திருக்குறள் தெய்வத் திருமறை யாகுமா?

by பா. தாவூத்ஷா

திருவள்ளுவர் “தெய்வப் புலமை” வாய்ந்தவரென்று சர்வ தாராளமாகச் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், அவ் வள்ளுவர் எங்கேனும் ஓரிடத்திலேனும், “எனது புலமை தெய்விகம் வாய்ந்தது” என்று ஏற்றுக்கொண்டிருக்கிறாரா? என்று வினவப் புகின், அவ் வினாவுக்குச் சரியான சரித்திர விடை கிடைக்கப் போவதில்லை. இன்னம், அன்னவர் இறையருளின் (Revelation) – வஹீயின் துணைக்கொண்டே தமது குறள் நூலை யாத்தனர் என்று வைதிகர் ஒரு சிலர் வழுத்திய போதினும், இக் கூற்றுக்கு அகச் சான்றேனும் புறச் சான்றேனும் ஒன்றுமே கிடைக்க மாட்டாது. “திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த திருக் குறள்” என்றே இந் நூல் சாதாரணமாக அழைக்கப்பட்டு வருவது வழக்கம்.

இனி, எந்த இடத்திலே எந்தக் காலத்திலே, எவராலே இத் திருக்குறள் ஆதியில் இயற்றப்பட்டது? என்பது, பெரியதொரு தீராத ஐயத்துக்கு இட முண்டுபண்ணி விட்ட சச்சரவுக்குரிய சாசுவத விவாதமாய் வந்து விடிந்திருக்கும் மாபெரும் பிரச்சினையா யிருந்துவருகிறது.

கடைச் சங்க காலத்தில், சென்னை மயிலையிலே திருக்குறள் வரையப்பெற்ற நூலென்று நெடுகவே கருதப்பட்டு வருகிறது; அக் கடைச் சங்க காலம் சற்றேறக் குறைய 1800 ஆண்டுகட்கு முன்னே யென்று காலஞ்சென்ற கலாவல்லுநர் டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரவர்கள் பல சங்க கால இலக்கிய ஆராய்ச்சிக்குப் பிறகு துணிந்து கூறியிருக்கின்றார்கள். ஆனால், அச்சங்கம் மதுரையிலே இருந்து நூலாராய்ச்சி செய்த காலம் கி. பி. 4-ஆவது நூற்றாண்டு, அஃதாவது, 1600 ஆண்டுகட்கு முன்னேதான் என்பது மாஜீ மு. ராகவையங்கார் ஆராய்ந்து முடிவு கட்டியுள்ள தீர்மானமாகும். எனவே, எப்பொழுது இத் திருக்குறள் எழுதப்பட்டதென்பது முதற் சந்தேகத்தை கிளப்பி விடுகிறது.

இனி, இந்நூல் எவ்விடத்தே எவரால் எழுதப்பட்டதென்பது இன்னம் பெரிய சந்தேகத்துக்கு இடந்தந்துவிட்ட ஒரு மஹா பிரச்சினையா யிருக்கிறது. சமீபத்தில், 1949 ஜூனில் வெளிவந்துள்ள, பேராசிரியர், அ. சக்கரவர்த்தி (நயினார்) எம். ஏ. அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்டுள்ள, “திருக்குறள் -ஆசிரியர்: (தேவர்)” என்னும் விரிநூலின் விமர்சன ஆங்கில முன்னுரையில் அப் பேராசிரியர் வரைகிறார்:-

திருப் பாதீரிப் புலியூரில் (Cuddalore – New Town) கி. பி. முதல் நூற்றாண்டிலே வாழ்ந்திருந்த சமணமா முனிவர்- திகம்பர (நிர்வாண) சன்யாசி – ஏலாச்சாரியா என்றழைக்கப் பெற்ற குண்ட குண்ட தேவர் (சுருக்கமாகத் “தேவர்”) என்னும் ஜைன சுவாமியால் வரையப்பட்டது; அத்தேவர் முழு அம்மணமாயிருந்து வந்தமையால், தம்முடைய சாதாரண ஊழியன் “வள்ளுவன்” என்பவனிடத்துத் திருக்குறளைக் கொடுத்து, அதனை மதுரைக்குக் கொண்டுபோய் அரங்கேற்றி வருமாறு அனுப்பி வைத்தார்.

