கடந்த பதினைந்து நூற்றாண்டுகளாக எழுதிக்கொண்டே உள்ளனர் ஒரு மனிதரின் வரலாற்றை. உலகின் பல மொழிகளில் பல மேடைகளில் பல கோணங்களில் பல மதத்தவர் பல இனத்தவரால் பல நாட்டினரால். ஆனால் எழுதி முடிக்கப்படவில்லை இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்றை. அவருடன் பயணித்தவர்களும் வரலாற்றில் அலங்கரிக்கப்படுவது தவிர்க்க இயலாத ஒன்று.
முகமது நபி (ஸல்) அவர்களுடன் பிணைந்து பயின்ற ஆண்கள் தோழர்கள் ஆகவும், அத்தோழர்களின் அன்னையர், மனைவியர், மகள்கள், சகோதரிகள் தோழியராகவும் பரிணமித்தனர். அவ்வாறு நபியவர்களின் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த தோழியர் 17 பேரின் அர்ப்பணிப்பு மிக்க வாழ்க்கை வரலாறு நூருத்தீன் அவர்களின் எழுத்தாக்கத்தால் “தோழியர்” எனும் நூலாக பரிணாமம் பெற்றுள்ளது.
பெண்கள் மனித சமுதாயத்தின் மிகச் சரியான மறுபாதி அங்கம். இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை பல மேடைகளில் அறிஞர் பெருமக்கள் பேசுவதையும் பல புத்தகங்களில் விரிவாக பட்டியலிட்டு விளக்குவதையும் நாம் அறிவோம். கல்வியுரிமை, கருத்துரிமை, வாழ்வுரிமை, பொருள் தேடும் உரிமை, தேடிய பொருளை இறை விருப்பப்படி செலவளிக்கும் உரிமை, மணமகனைத் தேர்வு செய்யும் உரிமை, வாரிசுரிமை என பலப்பல உரிமைகளை வழங்கி மாண்புடன் வாழ வழிவகுத்து தந்தவர்கள் அண்ணலம் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்). மேற்கண்ட உரிமைகள் அனைத்தையும் பெற்று நடைமுறைப்படுத்தி இறை உவப்பை பெற்ற முன்மாதிரி முஸ்லிம் பெண்மணிகளான தோழியர்கள் குறித்து இந்நூல் விரிவாக எடுத்து இயம்புகிறது. “உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது” (33:21) என்று இறைவன் கூறுகிறான் என்றால் நிச்சயம் வாழ்வின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒவ்வொரு நகர்வுக்கும் அந்த பெருமானாரின் வாழ்வில் கண்டிப்பாக முன்மாதிரி இருக்கத்தானே செய்யும் என்பதற்கு நூல் சான்று பகர்கிறது.
இஸ்லாத்தை ஏற்றதற்காக பாலைவன வெயிலில் கடும் கொடுமைக்கு ஆளான ஸுமைய்யா பின்த் ஃகையாத் (ரலி) அவர்களின் தியாக வரலாற்றில் தொடங்குகிறது நம்மை மார்க்கத்தோடு பிணைக்கச் செய்யும் உயிர்ப்பான சரித்திரங்கள். இஸ்லாத்திற்காக உயிர் நீத்த முதல் பெண் உயிர் தியாகி ஸுமைய்யா பின்த் ஃகையாத் (ரலி) அவர்களே. போர்க்களத்திலும் பல நபிமொழிகளை அறிவித்தலும் தமது தனித்துவத்தை வெளிப்படுத்திய வீரம் செறிந்த உம்மு ஸுலைம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களின் வரலாற்றை படிக்கும்போது உணர்ச்சிப் பெருக்கு மேலிடுகிறது. கணவரோடு பல நாடுகளுக்கு சென்று இறை வழியிலான அறப்போரில் உயிர் தியாகம் செய்த இவரின் வரலாற்றை படிக்கும் போது பெண்களின் உள்ளங்கள் மேலும் உறுதி பெறும்.
உடல் பொருள் ஆவி அனைத்தையும் தூய மார்க்கத்திற்காக என்று தனது மகன்கள் அனைவரையும் போர்க்களத்தில் பறிகொடுத்த வீரத்தாய் அஃப்ரா பின்த் உபைத் (ரலி) அவர்களின் சோக வரலாறு வாசிப்போரை கண்கலங்க செய்யும். இழப்புகளை இன்முகத்துடன் எதிர்கொண்ட அஸ்மா பின்த் யஸீத் (ரலி) மறுமை வெற்றிக்காக அடிமைகளை விடுதலை அளித்த உம்முவரக்கா பின்த் அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் வாழ்வும் வாசகர்களுக்கு படிப்பினைகளை தரவல்லது.
முஸ்லிம்களின் எதிரியை தனியாக கொன்ற முதல் பெண் ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் (ரலி), அங்கங்களை இழந்தாலும் பற்றற்று வாழ்ந்த நுஸைபா பின்த் கஅப் (ரலி) பெற்ற பாசம் அன்பு அக்கறை என்பனவற்றையெல்லாம் கடந்து ஈமானிய உறுதிக்கு கட்டுப்பட்ட அஸ்மா பின்த் அபீபக்ரு (ரலி) ஆகியோரின் தியாக வாழ்க்கை வாசகர்களின் மனங்களில் உள்ள அழுக்கை நீக்கி மறுமை வெற்றிக்காக உழைக்கும் எண்ணத்தை உறுதி செய்யும். வித்தியாசமான எளிய இனிய தனித்துவமான நடையழகு நாம் படிப்பது வரலாற்று நூல் எனும் நினைவில் இருந்து நம்மை விடுவித்து சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த புதினம் ஒன்றை வாசிப்பதாக நம்மை கட்டி இழுத்துச் செல்கிறது என்று தமது அணிந்துரையில் பேராசிரியை சயீதா பானு கூறியிருப்பது மிகப் பொருத்தமானது.
உயிருள்ள எழுத்துக்கள்தான் சிறந்த வாழ்க்கைக்கான அழுத்தமான சுவடுகளை ஆழப்பதிக்கின்றன. அவ்வகையில் இன்றைய இளைய தலைமுறையினருக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக நபித் தோழியர்கள் திகழ்ந்திருக்கிறார்கள். சமுதாயத்தின் நேர்மறை மாற்றத்திற்கான இதுபோன்ற ஆதாரபூர்வமான வரலாற்று நூல்கள் முதல் படியாக திகழும் என்றால் அது மிகையல்ல.
‘வீரம் செறிந்த சஹாபிய பெண்மணிகளின் தியாக வரலாறு’ என்ற தலைப்பில் திரு. அரும்பாவூர் தமிழவன் மக்கள் உரிமை (நவம்பர் 22-28, 2019) பத்திரிகையில் எழுதிய விமர்சனம்.
அச்சுப் பிரதியை வாசிக்க க்ளிக்கவும்