“இன்னிக்கு பள்ளிவாசலில் கலர் லைட்டெல்லாம் போட்டு, நிறைய பேர் வந்து ரொம்ப கூட்டமா இருந்துச்சு. தொழுகை முடிஞ்சதும் கடைசியில் ஜாங்கிரி பாக்கெட் தந்தாங்க” வீட்டிற்குள் நுழையும்போதே உற்சாகமாகக்
கத்திக்கொண்டு ஓடிவந்தான் அப்துல் கரீம். தன் தந்தையுடன் பள்ளிவாசலுக்கு இஷா தொழுகைக்குச் சென்றிருந்தான் அவன். அன்று ரமளான் 27 ஆம் தராவீஹ்.
“என்ன விசேஷம்?” என்று ஒன்றும் தெரியாததுபோல் கேட்டார் அவனுடைய தாயார்.
“உங்களுக்குத் தெரியாதா? இன்னிக்கு லைலத்துல் கத்ரு இரவாம். ஆயிரம் மாசத்தைவிட ஸ்பெஷலாம். பயான்ல சொன்னாங்க.”
“அப்படியா? இன்னிக்குத்தானா அது?” என்று கேட்ட அம்மாவை விரிந்த கண்களுடன் ஆச்சரியமாகப் பார்த்தான் கரீம். அம்மாவுக்கு உண்மையிலேயே தெரியவில்லையா, அல்லது தன்னை சோதிக்கக் கேட்கிறாளா என்று அவனது பிஞ்சு மனத்திற்குள் சந்தேகம்.
ஓதிக்கொண்டிருந்த ஸாலிஹா இந்த உரையாடலால் கவரப்பட்டு “ஆயிரம் மாசத்தைவிட ஸ்பெஷலா? அப்படியா?” என்று அம்மாவிடம் கேட்டாள்.
“சூடா ஒரு கப் டீ கொடு” என்றபடி அங்கு வந்து அமர்ந்தார் முஸ்தபா. “அத்தா! அம்மாவுக்கு லைலத்துல் கத்ரு தெரியாதாம்” என்று தனது சந்தேகத்தை அவரிடம் குறைபோல் கூறினான் கரீம்.
“லைலத்துல் கத்ரு பற்றி அம்மாவுக்கு நல்லாவே தெரியுமே” என்று ஆச்சரியத்துடன் கூறினார் முஸ்தபா.
“இன்னிக்கு பள்ளிவாசலில் நடந்ததைப் பற்றி சொன்னான். இன்னிக்குத்தானா லைலத்துல் கத்ரு இரவு என்று கேட்டேன். அதைத்தான் ஸார் உங்களிடம் சொல்கிறார்” என்று புன்னகையுடன் சொல்லியபடி அவரிடம் ஆவி பறக்கும் டீ கோப்பையை நீட்டினார் அம்மா.
“அப்போ உங்களுக்குத் தெரியும்தானே?” என்று கேட்டாள் ஸாலிஹா.
“ம்” என்றவரிடம், “இன்றைய இரவு என்ன ஸ்பெஷல்? எனக்கு அதைச் சொல்லுங்க” என்றாள் அவள்.
தனக்கும் ஒரு கப் டீயை எடுத்துக்கொண்டு கணவருக்கு அருகில் வந்து அமர்ந்தார் அவர். “மாட்சிமைமிக்க ஓர் இரவில் இந்த குர்ஆனை இறக்கி வைத்தேன். அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது, ரொம்ப ஸ்பெஷல் என்று அல்லாஹ் லைலத்துல் கத்ரு பற்றி குர்ஆனில் கூறியிருக்கிறான்.”
“அப்படீன்னா இன்னிக்கு லைலத்துல் கத்ரு நைட் ஸ்பெஷல்தானே? நான் சரியாத்தானே சொன்னேன்” என்றான் கரீம்.
“லைலத்துல் கத்ரு கடைசி பத்து ஒற்றைப்படை இரவுகளில் ஒன்று என்றுதான் ரஸூலுல்லாஹ் சொல்லியிருக்காங்க. அது 27ஆம் நாள் இரவு என்று சொல்லலே.”
புரியாமல் சந்தேகத்துடன் பார்த்த பிள்ளைகளிடம் அவர்களின் அம்மா தொடர்ந்தார். “ரமளான் மாதத்தின் கடைசி பத்து இரவுகளில், ஒற்றைப்படை இரவுகளில், அதை நாம் தேடிக்கொள்ள வேண்டும். அதனால் ஒரு குறிப்பிட்ட இரவு, அதுவும் 27ஆம் இரவு என்று அதைச் சுருக்கக் கூடாது. அந்த அத்தனை இரவுகளிலும் இன்று லைலத்துல் கத்ரு இரவாக இருக்கலாம் என்று நாம் அதிகப்படியாக தொழுகை, திக்ரு என்று ஈடுபட வேண்டும். அல்லாஹ்வின் நாட்டப்படி அந்த இரவுகளுள் ஒன்றில் ஆயிரம் மாதத்திற்கான அளவில் நன்மை நமக்குக் கிடைத்துவிடும். புரிகிறதா?”
