தம் அலுவலகக் கணினியில் மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார் முஸ்தபா. அன்று மாலை அலுவலகத்திலிருந்து வந்ததில் இருந்து சற்று பிஸியாகவே காணப்பட்டார். இஷா தொழுது முடித்து இரவு உணவு முடிந்தபின், மீண்டும்
லேப்டாப்பைத் திறந்து வைத்துக்கொண்டு வேலையைத் தொடர்ந்தார். முக்கிய வேலையில் தந்தை மூழ்கியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட ஸாலிஹாவும் அப்துல் கரீமும் அவரைத் தொந்தரவு புரியாமல் தாயாரிடம் சென்று குர்ஆன் ஓதியபடி அமர்ந்திருந்தனர்.
அரைமணி நேரம் கழிந்திருக்கும். “அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!” என்று கூறியபடி மிகுந்த முக மலர்ச்சியுடன் ஹாலுக்கு வந்தார் முஸ்தபா.
“ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க. என்ன விஷயம்?” என்று விசாரித்தார் ஸாலிஹாவின் அம்மா.
“அமெரிக்க கம்பெனியிலிருந்து எங்களுடைய புது ப்ராஜெக்டுக்கு அப்ரூவல் வந்துவிட்டது. இன்னும் சில நாள்களில் ஆர்டரும் அனுப்புகிறோம் என்று பதில் வந்திருக்கிறது.” முக மலர்ச்சியுடன் தெரிவித்தார் முஸ்தபா.
“அல்ஹம்துலில்லாஹ். நல்ல செய்தி” என்றார் மனைவி. “அதற்குத்தான் கம்ப்யூட்டரிலேயே உட்கார்ந்திருந்தீர்களா?” என்று கேட்டான் அப்துல் கரீம்.
“ஆமாம். இதைப் பற்றி விரிவாக ஒரு மாதத்திற்குமுன் அவர்களுக்கு நாங்கள் இமெயிலில் ப்ராஜெக்ட் ரிப்போர்ட் அனுப்பியிருந்தோம். இன்று மேலும் சில விபரங்களை அவர்கள் ஆன்லைனில் வந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதற்கெல்லாம் பதில் அளிக்கும்படி இருந்தது. இறுதியாக எங்கள் கம்பெனியின் பதில்களில் திருப்தியடைந்து எங்கள் ப்ராஜெக்டை ஏற்றுக்கொண்டார்கள். அடுத்த மாதம் எங்கள் கம்பெனி அதிகாரிகள் அமெரிக்கா சென்று அடுத்தகட்ட வேலைகளை கவனிப்பார்கள்.”
“இப்படி இமெயில் அனுப்பினால் போதுமா?” என்று சந்தேகம் கேட்டாள் ஸாலிஹா.
“தகவல் தொடர்புக்கு பற்பல வழிமுறைகள் உள்ளன. எது எதற்கு எப்படிச் செய்ய வேண்டும் என்பது அந்தந்த சூழலைப் பொறுத்தது” என்று விளக்கமளித்தார் முஸ்தபா.
“உங்களுக்கு ஒன்று தெரியுமா? நபி (ஸல்) வெளிநாட்டிலுள்ள மன்னர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றித் தெரிவிக்க அக்காலத்தில் கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார்கள். அல்லாஹ்வை ஒரே இறைவனாக ஏற்றுக்கொண்டு முஸ்லிம் ஆகும்படி அழைப்பு விடுத்திருக்கிறார்கள்” என்று ஸாலிஹாவிடம் கூறினாள் அம்மா.
“ரஸூலுல்லாஹ் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாச்சே. அவர்கள் எப்படி கடிதம் எழுதுவார்கள்?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டான் அப்துல் கரீம்.
“நல்ல கேள்வி. நபியவர்கள் சொல்லச் சொல்ல ஸஹாபா ஒருவர் அதை எழுதுவார். இறுதியில் நபி (ஸல்) தங்களுடைய முத்திரையை அதில் பதிப்பார்கள். அதில் ‘முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’ என்று பொறிக்கப்பட்டிருக்கும். அதுதான் அவர்களுடைய கையெழுத்து. பிறகு தூதுவர்கள் அக்கடிதத்தை ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று அந்த மன்னர்களிடம் அல்லது கவர்னர்களிடம் அளிப்பார்கள்.”
“அப்படி எந்தெந்த நாட்டுக்கு ரஸூலுல்லாஹ் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்” என்று கேட்டாள் ஸாலிஹா.
“எகிப்து, பாரசீகம், ரோம், பஹ்ரைன், டமாஸ்கஸ், ஓமன்” என்று பதில் அளித்தார் முஸ்தபா.
“அந்த மன்னர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்களா?” என்று ஸாலிஹாவிடமிருந்து அடுத்த கேள்வி ஆர்வமாய் வந்தது.
“சிலர் ஏற்றுக்கொண்டார்கள். சிலர் மேலும் அதுபற்றி விசாரித்தார்கள். சிலரோ கடிதத்தைக் கிழித்து எறிந்தார்கள். சிலர் பதிலும் நபியவர்களுக்கு அன்பளிப்பும் அனுப்பி வைத்தார்கள்.”
“இஸ்லாத்தைப் பற்றி நபி (ஸல்) நேரடியாகத்தான் பேசித் தெரிவித்தார்கள் என்று நினைத்தேன். இப்படி கடிதமும் எழுதினார்கள் என்பது எனக்கு இப்பொழுதுதான் தெரிகிறது” என்றாள் ஸாலிஹா.
“ஆமாம்… அந்தந்த காலகட்டத்தில் நமக்கு என்னென்ன தகவல் தொழில்நுட்ப வசதிகள் இருக்கின்றதோ அதைச் சரியானபடி நாம் பயன்படுத்த வேண்டும். இஸ்லாத்தைப் பற்றி பிறருக்குத் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் திறமை இருக்கும். அவர்கள் அத்திறமையைப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கு சேவை புரிய வேண்டும்” என்றார் முஸ்தபா.
“நாங்களும் எங்களால் எப்படி முடியுமோ அப்படி இஸ்லாத்தைப் பிறருக்குத தெரிவிப்போம்” என்றார்கள் ஸாலிஹாவும் அப்துல் கரீமும்.
-நூருத்தீன்
புதிய விடியல் – அக்டோபர் 16-31, 2019
அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்
<–முந்தைய அத்தியாயம்–> <–அடுத்த அத்தியாயம்–>
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License