எனினும், இந் நூலாசிரியர் எந்த மதத்தைப் பின்பற்றி நடந்து வந்தாரென்பது குறித்துப் பெரியதொரு பூசல் இன்றுங்கூட மும்முரமாக நடைபெற்று வருகிறது. அவர் சமண (ஜைன) சமயத்தைத் தழுவி நடந்தவரென்பது ஆராய்ச்சி யறிஞர்களின் அபிப்பிராயமா யிருக்கிறது. இதன் சார்பாய் முற்சொன்ன பேராசிரியர் கொண்டுள்ள கருத்தையே மேலே எடுத்துக் காட்டினோம். திரு வி. கல்யாணசுந்தர முதலியார், காலஞ் சென்ற கனகசபை பிள்ளை, வையாபுரி பிள்ளை போன்ற சைவப் பெரியார்களும், எஸ். டி. சற்குணர் போன்ற தமிழ்ப் பண்டித சிகாமணிகளும் நிச்சயமாகக் குறளாசிரியர் ஒரு பக்கா ஜைனரே யென்று தான் முடிபு கட்டியுள்ளார்கள்.

இங்ஙனமெல்லா மிருந்தும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக மென்னும் திருநெல்வேலி சைவர்களின் பெயர் போன கூட்டத்தினர், குழைத்த திருநீற்றுப் பட்டைகளையும், “ஒரு டவாலி”யையும், உச்சிக் கொண்டை கட்டிய சடை முடியையும், (ஆனால், மரவுரியில்லை! ) நீண்டு தொங்கும் தாடியையும், அக்கமணி (ருத்திராக்ஷ) மாலையையும் அணிந்து “சின் முத்திரை” போன்றுள்ள வலக்கரத்துடனும், ஏட்டுச் சுவடியை இறுகப் பற்றியுள்ள இடக் கரத்துடனும் காட்சியளிக்கும் ஒரு தவக் கோலக் கற்பனா (பொய்ச்) சித்திரத்தை ஓருயிருள்ள யோகீசுவரரின் தத்ரூபமான “போட்டோப் படம்” போல் வரைந்து பல வர்ணங்களில் ஆயிரக் கணக்காய் அச்சிட்டுத் தமிழ் நாடெங்கும் பரத்தி, இவரேதாம் “திருவள்ளுவர்” என்று எழுதி, இத் தமிழ் உலக முழுதையுமே ஏய்க்கப் பார்க்கின்றனர்.1

ஶ்ரீ வைஷ்ணவர்களோ, சிற்சில ஆதாரங்களைத் துணைக் கொண்டு, திருவள்ளுவர் சமயம் “வைணவமே” என்று வாதிப்பார்கள். குறளாசிரியர் சைவரா? அல்லது சமணரா? என்னும் பெருஞ் சண்டை ஒரு புறமிருக்க, ஈ. வே. ராமசாமி நாய்க்கரும், அவரைப் பின்பற்றும் ஏனைச் சு. ம. (சுய மரியாதை) க்களும் அவ் வாசிரியரை நாஸ்திகரே என்று நவின்று வாதிப்பார்கள். எனவே, இக் குறளாசிரியர் இன்ன ஒரு “மதத்தை”த்தான் சார்ந்தவரென்பது ஒருமுக நிச்சயமாய்க் கொள்வதற்குச் சற்றுமே இடமில்லையென்பது சரதமாகும்.

திருக்குறளுக்கு “முப்பால்” என்றொரு சிறப்புப் பெயரிடப்பட்டிருக்கிறது. என்னெனின், இந் நூலில் அறம், பொருள், இன்பம் – தர்மார்த்த காமம் – என்னும் மூன்று புருஷார்த்தங்களே கூறப்பட்டுள்ளன. “வீடு” – அஃதாவது, மோக்ஷம் – என்பது குறித்துக் குறளுடையார் ஏதொன்றுமே கூறத் துணியவில்லை. எனவே பாரமார்த்திக ஆஸ்திகருக்கு இம் “முப்பால்” ஒரு நல்வழியும் காட்ட மாட்டாது. மனிதனுக்கு மரணத்துக்குப் பின்னே வருவது வெறுஞ்சூன்யமன்று. கம்யூனிஸ்ட்களும் நாஸ்திகர்களும் மட்டுமே தாம் மரணத்துக்குப் பின் ஒன்றுமே இல்லையென்று உளறுவர். ஆனால், ஒவ்வொரு மனிதனின் மரணத்துக்குப் பின்னும் ஓர் ஆன்ம வாழ்க்கை யுண்டென்பதை எல்லாப் பெரிய உலக மதங்களும் ஏற்றுக் கொண்டே யிருக்கின்றன. நமது பகுத்தறிவும், நாம் இந்தப் பொய்யான வுலகுக்குரிய வெற்றுப் பவுதிக உலகாயத வாழ்க்கை வாழ்வதற்காக மட்டுமென்று வீண் விளையாட்டுக்காக வெறுஞ் சூன்யமாய்ப் புகைந்து போய்விடுவதற்காகப் படைக்கப் பட்டில்லை யென்றே நமக்கு நல்லறி வுறுத்துகின்றது; நமது ஆத்மாவுங்கூட இவ் வுண்மையையே வலியுறுத்துகின்றது. அப்படிப்பட்ட ஆன்ம முன்னேற்ற வாழ்க்கைக்கு இத் திருக்குறள் ஒரு வழியும் ஒரு சிறிதும் காட்டவில்லை என்பதனால்தான் இதற்கு “முப்பால்” என்று பொருத்தமாகப் பெயர் சூட்டியுள்ளார்கள். எனவேதான், இந் நூல் இவ்வுலகத்தில் பவுதிக உலகாயத வாழ்க்கை நடத்தக் கூடிய மாக்களுக்கே ஒரு சிறிது உதவக்கூடிய நூலாகத் திகழ்ந்து வருகிறது.

