மூஸா நபியின் காலத்தில் கடல் பிளந்த வரலாற்றைக் கேட்டு ஆச்சரியப்பட்டு அமர்ந்திருந்தார்கள் பிள்ளைகள். அவர்களிடம், “நம் ரஸூலுல்லாஹ் காலத்தில் நிலவு இரண்டாகப் பிளந்தது உங்களுக்குத் தெரியுமா?”
என்று கேட்டார் முஸ்தபா.
“நிலவு பிளந்ததா?” என்று வாய் பிளந்து ஆச்சரியத்துடன் கேட்டாள் ஸாலிஹா.
“ஆமாம். அந்த நிகழ்வை இந்த குர்ஆனிக் பார்க்கில் உள்ள குகையில் படமாகக் காட்டுகிறார்கள். வாருங்கள் போய்ப் பார்ப்போம்” என்றார் மாமி ரமீஜா. அனைவரும் எழுந்து குகையை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
நீண்ட வரிசையில் காத்திருந்து உள்ளே நுழைந்தார்கள். குகையின் உள்ளே சிறு சிறு திரை அரங்குகள். நபிமார்களின் வாழ்விலிருந்து முக்கியமான நிகழ்வுகள் ஒலி, ஒளி காட்சிகளாகக் காண்பிக்கப்பட்டன. அனைத்தும் அரபு மொழியில் இருந்தாலும் பெரியவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் அவை ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்திருந்தன. அனைவரும் ரசித்து மகிழ்ந்தனர்.
வெளியே வந்ததும் ஸாலிஹா கேட்டாள். “ஒரு காட்சியில் நிலவு பிளப்பதைக் காட்டினார்களே, அதைத்தானே சொன்னீர்கள்?”
“ஆமாம். அதேதான். விவரிக்கிறேன்” என்றார் முஸ்தபா.
அதற்குள், “யார் யாருக்கு ஐஸ்கிரீம் வேண்டும்?” என்று ரமீஜா மாமி கேட்டதும் பிள்ளைகள் அனைவரும் மகிழ்ச்சியில் குதித்தனர். அனைவருக்கும் ஐஸ்கிரீம் வாங்கி வந்தார் அப்துல் ரஹீம்.
கப்பில் இருந்த ஐஸ்கிரீமைச் சுவைத்துக்கொண்டே, “டாடி! நிலவு” என்று நினைவூட்டினாள் ஸாலிஹா.
“மாஷா அல்லாஹ். பிள்ளைகள் இந்த விஷயத்தில் நல்ல ஆர்வமாக இருக்கிறார்களே” என்று பாராட்டினார் ரமீஜா மாமி.
“ஆமாம். ஒவ்வொரு நாளும் அவர்களின் அத்தா ஏதாவது ஒரு வரலாற்றுக் கதையைச் சொல்லாவிட்டால் அவர்களுக்குத் தூக்கமே வராது” என்றார் ஸாலிஹாவின் அம்மா.
“ரஸூலுல்லாஹ் மக்காவில் உள்ள தம் மக்களிடம் இஸ்லாத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்ததும் கடுமையான எதிர்ப்பு இருந்தது நினைவிருக்கிறதா?” என்று பிள்ளைகளிடம் கேட்டார் முஸ்தபா.
“யெஸ். ஞாபகமிருக்கு. ஸஹாபாக்களை அந்த மக்கள் ரொம்ப டார்ச்சர் செய்ததாக நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் டாடி” என்றான் அப்துல் கரீம்.
“கரெக்ட். அப்படி ஒரு பக்கம் சித்திரவதை செய்வார்கள். சில மக்கள் ரஸூலுல்லாஹ்வுக்கு மனநிலை சரியில்லை; ஏதேதோ உளறுகிறார் என்று சொன்னார்கள். இன்னும் சிலர் அவர்கள் பழைய கதைகளை இட்டுகட்டிச் சொல்கிறார்கள் என்றார்கள்.”
“அதையெல்லாம் கேட்டு ரஸூலுல்லாஹ் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பார்களே” என்றாள் ஸாலிஹா.
“ஆமாம். சகிக்கமுடியாத கஷ்டம்தான். இருந்தாலும் அவர்கள் அல்லாஹ் தமக்கு இட்ட பணியைச் செய்வதில் பின்வாங்கவே இல்லை. ‘நீங்கள் சொல்வது உண்மை என்றால் எங்களுக்கு அப்படி செய்து காட்டுங்கள், இப்படி செய்து காட்டுங்கள்’ என்று மந்திரவாதியிடம் கேட்பதுபோல் மாயாஜால வித்தை செய்து காட்டச் சொன்னார்கள் அந்த மக்கள். அதை எல்லாம் அல்லாஹ் குர்ஆனில் சுட்டிக்காட்டி கண்டிக்கிறான்.”
“அப்படி இருக்கும்போது ஒருநாள் அந்த மக்கள் சிலர், ‘நபிமார்களுக்கு அல்லாஹ் அற்புதத்தை வழங்கினான் என்று சொல்கிறீர்கள். மூஸா நபியிடம் மந்திரக்கோல் போல் தடி இருந்தது, அதைக்கொண்டு அவர் கடலைப் பிளந்தார், ஸாலிஹ் நபி பாறையிலிருந்து ஒட்டகத்தைக் கொண்டுவந்தார், ஈஸா நபி இறந்தவர்களை எழுப்பினார் என்று தெரிவிக்கிறீர்கள். அதைப்போல் நீங்களும் நபி என்று நாங்கள் நம்புவதற்கு எங்களுக்கு ஏதாவது அற்புதம் நிகழ்த்திக் காட்டுங்கள்’ என்று சொன்னார்கள்.”
“அப்படி எதுவும் ரஸூலுல்லாஹ் நிகழ்த்தாவிட்டால் அவர்கள் சொல்வதெல்லாம் பொய் என்று சொல்லிவிடலாம் இல்லையா? அதனால் நபியவர்களை மடக்கிவிட்டதாக அந்த மக்கள் நினைத்தனர். ரஸூலுல்லாஹ் அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அதை ஏற்றுக்கொண்ட அல்லாஹ் நிலவை இரண்டாகப் பிளந்தான். ஹிரா குகை இருந்த மலையின் இருபுறமும் இரு துண்டகளாக நிலவு காட்சியளித்தது. ‘நீங்களே இதற்கு சாட்சி’ என்று நபி (ஸல்) அந்த மக்களிடம் கூறினார்கள்.”
“வாவ்… மூன் இரண்டு துண்டாகிவிட்டதா?” என்று ஐஸ்கிரீம் வாயில் வழிய கேட்டான் அப்துல் கரீம்.
“ஆமாம். அதைப் பார்த்த அந்த மக்களுக்குத் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை. அதிர்ச்சி அடைந்து நின்றார்கள். சுதாரித்த பிறகு என்ன சொன்னார்கள் தெரியுமா?” என்று கேட்டார் முஸ்தபா.
“அனைவரும் முஸ்லிமாகவிட்டோம் என்றார்களா?” என்று கேட்டாள் ஸாலிஹா.
“இல்லை. இவர் ஏதோ மந்திரம் செய்கிறார். இது கண்கட்டு வித்தை என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.”
“அப்புறம் ஏன் ரஸூலுல்லாஹ் அற்புதும் நிகழ்த்த வேண்டும் என்று கேட்டார்கள்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் ஸாலிஹா.
“அதுதான் அவர்களின் மூடத்தனம். அற்புதம் கேட்பார்கள். நிகழ்ந்தால் அது மாய மந்திரம் என்பார்கள். நம்பக்கூடாது என்று முடிவெடுத்தபின் எது அவர்களை திருப்திபடுத்தும்? ‘இவர் நம்மீது ஏதோ மந்திரம் செய்துவிட்டார். அதனால்தான் அப்படித் தெரிகிறது. வெளியூரில் உள்ளவர்கள் யாரேனும் இதைப் பார்த்தார்களா என்று விசாரிப்போம்’ என்று காத்திருந்தார்கள். அதேபோல் வெளியூரிலிருந்து மக்கா நகருக்கு வந்த பயணிகள் தாங்களும் பிளவுபட்ட நிலவைப் பார்த்ததாக சாட்சி கூறினர். அப்படியும் அந்த மூர்க்க மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.”
“இப்படியான அற்புதங்கள் தேவைப்படாமலேயே நபியவர்கள் தெரிவித்த குர்ஆன் வசனங்களைக் கேட்டு இஸ்லாத்தை ஏற்றவர்கள் சிறந்த முஸ்லிம்களாக உருமாறினார்கள். ஸஹாபாக்கள் ஆனார்கள். ஆனால் அற்புதத்தைக் கண்ணால் கண்ட பிறகும் நம்பாமல் அடம்பிடித்தவர்கள் சீரழிந்து போனார்கள். நஷ்டவாளியானார்கள்” என்று முடித்தார் முஸ்தபா.
“ரியல்லி இது ரொம்ப அமேஸிங் இன்ஸிடன்ட் டாடி” என்றாள் ஸாலிஹா.
-நூருத்தீன்
புதிய விடியல் – ஜுலை 16-31, 2019
அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்
<–முந்தைய அத்தியாயம்–> <–அடுத்த அத்தியாயம்–>
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License