நாம் சென்ற வருட அக்டோபர் இதழில் “திருக்குறள் தெய்வத் திருமறையாகுமா?” என்ற ஆராய்ச்சிக் கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தோ மல்லவா? அதைப்படித்த பலர் பலவிதமாக அதிர்ச்சியுற்றிருக்கின்றனர். அவர்களுள் ஒரு சாரார் நாம் எப்போதுமே குறள் நூலை மிகவும் பாராட்டிப் புகழ்ந்தே வந்திருக்கிறோமென்றும், இப்போது திடீரென்று பல்டியடித்திருக்கிறோ மென்றும் எம் மீது குற்றச்சாட்டைச் சுமத்துகின்றனர். இஃது அவர்களுடைய அறியாமையையே காண்பிக்கிறது. என்னெனின், திருக்குறள் ஒரு சிறந்த நீதி நூல் என்பதிலும், சிற்சில குறட்பாக்களை நீக்கி மற்றவையெல்லாம் இன்றைய சூழ்நிலைக்கும் முற்றிலும் ஒத்தனவாகவே அமைந்திருக்கின்றன வென்பதிலும் நாம் என்றைக்குமே மாறுபட்ட அபிப்பிராயத்தைக் கொண்டதுமில்லை; அல்லது முன்னுக்குப் பின் முரணாகக் கூறியதுமில்லை. ஆனால், நாம் கூறுவதெல்லாம் என்னவென்றால்:
(1) குறள் என்னும் நீதிநூல் ஒரு தெய்வத் திருமறையாக மாட்டாது. என்னெனின். அந் நூல் தேவ கட்டளையின் மீது (Divine Sanction) உருப்பெற்றதன்று.
(2) குறளாசிரியர் ஒரு ஜைனர். அவர் ஜைன மத சம்பிரதாயங்களைத் தம் நூலில் வெளியிட்டிருக்கிறார். அவை இக்கால பழக்கவொழுக்கத்துக்கோ, அல்லது கடவுள் வழி பாட்டுக்கோ, அல்லது அரசாங்க பரிபாலனத்துக்கோ ஒத்தனவாக விளங்கவில்லை.
(3) காமத்துப் பாலில் குறளாசிரியர் களவொழுக்கத்தைப் போதித்திருப்பது, ஆண்பெண் ஒழுக்க முறைக்கு முற்றிலும் முரண்பட்டுக் காணப்படுவதால், அம் முறையை அனுசரிப்பதென்பது நடை முறைக்குச் சற்றும் ஒத்துவராது.
(4) அவரே ஒரு குறளில் கூறியிருப்பதற்கு முற்றிலும் மாற்றமாகவும் முரணாகவும் வேறொரு குறளில் சில சந்தர்ப்பங்களில் கூறியிருப்பதால், முரண்பாடுகள் நிரம்பக் காணப்படுகின்றன. எனவே, அது வேத நூல்போன்ற தொன்றாகவும் விளங்க முடியாது.
(5) தேவர் போதித்த நீதி போன்று உலகிற்றோன்றிய எத்தனையோ பெரியார்கள் ஸாக்ரட்டீஸ், அரிஸ்டாட்டல், ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா போன்றவர்கள் நீதி போதனைகளை உபதேசித்துச் சென்றிருக்கின்றனர். அந்தப் பெரியார்களுக்கும் நாம் எவ்வளவு மதிப்புக் கொடுக்கிறோமோ அதே போன்ற மதிப்பினை, அல்லது அதனினுஞ் சற்று அதிகமான மதிப்பைக் குறளுடையார்க்கும் நாம் வழங்கலாமே யொழிய, அவரைத் “தெய்வப் புலமை” வாய்ந்தவரென்றோ, “கடவுட்டன்மை” பொருந்தியவரென்றோ , அவரியற்றிய நூல் “வேத நூல்” என்றோ, அல்லது உலகோர்க்குப் பொதுவான மறை நூல் என்றோ நாம் கூறலாகாது, கூறமுடியாது, கூறத்தகாது என்றுதான் விளக்கங் கூறுவோம். .
எனவே, நம் முற்கூறிய ஆராய்ச்சிக் கட்டுரையில் வள்ளுவரியற்றிய நூல் ஆகாது என்றும், அதிலுள்ள பல குறள்கள் கவைக்குதவாதவை யென்றும், அவர் தெய்வப் புலமை வாய்ந்தவரல்லரென்றும், அந்நூல் நீதி போதிக்கிறது வாஸ்தவமே யென்றாலும், அது வேதம் அன்று என்றுமே இயம்பியிருக்கிறோம். எம் மீது குணதோஷங் கூறுவோர், காய்தல் உவத்தலின்றி மீண்டும் எம் ஆராய்ச்சிக் கட்டுரையான “திருக்குறள் தெய்வத் திரு மறையாகுமா?” என்னும் விஷயதானத்தைப் பொறுமையுடன் படித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்கிறோம்.
-பா. தாவூத்ஷா
தாருல் இஸ்லாம், அக்டோபர் 1953, பக்கம் 8