இந் நூலின் மூன்றாவது பாலாகிய காமத்துப் பாலில் இதனாசிரியர் ‘களவியல்’, ‘கற்பியல்’ என்னும் இரு பகுதிகளைக் குறித்துக் கூறுகிறார். களவியல் (காந்தர்வ விவாகம்) என்பது, வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், வெள்ளை வியபிசாரம் – ஜினா – ஆகும். எந்த மதமாந்தரா யிருப்பினும், இந்தக் காலத்தில் “காந்தர்வ விவாகம்” (களவொழுக்கம் என்று மரியாதையா யழைக்கப்படும் பச்சை வியபிசாரம்) என்று பெயரிடப்பட்டுள்ள, சமுதாய ஒழுக்கத்தை அடியுடன் இழுக்கடையச் செய்யும் சமூகாசாரத் தீமையை எவருமே அனுமதிப்பது வழக்கத்தி லில்லை. “சுதந்தரக் காதல்”2 என்னப்படும் வெள்ளை வியபிசாரத்தை வெளிப்படையான ஜினாக் குற்றத்தை மனித சமுதாயம் இற்றை நாளில் மேற் கொண்டொழுக முற்பட்டால், இவ்வுலக மக்களெல்லாம் அதே குறள் உபதேசிக்கிற

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை

என்னும் கூற்றுக்கே இலக்காகி விடுவரன்றோ? அப்படி ஏற்பட்டால், மனித சமுதாயம் வெறும் காட்டு மிருகக் கூட்டமாகவே மாறிப் போய்விட மாட்டாதா? மாக்களை மக்களாய் உயர்த்த வேண்டுமென்றால், தெய்வ பக்தியுடன் கூடிய இறைவனுக்கு அஞ்சி வழிபடும் ஒழுக்க முறையுடன் கூடிய நல்லொழுக்கத்தால் மட்டுமேதான் முடியுமன்றி, இந்தக் குறளாசிரியர் அளிக்கும் எதேச்சா உத்தரவால் முடியாது. மக்களை மீண்டும் மாக்களாக்கத்தான் அஃது உதவி செய்யும். எனவேதான், அரையநாகரிகப் பழங்கால காந்தர்வ விவாகத்தை – களவொழுக்கத்தை – அஃதாவது, திருட்டுத்தன வியபிசாரத்தை – இக் குறளாசிரியர் ஆமோதித்திருப்பது, ஒழுக்க நூலுக்கோர் இழுக்காய், அகலாக் கறையாய் அமைந்து விட்டது. இது நிற்க.

திருக்குறளாசிரியர், 133 அதிகாரங்களில் பற்பல விஷயங்களை – ஒன்றுக் கொன்று நேர்மாறயுள்ள சித்தாந்தங்களை – வரைந்து வைத்துள்ளார். எடுத்துக் காட்டாக, இல்லறம், துறவறம் என்பனவற்றைப் பாருங்கள்:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்,
தெய்வத்துள் வைக்கப் படும்

என்று இல்லறமே சிறந்த தென்று ஏத்துவார்; அடுத்த மூச்சில் துறவறத்தைக் குறித்துக் கூறுமிடத்து,

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு

என்று எடுத்துப் போற்றுவார். எனவே, இவர் மக்களுக்கு எதை ஸிபாரிஷ் செய்கிறார்? – இல்லறத்தையா? அல்லது துறவறத்தையா? என்பது எவருக்கும் விளங்கவில்லை.

