குற்றம் குற்றமே!

by நூருத்தீன்

தொலைக்காட்சியில் காலைச் செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தார் முஸ்தபா. அன்று ஞாயிற்றுக்கிழமை. அதனால் வழக்கமான பரபரப்பு இன்றி வீடு அமைதியாக இருந்தது. ஸாலிஹாவும் அப்துல் கரீமும்

ஆளுக்கொரு கப் ஹார்லிக்ஸ் எடுத்துக்கொண்டு தந்தையின் அருகில் வந்து அமர்ந்தனர்.

செய்தியில் சிறுவன் ஒருவனைப் பாராட்டி, மெடல் வழங்கி, போலீஸ் அதிகாரி பேசிக்கொண்டிருந்தார். “அவனுக்கு போலீஸ் எதற்கு மெடல் கொடுக்கிறார்கள் டாடி?” என்று விசாரித்தாள் ஸாலிஹா.

தொலைக்காட்சியின் ஒலியைக் குறைத்தார் முஸ்தபா. “அந்தப் பையனின் குடும்பம் மிகவும் ஏழையானதாம். வறுமை தாங்காமல் அவனுடைய அப்பா தான் வேலை பார்க்கும் நகைக் கடையிலிருந்து சில நகைகளைத் திருடி, வீட்டில் மறைத்து வைத்துவிட்டார். அதைத் தெரிந்துகொண்ட அந்தப் பையன், அதைத் திருப்பிக்கொடுத்து விடும்படி அப்பாவிடம் சொல்லியிருக்கிறான். ஆனால் அவர் கேட்கவே இல்லை. ஏழையாக இருந்தாலும் திருடுவது மிகப் பெரும் குற்றம் என்று அவனுக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் அவன் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று விஷயத்தைச் சொல்லிவிட்டான்.”

“அப்போ அவனுடைய அப்பாவுக்கு என்னாச்சு?”

“போலீஸ் அவனுடைய அப்பாவை கைது செய்துவிட்டார்கள். தன் அப்பா என்றும் பார்க்காமல் நேர்மையாக நடந்துகொண்ட அந்தப் பையனின் செயலைப் பாராட்டித்தான் அந்த போலீஸ் அதிகாரி பேசுகிறார்.”

“தன் அப்பாவை அந்தப் பையன் ஜெயிலுக்கு அனுப்பிவிட்டானே. அது தப்பில்லையா டாடி?” என்று கேட்டான் கரீம்.

“அவர் செய்தது க்ரைம் ஆச்சே! நமக்குள் நடக்கும் சாதாரண தப்பைத்தான் மறைக்க வேண்டும். க்ரைம் குற்றம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அதை உடனே தெரியப்படுத்திவிட வேண்டும். மதீனாவில் ஒரு சிறுவர் தம் தந்தையைப் பற்றி ரஸூலுல்லாஹ்விடம் புகார் கூறியது தெரியுமா?” என்று கேட்டார் முஸ்தபா.

“தெரியாது. சொல்லுங்கள் டாடி” என்றாள் ஸாலிஹா.

காலை உணவுக்காக குக்கரை அடுப்பில் வைத்துவிட்டு, தாமும் அங்கு வந்து அமர்ந்தார் ஸாலிஹாவின் அம்மா.

“மதீனாவில் உமைர் பின் ஸஅத் என்றொரு சஹாபி இருந்தார். நபி (ஸல்) மதீனாவுக்கு வந்தபோது உமைர் சிறுவர். தம் குடும்பத்தினருடன் அவரும் முஸ்லிம் ஆகிவிட்டார். உமைரின் அம்மாவும் அப்பாவும் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு, உமைரின் அம்மா ஜுலாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஜுலாஸும் உமைரை தம்முடைய மகன் போலவே மிகவும் அன்புடனும் பாசத்துடனும் நடத்தினார். மிகவும் நல்ல முஸ்லிமாகவும் இருந்தார்.”

காலி கோப்பையை டேபிளில் வைத்துவிட்டு, ஆர்வமுடன் கதை கேட்கலானான் கரீம்.

“நபி (ஸல்) ஸிரியாவில் இருந்த தபூக் என்ற ஊருக்கு படையெடுத்துச் சென்றார்கள். அது மிக மிக தொலைவில் இருந்த ஊர். கடுமையான கோடை காலம். ஏகப்பட்ட செலவு, ஏற்பாடுகள் என்று அனைவருக்கும் அது மிகவும் சிரமமான விஷயமாக இருந்தது. ஆனாலும் முஸ்லிம்கள் மிகவும் ஆர்வத்துடன் தங்களிடம் என்னென்ன இருந்ததோ அதையெல்லாம் விற்று, பணம் சேகரித்து படையில் சேர்ந்துகொண்டார்கள். ஒன்றுக்கும் வழி இல்லாதவர்கள் மிகவும் சோகத்துடன் தங்களாலும் போரிலும் கலந்துகொள்ள முடியவில்லையே என்று அழ ஆரம்பித்துவிட்டார்கள்.”

“அதற்கெல்லாம் அழுவார்களா டாடி? போருக்குப் போகாமல் வீட்டில் இருந்தால் ஜாலிதானே?” என்று கேட்டாள் ஸாலிஹா.

“நபியவர்கள் சொல்லிவிட்டால் அதைப் பின்பற்றினால்தான் அவர்களுக்கு ஜாலி. இல்லையென்றால் அது பாவம், குற்றம் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அதனால் அழுதார்கள். அது இருக்கட்டும். இப்படி ஊரே பரபரப்பாக இருந்ததா? ஆனால் உமைரின் வீட்டில் ஜுலாஸ் மட்டும் போருக்குச் செல்ல எந்த ஏற்பாடும் செய்யாமல் அமைதியாக இருந்தார். உமைருக்குப் புரியவில்லை.

பள்ளிவாசலில் தாம் பார்த்த காட்சிகளை எல்லாம் உற்சாகமுடன் தன் அப்பா, அம்மாவிடம் கூறினார். போருக்குச் செல்ல முடியவில்லையே, இறைவனின் வழியில் போர் புரிய முடியவில்லையே என்று பலர் கண்ணீர் விட்டு அழுததைச் சொன்னார். அப்பொழுது ஜுலாஸ் கோபத்தில் நபியவர்களைப் பற்றி அவதூறாகச் சொல்லிவிட்டார்.”

“அல்லாஹ்வே!” என்று ஆச்சரியப்பட்டாள் ஸாலிஹா.

“சிறுவர் உமைருக்கும் அப்படித்தான் மிகவும் அதிர்ச்சியாகிவிட்டது. தம் தந்தை சிறந்த முஸ்லிமாக இருந்தும் ரஸூலுல்லாஹ்வின் முடிவுக்கு எதிராக தவறாகப் பேசியதும் அவருக்கு மிகவும் குழப்பமாகிவிட்டது. ஆனால் உமைர் மிகவும் புத்திசாலி. அதனால் அவர் ஜுலாஸிடம், ‘உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்தான். ஆனால் நீங்கள் இப்பொழுது சொன்னது மிகப் பெரிய குற்றம். அதை நான் மறைப்பதும் குற்றம்’ என்று ஓடிப்போய் நபியவர்களிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டார்.”

“ஜுலாஸுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டதா?” என்று விசாரித்தாள் ஸாலிஹா.

“அவரை அழைத்து விசாரணை நடத்தினார்கள். முதலில் அவர் குற்றத்தை மறைத்தார். ஆனால் அல்லாஹ் அதைக் குறித்து குர்ஆன் வசனத்தை இறக்கியதும் ஜுலாஸ் தம் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டு மனம் திருந்திவிட்டார். நம் பெற்றோரே ஆனாலும் நமக்கு நெருக்கமான உறவினர்களாகவே இருந்தாலும் அவர்கள் அல்லாஹ்வுக்கும் ரஸூலுக்கும் எதிரான முடிவை எடுக்கும்போது அதற்கு நாம் கட்டுப்படக்கூடாது, அதை மறைக்கக்கூடாது.”

“புரிகிறது டாடி. ரஸூலுல்லாஹ் உமைர் (ரலி) அவர்களைப் பாராட்டினார்களா?” என்று ஆவலுடன் கேட்டாள் ஸாலிஹா.

“ஆம். நபி (ஸல்) உமைரின் காதைச் செல்லமாய்ப் பிடித்து,‘சிறுவரே! உம் காதுகள் தம் பொறுப்பை நிறைவேற்றின. உம் இறைவன் உமக்கு நியாயம் வழங்கினான்’ என்று பாராட்டினார்கள்.”

அதைக் கேட்டு அப்துல் கரீம் சந்தோஷமாகச் சிரித்தான்.

-நூருத்தீன்

புதிய விடியல் – செப்டம்பர் 16-30, 2019

அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்

<–முந்தைய அத்தியாயம்–>  <–அடுத்த அத்தியாயம்–>

<–நூல் முகப்பு–>

 


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment