எழுத்தாளர் மற்றும் சாஃப்ட்வேர் இன்ஜினியர். அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவரின் தாத்தா தாருல் இஸ்லாம் என்ற பத்திரிக்கையை சுதந்திரத்துக்கு முன்பே நடத்தி வந்தவர். எழுத்தாளர் பரம்பரையில் வந்தவர் இந்த நூருத்தீன்.
இஸ்லாமிய வரலாற்றில் முஹம்மது நபியின் தோழர்களாக இருந்தவர்கள் ‘ஸஹாபாக்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களின் வரலாற்றை சத்தியமார்க்கம்.காம் இணையதளத்தில் தோழர்கள் என்ற பெயரில் தொடராக எழுதி வந்தார். அதன் பின் அவற்றைத் தொகுத்து முதலாம் பாகம், பாகம்-1 என்று இரண்டு பிரசுரங்கள் புத்தகமாக வெளிவந்து பெருமளவில் விற்பனை ஆயின. அனைத்து அத்தியாயங்களையும் ஒன்றாக்கி தற்போது ஒரே தொகுப்பாக வெளியிட்டு உள்ளார்கள்.
அளவில் பெரிதாக இருந்தாலும் படிப்பதற்கு மிக சுவாரஸ்யமாக உள்ளது. பொதுவாக இஸ்லாமிய வரலாறுகளை எழுதுபவர்கள் சீரியசான கோணத்திலே எழுதுவார்கள். ஆகவே படிக்கும் போது ஆங்காங்கே, இடையிடையே சிறிய அயற்சி உண்டாகும். ஆனால் தோழர்களின் ஆசிரியரோ தனது வித்தியாசமான எழுத்து நடையாலும், ஆங்காங்கே மெல்லிதாக தூவப்பட்டிருக்கும் நகைச்சுவைகளாலும் ஆக்கங்களை சுவராஸ்யப்படுத்தி இருப்பார். படிப்பவர்களுக்கு அடுத்த அத்தியாயத்தை படிக்கும் ஆர்வத்தை அது தூண்டும்.
70 நபித்தோழர்களின் வரலாற்றை தொகுத்துள்ளார். முஸ்லிம்கள் மற்றும் அன்றி இஸ்லாமிய வரலாற்றை அறிந்து கொள்ள விரும்பும் முஸ்லிம் அல்லாதவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. 70 தோழர்களின் வரலாற்றை அறிவதன் மூலம் கிட்டதட்ட இஸ்லாமிய வரலாற்றை முழுதும் அறிந்து கொள்ளலாம். நபிகளார் மக்காவில் பட்ட துயரங்கள், மக்காவில் உதவிய தோழர்கள், மதினாவிற்கு இடம் பெயர்வு, அங்கு உதவியவர்கள், போர்கள், போர்க்கள காட்சிகள், அந்த போர்கள் நடந்ததற்கான காரணங்கள், நபிககளின் மறைவிற்கு பின்னான இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் நிகழ்வுகள், உள் சண்டைகள் என்று துல்லியமாக அனைத்து விசயங்களையும் இந்த நூலின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இந்த புதிய பதிப்பை என் சென்னை வீட்டிற்கு ஒன்றும், நண்பன் ரஹீம் கஸ்ஸாலியின் அரசர்குளம் வீட்டிற்கு ஒன்றும், என் தம்பி Ashraf Aliயின் அறந்தாங்கி வீட்டிற்கு ஒன்றும் என 3 அனுப்பினேன். முஸ்லிம் அல்லாத நண்பர்களுக்கு பரிசளிக்க விரும்புபவர்கள் தமிழ் குரான் உடன் இந்த தோழர்கள் புத்தகத்தையும் பரிசளிப்பது மிகப் பயனுள்ளதாக இருக்கும் என்பது என் எண்ணம். இஸ்லாமிய திருமணங்களுக்கும் இதை பரிசளிக்கலாம். இஸ்லாமிய நூலகங்கள் ஒவ்வொன்றிலும் கட்டாயம் இருக்க வேண்டிய புத்தகம் இது.
ஏதாவது ஒரு வேலையில் இருந்து கொண்டு படிக்கவோ அல்லது வேறு வேலைகள் செய்யவோ நேரம் இல்லை என்று கூறும் நம்மைப் போன்ற மக்களுக்கு நூல் ஆசிரியரிடம் நல்ல முன்னுதாரணம் உண்டு. குளிரில் நடு நடுங்க வைக்கும் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் கணினித் துறையில் வேலை பார்த்துக்கொண்டே எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார். நூல்களை எழுதுவது ஒரு சவால் என்றால் அதற்கான தரவுகளை சேகரிப்பது அதைவிட பன்மடங்கு பெரிய வேலை. சரியாக கவனிக்காமல் அல்லது அறியாமையில் நபித் தோழர்கள் குறித்த ஒரே ஒரு தகவலை தவறாகத் தந்தாலும் இஸ்லாமியர்களிடம் இருந்து கடும் விமர்சனங்களை சந்திக்க நேரிடும். ஆனால் அது போன்று எதுவும் இல்லாமல் தனது பணியை கச்சிதமாகச் செய்துள்ளார். நேர மேலாண்மையை கற்க இவரும் ஒரு சிறந்த உதாரணம்.
நூல் வாங்குவதற்கான விபரங்கள் அறிய இங்கு க்ளிக் செய்யவும்.
Iqraவிலும் கிடைக்கும். +91 8220658318 என்ற வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ஆசிரியருக்கு நீண்ட ஆயுளையும், நல்ல உடல் சுகத்தையும் இறைவன் வழங்குவானாக. அவரின் கல்வி ஞானத்தையும், நினைவாற்றலையும் விசாலப் படுத்துவானாக. இன்னும் பல ஆக்கப்பூர்வமான படைப்புகளைத் தர அருள் புரிவானாக. ஆமீன்.
–சிராஜுத்தீன்