மற்றோர் உதாரணத்தைப் பாருங்கள் :-

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்

என்று ஊழ்வினையை – பூர்வ ஜன்ம கர்ம பாசத்தை – வலியுறுத்தி நமது ஊழைக் கடந்து முந்துற நாம் எந்தவிதமான முன்னேற்பாட்டை எடுத்துக் கொண்டபோதினும், நமது கர்ம பாசம் அதற்கு முன்னே வந்து குறுக்கிட்டு நின்றுவிடும் என்று வலியுறுத்துகிறார். வேறொரு மூச்சிலே இதே குறளாசிரியர்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

என்று வற்புறுத்தி, தெய்வத்தாலே கூடச் செய்து நிறைவேற்ற இயலாத ஒரு காரியத்தை நாம் நம் சொந்த முயற்சியைக் கொண்டே சாதித்து முடித்துவிட முடியும் என்னும் ஓர் அபத்த சித்தாந்தத்தை ஆபாசமாய்க் கூறி, மார்க்கண்டேயர் என்பவர் இறைவனை ஏமாற்றி, என்றும் பதினாறு பிராயத்துடனேயே யிருந்து வருகிறார் என்னும் ஒரு பொய்யான புராணப் புளுகை ஆமோதித்துள்ளார். சித்தாந்தமோ அபத்தம்! திருஷ்டந்தாமோ, முழுப் பொய்!

அப்பால் இனியோரிடத்தில்,

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்

என்று யாத்துள்ளார். தளர்வுறாது மேன்மேலும் முயல்பவர் தமது கர்ம விதியையும் வென்று விடுவர் என்பது இதன் கருத்தாகும். எப்படிச் செய்தாலும் ஊழே குறுக்கிட்டு நிற்கு மென்பவர், அவ்வூழை அடுத்தடுத்து முயல்வதால் போக்கிட முடியும் என்று இனியோரிடத்தில் வரைவது ஒரு “தெய்வப் புலமை” போலும்!

இன்னம், இக் குறளாசிரியர் கர்ம (ஜன்ம) சித்தாந்தத்தை – இஃது ஒரு ருஜுப் படுத்திக்காட்ட முடியாத மாபெரும் பொய்க் கோட்பாடே – அங்கீகரித்துள்ளார்.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

என்பதை நோட்டமிடக் கடவீர்கள். இதன் கருத்தாவது: ஒரு செல்வன் அல்லது செல்வாக்குள்ளவன் பல்லக்கில் ஏறிப் பவனி வருவதையும், அவனையும் அவனது பல்லக்கையும் பல ஊழியர்கள் சுமந்து செல்வதையும் நாம் கண்ணால் காண்கின்றோம். இப்படிப்பட்ட ஏற்றத் தாழ்வுக்குக் காரணம் யாது? என்று எவனேனும் கேட்டால், குறளாசிரியர் அதற்குக் கூறும் சமாதானத்தைப் பாருங்கள். சென்ற ஜன்மத்தில் நன்மை செய்தவன் இந்த ஜன்மத்தில் பல்லக்கிலேறிப் பவனி வருகிறான்; முற்பிறப்பில் அநியாயத் தின்மையிழைத்தவன் இந்தப் பிறப்பில் அந்தப் பல்லக்கைச் சுமந்து செல்கிறான். இவ்வுலகில் மேலே (செல்வத்திலே அல்லது செல்வாக்கிலே) வீற்றிருப்பவர்கள் போன ஜன்மத்தில் புண்ணியம் பண்ணியவர்களாம்; இங்குக் கீழே கிடக்கும் ஏழைகளும் பிணியாளிகளும் சென்ற ஜன்மத்தில் பாபம் பண்ணியவர்களாம்! இதுதான் இந்து மதம் கூறும் ஜன்ம சித்தாந்தம் என்னும் காலில்லாக் கட்டுக்கதை.

இவ்வாறே நம் குறளாசிரியர் “வர்ணாசிரம தர்மத்தை”யும் அங்கீகரித்துள்ளார். “நால்வகைச் சாதியிந் நாட்டினீர் நாட்டினீர்!” என்று கபிலர் ஜாதி வித்தியாசத்தை இந்நாட்டுள்ளே கொணர்ந்து நுழைத்த ஆரியர்களைக் கடிந்துள்ளார். ஆனால், பரிமேலழக ரென்னும் உரையாசிரியப் பெரியாரோ, குறளுடையார் வர்ணாசிரம தர்மத்தை அங்கீகரித்திருப்பதாக உறுத்திக் கூறுகிறார்.

இவையெல்லாம் ஒரு பக்கல் கிடக்க, எந்த ராமாயணத்தைக் கிழித்துக் கசக்கி எரித்துக் கரித்து விட வேண்டுமென்று இன்றைய சு.ம. (சுய மரியாதை)க்கள் அலறித் துடித்துக் கதறுகிறார்களோ, அதே ராமாயணத்திலுள்ள ஒரு பெரும் புராணப் புளுகு மூட்டையையும் – அகலிகையின் ஆபாச விஷயத்தையும் – நம் குறளாசிரியர் முற்றிலும் அங்கீகரித்து, “இந்திரனே சாலுங் கரி” என்று, “ஐந்தவித் தான் ஆற்றல்” – பஞ்சேந்திரியங்களையும் அடக்கி வென்றவனின் வலிமை – குறித்துள்ள கதையொன்றை நம்புமாறு நமக்குப் போதிக்கிறார். கௌதம ரிஷியின் பத்தினி அகலிகை மீது இந்திரன் அதர்மக் காதல் கொண்டுவிட்டான். ஓரிரவின் கடைச் சாமத்திலே அவன் அந்த ரிஷியின் ஆசிரமத்துக்கு வந்து, காக்கைபோல் கரைந்தான். பொழுது புலர்ந்துவிட்டதென்று நினைத்த கௌதமர் காலை ஸ்னானம் செய்யக் கங்கைக்குப் போய்விட்டார். பிறகு இந்திரன் கௌதமர்போல் உருக்கொண்டு அகலிகையை யண்மி அவளைக் கற்பழித்து விட்டான். விஷயம் முடியு முன்னே திரும்பி வந்துவிட்ட கௌதமர் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, அகலிகையைக் கல்லாய்ச் சமைத்து, அவ் வயோக்கிய வியபிசாரம் புரிந்த தேவேந்திரனது மேனி முழுதும் ஓராயிரம் யோனிகள் தோன்றுமாறு சாபமிட்டுவிட்டார். இவ் வியபிசார விஷயத்தை – இந்தப் பெரியவிடத்து ஆபாசத்தை நம்புமாறு நங் குறளாசிரியர் நமக்கு நல்லுபதேசம் புரிகின்றார். திருக்குறளைத் ‘திராவிடர் வேதம்’ என்று கூச்சலிட்டுத் திரியும் சு. ம. (சுய மரியாதை) க்கள் இக் குறளை (அதி. 3 குறள் 5) ‘போர்ஜரி’ என்பார்களா? அல்லது அதனை வெட்டி யெறிந்துவிட வேண்டு மென்பார்களா?

இத்தகைய அருவருக்கத் தக்க ஆபாசங்கள் அநேகமுண்டு, திருக்குறளிலே.

இன்னம் பாருங்கள்:

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்

என்பது வள்ளுவர் – இல்லை, இல்லை, குண்ட குண்ட தேவர் – வாக்கு. இதன் கருத்து, ஒருவனுக்குக் குற்றம் நீங்கிய நன்மையைச் செய்யக் கூடுமேல் நாம் அதுகாலைப் பொய் சொல்லலாம் என்பதாகும்; அஃதாவது, நம் நண்பனொருவன் கொலையொன்றைப் புரிந்து விட்டு, நம்மிடத்தே ஓடி வந்து அடைக்கலம் புகுந்து மறைந்து ஒளிந்து கொண்டால், அவனுக்குத் தீமையற்ற (அஃதாவது, கொல்லப்பட்டவன் செத்துப் போய்விட்டான்; அதற்காக நாம் ஏன் நம் நண்பனைக் காட்டிக் கொடுத்துத் தூக்கு மரத்தில் ஏற்ற வேண்டும்? என்னும் நன்னோக்குடனே) பொய் சொல்லி, அக்குற்றவாளியைத் தேடி நம் வீட்டண்டை வந்த பொலீஸ்காரரைப் போக்கி விடுவது நியாயமே யாம்! இது சரிதான், சத்தியந்தான்! எப்படியிருக்கிறது நங் குறளாசிரியரின் நியாயப் போக்கு!

