முஸ்தபா தம் குடும்பத்தினருடன் பயணத்திற்கு தயாராய் சென்னை விமான நிலையத்தில் நின்றிருந்தார். தம்முடைய பிஸினஸ் விஷயமாக அவர் பலமுறை விமானத்தில் பயணம் புரிந்திருக்கிறார். ஆனால் அவருடைய
குடும்பத்தினருக்கு அதுதான் முதல் விமானப் பயணம். அதனால் பிள்ளைகள் இருவரும் பரபரப்புடன் அங்குமிங்கும் வேடிக்கை பார்த்தபடி இருந்தனர். ஆர்வமுடன் பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
துபையில் முஸ்தபாவின் சகோதரி ரமீஜா தம் குடும்பத்துடன் வசித்து வருகிறார். துபை வந்து சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்லும்படி தம் சகோதரருக்கு அவர் அடிக்கடி அழைப்பு விடுப்பார். ஆனால் முஸ்தபாவுக்கு நேரம் அமையாமல் இருந்தது. இம்முறை பிள்ளைகளின் பள்ளி விடுமுறையில் அதற்கு வாய்ப்பு ஏற்பட ஒருவாரப் பயணமாக அவரும் குடும்பத்தினரும் கிளம்பிவிட்டனர்.
துபையில் வீட்டை அடைந்து, உணவு உண்டு, சற்று நேரம் ஆனபின், எந்த எந்த இடங்களைச் சுற்றிப் பார்ப்பது என்று பேசிக்கொண்டனர். ரமீஜாவின் கணவர் அப்துல் ரஹீம் ஒவ்வோர் இடமாகச் சொல்லிக்கொண்டே வர, குர்ஆனிக் பார்க் என்று அவர் குறிப்பிட்ட ஒரு பெயர் முஸ்தபாவின் கவனத்தைக் கவர்ந்தது.
“அது என்ன குர்ஆனிக் பார்க்?” என்று விசாரித்தார்.
“குர்ஆனில் இடம்பெறும் வரலாற்று நிகழ்வுகள், தாவரங்கள் ஆகியனவற்றை ‘தீம்’ ஆக எடுத்துக்கொண்டு இந்த பார்க்கை வடிவமைத்து இருக்கிறார்கள். சுருக்கமாக குர்ஆன் தீம் பார்க் என்று சொல்லலாம்” என்று விவரித்தார் அப்துல் ரஹீம்.
“இது புதுசா இருக்கே. அப்படியானால் நாளை முதலில் அதைப் பார்ப்போம்” என்று முஸ்தபாவின் மனைவி கூற அப்படியே முடிவாயிற்று.
மிகப் பெரிய இடத்தில் அழகான புல்வெளியுடன், கிளாஸ் ஹவுஸ் என்று சொல்லப்படும் கண்ணாடி வீடு, குகை ஆகியன அமைக்கப்பட்டிருந்த அந்த பார்க் அனைவருக்குமே பிடித்துவிட்டது. பெரிதாய் இரண்டு செயற்கை ஏரிகள் அமைத்து அதன் இடையே மக்கள் நடந்து செல்வதற்குப் பாதை அமைத்திருந்தது சற்று வித்தியாசமாக இருந்தது. பிள்ளைகள் அனைவரும் அந்தப் பாதையில் குதித்து ஓடி விளையாடிக்கொண்டிருந்தனர். புல்வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, “இங்கிருந்து பார்த்தால் அந்தப் பாதையில் நடந்து செல்பவர்களின் உடம்பின் மேல்பகுதி மட்டும் தெரிவது அவர்கள் தண்ணீருக்கு இடையில் நடந்து செல்வதைப் போலவே இருக்கிறது” என்றார் முஸ்தபா.
“மூஸா (அலை) காலத்தில் கடல் பிளந்து அவர் மக்களுடன் தப்பிச் செல்வதை நினைவுபடுத்து வகையில் அதை அமைத்திருக்கிறார்கள்” என்றார் அப்துல் ரஹீம்.
விளையாட்டில் ஈடுபட்டிருந்த ஸாலிஹாவை கடல் பிளந்தது என்ற தகவல் கவர்ந்து விட்டது. “மூஸா நபி காலத்தில் கடல் பிளந்ததா?” என்று ஆர்வமுடன் விசாரித்தாள்.
“ஆமாம். அல்லாஹ் தன் நபிமார்களுக்கு உதவ, நிகழ்த்திய அற்புதங்களில் அது முக்கியமான ஒன்று” என்றார் அப்துல் ரஹீம்.
