அன்று ஞாயிற்றுக்கிழமை. மதிய நேரம். தம் அறையில் ஓய்வாகச் சாய்ந்து, புத்தகம் படித்துக்கொண்டிருந்தார் முஸ்தஃபா. அடுத்த அறையில் டிவி ஓடிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அப்துல் கரீமும் ஸாலிஹாவும்
‘அத்தா, அத்தா’ என்று கத்திக்கொண்டே உள்ளே ஓடி வந்தார்கள்.
“எனக்கொரு டவுட்” என்றாள் ஸாலிஹா.
புத்தகத்தை மூடி வைத்துவிட்டு உயர்ந்த புருவங்களுடன் அவர்களைப் பார்த்தார் முஸ்தஃபா. “அத்தா. ஆண் தேவதை இருக்கிறார் தானே?”
“தேவதை பெண் தானே அத்தா? எங்க ஸ்கூல் டிராமாவில் பார்த்திருக்கிறேன். தலையில் கிரவுன், வெள்ளையா நீளமா டிரஸ், கையில் ஒரு ஸ்டிக். தேவதை அப்படித்தானே அத்தா இருக்கும்?” என்று கேட்டான் கரீம்.
பெரிதாய் மூச்சுவிட்டு, பிள்ளைகளைப் பார்த்தார் முஸ்தஃபா. சிறிது யோசனைக்குப்பின் கேட்டார். “தேவதை என்றால் இங்கிலீஷில் என்ன?”
“ஏஞ்சல்” என்றாள் ஸாலிஹா.
“கரெக்ட். நாம பொதுவா டிவியில், சினிமாவில் பார்க்கும், புக்ஸில் படிக்கும் தேவதைகள், ஏஞ்சல்களெல்லாம் கரீம் சொன்னதைப் போல்தான் இருப்பார்கள். ஏனென்றால் முஸ்லிம் அல்லாதவர்கள் பெண் கடவுள்களைத் தேவதைகளாகப் பார்க்கிறார்கள். அதனால் அழகான பெண்களை, பெண் குழந்தைகளை தேவதை என்று சொல்கிறார்கள், கொஞ்சுகிறார்கள்.”
“அப்ப முஸ்லிம்ஸுக்கு ஏஞ்சல் இல்லையா? ஆண் தேவதையும் இல்லையா?” என்று கேட்டாள் ஸாலிஹா.
“இங்கிலிஷில் ஏஞ்சல் என்று சொல்கிறார்களே அவர்களை அல்லாஹ் ‘மலக்’ என்று குர்ஆனில் கூறுகிறான். அந்த மலாயிக்குளை நாம் நம்ப வேண்டும். அது நம்முடைய ஈமானின் ஒரு பகுதி.” சொல்லிவிட்டுப் பிள்ளைகளைப் பார்த்தார். இருவர் முகங்களிலும் குழப்பம்.
“அதை விவரிக்கட்டுமா? அல்லாஹ் மனிதர்களான நம்மைப் படைத்ததுபோல், மலாயிக்குகளைப் படைத்துள்ளான். நம்மைக் களிமண்ணால் படைத்தான். அவர்களை ஒளியினால் படைத்துள்ளான். அவர்களால் நம்மைப் பார்க்க முடியும். நம்மால் அவர்களைப் பார்க்க முடியாது. அவர்களைப் பெண்களாகப் படைக்கவில்லை என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். நாம் தமிழில் மலாயிக்குகளை வானவர்கள் என்று சொல்கிறோம்.”
“அப்படியானால் அவர்கள் எப்படி இருப்பார்கள்?” என்று கேட்டான் கரீம்.
“அவர்களை நாம் சரியானபடி கற்பனை செய்ய முடியாது. ஆனால் அவர்களுக்கு இரண்டு, மூன்று, நான்கு அல்லது அதிகமாக இறக்கைகள் இருக்கும் என்று அல்லாஹ் தெரிவித்துள்ளான். ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாம் அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருந்ததாக நபி (ஸல்) தெரிவித்துள்ளார்கள்.”
“சிக்ஸ் ஹன்ட்ரட்? யப்பா! அப்போ அவங்க ரொம்பப் பெருசா இருந்திருப்பாங்களே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் கரீம்.
“ஆமாம்! வானவர்களை அவர்களுடைய வடிவத்தில் அப்படியே பார்த்தால் ரொம்ப ரொம்பப் பெரிதாக இருப்பார்கள். அப்படி அவர்களை அந்த வடிவில் ரஸூலுல்லாஹ் மட்டும்தான் பார்த்திருக்கிறார்கள். மற்றபடி சில நேரங்களில் மலக்குகள் மனிதர்களைப் போன்ற வடிவில் வருவார்கள். அப்பொழுது மட்டும் மனிதர்களால் பார்க்க முடியும்.”