இனியொரு குறள்,

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

என்றோர் அபத்தக் களஞ்சியத்தை அவிழ்த்துத் தலைகீழாய்க் கொட்டுகிறது. வேறு தெய்வத்தைத் தொழாமல், தன் கணவன் ஒருவனையே தெய்வமாக வழிபட்டுவரும் பதிவிரதையானவள் (பதிவிரதைகளுக்குக் கடவுளை வணங்கவேண்டிய கடமை இல்லை போலும்! பேஷ்!) மழை பெய்யச் சொன்னவுடனே மழை பெய்யும் என்பது இக் குறளின் கருத்து. பதிவிரதைக்குத் தெய்வ வணக்கம் கூடாதாம்! அத்தகைய பர்த்தாவிற் கேற்ற பதிவிரதைகள் மழை பெய்யச் சொன்னால், “பெரு மழை பொழியும்,” என்று மணிமேகலை யாசிரியர் சீத்தலைச் சாத்தனார் தம் நூலில் அக்குறளை எடுத்துக் கூறி, இவ்வளவு பெரிய(?) சித்தாந்தத்தை – பெரும் புளுகை – வெளியிட்டமைக்காகக் குறளாசிரியரைப் “பொய்யில் புலவன்” என்றும், இந்தப் புத்திக்கு ஒவ்வாத ஆபாசக் கொள்கையைப் “புகழுரை” என்றும் போற்றிப் புகழ்கிறார். இக்குறள் தேவதூஷணம் செய்வதாகவும், அறிவுக் கொவ்வாத ஆபாசமாகவும், பெரும் பொய்யுளறலாகவுமே இருந்து வருகிறது. சென்ற ஐந்தாண்டுகளாக நம் தமிழ் நாட்டிலே மழையில்லாப் பஞ்சம் மக்களை எப்படித் திணற வைக்கிறது? இந்த 5 ஆண்டுகளாகப் “பெய்!” என்று ஏவி, மழையைப் பொழியச் செய்ய ஒரு பதிவிரதை கூடவா நம் நாட்டிலில்லாமல் அஸ்தமித்துப் போய்விட்டாள்? இவ்வாறு, எங்கேனும், என்றேனும் ஒரு பதிவிரதையின் பேச்சைக் கேட்டுப் “பெருமழை” பெய்ததுண்டா? இந்த அபத்கத்தை நம் சு.ம. (சுய மரியாதை) க்கள் அங்கீகரிக்கிறார்களா?

[பார்க்கப் புகின், ஓயாத பெருமழை பெய்கிற அஸ்ஸாம் மலைப் பிராந்தியங்களிலே பல கணவர்களையுடைய மனைவிகளும், மழை தவறாமல் பெய்து நிறைய நிறைய டாலர்களையும் பவுன்களையும் ஈட்டிக் கொடுக்கும் அமெரிக்கா இங்கிலாந்து போன்ற மேனாடுகளிலே கொழுநர்களைக் கோர்ட்டுக் கிழுத்து மானபங்கப் படுத்தும் “பதிதுரோகிகளும்” இருப்பதாகத்தாம் தெரிய வருகின்றன.]

இத் தன்மைத்தாய அபத்தங்கள் அனந்தமுள்ளன, நம் “திருவள்ளுவரி”லே. அவற்றை ஆராயப்புகின், ஒரு பெரிய நூலாய் விரிந்துவிடு மென்றஞ்சுகிறோம்.

ஆயின், சமீபத்தில் சென்னைக் குயப்பேட்டையில் உளறிக் கொட்டிய இரா. நெடுஞ்செழியன் போன்ற சு. ம. (சுய மரியாதை) க்கள், குறளிலிருந்து 200 பாக்களை வெட்டி விட்டால், அப்பால் இம் முப்பால் முக் காலத்துக்கும் இம் முழுவுலகத்துக்கும் பொருந்தி விடுமென்று சொல்லிக் கொள்கிறார்களாம். அப்படியென்றால், மாமிச, மச்ச போஜனம் மனிதனுக்குக் கூடாதென்று ஜைன மத சம்பிரதாயப்படி குண்ட குண்ட தேவர் இக் குறளில் கூறியுள்ள அபத்தக் கோட்பாடுகூட இம் முழுவுலக மக்களுக்கும் முக்காலத்துக்கும் ஒக்கும் என்று அந்தச் சு. ம. க்கள் கூறுவரோ ?