“மாமா! அதைச் சொல்லுங்களேன்” என்று கேட்டாள் ஸாலிஹா.
அப்துல் கரீமும் ரமீஜாவின் பிள்ளைகள் நாசரும் அஸ்மாவும் விளையாட்டை நிறுத்திவிட்டு கதை கேட்கத் தயாராகிவிட்டனர்.
“குர்ஆனில் மூஸா நபியின் வரலாறுதான் மிகவும் அதிகமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து பலப் பல நிகழ்வுகளை அல்லாஹ் விவரித்திருக்கிறான். அதில் கடல் பிளந்த அற்புதமும் ஒன்று.”
“கடல் எப்படி பிளக்க முடியும்?” என்று கேட்டான் அப்துல் கரீம்.
“சொல்கிறேன். எகிப்தில் ஃபிர்அவ்ன் என்று ஒரு மன்னன் இருந்தான். அவன் மிகவும் கெட்டவன். மூர்க்கமானவன். மக்களை அடிமைப்படுத்தி, துன்பப்படுத்தி மிகக் கடுமையாக வேலை வாங்கினான். அவனது காலத்தில்தான் பிரமிட்ஸ் கட்டப்பட்டது.”
“பிரமிட்ஸ் பற்றி நான் என் ஹிஸ்டரி கிளாஸில் படித்திருக்கிறேன்” என்றாள் ஸாலிஹா.
“தனக்கு சக்தியும் வலிமையும் இருக்கிறது என்பதால் ஃபிர்அவ்ன் தன்னை ஒரு கடவுள் என்றே நினைத்தான். அல்லாஹ் ஒருவன் இருக்கிறான், அவன்தான் அனைவருக்கும் ஒரே கடவுள் என்பதையே அவன் நம்பவில்லை. அல்லாஹ் மூஸாவை நபியாகத் தேர்ந்தெடுத்து ஃபிர்அவ்னிடம் சென்று பேசச் சொன்னான். மூஸா நபியும் ஃபிர்அவ்னிடம் சென்று பேசினார். அல்லாஹ்வின் அற்புதங்களைக் காட்டினார். ஆனாலும் அவன் அவற்றை நம்பவில்லை. எல்லாம் வெறும் மந்திரங்கள் என்றே நினைத்தான். அல்லாஹ்வை இறைவனாக ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான்.”
“ஃபிர்அவ்னின் கொடுமை தாங்காமல் அவனிடம் அடிமைப்பட்டிருந்த மக்களை அழைத்துக்கொண்டு மூஸா நபி தப்பிச் செல்வதற்கு அல்லாஹ்விடமிருந்து அனுமதி வந்தது. அவரும் அவர்களை எல்லாம் பெரும் கூட்டமாக அழைத்துக்கொண்டு கிளம்பினார். பின்னாடியே துரத்திக்கொண்டு ஃபிர்அவ்ன் வந்தான். மூஸாவும் மக்களும் வந்து சேர்ந்த இடம் கடல். எதிரே கடல் நீர். பின்னால் ஃபிர்அவ்னும் படையும். எப்படி தப்பிச் செல்வது? வழி தெரியாமல் அவர்கள் தவித்தபோது, அல்லாஹ் மூஸாவிடம் அவருடைய கைத்தடியை கடலின்மீது தட்டச் சொன்னான். மூஸா நபியும் அப்படியே செய்தார்.”
“உடனே கடல் தண்ணீர் பிளந்து இரு பக்கமும் சுவர் போல் உயர்ந்து நின்றது. மூஸாவும் மக்களும் அதன் வழியாக நடந்து தப்பி மறுபுறம் வந்துவிட்டனர். பின்னால் துரத்திக்கொண்டே வந்த ஃபிர்அவ்னும் அந்தப் பாதையில் நுழைய, கடல் நீர் உடனே அந்தப் பாதையை மூடி அவனை மூழ்கடித்துவிட்டது.”
“வாவ்… இது ரொம்பப் பெரிய மிராக்கிள்” என்றாள் ஸாலிஹா.
“ஆமாம். அல்லாஹ் நாடினால் தன்னுடைய அடியார்களை அவன் எப்படி வேண்டுமானாலும் காப்பாற்றி விடுவான் என்பதற்கு இந்த நிகழ்ச்சி முக்கியமான உதாரணம்.”
-நூருத்தீன்
புதிய விடியல் – ஜுலை 1-15, 2019
அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்
<–முந்தைய அத்தியாயம்–> <–அடுத்த அத்தியாயம்–>
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License