“பொதுவாகவே ரமளானின் கடைசி பத்து இரவுகளும் ஸ்பெஷல்தான். நம் ரஸூலுல்லாஹ் அந்தப் பத்து நாள்களும் அதிகம் அதிகம் வழிபாட்டில் ஈடுபடுவார்கள். மிக அதிகமாக தானம் செய்வார்கள்” என்றார் முஸ்தபா.
“அப்படியென்றால் அல்லாஹ் ரமளான் மாசத்து இரவில்தான் குர்ஆனை இறக்கினானா?” என்று கேட்டாள் ஸாலிஹா.
அம்மா விளக்க ஆரம்பித்தார். “ரஸூலுல்லாஹ் நபியாக அறிவிக்கப்படுவதற்கு முந்தைய காலத்தில் மக்காவில் உள்ள ஹிரா குகையில் சில நாள்கள் தனியாகச் சென்று இருந்து விடுவார்கள். மக்காவில் நடக்கும் சிலை வணக்கம், அனாச்சாரம் எதுவுமே அவர்களுக்குப் பிடிக்காது. அதனால் ஹிரா குகைக்குத் தனியாகச் சென்று விடுவார்கள். அப்படி ஒருமுறை அவர்கள் அங்கு சென்று இருக்கும்போது இரவில் ஜிப்ரீல் (அலை) வந்து அவர்கள்முன் தோன்றி ‘ஓதுக’ என்று சொன்னதும் ரஸூலுல்லாஹ் பயந்துவிட்டார்கள்.”
“யம்மாடி. திடீர்னு ஒருத்தர் இருட்டில் வந்து நின்றால் பயமாகத்தான் இருக்கும். நான் அழுதுவிடுவேன்” என்றான் கரீம்.
“ஆமாம். ரஸூலுல்லாஹ்வும் பயந்துதான் போனார்கள். ஆனால் அவர்கள் அழவில்லை. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எனக்கு எழுத, படிக்கத் தெரியாதே என்றார்கள். ஆனாலும் வானவர் ஜிப்ரீல் மூன்று முறை அவர்களிடம் அப்படி கூறினார்கள். கடினமாகவும் கட்டிப் பிடித்தார்கள். பிறகு ஐந்து ஆயத்துகளை ஓதிக் காண்பித்துவிட்டு மறைந்து விட்டார்கள். அந்த ஆயத்துகள்தான் சூரா அலக்கின் முதல் வசனங்கள். அது நடந்தது ரமளான் மாதம். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த 23 வருஷத்திற்கு குர்ஆனை அல்லாஹ் இறக்கினான்.”
புரிகிறது என்பதைப் போல் தலையாட்டினாள் ஸாலிஹா. துருதுருவென்று பார்த்துக்கொண்டிருந்த கரீம், “அப்போ லைலத்துல் கத்ரு இரவில் நான் தூங்காமல் முழிச்சிருக்க வேண்டுமா? தொழுதுகிட்டே இருக்கனுமா?” என்று கேட்டான்.
சிரித்துக்கொண்டே பதில் அளித்தார் முஸ்தபா. “அப்படி இல்லை. கொஞ்சம் தூங்கி ரெஸ்ட்டும் எடுத்துக்கலாம். அதிகமாக தொழுது இபாதத் செய்ய வேண்டும் என்பதற்கு அர்த்தம் இரவு முழுக்க தூங்காமல் முழிச்சிருக்க வேண்டும் என்பதல்ல.”
“அப்ப ஓக்கே. நான் கொஞ்சம் தூங்கிட்டு அப்புறமா எழுந்து அம்மாவுடன் சேர்ந்து தொழுவேன். லைலத்துல் கத்ரு நைட்ல ஓதுவதற்கு ஏதாவது ஸ்பெஷல் துஆ இருக்கா மம்மி?” என்று கேட்டாள் ஸாலிஹா.
“ஆமாம். ரசஸூலுல்லாஹ் கற்றுக்கொடுத்திருக்காங்க.”
“ரொம்பப் பெரிசா? எனக்கு உடனே மனப்பாடம் பண்ண முடியாதே” என்றான் கரீம்.
“பெரிசில்லை. ரொம்பச் சின்னது. ஆனால் பவர்ஃபுல் துஆ. அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபு அன்னீ.”
“அதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டாள் ஸாலிஹா.
“யா அல்லாஹ்! நிச்சயமாக நீயே மன்னிப்பவன். மன்னிப்பை விரும்புகிறாய். ஆகவே என்னை மன்னிப்பாயாக!” என்று விளக்கமளித்தார் அம்மா.
“நாங்க ஈஸியா மனப்பாடம் பண்ணிவிடுவோம்” என்றனர் கரீமும் ஸாலிஹாவும்.
-நூருத்தீன்
புதிய விடியல் – ஜுன் 1-15, 2019
அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்
<–முந்தைய அத்தியாயம்–> <–அடுத்த அத்தியாயம்–>
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License