[எனினும், ஈ. வே. ராமசாமியாரும், அவருடைய சு. ம. (சுய மரியாதை) சீடர்களும் நம் சாஹிப் வீடுகளில் சித்தமாகும் பிரியானிப் புலாவைத் திருக்குறளின் “கொல்லாமை” “புலால் மறுத்தல்” முதலிய அதிகாரங்களிற் படாமல் நன்காய்ச் சப்பிச் சுவைத்து ருசித்துப் புசிப்பதை நீங்களெல்லீரும் நன்கறிந்தே இருக்கிறீர்கள்]. திருவள்ளுவரென்னும் அந்தச் சமணத் தேவர் மானிடன் எவனுமே மாம்ச, மச்ச போஜனம் உண்ணக் கூடாது என்பதை வற்புறுத்துவதற்காக, பிறர் அறுத்த புலாலையும் கூடப் புசிக்கத் தகாது ” கொல்லான், புலாலை மறுத்தானைக் கைகூப்பி,” என்று கண்டித்துள்ளார் (குறள் 260 நோக்க).

சு.ம.க்கள் கூற்றுப்படி 200 குறள்களை வெட்டிவிட்டு, எஞ்சிய 1130 குறளும் (எந்த 1130 என்பதை எம்மைக் கேட்க வேண்டாம்; அவர்களையே கேளுங்கள்!) எல்லாவுலகுக்கும், எல்லா மக்களுக்கும் எல்லாக் காலத்துக்கும். எவ்வாறு பொருந்துமோ, அஃது ஆண்டவனுக்கே வெளிச்சம்! சற்றே சிந்தித்துப் பாருங்கள். 2000 ஆண்டுகட்கு முன்னேயிருந்த இத் திராவிட நாட்டினருக்கு – அக் கால அரை நாகரிகத்துக்கு – உகந்தவாறு உபதேசிக்கப்பட்ட விஷயங்கள் இக்கால இந் நவநாகரிக உலகுக்கு எங்ஙனம் பொருந்தக்கூடும்? அக்கால ஒழுக்கமுறை, அற்றை நாள் பொருளீட்டு முறை, அந்த யுகப் போர்முறை, அச் சந்தர்ப்ப ஆட்சியமைப்பு, அவ்வேளை நடைமுறைகள் முதலிய யாவும் வேறு; இக் கால நடக்கைகள் முற்றுமே வேறு. எனவே, அவையனைத்துமே முக்காலத்துக்கும், முழுவுலகத்துக்கும் எங்ஙனம் பொருந்து மென்பதை அந்தச் சு. ம.(சுய மரியாதை) க்களே சொல்லட்டுமே, பார்த்து விடுவோம்!

எனினும், திருக்குறள் நூலில் ஒரு சில உண்மைகளும், நல்ல விஷயங்களும் எடுத்தியம்பப்பட்டிருக்கின்றன வென்பது மெய்தான். இத்தகைய நல்ல விஷயங்களை இப் பாருலகினில் பல்வேறு பெரியார்கள் புகன்றே சென்றுள்ளார்கள். இவற்றினை யெல்லாம் பொதுமக்கள் பின்பற்றி யொழுக வேண்டு மென்பதற்கு என்ன கட்டாயம் இருக்கிறது? ஏவல்களைக் கடைப்பிடித்து விலக்கல்களைத் தவிர்க்க வேண்டுமென்பதற்கு இறைவனாணையே அவசியமாயிருக்கிறது. தேவக்கட்டளை யல்லாத வெற்றுபதேசங்கள் மானிடரைத் தீயொழுக்கங்களைக் கைவிட்டு நல்லலொழுக்கப் பாதையிலே கொண்டுவந்து சேர்க்க மாட்டா. எடுத்துக் காட்டாக, இயேசுவாலும், கௌதம புத்தராலும், மஹான் முஹம்மத் நபி (ஸல்) அவர்களாலும் சாதிக்கப்பட்டவை போன்ற காரியசித்தி ஸாக்ரட்டீஸாலோ, ஷேக்ஸ்பியராலோ, பெர்னாட் ஷாவாலோ, அல்லது குறளாசிரியராலோ சாதித்து முடிக்கப்பட்டது கிடையாது. எனவேதான், மனிதர்களை நல்வழிப்படுத்த, ‘தெய்வக்கட்டளை (Divine Sanction) அத்தியாவசியமாய்த் தேவைப்படுகிறது என்று யாம் கூறுகிறோம்.

