அன்பு வெல்லும்

by நூருத்தீன்

அலுவல் முடிந்து வரும்போது அதைக் கவனித்தார் முஸ்தபா. வீட்டு வாசல் கேட் அருகே சிறு பாத்திரத்தில் பால் ஊற்றி வைத்துவிட்டு நின்றிருந்தான் அப்துல் கரீம். பூனை ஒன்று அதை உறிஞ்சி ருசி பார்த்துக்கொண்டிருந்தது. புன்னகையுடன் நெருங்கிய

முஸ்தபாவைப் பார்த்து மருட்சியுற்று, குடிப்பதை நிறுத்திவிட்டு நகர்ந்தது பூனை.

“பயப்படாதே! இவங்க என் டாடி. ஒன்னும் செய்யமாட்டாங்க” என்று பெரிய மனுஷன்போல் அதனிடம் பேசினான் கரீம்.

“இது யாருடைய பூனை கரீம்?” என்று விசாரித்தார் முஸ்தபா.

ஹால் சோபாவில் அமர்ந்து ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ஸாலிஹா, “டாடி! இது தெருவில் உள்ள பூனை. சும்மா அலையும். கடைகளிலிருந்து எதையாவது திருடிச் சாப்பிடும். அவர்கள் இதை விரட்டுவதைப் பார்த்திருக்கிறேன்” என்று அதன் கதையைச் சொன்னாள்.

“ஆமாம் டாடி! இன்னிக்கு இதற்குச் சாப்பிட ஒன்றும் கிடைக்கவில்லை போலிருக்கிறது. வாசலில் வந்து படுத்திருந்தது. பார்க்க பாவமாய் இருந்தது. அதான் மம்மியிடம் பால் வாங்கி வந்து கொடுத்தேன்.”

“ஓக்கே! பிறகு பத்திரமாய் அந்தப் பாத்திரத்தை எடுத்துட்டு வந்து கழுவி வை” என்று உள்ளே சென்றுவிட்டார் முஸ்தபா.

அடுத்த மூன்று நாள்களும் அதைப் போலவே அந்தப் பூனைக்கு உபசரிப்பு நடைபெறுவதைக் கண்டார் முஸ்தபா. ருசி கண்ட பூனை மாலை நேரத்திற்குச் சரியாக வந்துவிடும். கரீமும் அம்மாவிடம் வம்பு செய்து பால் வாங்கிச் சென்று அந்தப் பூனைக்குப் புகட்டினான். இப்பொழுது பிஸ்கெட்டும் அவனது உபசரிப்பில் சேர்ந்துகொண்டது.

“என்ன கரீம்? பூனை இப்ப உன் ஃபிரண்ட் ஆயிடுச்சு போலிருக்கே” என்று விசாரித்தார் முஸ்தபா.

“ஆமாம் டாடி! இப்பொழுது இது கடைகளுக்குச் சென்று திருடிச் சாப்பிடுவது இல்லை. திருந்திவிட்டது” என்று மகிழ்ச்சியுடன் கூறினான் கரீம்.

இரவு, முக்கியச் செய்திகள் எதையோ வாசித்தபடி படுத்திருந்த முஸ்தபா பிள்ளைகள் வந்ததும் அவர்களை அரவணைத்துக்கொண்டார்.

“பூனை தூங்கிடுச்சா கரீம்?” என்று விசாரித்தார்.

“அது இப்பொழுது நம் வீட்டு கேட்டுக்கு வெளியிலேயே தங்கிடுது டாடி” என்றாள் ஸாலிஹா.

“உண்மையாக அன்பு செலுத்துபவர்களிடம் மிருகங்களும் அன்பாய் நடந்துகொள்ளும். நாமும் அப்படித்தானே. யார் நம்மிடம் நன்றாகப் பழகுகிறார்களோ அவர்களிடம் நல்ல ஃபிரண்டாகிவிடுவோம்.. இல்லையா?” என்றார் முஸ்தபா.

“கரெக்ட் டாடி” என்றான் கரீம்.

“முஹம்மது நபி (ஸல்) உலகத்திலேயே மிகவும் அன்பானவர்கள். அந்த அன்பின் காரணமாகவே பலர் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டு முஸ்லிமாகியிருக்கிறார்கள். துமாமா பின் உதால் (ரலி) என்பவர் அப்படியொரு சஹாபா.”

“அவரைப் பற்றிச் சொல்லுங்கள் டாடி” என்றாள் ஸாலிஹா.

“அரேபியாவில் யமாமா என்று ஓர் ஊர் உள்ளது. அங்கு வசித்த முக்கியமான கோத்திரத்தில் பெரிய புள்ளி துமாமா. அவருக்கு முஹம்மது நபியைப் பற்றித் தெரியவந்தது. துமாமாவையும் அவருடைய இனத்தைச் சேர்ந்த மக்களையும் இஸ்லாத்திற்கு அழைப்பு விடுத்து நபியவர்கள் கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்கள். ஆனால் துமாமாவோ, அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அது மட்டும் இல்லாமல், நபியவர்களைக் கொன்று விடவேண்டும் என்றும் அறிவித்துவிட்டார். தவிர சில நபித் தோழர்களையும் அவர் கொன்றுவிட்டார்.”

“அவ்வளவு முரடரா?” என்று ஆச்சரியமுடன் கேட்டான் கரீம்.

“ஆமாம்! அவர் வீரரும்கூட. அவர் செய்த கொலைகள், சொன்ன விஷயங்கள் எல்லாம் தெரியவந்ததும் துமாமாவைக் கண்டதும் கொல்ல நபியவர்கள் உத்தரவிட்டுவிட்டார்கள். அப்படியிருக்கும்போது, ஒருநாள் துமாமா மக்காவிற்குச் செல்லும் வழியில் மதீனாவின் அருகே தோழர்களிடம் மாட்டிக்கொண்டார். அவரை அடையாளம் தெரியாமல், யாரோ ஒரு திருடன் என்று மட்டும் நினைத்துக்கொண்டு சஹாபாக்கள் அவரை ரஸூலுல்லாஹ்விடம் அழைத்து வந்தார்கள். அவர்தாம் துமாமா என்று தெரியவந்ததும் அவரைப் பள்ளிவாசலில் கட்டிப்போட்டார்கள்.”

“அவரை வேறு ஒன்றும் செய்யவில்லையா?” என்று கேட்டாள் ஸாலிஹா.

“இல்லை. நபியவர்கள் அவரை அடித்து துன்புறுத்தவில்லை. வேறு எதுவும் செய்யவில்லை. அடுத்த மூன்று நான்கு நாள்களும் வேளாவேளைக்கு முஸ்லிம்கள் அவருக்கு உணவு அளிப்பார்கள். சாப்பிட்டு முடித்ததும் கட்டிப்போட்டு விடுவார்கள். அவ்வளவுதான். அவரும் சாப்பிட்டுவிட்டு பள்ளிவாசலில் அவர்கள் அனைவரும் தொழுவதையும் நபியவர்கள் அனைவரிடமும் பழகுவதையும் பார்த்துக்கொண்டேயிருந்தார். கடைசியில் ஒருநாள் அவரது கட்டுகளை அவிழ்த்துவிட்டு உனக்கு விடுதலை அளித்துவிட்டோம் என்று சொன்னார்கள் நபியவர்கள்.”

“ஆச்சரியமா இருக்கே டாடி! தப்பித்து விட்டோம் என்ற சந்தோஷத்துடன் துமாமா ஊருக்குத் திரும்பிவிட்டாரா?” என்று கேட்டான் கரீம்.

“இல்லை. துமாமா உடனே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். சிறந்த முஸ்லிமாக ஆகிப்போனார். பிறகு ஊருக்குத் திரும்பி தம் மக்களிடமும் இஸ்லாமைப் பரப்ப ஆரம்பித்துவிட்டார். சோதனையான காலங்களில் இஸ்லாத்திற்காக மிகச் சிறப்பாக உழைத்து, வாழ்ந்து, மறைந்தார்” என்று சொல்லி முடித்தார் முஸ்தபா.

“அன்பு மிகச் சிறந்த ஆயுதம். மனங்களை வெல்லும். உலகை மாற்றும். முஸ்லிமாகிய நாம் எல்லோரிடமும் கட்டாயம் அன்பாக நடந்து கொள்ளவேண்டும்” என்றார் ஸாலிஹாவின் அம்மா.

அன்புடன் பெற்றோரை அணைத்துக்கொண்டனர் பிள்ளைகள்.

-நூருத்தீன்

புதிய விடியல் – நவம்பர் 16-30, 2019

அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்

<–முந்தைய அத்தியாயம்–>  <–அடுத்த அத்தியாயம்–>

<–நூல் முகப்பு–>

 


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment