ராஷ்ட்ரீய சுவயம் சேவக் சங்கத்தின் முழுச் சரிதை

by admin

ணையற்ற பழைய குரூரச் செய்கைகளை இழைக்கும் பல ஸ்தாபனங்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இந்தியாவில் அத்தகைய ஸ்தாபனமொன்று இருந்துவந்தது என்பைதைத் திரு. காந்திஜீயின் படு (சுடு) கொலை உலகுக்கு நிரூபித்துவிட்டது. அந்த ஸ்தாபனமாகிய ஆர். எஸ். எஸ். சங்கத்தின் சரித்திரம் என்னவென்பதை எவருமே அறிய மாட்டார். ஆனால், அதன் அந்தரங்கத்தை முற்றும் அறிந்த ஒரு பெரியார் “Conch” (சங்கு) என்னும் சென்னை ஆங்கில வாரப் பத்திரிகையில் ஆர். எஸ். எஸ். சங்கத்தைப் பற்றிய இரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். அக் கட்டுரையின் சாரமே இதுவாகும்.

oOo

இருபத்தைந்து ஆண்டுகட்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட ராஷ்ட்ரீய சுவயம் சேவக் சங்கம் (R. S. S.) மஹாத்மா காந்தி கொலையுண்ட ஐந்து நாட்களுக்குப் பின்னர் இந்திய அரசாங்கத்தாரால் சட்ட விரோதமான ஸ்தாபனமென்று பிரகடனப்படுத்தப்பட்டுவிட்டது.

இந்த ஆர். எஸ். எஸ். சங்கத்தின் சரித்திரம் யாது? அதன் நோக்கங்கள் என்ன? அஃது எவ்வண்ணம் நிர்வகிக்கப்பட்டும், பொருளுதவப்பட்டும் வந்தது?

1920-21-இல் ஒருநாள் மாலையில் மிகச் சிலரே அடங்கிய இள வாலிபர்கள் டாக்டர் ஹெட்கேவர் என்பவர் தலைமையில் நாகபுரியின் புராதன நகர் மூலையிலிருந்த குகையொன்றில், மங்கிய வெளிச்சத்திலே கூடினார்கள். அக்கூட்டத்தில் அவர்கள் முடிவு செய்ய வேண்டியிருந்த ஒரே ஒரு விஷயம் – ‘மஸ்ஜித்களுக்கு முன்னர் மேளம் வாசிக்க வேண்டும்; அப்படி மேளம் வாசிப்பவர்களை எப்படிக் காப்பாற்றுவது?’—என்பதாகவே இருந்தது!

வெறுப்பில் உதித்தது

வெறுப்புக் கொண்டிருந்த காரணத்தால் உதயமாகிய அச்சிசு நாளடைவில் மிகக் குரூரமிக்க கொடிய ராக்ஷஸனாகிய, பிரத்தியேக சேனையாகிய ராஷ்ட்ரீய சுவயம் சேவக் சங்கமாக வளர்ந்து விட்டது.

அப்போது கூடிய வாலிபர்கள் ‘அக் கடா’க்களை ஆரம்பித்து, அவற்றில் கழி விளையாட்டு, ஈட்டிப் பிரயோகம் முதலியவற்றைக் கற்றுக் கொடுக்க முடிவு செய்தனர். அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட அக்கடாக்களே நாளேறவேற டாக்டர் ஹெட்கேவரின் தலைமையின்கீழ் “ராஷ்ட்ரீய சுவயம் சேவக் சங்கம்” என்ற பெயரைப் பெற்றுக்கொண்டு விட்டன.

டாக்டர் ஹெட்கேவர் என்பவர் முன்னொரு காலத்தில், அஃதாவது, 1905-ஆம் ஆண்டில் வங்கப் பிரிவினை காலத்திலும் அதனையடுத்து வளர்ந்த பயங்கர சதி இயக்கத்தின் போதும் கல்கத்தா நேஷனல் மெடிக்கல் பள்ளியில் மாணவராய் இருந்துவந்தார். அப்பயங்கரச் சதி இயக்கத்தில் அவர் முற்றும் சம்பந்தப்பட்டிருந்தார் எனினும், அவ்வியக்கத்தில் அவர் என்ன செய்தாரென்பதை நிர்ணயிக்க முடியவில்லை. பின்பு 1908-ஆம் ஆண்டில் அவர் நாகபுரிக்குத் திரும்பி வந்து, காங்கிரசுக்குள்ளேயே மத்திய மாகாணக் கிளை ஸ்தாபனமாக அப்பயங்கர இயக்கத்தை ஸ்தாபித்தார். அந்த ஸ்தாபனத்தில் 200 மெம்பர்கள் இருந்தார்கள்; அதற்கு, ‘சுவபந்தவா’ என்ற நாமமிடப் பட்டது.

தலைமைப் பதவியில் பிளவு

ஆர். எஸ். எஸ். வளர்ச்சியுற்ற பின்னர் சுவபந்தவாவுக்குத் தலைமை வகிக்கும் விஷயத்தில் பிளவேற்பட்டது. சிலர் சுவபந்தவாவையே ஆர். எஸ். எஸ். சங்கத்துக்குப் பயிற்சியளித்து ஆள் சேர்க்கும் ஸ்தாபனமாக்கி விடலாமென்று விரும்பியதற்கு டாக்டர் ஹெட்கேவர், தலைவரென்ற ஹோதாவில், அதை எதிர்த்தார். மனஸ்தாபமுற்றவர்கள் சுவபந்தவாவை விட்டு வெளியேறிய பின்னர், டாக்டர் ஹெட்கேவரே ஆர். எஸ். எஸ். சங்கத்துக்குச் சர்வாதிகாரியாகி, 1940-ஆம் ஆண்டுவரை வாழ்ந்து, நாகபுரியில் மாண்டுபோனார்.

