வெற்றியும் பணிவும்

by நூருத்தீன்

தொலைக்காட்சியில் முஸ்தபாவும் குடும்பத்தினரும் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அது இறுதி மேட்ச். முடிவதற்கு வெகு சில பந்துகளே இருந்தன. வெற்றி பெற சில ரன்கள் மட்டுமே

தேவைப்பட்டன. ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது. இறுதி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற்றது இந்திய அணி.

ஸாலிஹாவும் அப்துல் கரீமும் துள்ளிக் குதித்தனர். உற்சாகமாகக் கைதட்டி சிரித்தான் அப்துல் கரீம். அங்கு அரங்கம் மகிழ்ச்சி ஆரவாரத்தால் அதிர்ந்தது. அரங்கில் இருந்தவர்கள் இந்தியக் கொடியை ஆட்டி, நடனமாடினர். கிரிக்கெட் வீரர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவினர். மட்டைகளையும் கை முஷ்டிகளையும் உயர்த்தி வெற்றி பெற்றதை முழங்கினர். முஸ்தபாவும் புன்னகையுடன் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அச்சமயம் வெற்றி தந்த களிப்பில் அரங்கில் இருந்த சிலர் தகாத முறையில் நடப்பது தொலைக்காட்சியில் தெரிந்தது. அதைக் கண்டதும் முஸ்தபாவும் அவர் மனைவியும் முகத்தைச் சுளித்தனர். ஸாலிஹா, “ஏன் டாடி அவங்க இப்படி தப்பா பிஹேவ் செய்கிறார்கள்?” என்று கேட்டாள்.

உடனே பதில் சொல்லாமல் சற்று நேரம் தொலைக்காட்சியைப் பார்த்த முஸ்தபா, பிறகு அதை நிறுத்திவிட்டார். அடுத்து அப்துல் கரீமும் தந்தையிடம் அதே கேள்வியைக் கேட்டான்.

“வெற்றி பெற்றதும் நமக்கெல்லாம் மகிழ்ச்சி ஏற்படுகிறது. அப்பொழுது அந்த உற்சாகத்தில் நாம் சிரிக்கிறோம், கை தட்டுகிறோம். பலவிதமாக வெளிப்படுத்துகிறோம். ஆனால் சிலர் நிதானத்தை இழந்து விடுகிறார்கள். தவறான செய்கைகளில் ஈடுபடுகிறார்கள். அது தப்பு” என்று பதில் அளித்தார் முஸ்தபா.

“வெற்றி அடைந்தாலும் தோல்வி அடைந்தாலும் நாம் நிதானத்தை இழக்கக் கூடாது. வெற்றி சந்தோஷத்தைத் தரும். தோல்வி வருத்தமளிக்கும். சோகத்தைத் தரும். அது இயற்கை. ஆனால் அதை ஏற்றுக்கொண்டு எல்லா நிலையிலும் நாம் அல்லாஹ்வுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்” என்றார் ஸாலிஹாவின் அம்மா.

“ரஸூலுல்லாஹ் (ஸல்) மக்காவில் இருக்கும்போது அங்குள்ள மக்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி அறிவித்தபோது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட தோழர்களுக்கு அங்கிருந்தவர்கள் மிகவும் தொல்லை அளித்தார்கள். சித்திரவதை புரிந்தார்கள். இதைப் பற்றி நான் முன்னர்கூட சொல்லியிருக்கிறேன், நினைவிருக்கிறதா?” என்று கேட்டார் முஸ்தபா.

“யெஸ் டாடி. நன்றாக நினைவிருக்கிறது” என்றாள் ஸாலிஹா.

“அப்படியெல்லாம் அவர்கள் சித்திரவதை அனுபவிக்கும்போது, சிலர் உயிர் இழக்கும்போது, தோழர்கள் அல்லாஹ்விடம்தான் உதவி கேட்டார்கள். துஆ புரிந்தார்கள். பிறகு அந்த எதிரிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே போர்கள் நடைபெற்றன. முஸ்லிம்கள் வெற்றியும் அடைந்தார்கள். அப்போதெல்லாம் ரஸூலுல்லாஹ்வும் தோழர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்து விதமாக அதிகமதிகம் அல்லாஹ்வுக்கு நன்றியுரைப்பார்கள். தோற்றுப்போன எதிரிகளிடம் கருணையுடனும் அன்புடனும் நடந்துகொள்வார்கள்” என்றார் முஸ்தபா.

“தோற்றுப் போனவர்களைத் தண்டிக்க மாட்டார்களா டாடி?” என்று கேட்டான் அப்துல் கரீம்.

“அல்லாஹ்வுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக குற்றம் புரிந்தவர்கள் மட்டும் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்களே தவிர, மற்றவர் அனைவரும் கண்ணியத்துடன் நடத்தப்பட்டனர்” என்றார் முஸ்தபா.

“நாம் எந்த விஷயத்தில் வெற்றி அடைந்தாலும் மிகவும் பணிவாகவே இருக்க வேண்டும். ஏனென்றால் முயற்சி மட்டும்தான் நம் கையில் உள்ளது. அதற்கு உண்டான பலனைத் தருவது அல்லாஹ் மட்டுமே. அதை நாம் நினைவில் வைத்துக்கொண்டு மிகவும் பணிவுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் ‘என்னால்தான்’ என்ற கர்வம் ஏற்பட்டுவிடும். அது மிகவும் ஆபத்தானது” என்று மேலும் விளக்கமளித்தார் ஸாலிஹாவின் உம்மா.

“பணிவுக்கான மிக உயர்வான உதாரணம் ஒன்று சொல்லட்டுமா? ரஸூலுல்லாஹ்வும் தோழர்களும் மக்காவில் கொடுமை தாங்க முடியாமல் மதீனாவிற்குச் சென்று விட்டார்கள் என்று உங்களுக்குத் தெரியுமில்லையா?”

“தெரியும் டாடி” என்றாள் ஸாலிஹா.

“சில காலத்திற்குப் பிறகு மக்காவாசிகள் புதிதாக ஏற்படுத்திய குழப்பத்தை அடக்க ரஸூலுல்லாஹ் அவர்கள்மீது போர் புரிய தம் தோழர்களுடன் சென்றார்கள். இம்முறை தாங்கள் முஸ்லிம்களை வெல்ல முடியாது என்பதைப் புரிந்துகொண்ட மக்காவாசிகள் தோல்வியை ஏற்றுக்கொண்டனர். பெரிய போர் ஏதும் நடைபெறாமலேயே முஸ்லிம்கள் வெற்றி அடைந்தனர். வெற்றி வீரர்களாக அவர்கள் மக்காவிற்குள் நுழைந்தபோது நம் முஹம்மது நபி (ஸல்) பெருங் குற்றம் புரிந்த எதிரிகளை எல்லாம் மன்னித்தார்கள். மாபெரும் வெற்றியை அவர்கள் அடைந்த அந்நேரத்திலும் எவ்விதப் பெருமையும் இறுமாப்பும் இன்றி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி தொழுதார்கள். எல்லாமே அல்லாஹ்வின் செயல் என்றுதான் நடந்துகொண்டார்கள். அதனால் முஸ்லிம்களாகிய நாம் பணிவுடனும் அடக்கத்துடனும் நடந்துகொள்ள வேண்டும்” என்றார் முஸ்தபா.

“அல்லாஹ்வுக்கு உவப்பான வகையில் நாம் நமது செயல்களை அமைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுது அவன் நமது துன்பங்களை நீக்கிவிடுவான். வெற்றியை அளிப்பான். நாம் பணிவை வளர்த்துக் கொண்டால் அவனுக்கு நன்றி செலுத்த மறக்க மாட்டோம். தப்பான காரியங்கள் புரிய மாட்டோம்” என்று முடித்தார் ஸாலிஹாவின் அம்மா.

-நூருத்தீன்

புதிய விடியல் – டிசம்பர் 1-15, 2019

அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்

<–முந்தைய அத்தியாயம்–>

<–நூல் முகப்பு–>

 


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment