அழகிய கடன்

by நூருத்தீன்

ஒருநாள் மாலை முஸ்தபா தம் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு கடற்கரைக்குச் சென்றிருந்தார். அன்று விடுமறை நாள். அதனால் பீச்சில் ஜேஜே என்று கூட்டம். கரீமும் ஸாலிஹாவும் மணலில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

குதித்து ஓடிய கரீம் கால் தடுக்கி விழுந்து, முழங்காலில் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது. இலேசாக இரத்தம். அதனால், ‘ஓ’வென்று அழ ஆரம்பித்துவிட்டான்.

அவனுடைய அம்மா ஓடி வந்து அவனைத் தூக்கி, மடியில் அமர்த்தி, சமாதானம் சொல்லியும் அவன் அழுகை அடங்கவில்லை. அப்பொழுது முஸ்தபா, “அழாமல் இருந்தால் உனக்கு ஐஸ்க்ரீம் வாங்கித் தருவேன்” என்று சொன்னதும்தான் அவனது அழுகை ஒருவாறு நின்றது. சொன்னது போலவே, வீடு திரும்பும் வழியில் ஐஸ்க்ரீம் கடையில் அவர் காரை நிறுத்தியதும், “டாடி! எனக்கும் ஐஸ்க்ரீம்” என்றாள் ஸாலிஹா.

“நீயா கீழே விழுந்தே? உனக்கு கிடையாது” என்றான் கரீம்.

“அப்போ உன் ஐஸ்க்ரீமிலிருந்து எனக்குக் கொஞ்சம் தா. வேணும்னா அதைக் கடனா வெச்சுக்கோ” என்றாள் ஸாலிஹா.

“சாப்பிட்டுக் கரைஞ்சிடுமே. எப்படி திருப்பித் தருவே?” என்று கேட்டான் கரீம்.

யோசித்தாள் ஸாலிஹா. ”வேறு என்னமாச்சும் ஸ்பெஷலா தருவேன்.”

அக்காவுக்கும் தம்பிக்கும் நடக்கும் உரையாடலைப் பார்த்து, பெற்றோர் சிரித்துவிட்டனர். அனைவருக்கும் ஐஸ்க்ரீம் வாங்கி வந்தார் முஸ்தபா.

அன்று இரவு படுக்கும்போது, அம்மா ஸாலிஹாவிடம் கேட்டாள். “நீ கரீமிடம் கடன் கேட்டாயே, அதைப்போல் அல்லாஹ் நம்மிடம் கடன் கேட்கிறான். தெரியுமா?”

“எப்படிம்மா? அல்லாஹ்தானே நமக்கு எல்லாம் தருகிறான். அவனுக்கு நாம எப்படி கடன் தருவது?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் ஸாலிஹா.

“நீ சொல்வது சரிதான். ஆனால், இது சற்று வித்தியாசமான கடன். குர்ஆனில் அல்லாஹ் அப்படிக் கேட்கிறான். நாம் அதை அவனுக்குத் தந்தால் அவன் அதை இருமடங்காக, டபுளாக நமக்கு திருப்பித் தருவான். மேலும் நமக்கு கண்ணியமும் அளிப்பான்.”

பிள்ளைகள் இருவரும் புரியாமல் பார்த்தனர். “சொல்கிறேன். கேளுங்கள். குர்ஆனில் அல்ஹதீத் என்று ஒரு சூரா உள்ளது. அதில்தான் அந்த ஆயத் உள்ளது. மதீனாவில் தாபித் (ரலி) என்று ஒரு சஹாபா இருந்தார். அந்த ஆயத்தை ஓதியதும் நீ கேட்பதைபோல் அவருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. அதனால், ரஸூலுல்லாஹ்விடம் சென்று, ‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுக்குத்தான் யாருடைய தேவையும் இல்லையே. பின் அவன் ஏன் கடன் கேட்கிறான்?’ என்று கேட்டார்.

‘அந்த நன்மைக்காக அல்லாஹ் உங்களைச் சொர்க்கத்தில் அனுமதிப்பான். அதற்காக’ என்று நபி (ஸல்) பதிலளித்தார்கள்.