அவர் சர்வாதிகாரியானபோது ஆர். எஸ். எஸ். சங்கத்தை உருப்படுத்துவதற்காகச் சுமார் 50 அல்லது 100 இளவல்களை மஹாராஷ்டிரப் பிராமணர்களுள்ளிருந்து தேர்ந்தெடுத்துக்கொண்டார். பின்பு 1925-ஆம் ஆண்டில் அவர் காங்கிரசை விட்டு விலகினார். அது வரையில் அந்தச் சங்கத்துக்கு ஒரு திட்டமான கொள்கையோ, அல்லது வரை துறையான நடவடிக்கையோ ஏற்படுத்தப் படவில்லை. ஆனால், பொதுவாக ‘முஸ்லிம்களை எப்படி வெறுக்க வேண்டும்’ என்னும் விஷம் மட்டும் ஊட்டப்பட்டு வந்தது. பின்பு 1926-இல் மஹாத்மா காந்தியை எதிர்ப்பது என்னும் அடிப்படையான திட்டம் முளைக்கலாயிற்று. அஃதாவது, அஹிம்ஸா முறையை எதிர்ப்பது, சுதந்தரத்துக்காக ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமை வேண்டும் என்பதைத் தடுப்பது.

காந்தி எதிர்ப்பு நடவடிக்கை

1948, ஜனவரி வரையில் இத்தனை வருஷ காலமாக அந்த ஆர். எஸ். எஸ். வளர்ச்சி பெறுவதிலும் விஸ்தாரமடைவதிலும் முன்னேறி வந்ததைத் தவிர்த்து, நெடுகவே காந்தி எதிர்ப்புக் கொள்கையையே அட்டைபோல் ஒட்டிக்கொண்டு கிடந்ததென்பதை இப்பொழுது நிச்சயமாகக் கூறலாம்.

அவ்வாறாய எதிர்ப்பு நடவடிக்கையை நிகழ்த்த 1927-ஆம் ஆண்டில் ஆர். எஸ். எஸ். சங்கத்துக்கு ஒரு தக்க தருணம் கிடைத்தது. அப்போதும் நாகபுரியே தேர்ந்தெடுக்கப் பட்டது. நாகபுரியின் புராதன நகர்ப் புறத்தில் ஒரு பிராமண வட்டாரத்தில் முஸ்லிம்கள் தாக்குதல் நிகழ்த்தியதாகக் கிளப்பப்பட்ட ஹிந்து-முஸ்லிம் கலகங்கள் எரிந்துகொண்டிருந்தன. அச்சமயத்தில் ஆர். எஸ். எஸ். ‘தற்காப்பு’ க்காகச் சித்தஞ் செய்து கொண்டு, போரில் இறங்கியது; — இதுதான் அச்சங்கம் முதன் முதலாக ருசிகண்ட இரத்தகளமாகும். ஆர். எஸ். எஸ். பையன்கள் முஸ்லிம்களை அடித்து விரட்டி முதல் ‘வெற்றி’யைப் பெற்றுக்கொண்டார்கள். இவ் ‘வெற்றி’ யை அவர்கள் பிரமாதப் படுத்திக்கொண்டு, ஆர். எஸ். எஸ். சங்கத்தைத் துரிதமாக வளர்த்து, அப்போது நிலவிவந்த மதவேற்றுமை வெறியை உதவியாக வைத்துக்கொண்டு, ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயுள்ள விரோதத்தை வளர்ப்பதிலேயே ஈடுபட்டனர். இப்போதும் அதே விரோதத்தை அச்சங்கம் வளர்த்தே வருகின்றது. சீக்கிரத்திலேயே அச்சங்கம் புகழுடன் திகழ்வதாயிற்று.

ராணுவ போதனைகள்

1928-இல் ராணுவப் பயிற்சிகளையும் உடைகளையும் ஆர். எஸ். எஸ். சங்கத்தில் ஹெட்கேவர் நுழைத்தார். பயிற்சி முகாம்கள் அத்தியாவசியம் ஆக்கப்பட்டு, ராணுவப் பயிற்சிகளும் ராணுவ நடவடிக்கைகளும் பலவந்தம் ஆக்கப்பட்டன. ஆர். எஸ். எஸ். எப்படி வளரச்சியடைகிறது என்பதையும், அந்த ஸ்தாபனத்துக்கு என்ன விஷயங்கள் ஊட்டத் தாம் முனைந்துள்ளார் என்பதையும் ஹெட்கேவர் நன்கறிந்தே இருந்தார்; அஃதாவது, இப்படி வளர்க்கப்பெறும் ஒரு பிரத்தியேக சேனைக்குத் தாம் சர்வாதிகாரியாய் விளங்கலாமென்பதை அவர் கண்டுகொண்டார்.

அதே வருஷத்தில் (1928) தசரா நாட்கள் கொண்டாட்டத்தைச் சங்கத்தின் ஒரு ‘தேசிய’ பண்டிகையாக ஏற்படுத்தினார். ஒவ்வொரு வருஷமும் இந்த நாட்களில் ஆர். எஸ். எஸ். படையினர் ராணுவ முறைமையில் அணி வகுக்கப்பட்டு, துர்க்கை அம்மையை வணங்கும்படி செய்யப்பட்டனர். ஏனென்றால், அந்தத் துர்க்கா தேவியே அசுரர்களை அழித்து வெற்றி பெற்றமையால், அத்தகைய வெற்றி அவர்களுக்கும் கிடைப்பதற்காக இப்படித் துர்க்கை வணக்கம் புகுத்தப்பட்டது. ஹெட்கேவர் ‘வெற்றி தினத்தை’ எதிர்பார்த்திருந்தார். சங்க வாலிபர்களோ தாங்கள் அதிக பலத்தை பெற்றுவருவதாக உணர்ந்தனர்.

ஆர். எஸ். எஸ். சங்கத்தின் கொடி

சிவாஜி உபயோகித்து வந்த ‘பக்வா ஜண்டா’ என்ற கொடியே ஆர். எஸ். எஸ். சங்கத்தின் ‘தேசியக்கொடி’ யாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது ஆர். எஸ். எஸ். தன்னகத்தே கொண்டிருந்த ‘ஷாவினிய’ கொள்கையையும், ஹிந்து மதத்தை வியாபிக்கச் செய்யும் வைராக்ய சித்தத்தையும் பிரதிபலித்துக் காட்டுகிறது.

இச்சந்தர்ப்பத்திலேதான் மஹாத்மா காந்தியின் தண்டி யாத்திரையும் (உப்புச் சத்தியாக்ரஹம்) வன்மைமிக்க சட்டமறுப்பு இயக்கமும் இந்தியாவின் திக்கு எட்டும் பரவலாயின.

ஆர். எஸ். எஸ். விலகி நின்றது

ஆர். எஸ். எஸ்., அஃதாவது, ஹெட்கேவர், சுதந்தரப் போராட்டத்திலிருந்து விலகி நிற்பதென்ற முடிவுக்கு வந்து விட்டார். இந்திய சரித்திரத்தில் என்றைக்குமே அச்சங்கம் சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டதில்லை. பின்பு தந்திரமான முறைகளை ஆராய்ந்து, ஹெட்கேவரும் வார்தாவிலுள்ள அப்பாஜி ஜோஷி என்பவரும் — (இவர்தாம் ஆர். எஸ். எஸ். ஸ்தாபனத் தலைவர்களுள் ஒருவர்; அச்சங்கத்தின் பொதுக் காரியதரிசியாய் விளங்கியவர்; மத குருவாகப் பிழைப்பு நடத்தி வந்தவர்) தாங்களும் சிறைக்குச் செல்ல அஞ்சுவதில்லை என்று காட்டிக்கொள்வதற்காகச் சிறை செல்ல முற்பட்டனர்.

கருப்புக் குல்லாய்

காங்கிரஸ் சட்டமறுப்பு இயக்கம் மிகவும் மும்முரமாய் இருந்த காலத்தில் ஹிந்து மஹாசபைத் தலைவர் டாக்டர் மூஞ்சே காங்கிரஸ் காரர்களால் மிக வன்மையாய்க் கண்டிக்கப்பட்டார். எவ்வித எதிரப்புக்கும் அஞ்சாத டாக்டர் மூஞ்சே, தம்முடைய தோல் காண்டா மிருகத்தின் தோலைப்போல் கடினமானதென்றும் இந்தப் பனங் காட்டு நரி அந்தச் சலசலப்புக்கு அஞ்சாதென்றும் கூறிக்கொண்டார். இதைக்கண்டு ஆத்திரம் பூண்ட நாகபுரி காங்கிரஸ் தொண்டர்கள் டாக்டர் மூஞ்சேயைக் காண்டா மிருகம்போல் பெரிய காகிதத்தில் எழுதி, அதை வீதி வீதியாக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ஹிந்து மகாசபையின் பெரிய தளகர்த்தரைக் காங்கிரஸ் காரர்கள் இப்படி அவமானப்படுத்துவதைக் காணச் சகியாத ஆர். எஸ். எஸ். தன் படைப் பலத்தைக் கொண்டு, புழுதி மிக்க, குறுகிய சந்துகள் நிறைந்த நாகபுரி புராதன நகரின் மூலைமுடுக்குகளில் புகுந்து பலாட்டியமிக்க சில ‘வீரர்களை’ அந்தக் காண்டா மிருகத்தின் படத்தருகில் செல்லுமாறு செய்து விட்டது. அப்படிப் புகுந்தவர்கள் அந்தப் படத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பிய்த்தெறிந்து வர முடிவு செய்திருந்தனர்.

ஆனால், அந்தப் படத்தைச் சுமந்து சென்ற காங்கிரஸ் தொண்டர்கள் தங்களுக்கு வழக்கமான வெள்ளைக் கதர்க் குல்லாயை அணிந்திருந்தமையால், அவர்களினின்றும் வேறுபிரித்து அறிவதற்கு வசதியாய் இருத்தற்காகவும் தங்களைத் தாங்களே அடித்துக் கொண்டு உருள்வதைத் தடுத்தற்காகவும் ஆர். எஸ். எஸ். வாலிபர்கள் கருப்புக் குல்லாய் அணிவிக்கப்பட்டார்கள். அன்று நடந்த பெரிய கலகத்தில் ஆர். எஸ். எஸ். ‘வெற்றி’ யடைந்தது. இத்தகைய வீரமிக்க தீரபராக்ரமச் செயலை மெச்சி எம். என். கத்தத்தே என்னும் ஹிந்து மஹாசபை் பெரியார் (அவர் இப்போது நாகபுரி நகர் ஆர். எஸ். எஸ். சங்க சாலக்காக விளங்குகிறார். மஹாத்மா காந்தி கொலையுண்ட பின்னர் இப்போது காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்) 500 ரூபாய் ரொக்கமாக ஆர். எஸ். எஸ். கோஷ்டியினருக்கு உடனே கொடுத்தார்.

ஹிட்லர்

அச் சந்தர்ப்பத்தில். ஆர். எஸ். எஸ். சங்கத்தில் 5000 அங்கத்தினர்கள் இருந்தார்கள். அவர்கள் நாகபுரியிலும் பெராரிலும் வீற்றிருந்து மஹாராஷ்டிர, பம்பாய் மாகாணப் பகுதிகள் பக்கம் தங்கள் கொடுக்குக்களை நீட்டிக்கொண்டிருந்தார்கள். அச்சங்கத்தின் அரசியல் அலுவல்களை ஹிந்து மஹா சபா கவனித்து வந்தபடியால், ராணுவபலம் பொருந்திய இச்சேனா சமூகம் ஹெட்கேவரினாலும் அப்பாஜி ஜோஷியாலும நிர்வகிக்கப்பட்டு வந்தது. ஹெட்கேவர் ஹிட்லராகவே சகல அம்சங்களிலும் விளங்கிவந்தார்.

ஆர். எஸ். எஸ். சங்கத்துக்கு என்றுமே எழுத்து மூலமாய் அமைந்த சட்ட திட்டங்கள் இருந்ததில்லை. ஹெட்கேவர் தம்மைத் தாமே அதற்குச் சர்வாதிகாரியாக அமர்த்திக் கொண்டார். தமக்குக் கீழே இருந்தவர்களைத் தம்மை முற்ற முற்ற அடிபணிகிறவர்களாக ஆக்கிக் கொண்டுவிட்டார்.

ஆர். எஸ். எஸ். சங்கத்தின் விஷ வித்து, காந்தி எதிர்ப்பு இயக்கமாகவே என்றென்றும் இருந்து வந்தது. அச் சங்கம் ஹிந்து மஹாசபாவின் கொள்கைகளை ராணுவ உடையில் அலங்கரித்து, வெறுப்பு என்னும் அஸ்திவாரத்தின் மீதே நிலைபெறுத்திக் கொண்டது. அதன் நோக்கம் என்னவென்றால்:

‘ஹிந்துக்கள் மட்டுமே இந்தியாவை விடுதலைபெறச் செய்ய வேண்டும். சரித்திர பூர்வமாகப் பார்த்தால் முஸ்லிம்கள் தேசத் துரோகிகளே. எனவே, ஹிந்துக்கள் மட்டுமே ஒருங்கு திரட்டப்பட வேண்டும். அப்படி ஒருங்கு திரட்டப்பட்டுப் போர்முறை பழக்கப் படுத்தப்படல் வேண்டும். போர் முறை என்றால் பலாத்காரமென்று அர்த்தம். பலாத்காரமென்றால் காந்தியின் அஹிம்ஸா தர்மத்தின் எதிரியென்று அர்த்தம். அதே சமயத்தில், ‘ஹிந்து மதம்’ என்பதும் ‘தேசியம்’ என்பதும் ஒன்றேதான் என்றும் பரத்தப்பட்டு வந்தது. தேசத்தின் ‘உயிர்நாடியே’ ஹிந்து கலாசாரந்தான் என்றும் கூறப்பட்டது. பிரிட்டிஷ் சாம்ராஜ்ய ஆட்சி இந்தியாவில் இருந்ததைப் பற்றி இச்சங்கம் என்றுமே பொருள் பண்ணியதில்லை.

[ஆனால், காருண்ய மிக்க நேரு ஆட்சியின் போதாவது, திரு. காந்திஜீயை நாமெல்லாம் பலி கொடுத்துவிட்ட பின்பாவது இந்த, ஜனநாயகத்துக்குதவாத, பயங்கரச் சதிகளை விளைக்கிற ஏகபோக சர்வாதிகார வெறிபிடித்த ஆர். எஸ். எஸ். சங்கம் சட்ட விரோதமான ஸ்தாபனமாக்கப்பட்டதை நாம் நன்கு வரவேற்கிறோம். அன்றியும், இனியும் எதிர்காலத்தில் என்றுமே இத்தகைய பயங்கர இயக்கம் தோன்றாமலிருக்க ஆண்டவன் அருள் சுரப்பானாக! தாருல் இஸ்லாம் பதிப்பாசிரியர்]

வளர்ச்சி

பொறுமையும் மிருகத்தனமும் கொள்கையாகப் படைக்கப் பெற்ற ஆர். எஸ். எஸ். சங்கத்தில் 1935-இல் 25,000 மெம்பர்கள் இருந்தார்கள். அந்தப் பெரிய சேனையின் அங்கத்தினர்களெல்லாரும் நடுத்தர வாழ்க்கைத் தரத்திலுள்ள மஹாராஷ்டிரர்களே யாவர்.

இதற்கிடையில் ஐரோப்பாவில் பெரும் பீதி விளைவித்துவந்த ஹிட்லரையும் முஸோலினியையும் ஆர். எஸ். எஸ். மனங்கனிந்த அன்போடும் விருப்போடும் போற்றிப் புகழ்ந்து வந்தது. சர்வாதிகார மோகம், ஈவிரக்கமற்ற நடத்தை, தலைவனின் கொள்கைக்குத் தலைவணங்கி நிற்றல், அவன் கூறுவனவற்றையெல்லாம் குருட்டுத்தனமாய்ப் பின்பற்றல், கலாசார துர்நடத்தை, ராணுவவெறி, சங்கத்தின் பூர்விகப் பொய்க்கதை, ஷாவினிய பைசாசம், அளவு மீறிய வெறுப்பு, இத்யாதி இத்யாதி ஒன்றாய்ச் சேர்ந்து ஹிட்லர்-முஸோலினிக் கொள்கையை நல்லுருவாய் அமைத்து விட்டன. ஆனால், ஹிட்லரிஸம் ஐரோப்பாவில் இருந்தது. இந்த ஆர். எஸ். எஸ். சங்கத்தின் ‘ஞான மார்க்கம்’ இந்தியாவில் செய்யப்பட்டது. இது மட்டுந்தான் வித்தியாசம்!

1935-ஆம் வருஷ இந்திய அரசாங்கச் சட்டப்படி இந்தியாவில் ஆட்சி நடைபெற்றுவந்த காலத்திலெல்லாம் இச்சங்கத்தின் நடவடிக்கைகள் மிக உக்ரமாய் இருந்துவந்தன. வருஷா வருஷம் மிக மிகப் பெரிய ராணுவ அணிவகுப்பெல்லாம் நடந்துவந்தன. ஆபீஸராக உயர்வதற்கான மூன்று வருஷ ராணுவப் பயிற்சித் திட்டம் அனுஷ்டிக்கப்பட்டது; ராணுவ விளையாட்டுக்களும் ராணுவ தீரங்களும் பழக்கப்பட்டன; தினே தினே வேறு வேறான புதிய திட்டங்கள் நுழைக்கப்பட்டன; அலுப்பில்லாமலும் சலியாமலும் ஆள் சேர்க்கப்பட்டு வந்தது. வழக்கம்போல், இந்த மாதிரி வளர்ந்த பெரிய சைன்யத்திற்கு மிகக் கொடிய விஷமான காந்தி-எதிர்ப்பு, காங்கிரஸ்-எதிர்ப்புப் பிரசாரங்கள் அளவு மீறி ஊட்டப்பட்டு, அச்சைன்யமே அவ்வெறுப்பு வெள்ளத்தில் நன்கு ஊறி மிதந்தது.

அஞ்ஞாதவாஸம்

1939-இல் யுத்தம் வந்தது. இந்திய பாதுகாப்புச் சட்டமும் உடன் பிறந்தபடியால் ராணுவ அணிவகுப்பு, பயிற்சிக் கூடங்கள், காக்கி உடைகள் முதலியன மறைந்தன. ஆனால், சங்கத்தின் வளர்ச்சியைத் தடுக்க பிரிட்டிஷார் யாதொரு முயற்சியும் எடுக்கவில்லை. ஆர். எஸ். எஸ். அவ்விடைக்கால முழுதும் அஞ்ஞாதவாஸம் புரிந்து வந்தது. எனினும், அதிலிருந்த யுவர்கள் யுத்தத்தில் சேர்ந்து கொள்வதற்காகப் பிரிட்டிஷ் ராணுவத்திலேயே புகுந்துவிட்டார்கள். இப்படிச் சேர்வதால் சிரமமில்லாமல் துப்பாக்கி முதலியவற்றைச் சுடக் கற்றுக்கொள்வதுடன், யுத்த தந்திரங்களையும் தெரிந்து கொள்ளலாமல்லாவா?

சங்கத்தின் அமைப்பு

கடுமையான கட்டுப்பாட்டுக்கும் மனவமைதிக்கும் இச்சங்கம் பெயர் பெற்றது. எழுத்து மூலமான சட்ட திட்டங்கள் கிடையா. அடிக்கடி கோட்பாடுகள் மாற்றப்படும். பரம ரகசியமான ராணுவக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படும். — சுருங்கக் கூறின், எவ்வெவ் வகையாலெல்லாம் ‘வெறுப்பையும் அக்ரம பலாத்காரத்தையும்’ விளைக்க முடியுமோ, அவ்வவ் வகைகளெல்லாம் தாராளமாய்க் கைக்கொள்ளப்பட்டன. ஆர். எஸ். எஸ். சங்கத்துக்கு எழுத்தால் ஆக்கப்பட்ட சட்ட திட்டங்கள் இல்லாததோடு, அது ரிஜிஸ்டர் செய்யப்பட்ட ஸ்தாபனமுமல்ல. அச் சங்கத்தின் உத்தியோகஸ்தர்கள் தேர்தல் மூலம் பதவிக்கு வருவதில்லை. உச்சியிலுள்ள சர்வாதிகாரி தாமாகவே பார்த்துத் தமக்குக் கீழுள்ள, தமக்குத் தேவையான அதிகாரிகளைத் தாமே நியமித்துக்கொள்வார். எனவே, தலைமையிலுள்ள சர்வாதிகாரிக்கு முற்ற முற்றத் தாளம் போடும் தாசர்களே அவருக்குக் கீழ் இருப்பர்.

அகில இந்திய தலைமை ஆபீஸருக்கு ஸார் சங்கசாலக் என்று பெயர். அவருக்குக் கீழே மாகாண வாரியாக, ஜில்லாவாரியாக, தாலுக்கா வாரியாக, நகரவாரியாக, கிராமவாரியாகப் பல ‘குட்டிச் சாலக்குகள்’ உண்டு.

1940 வரை ஸார் சங்க சாலக்காக இருந்த டாக்டர் ஹெட்கேவர் தாமாகவே அந்தச் சர்வாதிகார பீடத்தையெட்டிப் பிடித்தாரன்றி, அவரை எவரும் அங்கே அமர்த்தவில்லை. அவர் ஸ்தாபித்த சங்கத்துக்கு அவரே சர்வாதிகாரியானதில் விந்தையில்லை. பின்னர் 1940-இல் அவர் மரணத் தறுவாயில் கோல்வால்கர் என்பவரைத் தமக்குப் பின்வரும் தலைவராக நியமித்தார். ஆனால், இதில் ஏதோ மறைமுகமான சூழ்ச்சி நடந்திருக்கிறது. என்னெனின், 40 வயதே நிரம்பப்பெற்ற கோல்வால்கர் என்பவர் காசி ஹிந்து சர்வகலாசாலையில் பேராசிரியராய் விளங்குபவர். M.Sc., பட்டம் பெற்றவர். இவர் ஹெட்கேவரின் இறுதி வேளையில் அவர் பக்கத்தில் இருந்தார். ஹெட்கேவர் இறக்கும்போது எம். என். கத்தத்தே வீட்டில்தான் மரணப் படுக்கையிலிருந்தார். (இந்தக் கத்தத்தேயே மேலே குறிப்பிடப்பட்டுள்ள ரூ.500 வெகுமதி கொடுத்தவர்). அந்த வீட்டுக்குக் கோல்வால்கரும் வந்திருந்த காரணத்தால் ஹெட்கேவர் பக்கத்தில் நிற்க நேர்ந்தது. ஹெட்கேவர் உயிர் நீங்கியதும், கோல்வால்கரையே தமக்குப் பின்னர்த் தலைவராக (ஸார் சங்க சாலக்) நியமித்துவிட்டதாகக் கத்தத்தே கூறினார். அப்போது அந்தக் கத்தத்தே என்பவர் 40 வயதினர்; நிலச்சுவான்தார்; மத்திய மாகாண ஹிந்து மஹா சபாவின் உத்தியோகஸ்தர்; அகில இந்திய ஹிந்து மஹா சபாவின் அதிகார பீடத்தின் அங்கத்தினர்.

ஏனென்று கேட்காதே

இவ் வண்ணமாகக் கோல்வால்கர் என்பவர் ஆர். எஸ். எஸ். சங்கத்தின் இந்திய தலைவராக வந்துவிட்டார். இவர் ஏன், எப்படி, எதற்காகத் தலைவராக நியமிக்கப் பட்டாரென்று யாருமே கேட்க முடியாது. ஏனென்றால், அத்தகைய கேள்விகளைக் கேட்க ஆர். எஸ். எஸ். சங்கம் இடம் கொடுக்காது.

[பின்னர் ஆர். எஸ். எஸ். சங்கத்தின் பலதிறப்பட்ட படிப்படியான பிரிவுகளின் நிலைமை, அவற்றைக் கொண்டு நடத்தும் குட்டிச் சாலக்குகள் முதலியவற்றை இங்கே இக்கட்டுரையாளர் நன்கு விஸ்தரிக்கின்றார். இடமின்மை காரணமாக அவ்வேண்டாத விஸ்தாரங்களை இங்கு நாம் எடுத்தெழுதவில்லை. – தாருல் இஸ்லாம் பதிப்பாசிரியர்]

அரசியல் சம்பந்தமான, பொருளாதார சம்பந்தமான, பொதுவான, தேசிய அல்லது உலக சம்பந்தமான எந்த விஷயம் ஆர். எஸ். எஸ். சங்கத்துக்கு ஏற்றதாயில்லையோ, அவ்விஷயம் வெகு சாதுரியமாக விலக்கப்பட்டு விடும். வாரா வாரம் சங்கங்களில் புரியப்படும் பிரசங்கங்களில் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிச் சந்தேகம் வந்து விட்டால், அதைத் தெளிவுபடுத்தும்படி அங்கத்தினர் எவரும் கேட்கலாம். ஆனால், அடிப்படையான விஷயத்தில் எந்தக் கேள்வியும் கேட்கப்படக் கூடாது. ஓர் அங்கத்தினன் பிரசங்கியின் பிரசங்கத்தை எக்காரணங் கொண்டும் எழுதிக் கொள்ளக் கூடாது…..

இவ்விதமாகவெல்லாம் வரையறுத்துச் செய்யப்படும் செயல்கள் மூலம் நாள்தோறும் மிகச் சிறு பையன் முதல் மிகப்பெரிய வாலிபன் வரையில் பாஸிஸக் கொள்கை என்னும் கொடிய நஞ்சையே ஊட்டப்பெற்று வந்தனர் பிரசாரங்கள் எவ்வளவு உணர்ச்சியுடன் புரியப்பட்டனவென்றால், அந்தச் “சேனா வீரர்கள்” நாளடைவில் சுய அறிவை இழந்த மாக்களாகவே மாறிப் போய்விட்டார்கள்.

பிரதிக்கினை

ஒவ்வொரு சிறு சேனைத் தொகுதியும் சங்கத்தின் கீழ்க்கண்ட பிரதிக்கினையை எடுக்க வேண்டும்:- “என்னுடைய முன்னோர்களுக்கும் இந்தப் பக்வா ஜண்டாவுக்கும் அடிபணிந்து நான் சத்தியமாக எடுத்துக்கொள்ளும் பிரதிக்கினை என்னவென்றால், ஹிந்து தர்மத்தையும், ஹிந்து கலாசாரத்தையும், ஹிந்து சமூகத்தையும் காப்பாற்றுவதற்காக யான் ராஷ்ட்ரீய சுவயம் சேவக் சங்கத்தில் அங்கத்தினனாகியிருக்கிறேன். எனவே, யான என் உடல் பூர்வமாகவும், பொருள்மூலமாகவும், ஆத்மார்த்தமாகவும், ஹிந்து தர்மத்துக்காகவும், ஹிந்து கலாசாரத்துக்காகவும், ஹிந்து சமூகத்துக்காகவும் முழுதும் பாடுபடுவேனாக!”

வாயளவில் அவர்கள் ஹிந்து தர்மம், கலாசாரம், சமூகம் ஆகியவற்றுக்கு உழைப்பதாக உரைக்கப்பட்டாலும், செயலளவில் அவர்கள் அனைவரும் சர்வாதிகாரியாய் இருக்கிற ஸார் சங்க சாலக்கும் அவருடைய குட்டித் தேவதைகளும் கூறுகிறபடியும் விரும்புகிறபடியுமேதான் நடக்கவேண்டும்.

தடுக்கப்பட்டவை

(1) ஹிந்துவைத் தவிர்த்து வெறெவனும் அங்கத்தினனாக முடியாது. (2) பக்வா ஜண்டாவைத் தவிர்த்து வேறெந்தத் தேசியக் கொடியும் கூடாது. (3) ஆர். எஸ். எஸ். சங்கத்துக்குப் பொருளுதவி எப்படிக் கிடைக்கிறதென்று யாரும் கேட்கக்கூடாது. (4) அங்கத்தினனாய் இருப்பவன் தான் ஏன் அங்கத்ததினனாய் இருக்கிறனென்பதை வினவக்கூடாது. (5) அரசியல், பொருளாதார விஷயங்கள் பற்றி ஒன்றும் வாய்திறக்கக் கூடாது. (ஆனால், பிரசங்கியார் கூறுகிறவற்றை மட்டும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.)

விசுவாசம்

சங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நான்கு முக்கிய கொள்கைகள் சம்பந்தமான இரகசியமாவன:- (1) ஹிந்துமதக் கோட்பாடே தேசியமாயிருக்க வேண்டும். (2) இந்தியா ஹிந்துக்களுக்கு மட்டுமே சொந்தம். (3) பக்வா ஜண்டாவே ‘தேசிய’க் கொடி. (4) தலைவருக்குக் கீழ்ப்படிதல்.

நடுத்தர ஹிந்துக்கள், பள்ளி அல்லது கலாசாலை மாணவர்கள், வக்கீல்கள், அரசாங்க அல்லது வர்த்தக ஸ்தாபன ஊழியர்கள், பணக்கார மிராசுதார்கள் முதலியவர்கள் சங்கத்தில நிரம்பியிருக்கின்றனர். சங்க நிர்வாகிகள் வயது முதிர்ந்தவர்களினின்றுமே பொறுக்கி எடுக்கப்பட்டனர். சங்கங்களில் பிரசங்கம் புரியும் சங்கேத்கள் பெரும்பாலும் வக்கீல் தொழில் புரிபவர்களாக அல்லது நிலச் சுவான்தார்களாக இருப்பார்கள்.

அறிவுப்பஞ்சம்

சேனா சமூகங்கள் ஞானத்தையோ அறிவையோ பெற்றுக் கொள்ளப் பெரிதும் அஞ்சுவர்; என்னெனின், அவர்களிடையே நிறுவப்பட்டுள்ள பழக்க வழக்கப்படி அவர்கள் சிறிதும் சிந்திக்கக் கூடாது. “எங்கள் தலைவர் எங்களுக்குப் பதிலாகச் சிந்தித்துக் கொள்வார். அவர் சொல்லுகிறபடிதான் நாங்கள் நடப்போம்!” என்று அவ்‘வீரர்’கள் அடிக்கடி கூறுவதுண்டு.

சங்கத்தின் இதோபதேசங்களுக்கு மாற்றமான கொள்கையுடைய எந்த நூலையும் படிப்பது அறவே தடுக்கப்பட்டது. அநேக தடவைகளில் பல அங்கத்தினர்கள் மிகவும் பெருமையுடன், “நான் பத்திரிகையே படிப்பதில்லை!” என்று கம்பீரமாகக் கூறுவதுமுண்டு.

இதே கொள்கைகட்காக ஸ்திரீகளுக்கென்று ஸ்தாபிக்கப்பட்ட சங்கத்துக்கு “ராஷ்ட்ரீய சேவா சமிதி” என்று பெயர். அந்தச் சமிதிக்கு வார்தாவிலுள்ள ஸ்ரீமதி லக்ஷ்மீபாய் கேல்தார் என்பவர் அகில இந்திய தலைவியாவார்.

பணம் எப்படிக் கிடைக்கிறது

தேசமெங்கும் கொண்டாடப்படும் குருபூஜா தினத்தன்று வசூலிக்கப்படும் பணம் ஒன்று மட்டுமே ஆர். எஸ். எஸ். சங்கத்துக்கு நிதியாக விளங்குகின்றது. அந்தப் பூஜைதான், பக்வா ஜண்டாவை வணங்க வருஷமொருமுறை கொண்டாடப் படுகின்ற ஆஷாத் பூர்ணிமைத்தினம் (சித்ரா பௌர்ணமி) ஆகும். பேச்சளவில், இவ்வாறு கொடுக்கப்படும் பணம் அவரவர் விருப்பப்படி சுயமே தரப்படுவதென்று கூறப்பட்டாலும் செயலளவில் ஒவ்வொரு சங்கேத்தும் பணம் கொடுத்துத்தான் தீர வேண்டும்; அவர்களும் கொடுத்தே வருகிறார்கள். தலைக்கு இவ்வளவென்று நிர்ணயிக்கப்படுகிறது; அத்தொகை வசூலிக்கவும் படுகிறது. வசூல் செய்வதென்பது மும்முரமாகச் செய்யப்படுகிறது. எனவே, ஆர். எஸ். எஸ். சங்கத்தின் நிதி அளவுக்கு அதிகமாகவே இருந்து வருகிறது.

உதாரணமாக, சென்ற வருஷம் நாகபுரியில் கொண்டாடப்பட்ட குருபூஜை உற்சவத்தின்போது ரூ. 65,000 வசூல் செய்யப்பட்டது. இவ்விதமாகவே ஆர். எஸ். எஸ்.சங்கத்தின் ஏனை வட்டாரங்களிலும் பணம் வசூலிக்கப்படுகிறதென்பதையும், இம்மாதிரி வசூலிப்பது சென்ற 1927 முதல் நடந்து வருகிறது என்பதையும் நீங்கள் தெரிந்து கொண்டால், மொத்த வருமானம் எவ்வளவு ஆகலாம் என்பதை நீங்களே நன்கு யூகித்துக் கொள்ளலாம். எல்லாப் பணமும் ஸார் சங்க சாலக்குக்கே கொடுக்கப்படுகிறது.

பொக்கிஷாதிபதி கிடையாது

அச்சங்கம் ரிஜிஸ்டர் செய்யப்படாமலிருப்பது போலவும், அதற்கென்று வரையப்பட்ட சட்டதிட்டங்கள் இல்லாதிருப்பது போலவும், அதற்காக ஒரு பொக்கிஷதார் கிடையார். அன்றியும், சங்கத்தின் வரவு செலவையோ நிதி நிலைமையையோ எவரும் கேட்க அறவே உரிமை பெற்றில்லை. ஆனால், ஒன்றுமட்டும் நிச்சயமாகத் தெரிகிறது; கணக்கு வழக்கு இல்லாமலும், கணக்கிட முடியாமலும் சங்கத்துக்குக் கிடைக்கிற லாபகரமான வரவினங்களை அற்பமே செலவாகும் செலவினங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஏராளமான நிதியே குவிந்து கிடக்கிறதென்று கருத நேர்கிறது.

சேனாவீரர்கள் தங்களுக்கு வேண்டிய ராணுவ உடைகளைத் தங்கள் கைப் பணத்தைக் கொண்டே வாங்கிக் கொள்ளவேண்டும். கையில் பணமில்லாமல் தவிக்கிறவர்களுக்குப் பணம் சங்கத்தால் உதவப்பட்டால், அத்தொகையைச் சிறுகச் சிறுகவாவது குறிப்பிட்ட தவணைக்குள் கொடுத்து முடிக்க வேண்டும். பாசறைகளை நடத்தும் செலவு, பயிற்சிக்கு ஏற்படும் செலவு போன்றவற்றை அச் சேனா வீரர்கள் சந்தாக் கொடுத்துச் சமாளிக்க வேண்டும்.

பிரசாரம் ஒன்றுக்கு மட்டுமே சங்கம் செலவிட்டு வந்தது. சமீப காலமாக அது சம்பளங்கொடுத்தே பிரசாரகர்களையும் முழு நேரச் சிப்பந்திகளையும் அமர்த்தி வந்தது.

ரொக்க வரவின்றி, நிலபுலங்களும் கட்டிடங்களும் கூட ஆர். எஸ். எஸ். சங்கத்துக்கு உண்டு. ஆனால், எதையுமே ஆர். எஸ். எஸ். சங்கத்தின் பெயரால் அது வைத்துக் கொண்டில்லை. இத்தகைய அக்கிரமமான ஊழல்கள் வெளியில் எவருக்குமே தெரியாதென்றாலும், அந்த ரகசியக் கும்பலுக்குள் புகுந்து கொண்டு சகலவற்றையும் தெரிந்தே தீர வேண்டியவர்களின் கண்ணைப் பொத்த இயலுமோ?

தாருல் இஸ்லாம், மார்ச் 1948, பக்கம் 33-40

Related Articles

Leave a Comment