“அப்படி அவர்கள் வரும்போது இறக்கைகளை எப்படி மடித்து வைத்திருப்பார்கள்?” என்று கேட்டான் கரீம்.
“மனிதர்களுக்குத்தான் இறக்கை இல்லையே. அதனால் அப்பொழுது இறக்கை இல்லாமல்தானே அத்தா வருவார்கள்?” என்று கேட்டாள் ஸாலிஹா.
சிரித்துக்கொண்டே “வெரி கரெக்ட்” என்றார் முஸ்தஃபா.
“இப்பவும் மலக்குகள் நம்மைப் பார்க்கிறார்களா அத்தா?” என்று கேட்டான் கரீம். “யெஸ்! நம்மைச் சுற்றி நான்கு மலக்குகள் எப்பொழுதுமே இருக்கிறார்கள். அவர்கள் நாம் செய்வதையெல்லாம் கவனித்து குறித்துக்கொண்டே இருப்பார்கள்” என்று பதில் அளித்தார் முஸ்தஃபா.
“எப்போ அவர்கள் மனித வடிவத்தில் வருவார்கள்?” என்று கேட்டாள் ஸாலிஹா.
“மக்களுக்குப் பாடங்களையும் நபிமார்களுக்கு அல்லாஹ்விடமிருந்து தூதுச் செய்தியையும் அறிவிக்க வேண்டியிருக்கும்போது மனிதர்களைப்போல் வருவார்கள். மனிதன் ஒருவரிடம் வானவர் மனித வடிவில் வந்த கதை சொல்லட்டுமா? ரஸூலுல்லாஹ் அதை நமக்குத் தெரிவித்துள்ளார்கள்.”
“ம்ம்ம்… சொல்லுங்கள்” என்று ஆர்வமுடன் தலையாட்டினர் அக்காவும் தம்பியும்.
“ஒரு மனிதர் மற்றொருவரைச் சந்திக்க, பக்கத்து ஊருக்குப் போனார். அப்பொழுது அவரை வழியில் சந்திக்கும்படி அல்லாஹ் ஒரு வானவரை அனுப்பி வைத்தான். அந்த வானவரும் மனித வடிவில் வந்து வழியில் காத்துக்கொண்டிருந்தார். அந்த மனிதர் வந்ததும் அவரிடம் ‘நீர் எங்கே செல்கிறீர்?’ என்று வானவர் விசாரித்தார். ‘அடுத்த ஊரில் என் சகோதரர் இருக்கிறார். அவரைச் சந்திக்கப் போகிறேன்’ என்று அவர் பதில் அளித்தார்.
‘அவருக்கு நீர் ஏதாவது உதவி செய்து, பதிலுக்கு அவரிடம் ஏதும் எதிர்பார்த்துச் செல்கிறீரா?’ என்று வானவர் மேலும் விசாரித்தார். ‘அப்படி எல்லாம் எதுவும் இல்லை. அல்லாஹ்வுக்காக நான் அவரை நேசிக்கிறேன். அதனால் அவரைச் சந்திக்கச் செல்கிறேன்’ என்று அம் மனிதர் பதில் அளித்தார்.
“அதற்கு வானவர், ‘என்னை அல்லாஹ் அனுப்பி வைத்துள்ளான். நீர் அம் மனிதரை அல்லாஹ்வுக்காக நேசிப்பதால், அல்லாஹ்வும் உம்மை நேசிப்பதாகத் தெரிவிக்கச் சொன்னான்,’ என்று கூறினார்.”
தந்தை கூறி முடித்ததும் கரீம் கேட்டான், “நாம ஃப்ரென்ட்ஸை அல்லாஹ்வுக்காக நேசித்தால் அல்லாஹ்வும் நம்மை நேசிப்பானா அத்தா?”
“யெஸ்” என்றார் முஸ்தஃபா.
“அப்படியானால், நான் அனைவரையும் அல்லாஹ்வுக்காக நேசிப்பேன்” என்றான் கரீம்.
“நானும்தான், நானும்தான்” என்றாள் ஸாலிஹா.
-நூருத்தீன்
புதிய விடியல் – பிப்ரவரி 1-15, 2019
அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்
<–முந்தைய அத்தியாயம்–> <–அடுத்த அத்தியாயம்–>
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License