சென்ற 20 நூற்றாண்டுகளாகத் திருக்குறள் ஒரு காலத்தும், எவராலும் ஒரு திருமறையாகப் பின்பற்றப்பட்டது கிடையாது. குர்ஆன் ஷரீப் சாதித்துக் காட்டியுள்ளது போன்று, குறளென்பது அதல பாதல அடிமட்டத்திற் கிடந்த அஞ்ஞான அக்கிரம அயோக்ய மனித மிருகங்களை ஞானத்தின் பக்கலும், நல்ல நியாயத்தின் பக்கலும், நல்லொழுக்கத்தின் பக்கலும் உயர்த்திப்பிடித்து, அக்கால வுலகின் முக்காற் பங்குக்கு மேற்பட்ட பகுதிக்கெல்லாம் ஞானப் பேராசிரியர்களாகவும், நல்ல நியதியுடன் கூடிய பேரரசர்களாகவும் சிருஷ்டி செய்து விட்டது கிடையாது. இன்று காறும் திருக்குறள் அப்படிப்பட்ட ஒரு பெரிய ஜாதியினரை (A Great Nation) உண்டு பண்ணி விடவில்லை; இனிமேலும் அவ்வாறு செய்யப் போவதில்லை. இது சரதம்; இது சத்தியம்.

திருக் குர்ஆன் எங்கே! திருக்குறள் எங்கே ஒன்று மகா மேரு ; மற்றொன்று ஒருசிறு மசகமே. நாஸ்திகர்கள் என்றுமே, எங்குமே மக்களை ஒழுக்க விழுப்பத்தில் உயர்த்தியது கிடையாது. நாஸ்திகர்கள் என்றுமே நிக்ரக வேலையை யல்லது, நிர்மாண நாகரிக வாழ்க்கையை நிமிர்த்து நிறுத்தியது கிடையாது. அல்லது அவர்களால் ஓருயரிய உருப்படியான அரசாங்கமும் நிலைபெறுத்தப்பட்டது கிடையாது. அழிவு வேலையல்லது, ஆக்க (உருப்படியான) வேலையென்பது அவர்களுக்கு அறவே தெரிய மாட்டாது. இறைவனனுப்பிய நபிமார்களால் மட்டுமே நிர்மாணிக்கப்படும் நாகரிக காரியமெல்லாம் நாஸ்திக தத்துவ சாஸ்திரிகளால் நிலை பெறுத்தப்பெறுவ தென்பது இயலக் கூடுமோ?

எனவே, இங்குள்ள இச் சு.ம. (சுய மரியாதை) நாஸ்திகர்களே! உங்கள் திருத்திய (?) திருக்குறளைக் கொண்டுங் கூட இங்குள்ள மாக்களை மக்களாய்த் திருத்தி உயர்த்திவிடுவ தென்பது உங்களால் ஒருகாலும், இருகாலும், முக்காலும் சாலாது, சாலாது, சாலாது என்பதை உய்த்தறியக் கடவீர்களாக!

(குறளிலுள்ள பாடபேதங்கள் இங்கு ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட வில்லை.)

-பா. தாவூத்ஷா

தாருல் இஸ்லாம், அக்டோபர் 1952, பக்கம் 26-30


1. சென்னை மயிலாப்பூரில் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் அதிவிமரிசையாய்க் கொண்டாடப் பட்டுவரும் “ அறுபத்துமூவர்” உற்சவத்தின்போது பவனி வருகிற சைவ நாயன்மார்களின் விக்ரஹங்கள் அறுபத்து மூன்றுக்குப் பின்னால், அறுபத்து நான்காவது “சைவ நாயனாராகத்” திருவள்ளுவரின் கற்பனை விக்ரஹ மொன்றும் (அவர் மனைவி வாசுகியின் உருவத்துடன்) சேர்ந்தே பவனிவருவதை நீங்கள் காணலாம்.

2. விவாகமாகாத கன்னிப் பெண்ணொருத்தி, இருளிரவில் தன் பெற்றோர்க்குத் தெரியாமல் கள்ளத்தனமாய்த் தன் காதலனுடன் புணர்ந்துவிட்டு, அதனால் கருவுற்றும் விட்ட பின்னர், “என் பெற்றோர்களே! வருந்தாதீர்கள். நம் குறளாசிரியர் திருவள்ளுவ நாயனார் வகுத்திருக்கும் ‘களவியல்’ சட்டப்படியே நான் என் காதலனுடன் கலந்து உறவாடினேன். குறளைத் திருமறையாய்க் கொண்ட தாங்கள் ஏன் மனமுருகுகிறீர்கள்?” என்று இந்தக் காலத்தில் கேட்பாளானால், அப் பெற்றோர்கள் பேசாமல் இருந்து விடுவரோ?

Related Articles

Leave a Comment