அதாவது, அல்லாஹ்வுக்குக் கடன் கொடுப்பது என்பது ஏழைகளுக்கு உதவுவது, தானம் அளிப்பது. அதைப் புரிந்துகொண்ட தாபித், ‘நான் அல்லாஹ்வுக்குக் கடன் அளித்தால், எனக்கும் என் பிள்ளைகளுக்கும் சொர்க்கமா?’ என்று ஆச்சரியமடைந்தார். உடனே நபியவர்களின் கையின்மேல் தம் கையை வைத்து, ‘என்னிடம் இரண்டு பழத் தோட்டங்கள் உள்ளன. அனைத்தையும் அல்லாஹ்வுக்கு அளிக்கிறேன்’ என்று கூறினார்.

‘அவற்றுள் ஒன்றை அல்லாஹ்வுக்கு அளித்துவிட்டு, மற்றொன்றை உங்கள் குடும்பத்தினருக்காக வைத்துக் கொள்ளுங்கள்’ என்று அறிவுறுத்தினார்கள் நபியவர்கள்.

‘அப்படியானால், இரண்டில் சிறப்பான ஒரு தோட்டத்தை அல்லாஹ்வுக்காக அளிக்கிறேன். அதில் 600 பேரீச்ச மரங்கள் உள்ளன’ என்று சொன்னார் தாபித்.”

உம் கொட்டி கேட்டுக்கொண்டிருந்த கரீம், “சிக்ஸ் ஹண்ட்ரட் ட்ரீஸ்? அப்படீன்னா பெரிய தோட்டமா இருந்திருக்குமே” என்று கண் விரித்தான்.

“ஆமாம்! பெரிய தோப்பு. அத்தனையையும் அல்லாஹ்வுக்காக தானமாகக் கொடுத்துவிட்டு, தாபித் தோப்பிற்கு வந்தார். அங்கு இருந்த தம் மனைவியிடம், ‘இந்தத் தோட்டத்தை அல்லாஹ்வுக்காகத் தானமளித்துவிட்டேன். வா போகலாம்’ என்றார்.

அப்பொழுது அவர்களின் பிள்ளைகள் அத்தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களது பைகளிலும் கைகளிலும் பொறுக்கி வைத்திருந்த பேரீச்சம் பழங்கள் இருந்தன. அனைத்தையும் வாங்கி, தோட்டத்திலேயே கொட்டினார் தாபித்தின் மனைவி உம்முதஹ்தா. ‘இனி இவை நமதல்ல செல்லங்களே. வாருங்கள் போவோம்.’ என்று அவர்களை அழைத்துக்கொண்டார். அனைவரும் தோப்பை விட்டு வந்துவிட்டனர்.”

“அப்படியானால் அவர்களுக்கு அல்லாஹ் என்ன கொடுப்பான்?” என்று கேட்டாள் ஸாலிஹா.

“சொர்க்கத்தில் ஏராளமான பேரீச்ச மரங்கள் அவருக்காகக் காத்திருக்கின்றன. அவற்றில் முத்தும் ரத்தினமும் முழுமையாக நிறைந்துள்ளன என்று ரஸூலுல்லாஹ் தெரிவித்திருக்கிறார்கள்.”

அம்மா கதை சொல்லி முடித்ததும், சற்று நேரம் அமைதியாக இருந்த கரீம் ஸாலிஹாவிடம் சொன்னான். “நாளைக்கு அத்தாவிடம் சொல்லி சிக்ஸ்ட்டி ஐஸ்கிரீம் வாங்கி உனக்குத் தருவேன்.”

அதைக்கேட்டு வாய்விட்டுச் சிரித்தார் முஸ்தபா.

-நூருத்தீன்

புதிய விடியல் – மார்ச் 1-15, 2019

அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்

<–முந்தைய அத்தியாயம்–>  <–அடுத்த அத்தியாயம்–>

<–நூல் முகப்பு–>

 


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment