நள்ளிரவு நேரம். திடீரென்று அப்துல் கரீம் அழும் குரல் கேட்டது. முஸ்தபாவும் அவர் மனைவியும் பிள்ளைகள் உறங்கிக் கொண்டிருந்த அறைக்கு விரைந்து சென்று பார்த்தனர். கரீம் கட்டிலில் எழுந்து அமர்ந்து இருந்தான். அவனது முகமும்
அழும் பாவனையில் இருந்தது.
“என்ன ஆச்சு?” என்று விசாரித்தாள் அம்மா.
“கெட்ட கனவு மம்மி” என்றான் கரீம்.
“ஓக்கே. கவலைப்படாதே” என்று அவனை அணைத்துக்கொண்டார் அம்மா.
“கெட்ட கனவைக் கண்டால் எழுந்து இடது பக்கம் மூன்று முறை தூ..தூ.. என்று துப்பிவிட்டு, அவூதுபில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்று சொல்லி விட்டு மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொள்ள வேண்டும்” என்றார் முஸ்தபா. பிறகு பெற்றோர் இருவரும் அவனைச் சமாதானப்படுத்தி உறங்க வைத்தனர்.
மறுநாள் காலை உணவுக்காக அனைவரும் டேபிளில் அமர்ந்திருந்தனர். “அந்த கெட்ட கனவு என்ன தெரியுமா?” என்று சொல்ல ஆரம்பித்தான் கரீம்.
“கெட்ட கனவைக் கண்டால் அதை பிறருக்குக் கூறத் தேவையில்லை தெரியுமா” என்றார் முஸ்தபா.
“கனவு கண்டால் அது அப்படியே நடக்குமா டாடி?” என்று கேட்டாள் ஸாலிஹா.
“சட்னியை இந்தப்புறம் நகர்த்து” என்று ஸாலிஹவிடம் சொன்ன முஸ்தபா, “நமது கனவுகள் மூன்று வகை என்று ரஸூலுல்லாஹ் (ஸல்) தெரிவித்திருக்கிறார்கள். ஒன்று நல்ல கனவு. அது அல்லாஹ்விடமிருந்து வருவது. இரண்டாவது கெட்ட கனவு. அது ஷைத்தான் நம்மை பயமுறுத்துவதற்காக, குழப்புவதற்காகச் செய்வது. மூன்றாவது நாம் சிந்திப்பது, நமக்கு நடப்பது ஆகியவற்றின் கலவையாக வரும் கனவுகள். இதற்கு அர்த்தமில்லை” என்று விளக்கினார்.
“ஆனால் நபிமார்களுக்கு வரும் கனவு ஒரு வகையில் இறை அறிவிப்பு. தெரியுமா?” என்று கேட்டார்.
தெரியாது என்று பிள்ளைகள் தலையை ஆட்டினார்கள்.
“நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு வந்த கனவைப் பற்றிச் சொல்வேன். அது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.. பாருங்கள்” என்றார் முஸ்தபா.
உடனே உற்சாகமாக, “ஓ தெரியுமே! மகனை அறுக்க வேண்டும் என்று வந்த கனவு தானே?” என்று கேட்டாள் ஸாலிஹா.
“அதேதான்” என்றார் அவர்களின் அம்மா.
“அதைச் சொல்லுங்கள் டாடி” என்றான் கரீம்.
“ஒருநாள் நபி இப்ராஹீம் தம்முடைய மகன் இஸ்மாயீலை அறுப்பதுபோல் கனவு கண்டார். அது அல்லாஹ் தமக்கு அளித்த கட்டளை என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது. நபி இஸ்மாயீல் மட்டுமே அப்பொழுது அவருக்கு இருந்த ஒரே குழந்தை. இருந்தாலும் இது அல்லாஹ்வின் கட்டளை என்பதால் அதற்குத் தயாரானார் நபி இப்ராஹீம்.”
“அல்லாஹ்வே! அப்புறம்?” என்று கேட்டான் கரீம்.
“இப்ராஹிம் நபி தம் மகனிடம், அருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதைப் போல் கனவு கண்டேன் என்று உண்மையைச் சொல்லிவிட்டார்.”
“அதற்கு அவர் என்ன பதில் சொன்னார் டாடி?” என்று கேட்டான் கரீம்.
“உங்களுக்கு அல்லாஹ் என்ன கட்டளை இட்டிருக்கிறானோ அப்படியே செய்யுங்கள். நான் பொறுமையாக இருப்பேன்” என்று கூறி விட்டார்.
“வாவ். வெரி பிரேவ்” என்றான் கரீம்.
“ஆமாம். நபிமார்கள் மிகவும் தைரியமானவர்கள். உறுதியானவர்கள். நபி இப்ராஹீம் தன் மகனை அழைத்துக்கொண்டு மக்காவுக்கு வெளியே ஓர் இடத்திற்கு சென்றார். அங்கு மகன் இஸ்மாயீலை முகம் குப்புறப்படுக்க வைத்து அவரது பிடரியை கத்தியால் அறுக்கத் தொடங்கினார்.”
பிள்ளைகள் உண்பதை நிறுத்திவிட்டு வெகு ஆர்வமாகத் தந்தையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“அப்பொழுது அல்லாஹ், நபி இப்ராஹிமை அழைத்து, நீர் உம்முடைய கனவை மெய்ப்படுத்திவிட்டீர் என்று கூறி, நபி இஸ்மாயீலுக்குப் பதிலாக ஆடு ஒன்றை பலியிடச் செய்தான். இதுதான் நபி இப்ராஹீம் கனவு கண்ட வரலாறு” என்று முடித்தார் முஸ்தபா.
“அல்லாஹ்வுக்காக தம் மகனையே அறுத்துப் பலியிட்டுத் தியாகம் புரிய அவர் தயாராக இருந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் வகையில்தான் உலகில் உள்ள முஸ்லிம்கள் ஒவ்வோர் ஆண்டும் ஹஜ்ஜுப் பெருாளின்போது ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை அறுத்து, குர்பானி கொடுக்கிறோம்” என்றார் அம்மா.
“ஆடு அறுத்து அந்த இறைச்சியை உறவினர்கள், நண்பர்கள், ஏழைகளுடன் பகிர்ந்து, நாமும் பிரியாணி சமைத்து உண்கிறோம். ஆனால், அந்த நிகழ்வின் முக்கிய நோக்கம், அல்லாஹ்வுக்காக நாம் எவ்விதத் தியாகத்திற்கும் தயாராக இருப்போம் என்பது. அதை நாம் மறந்துவிடவே கூடாது. தியாகம் என்பதே குர்பான். மெய் குர்பான்” என்றார் முஸ்தபா.
“நிச்சயமாக டாடி. அல்லாஹ்வுக்காக நாங்கள் எல்லாவிதமான தியாகத்திற்குமு் தயாராக இருப்போம்” என்று கூறி உற்சாகமுடன் கையைத் தூக்கினார்கள் சாலிஹாவும் கரீமும்.
-நூருத்தீன்
புதிய விடியல் – ஆகஸ்ட் 1-15, 2019
அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்
<–முந்தைய அத்தியாயம்–> <–அடுத்த அத்தியாயம்–>
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License