்னியாசமும், அருளும் கிடைத்துக் கொண்டிருந்தன. சத்திய இஸ்லாத்திற்கே சற்றேனும் சம்பந்தமில்லாத இந்தப் போலிப் பீர்மஷாயிக் சாஹிப்களின் மஃரிபாக்கலையே அவர்களுக்கு ஏற்றதாக இருந்தது.

சத்திய இஸ்லாத்திற்கே முற்றும் முரண் பட்டவைகளான இவ்வனாசாரங்களைக் குபேர கும்பல்களே புரிவதைக் கண்ட குடிக்கக் கஞ்சிக்கும், உடுத்தத் துணிக்கும் கதியற்றுத் தத்தளித்த ஏழைப் பாமர மக்கள் அப்பணம் படைத்தோர்களுக்கு அஞ்சியும், வறுமை தாங்காது அச்செல்வந்தர்களை மகிழ்வித்து அரை வயிற்றுக் கஞ்சியாவது குடிக்கலாம் என்றெண்ணியும் அப்பணக்காரர்களுடன் வழிக்கேடான அப்பாதையில் சென்று அழிவெனும் ஆழியில் விழுந்தனர். இன்றும் அவ்வாறே விழுந்து கொண்டிருக்கின்றனர்.

நாளடைவில் நிலை எவ்வளவு படுமோசமாகி விட்டதெனில், பெரியார்களின் சமாதிக்குச் சென்று மார்க்க வரம்புக்குட்பட்டு, பாத்திஹா ஓதி, அங்கிருந்து சத்திய இஸ்லாமிய உணர்ச்சி பெற்று வருவதற்குப் பதிலாக, ஆண்டவனிடம் கேட்பதைப் போன்றே அப்பெரியார்களிடமும் தம்முடைய தேவைகளைக் கேட்க ஆரம்பித்து விட்டனர். சமாதியை நோக்கி ஸஜ்தாவெனும் சிர வணக்கம் புரியவும், காணிக்கை நேர்ச்சை செய்யவும், இஸ்லாத்திற்கு முற்றும் முரண்பட்ட பல வினோதச் செயல்கள் புரியவும் ஆரம்பித்துவிட்டனர்.

பாமர மக்களின் இம்மோச நிலையைப் பயன்படுத்திக் கொண்டு சுரண்டும் தந்திரக் கும்பல்கள் “சமாதி ஊழியர்கள்” என்ற போர்வையில் லாபகரமான வியாபாரத்தை ஆரம்பித்து விட்டனர். இஸ்லாமிய ஞானம் பெற்றிருந்தவர்களோ இச்சமாதி வணக்கத்திற்கு எதிராகப் புரட்சி எதுவும் செய்ய முடியவில்லை. அப்படி அவர்கள் புரட்சி செய்வது கவைக் குதவாததாக இருந்ததோடில்லாமல், “வஹ்ஹாபீ, அவ்லியாக்களை அவமதிப்பவன்” என்று மக்களின் வசை மொழிகளைப் பெறுவதாகவும் இருந்தது.

இஃதன்றி, அவ்வறிஞர்களின் வீட்டுப் பெண்களே – தாய் சகோதரி முதல் மனைவி மக்கள் வரை எல்லோரும் அந்தப் போலிப் பீர்மஷாயிகுகளின் அபிமானிகளாகி விட்டதும், சமாதிக்குப் போவதைத் தங்கள் கடமையாகக் கருதியதும் அவர்கள் எதிர்ப் புரட்சி செய்ய முடியாததற்கு மற்றொரு காரணம் எனக் கூறலாம். அறிவிழந்த இப்பெண்ணினத்தவரின் சமாதி வணக்க மனப் பான்மையை அந்தப் போலிப் பீர்மஷாயிகுகள் வெகு சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டனர். பாமர மக்களின் கருத்துக்கும், கொள்கைக்கும், செயல்களுக்கும் விரோதமில்லாத முறையில் ஞான உபன்னியாசங்கள் புரிந்தனர்.

“மஜார்ஷரிபை(சமாதியை)ச் சுற்றிச் சில தினங்களாவது தங்கியிருந்தால் அவ்லியாக்களின் துஆபரக்கத்து உண்டாகும்; சின்னஞ்சிறு காரியம் கூடச் சித்திபெற வேண்டுமானால் மஜார் ஷரீபில் பூப்போட்டு வரவேண்டும்; வருஷா வருஷம் கந்தூரி, உருஸ் என்ற போர்வையில் வேடிக்கை, பாட்டுக் கச்சேரி, சங்கீதம், கூத்துக்கள் விமரிசையாக நடத்த வேண்டும்; அப்போதுதான் அவ்லியாக்கள் நம்மீது திருப்தியுறுவார்கள். எது தவறினாலும் இச்சடங்குகள் தவறக் கூடா,” என்பவைகளையே தம்முடைய வஃஜுகளில் வெகு பக்தி பரவசத்துடன் வலியுறுத்தினர் அப்போலிப் பீர்மஷாயிகுகள்.

சமாதி வணக்கப் பழக்கம் பனூ உமய்யா காலத்திலிருந்தே ஆரம்பமாகிவிட்டது. அன்றே இவ்வனாசாரப் பழக்கம் எவ்வளவு முற்றிவிட்டதென்றால், பாத்திமா வமிசத்தைச் சேர்ந்த கலீபாவாகிய இமாம் முயிஜ் ஜுத்தீனின் தந்தை மரிக்கும் தறுவாயில் கீழ்க் கண்டவாறு அவருக்கு வஸிய்யத் சொல்லிப் போக நேர்ந்தது :- 

“மகனே! ஜியாரத்திற்காக நீ என் கப்ருக்கு அடிக்கடி வந்து கொண்டிருக்காதே ! அப்படி நீ அடிக்கடி கப்ருக்கு வந்து கொண்டிருப்பது உன்னை மனக் கலக்கத்திலும், வீண் எண்ணங்களிலும் சிக்க வைத்துவிடும். அன்றி, அறிவையும் மங்க வைத்துவிடும். சத்தியம் அசத்தியத்திற்கிடையில் பாகுபடுத்தியுண ரும் தன்மையைப் போக்கடித்து விடும்! என்பதை மறந்துவிடாதே ; ஆண்டுக்கு ஒரு முறை, அதுவும் முடிந்தால் பாத்திஹா ஓதுவதற்காக எனது சமாதிக்கு வருவதே போதும்.”

இந்தியாவிலும் இவ்வனாசாரப் பழக்கம் பைரோஜ்ஷாஹ் துக்லக், லூதி ஆட்சிக் காலங்களில் சர்வசாதாரணமான செய்கையாக ஆகிவிட்டது. இதனாலேயே மன்னர் துக்லக் தமது “புதூஹாதெ பைரோஜ் – பைரோஜின் வெற்றிப் பிரதாபங்கள்” என்னும் நூலில் கீழ்க்கண்டபடி எழுதுகிறார்:

“இன்றோ, மார்க்க சட்ட திட்டங்கள் மதிக்கப்படாது இருப்பதன்றி, ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக ஜியாரத்திற்கெனப் புறப்பட்டுப் போய் ஓரிடத்தில் ஒன்று கூடுவதில் அனேக பல விபரீதக் கெடுதல் ஏற்படுவதை நான் கண்கூடாகக் காண்கின்றேன். ஆகவே இனிப் பெண்கள் யாரும் ஜியாரத்திற்குக் கூடக் கப்ருகளுக்குப் போகக் கூடாது, என்ற கட்டளை பிறப்பித்திருக்கிறேன்.”

இவ்வாறே இப்றாஹீம் லூதி மன்னரும், ” பெண்கள் கப்ருகளுக்குப் போகக் கூடாது!” எனத் தடை விதித்திருந்தார் என்று ‘தாரிகெ தாவூதி” என்னும் நூலிலிருந்து தெரிகிறது.

இன்றோ தென்னிந்தியா, வட இந்தியா வெங்கும் அன்றைய நிலையைவிட மிக மோச நிலையையே காண்கிறோம். நம் முஸ்லிம் சகோதரர்களில் பெரும்பாலானோர் சத்திய இஸ்லாத்தை உணராத காரணத்தினால் தங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை நிவர்த்தி செய்விக்கவும், தேவைகளைப் பூர்த்தி செய்விக்கவும், நாட்டங்களை நிறைவேற்றித் தரவும், சமாதியடைந்த இறை நல்லடியார்களின் சமாதிகளிடம் வேண்டுகின்றனர். அச்சமாதிகளுக்கு நேர்ச்சையும் காணிக்கையும் செலுத்துகின்றனர். 

சத்திய இஸ்லாமிய பிரசாரத்திற்காகவும், நமது சமூக முன்னேற்றத்திற்காகவும், நம்மில் தொழில் இல்லாது திண்டாடுபவர்களுக்கு வேலை தரத்தக்க தொழிற்சாலைகளை ஸ்தாபிப்பதற்காகவும், கல்வி பயில முடியாத ஏழைப் பிள்ளைகளுக்கு இலவசமாகக் கல்வி போதிக்கும் கல்வி ஸ்தாபனங்களைப் பெருவாரியாக நிர்மாணிப்பதற்காகவும் இஸ்லாத்தைப் பரிபூரணமாக விளக்கும் நல் நூல்களை வெளியிடுவதற்காகவும், இஸ்லாத்தின் உண்மைத் தத்துவங்கள், நம் முஸ்லிம் நாட்டு உண்மைச் செய்திகள் ஆகியவைகளை வெளியிடும் தினசரி, வார, மாத பத்திரிகைகளின் ஸ்தாபனங்களை ஸ்திரப்படுத்துவதற்காகவும் நம் முஸ்லிம்களின் பணங்கள் செலவிடப்பட வேண்டிய அவசியமிருக்க, இன்று பல்லாயிரக் கணக்கில் பணங்கள் சமாதியை அலங்கரிப்பதற்காகவும், தே…கள் நடன நாட்டியம், பாட்டுக்கச்சேரிகள், வீண் வேடிக்கை விளையாட்டுகள் நடத்தி, கந்தூரி உருஸ் நடத்துவதற்காகவும் செலவிடப்பட்டு வருவதைக் காணும் ஈமானுள்ள யாரும் இரத்தக் கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது.

இஸ்லாத்தின் அரிய போதனைகளை லட்சியம் செய்யாது நம் முஸ்லிம்கள் இன்று சமாதி பெற்றிருப்பவர்களிடம் தம் தேவைகளைப் பூர்த்தி செய்விக்க வேண்டுகின்றனர். “முஸ்லிம்களாகிய நீங்கள் அல்லாஹ் அல்லாதவர்களை உங்கள் உதவிக்கு அழைக்காதீர்கள்!” எனப் பரிசுத்த குர்ஆன் நமக்குச் செய்யும் எச்சரிக்கையை இன்னும் எத்தனை காலம் செவிமடுக்காதிருப்பீர்கள்? நீங்கள் உதவிக்கு அழைக்கும் அப்பெரியார்கள் இறைவனுக்கு முற்றும் அடிபணிந்து வாழ்க்கை நடத்தினார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? “அல்லாஹ்வன்றி நீங்கள் அழைக்கும் அவர்களும் உங்களைப் போன்ற இறையடியாராவார்கள்” (அல் குர்ஆன்) என்ற இறைவன் கூற்றைக் கவனியுங்கள்!

இறைவன் சன்னிதானம் ஒவ்வொரு மனிதனுக்கும் திறக்கப்பட்டிருக்கிறது. அவன் சன்னிதியில் உயர்ந்தோன், தாழ்ந்தோன், ஏழை, பணக்காரன், சிறியோன், பெரியோன், நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடே கிடையாது. பகலோ, இரவோ, காலையோ, மாலையோ, ஒவ்வொரு வினாடியும் தங்கு தடையின்றி உங்களுக்கு வேண்டியவைகளை அவனிடம் தாராளமாகக் கேட்கலாம். நமது வேண்டுகோளை அவன் கேட்கவே செய்கிறான். “உங்கள் இரட்சகன் (அல்லாஹ்) கூறுகிறான்:- என்னையே அழையுங்கள்! உங்கள் அழைப்பை ஏற்று உங்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்கிறேன்,” எனச் சர்வ சக்தனான அல்லாஹ்வே கட்டளையிட்டிருக்க, அதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?

பரிசுத்த குர்ஆனைத் திறந்ததும் நீங்கள் காண்பது “சூரதுல் பாதிஹா” வெனும் ஆரம்ப அத்தியாயம்தான். இதுவோ முழு குர்ஆனின் சாராம்சமாக இருக்கிறது. இதில் நீங்கள் என்ன ஓதுகிறீர்கள்? “இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தயீன் – (இறைவா!) உன்னையே வணங்குகிறோம். மேலும் உன்னிடமே உதவி கோருகிறோம்,” என்றல்லவா அதில் கூறுகிறீர்கள்? பின் ஏன் உங்களின் செய்கை இதற்கு முற்றும் முரண்பட்டிருக்கிறது? இறைவனல்லாத வேறு வஸ்துக்களிடம் உதவி கோருவதும், எந்தச் சமாதிக்கு முன்னும் சிரவணக்கம் செய்வதும் இஸ்லாத்தில் மன்னிக்க முடியாத பெரும் குற்றமாகிய “ஷிர்க்” என்று மற்றும் பல்வேறு ஆயத்துக்களிலும் தெற்றென விளங்கக் கிடக்கின்றதே !

இதன்றி, முந்தைய சில சமூகத்தவர் எவ்வாறு தம்தம் சமூகங்களில் தோன்றின நபிமார்கள் இறந்தபின் அவர்களின் சமாதிகளைத் தொழுமிடமாக ஆக்கிக்கொண்டதுடன் நில்லாமல் உதவியும் கோரிக்கொண்டிருந்தார்களோ, அவ்வாறு தங்கள் உம்மத்துகள் எங்குத் தங்கள் கப்றை வணக்கஸ் தலமாக்கிக் கொண்டு உதவிதேட ஆரம்பித்து விடுவார்களோ என்று அஞ்சி நம் பெருமானார் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தங்கள் உம்மத்துக்கு விடுத்த மிக வன்மையான எச்சரிக்கையை மௌலானா அல்தாப் ஹுசைன் ஹாலி மர்ஹூம் அவர்கள் தமது ஆறடியில் நமக்கு நினைவூட்டியிருக்கிறார்:

“நீங்கள் மற்ற வகுப்பாரைப் போல் ஏமாந்துவிட வேண்டாம்;
எவரையும் இறைவனுக்குக் குமாரனாக்கிவிட வேண்டாம்;
என்னுடைய அந்தஸ்துக்கு மேலாக என்னை உயர்த்துவதால் என்னைத் தாழ்த்திவிட வேண்டாம்;
எவ்வாறு சகல மானிடர்களும் இறைவன் சன்னிதியில் சிரம் பணிந்த அடியார்கள் ஆவார்களோ, அவ்வாறே நானும் அவனுடைய ஓர் அடிமையாக இருக்கிறேன். எனது கோரியைக் கோயிலாக்கி விடவேண்டாம்;
எனது கப்றை நோக்கி நீங்கள் சிரம் சாய்க்க வேண்டாம்;
ஆண்டவனுக்கு அடிமை என்பதில் என்னை விட நீங்கள் குறைந்தவர்கள் அல்ல; அடிமைக்கு இயல்பான இயலாமையில் நீங்களும் நானும் சமமே;
நான் இறைவனுடைய அடிமையாக இருப்பதுடன் அவனுடைய தூதனாகவும் இருப்பது மாத்திரமே அவன் எனக்கு அளித்த பெருமையாகும்.”

இருலோக இரட்சகர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களே தங்கள் கப்றைப்பற்றி இவ்வாறு எச்சரித்திருக்க, அப்பெருமானாரை முழுக்க முழுக்கப் பின்பற்றும் அவர்களின் உத்தம உம்மத்துக்களாகிய அவ்லியாக்கள் தங்கள் கப்றுகளில் அதற்கு மாற்றமான செயல்கள் புரியப்படுவதை எங்ஙனம் அனுமதிப்பார்கள்? என்பதை அறிவுள்ளவர்கள் நன்றே சிந்திக்க வேண்டும்.

ஒருதடவை இமாமுல் அஃலம் ஹஜ்ரத் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் ஒரு பெரியாருடைய மஜார் ஷரீபின் பக்கம் செல்ல நேர்ந்தது. அப்பெரியாரின் மஜார் ஷரீபிடம் ஒருவன் உதவி கோரிக்கொண்டிருப்பதைக் கண்ட இமாம் அவர்கள் அவனைச் சபித்து, “அறிவில்லாதவனே ! என்றென்றும் உயிராக இருப்பவனை விட்டுவிட்டா இறந்தவர்களிடம் உதவி தேடுகிறாய்?” என்று கடிந்துகொண்டார்கள்.

(இறந்துபோன அவ்லியாக்கள் இன்றும் தங்கள் கல்லறையுள்ளே உயிருடனிருக்கிறார்கள்” என்று விவாதிக்கும் விவேகிகள்(?) இதனை ஊன்றிப் பார்க்கட்டும். தாருல் இஸ்லாம் பதிப்பாசிரியர்)

ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் ஒரு சமயம் ஹஜ்ரத் அப்பாஸ் (ரலி) அவர்களின் பொருட்டைக் கொண்டு (அவர்கள் உயிருடன் இருந்தபோதே ) மழை வர்ஷிக்க இறைவனிடம் பிரார்த்தித்ததைப் போல், “இறைவா! இன்ன பெரியாரின் அனுக்கிரகத்தைக் கொண்டு எனது பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக!” என்றாயினும் கேட்டுக் கொள்ளலாமே யன்றி, நேரிடையாக யாதாவதொரு பெரியாரிடமோ, சமாதியிடமோ, பிரார்த்திப்பது மன்னிக்கப்பட முடியாத ஷிர்க் (ஆண்டவனுக்கு இணை கற்பித்தல்) ஆகும் என்பதை ஒவ்வொருவரும் மனத்திலிருத்த வேண்டுகிறோம்.

அல்லாஹ் அல்லாமல் வேறு யாருக்கும் நேர்ச்சை காணிக்கை செலுத்தல், சமாதியை நோக்கிப் பிரார்த்தித்தல் போன்ற எல்லாம் “ஷிர்க்”கே ஆகும் என்பது பரிசுத்த குர்ஆனின் பல்வேறு ஆயத்துக்களிலிருந்து விளங்கக் கிடக்கிறது. விரிவை அஞ்சி விடுக்கிறோம். இன்னொரு சமயம் அவைகளை விவரமாகத் தருகிறோம். 

முடிவாக ஒன்றை மட்டும் கூறி இச்சிறு கட்டுரையை முடிக்கிறோம்:- சத்திய இஸ்லாத்தின் அடிப்படையாகிய தூய்மையான ஏகத்துவத்தில் சமாதி வணக்கம் போன்ற களங்கத்தை ஏற்படுத்திக்கொண் டிருக்கும் வரை “முஸ்லிம்” எனக் கூறிக்கொள்ளும் நாம் இஸ்லாத்தின் எண்ணற்ற அனுக்கிரகங்களை அடைந்து இம்மை மறுமையில் உயர் நிலையை அடைய முடியாது என்பது திண்ணம். 

இறைவா! எங்களுக்குத் தௌஹீத் ஞானத்தையும், கலப்பற்ற அனுஷ்டானங்களையும், நல்ல முடிவையும் தந்தருள் புரிவாயாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்!

[இந்நாட்டு இந்துக்களுக்கு விக்கிரகாராதனை ஓர் உடன்பிறந்த இயற்கையா யிருக்கிறது; அவர்களுள்ளிருந்து இஸ்லாத்தில் திரும்பிய (அவர்கள் சந்ததிகளாகிய) இந்நாட்டு முஸ்லிம்கள், அவர்கள் தொழும்பு புரியும் கல்லையும், கட்டையையும், மண்ணையும், மட்டையையும் கைவிட்டு, கல்லறைகளையும், இறந்தவர்களையும், அவர்கள் எலும்புக் கூடுகளையும் வணங்கத் துவங்கி விட்டார்கள். இதற்குச் சிற்சில “ஆலிம் சாக்களும்” ஆதரவளிப்பதுதான் வெட்கக் கேடா யிருக்கிறது. அந்தோ! அந்தோ!! அந்தோ!!! –தாருல் இஸ்லாம் பதிப்பாசிரியர்]

எழுதியவர்: கோட்டைக்குப்பம் (மவுலவீ) அப்துஸ்ஸமத் நத்வீ

தாருல் இஸ்லாம், ஏப்ரல் 1952, பக்கம் 24-28

Related Articles

Leave a Comment