சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 58

58. வில்லனின் அறிமுகம்

வன் பெயர் ரேனால்ட். பிரான்சில் உள்ள ஷட்டியோன் என்ற ஊரைச் சேர்ந்தவன். அதனால் வரலாற்றில் அவன் பெயர் ஷட்டியோனின் ரேனால்ட். இயல்பிலேயே இரத்த வேட்கை நிறைந்திருந்த அவனது குறிக்கோள்கள் சுருக்கமான இரண்டு – செல்வம்; ஆட்சி அதிகாரம். அதற்கு வழிவகுக்கும் வகையில் சிலுவைப்போருக்கான அழைப்பு பிரான்சில் ஒலித்ததும் வந்தான்; இணைந்தான்; கிளம்பிவிட்டான்.

சிலுவைப்படையுடன் சேனாதிபதியாக லெவண்த் பகுதிக்கு அவன் வந்து சேர்ந்த 1147ஆம் ஆண்டிலிருந்துதான் அவனது அத்தியாயம் திடுமென்று தொடங்குகிறதே தவிர, அதற்குமுன் சிறப்பான பின்புலம் எதுவும் அவனுக்கு இருக்கவில்லை. அச்சமயம் அவனுக்கு இருபத்துச் சொச்ச வயதே. ஜெருசல ராஜாவின் தலைமையில் அஸ்கலான் முற்றுகை இடப்பட்டதைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோமில்லையா? அவருக்கு உதவியாக வந்து இணைந்த பரங்கியர் படைகளுள் அந்தாக்கியாவின் சேனையும் ஒன்று. அதில் ரேனால்டும் ஒருவன். ராஜா மூன்றாம் பால்ட்வினுடன் அங்குதான் அவனுக்கு அறிமுகம் ஏற்பட்டது. எட்டு மாதக் கால முற்றுகை முடிவுற்று அஸ்கலான் வீழ்வதற்குள், ரேனால்ட் அந்தாக்கியா திரும்பிவிட்டான். அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் அதன் பிறகு அந்தாக்கியாவில் ஏற்பட்ட மாற்றமும் நிகழ்ந்த திருப்பங்களும்தாம் முக்கியம்.

இருபத்திரண்டு வயது விதவை கான்ஸ்டன்ஸ், தம்முடைய மறுமணத்திற்கு ஜெருசல ராஜா பரிந்துரைத்த உயர்குடி வரன்களை எல்லாம் தட்டிக்கழித்து, முடிசூடா ராணியாகத் தம்மிஷ்டத்திற்கு இருந்து வந்தவர் சேனாதிபதி ரேனால்டின் மீது மோகம் கொண்டு விட்டார். அந்தாக்கியாவின் தலைமைப் பாதிரியார் ராடல்ஃபும் மேட்டுக்குடி பிரபலஸ்தர்களும் தங்களது இளவரசி, இலத்தீன் பரங்கியர்களின் மாநிலமான அந்தாக்கியாவின் சக்தி வாய்ந்த பெண்மணி, தம் படையில் பணிபுரியும் சராசரி சேனாதிபதியை, ராஜகுலப் பின்னணி இல்லாத ஒருவனைக் கணவனாக அடைவதை அறவே விரும்பவில்லை. வெறுத்தார்கள்; எதிர்த்தார்கள். நான்காண்டுகள் விதவையாகக் காலத்தைக் கழித்த கான்ஸ்டன்ஸ் அவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு, தமது இருபத்தாறாவது வயதில் ஷட்டியோனின் ரேனால்டைக் கரம் பிடித்தார்; அக்கொடூரன் வரலாற்றில் கால் பதித்தான்.

‘பரங்கியர்களுள் ஆக மோசமானவன், முஸ்லிம்களின் உச்சபட்ச விரோதி, மிகவும் ஆபத்தானவன்’ என்று விவரிக்கிறார் அன்றைய வரலாற்று ஆசிரியர் இப்னுல் அதீர். நாயகன் ஸலாஹுத்தீன் அய்யூபியின் வாழ்க்கை வரலாற்றில் பின்னிப்பிணைந்த கதாபாத்திரம் வில்லன் ரேனால்ட். வீரமிகு ஸலாஹுத்தீன் அய்யூபியின் சிறப்பான பிம்பத்தைக் கொடூரமான இந்த வில்லனின் கரிய பின்னணி மேலும் ஒளிவீசிப் பிரகாசமடையச் செய்தது என்று வர்ணிக்கிறார் சமகால வரலாற்று ஆசிரியர் ஜான் மேன்.

அரேபியர்களோ பரங்கியர்களின் ஒட்டுமொத்தத் தீமைகளுக்கும் ஒற்றை முக அடையாளமாக அவனைக் கருதினார்கள். பைஸாந்தியர்களுக்கோ ரேனால்டின் பெயரைக் கேட்டாலே இரத்தம் கொதித்தது; ஆத்திரத்தில் ரோமங்கள் விறைத்தன என்கிறார் மற்றொரு ஆசிரியர் அமீன் மாலூஃப்.

எதுவுமே மிகையில்லை. மிருகத்தனம், வஞ்சகம், பழி தீர்க்கும் மூர்க்கம், தேவைப்பட்டால் எவ்வித வெட்கமும் இன்றி எதிரியின் காலைப் பிடித்து மன்னிப்புக் கோரி அடுத்த சந்தர்ப்பத்தில் அவனது முதுகில் குத்தும் நயவஞ்சகம்… இவற்றின் உயிர் வடிவம் ரேனால்ட். “அவனை என்னுடைய கைகளால் கொல்வேன்” என்று சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி சபதம் ஏற்குமளவிற்கு வில்லனாகக் கோரத் தாண்டவம் ஆடியவன் அவன்.

அவை யாவும் பின்னர். அன்றைய தேதியில் கான்ஸ்டன்ஸுக்கு அவன் நாயகன். அவனது அழகில் மனத்தைப் பறிகொடுத்தார்; கணவனாக்கிக் கொண்டார்; அந்தாக்கியாவின் அதிபதியாகவும் ஆக்கிவிட்டார்.

oOo

முதலாம் சிலுவைப்போருக்குப் பிறகு அந்தாக்கியா பரங்கியர்களின் தனி மாநிலமாக ஆகிவிட்டபோதும் அதன் ஆட்சியாளர்கள் பைஸாந்தியச் சக்கரவர்த்தியைப் பகிரங்கமாக எதிர்த்ததில்லை. அவருடன் சம்பிரதாயமான கூட்டணி, ஜெருசலத்தில் உள்ள தங்கள் ராஜாவுடன் அன்னியோன்யம், இணக்கம் என்றே அரசியல் நடத்தி வந்தார்கள். ரேனால்டு பட்டத்துக்கு வந்த நேரம், பைஸாந்தியத்தின் சக்கரவர்த்தியாக இருந்த முதலாம் மேனுவெலுக்கு (Manuel I Komnenos) வேறொரு திசையில் முளைத்த பிரச்சினை அவனுடன் பெரும் பகையாகப் போய் முடிந்தது. அதைத் தெள்ளத்தெளிவாகச் சம்பாதித்ததும் அவனே.

தோரஸ் என்ற சிற்றரசன் ஒருவன் இருந்தான். தியோடோர் என்றும் அவனது பெயரை உச்சரிக்கின்றார்கள். பைஸாந்திய அரசுக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்த குடிமக்களிடம் அட்டூழியம் செய்து கொண்டிருந்தான் தோரஸ். வேறென்ன? குடியிருப்புகளில் பாய்வது, கொலை, கொள்ளை, சித்திரவதை. அவனுடைய அராஜகம் சக்கரவர்த்திக்குப் பெரும் சோதனையாகி விட்டது. அவனது கோட்டையான தவ்ரஸ் மலைகளின் இடையே மிக உள்ளுக்குள் இருந்தது. துருக்கியர்களின் ஆட்சிப் பகுதிகள் அதைச் சுற்றியிருந்தன. அதனால் சக்கரவர்த்தி மேனுவெலால் நேரடி நடவடிக்கையில் இறங்க முடியவில்லை. எனவே, அவர் அந்தாக்கியாவின் ரேனால்டிடம் உதவி கேட்டார். ‘அவனை ஒழி; கோட்டையைப் பிடி; சன்மானம் அளிக்கிறேன்’ என்று பேரமும் பேசி முடித்தார். இரத்த வேட்கையும் தங்க தாகமும் நிறைந்த ரேனால்டுக்கு அது கரும்பும் கூலியும் என்றாகி விட்டது. மட்டுமின்றி, இதில் அடையும் வெற்றியை மூலதனமாக்கித் தனது ஆட்சிப் பகுதியை விரிவாக்கலாம் என்றொரு உபதிட்டமும் வகுத்துக்கொண்டான்.

1156ஆம் ஆண்டு, அந்தாக்கியாவின் வடக்கே இருந்த அலெக்ஸான்ட்ரெட்டா பகுதியில் தோரஸும் ரேனால்டும் கடுமையாக மோதிக்கொண்டார்கள். மூர்க்கமான போரின் முடிவில் தோற்றுப்போன தோரஸ், தப்பிப் பிழைத்து, பரந்து விரிந்திருந்த மலைப் பகுதிகளுக்குள் புகுந்து மறைந்துவிட்டான். ‘தொலைந்தான் துஷ்டன்’ என்று பைஸாந்தியச் சக்கரவர்த்திக்குத் தகவல் அனுப்பி, ‘பேசிய தொகையை அனுப்பி வைக்கவும்’ என்றான் ரேனால்ட்.

தோரஸின் கோட்டை கைப்பற்றப்பட வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். அது இன்னும் அப்படியே இருக்கிறது. காரியம் அரைகுறை என்று கூறி, கூலி தர மறுத்தார் மேனுவெல். அவ்வளவுதான். ரேனால்டின் துஷ்ட நரம்பில் சுருதி ஏறியது. ‘நீ என்ன தர மறுப்பது? நான் அதை எப்படிப் பிடுங்குகிறேன் பார்’ என்று வெகுண்டு எழுந்தவன் முதல் காரியமாக தோரஸைத் தேடிப் பிடித்தான். எதிரிக்கு எதிரி நண்பன் என்று இருவரும் கைகுலுக்கி, கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். அடுத்த காரியமாக அவன் கண் பதித்தது சைப்ரஸ் தீவு.

சிரியாவின் மேற்கு எல்லையைத் தாண்டி மத்தியதரைக் கடலில் அமைந்துள்ளது சைப்ரஸ். முதலாம் நூற்றாண்டிலிருந்து ரோமர்களுக்கு அதுதான் கடற்படைத் தளம். சிரியாவில் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு ஆட்சி செலுத்தியபோது, கி.பி. 649 ஆம் ஆண்டு முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்ட சைப்ரஸ் தீவு அடுத்த முந்நூறு ஆண்டுகள் முஸ்லிம்கள் வசம்தான் இருந்தது. பின்னர் 965ஆம் ஆண்டு அது மீண்டும் பைஸாந்தியர்கள் வசம் சென்றுவிட்டது. பைஸாந்தியர்களுக்கு அது பெருமைமிகு ஓர் ஆபரணம். தங்களுடைய பகுதிகளில் எங்கு எத்தகு போர் நிகழ்ந்தாலும் சைப்ரஸுக்கு மட்டும் அதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் அதைப் பொத்திப் பாதுகாத்து வந்தார்கள்.

அடர்ந்த காடுகள் நிரம்பிய தீவு சைப்ரஸ். பழங்களும் செம்பும் அதன் முக்கியமான இயற்கை வளம். கிறிஸ்தவர்களின் பெருமைக்கும் சிறப்புக்கும் உரிய தேவாலயங்களுக்கு அது இருப்பிடம். அதனால் பக்தர்கள் ஏராளமானோர் அங்குக் குடியிருந்தனர். பைஸாந்தியப் படைகள் எப்பொழுதுமே பிற பகுதிகளில் போர்களில் மும்முரமாக இருக்கும் என்பதால், சைப்ரஸுக்கு என்று வலிமையான தற்காப்புப் படை இல்லாமல் இருந்தது. பெரிய அளவிலான அச்சுறுத்தல் எதுவும் அச்சமயம் அத்தீவுக்கு இல்லை என்பதும் அதற்கு ஒரு காரணம். பாதுகாப்பான பிரதேசமாகத் திகழ்ந்து வந்த அந்த சைப்ரஸ் தீவைக் குறிவைத்தான் ரேனால்ட். பழுத்துத் தொங்கும் கனியாய் அது அவனது பேராசைக் கண்களை உறுத்தியது. எளிதில் எட்டலாம்; கவரலாம்; தனதாக்கலாம். ஆனால் தடைக் கல்லாக ஒரே ஒரு பிரச்சினை இருந்தது. பணம்! கடல் தாண்டிப் படையெடுக்கப் பணம்!

அந்தாக்கியாவில் செல்வமும் செல்வாக்கும் நிறைந்த வயது முதிர்ந்த பாதிரியார் ஒருவர் இருந்தார். அவர் பெயர் அமால்ரிக். அமோரி என்றும் சொல்கிறார்கள் (Amalric/Amaury). ரேனால்ட் அவரை அணுகி, ‘ஐயா! நான் பைஸாந்திய சக்கரவர்த்தியைப் பழிவாங்க வேண்டும்; அவரிடமிருந்து சைப்ரஸைப் பிடுங்க வேண்டும்; அதற்குப் பணம் வேண்டும்; பெட்டகத்தைத் திறந்து அள்ளித்தாருங்கள்’ என்று கேட்டதும் அதிர்ந்து போன அவர் மறுத்துவிட்டார். கான்ஸ்டன்ஸ் அவனைத் திருமணம் செய்துகொண்டதையே விரும்பாதவர்கள் பாதிரியார்களும் மற்றவர்களும். அவனது நடவடிக்கைகளும் அவர்களின் நல்லபிப்ராயத்திற்கு உகந்ததாக இருந்ததில்லை. அதே நேரத்தில், பைஸாந்திய சக்கரவர்த்தியுடன் அவர்களுக்குச் சில பல கருத்து வேற்றுமைகள் இருந்தன என்பது நிஜம். ஆயினும் அவருடன் போர் – அதுவும் இந்த ரேனால்டின் தலைமையில் போர் என்பது அவர்கள் கெட்ட கனவாகக்கூடக் காண விரும்பாத ஒன்று. உதட்டைப் பிதுக்கி கைவிரித்துவிட்டார் பாதிரியார் அமால்ரிக்.

பணம் தரவில்லை என்ற காரணத்துக்காகத்தானே மகாகனம் பொருந்திய பைஸாந்தியச் சக்கரவர்த்தியை எதிர்த்துப் படையெடுப்பு? அத்தகுத் துணிச்சல் நிறைந்தவனிடம் உள்நாட்டு பாதிரியார் பணம் தரவில்லை என்றால் என்ன செய்வான்? அவர் எதிர்பாராததைச் செய்தான்.

அவரைக் கைது செய்து, நிர்வாணமாக்கி, அடித்துத் துவைத்தான். கடுமையான வெயில் காலம் அது. இரத்தம் வழிந்த அவரது காயங்களுக்குத் தேன் பூசி மெழுகி, கொளுத்தும் வெயிலில் தூக்கிப் போட்டுக் காய விட்டான். குளவிகளும் ஈக்களும் இரத்தம் உறிஞ்சும் பூச்சிகளும் அவரது உடல் முழுவதும் மொய்த்துவிட்டன; கொட்டித் தீர்த்தன. அதற்குமேல் சித்திரவதையைப் பொறுக்க முடியாமல் பாதிரியார் தமது கஜானாவை அவனுக்குத் திறந்துவிட்டார். போதும் இவன் இருக்கும் ஊரில் என் பிழைப்பு என்று ஜெருசலத்திற்கு ஓடிவிட்டார். இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட ஜெருசல ராஜாவேகூட ஆடிப்போய், ரேனால்டைத் திட்டி இருக்கிறார். அதெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டா என்ன?

படையைத் திரட்டிக்கொண்டு, தோரஸையும் அவனது படையையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு கப்பல் ஏறி சைப்ரஸ் சென்று இறங்கினான் ரேனால்ட். எதிர்பார்த்தது போலவே சைப்ரஸ் சுருண்டு விழுந்தது. தீவு தனதானதும் அத்துடன் விட்டிருக்கலாம் இல்லையா? மாறாக, அதற்கடுத்துத்தான் ஆரம்பமானது அவனது ஆட்டம். அவனது பிற்கால நடவடிக்கைகளுக்கான முன்னோட்டம். தம் படையினரை அவன் கட்டவிழ்த்துவிட, பேரிரைச்சலுடன் பாய்ந்தார்கள் அவர்கள். துவம்சமானது சைப்ரஸ். அரண்மனைகளும் மாளிகைகளும் கோட்டைகளும் ஊரிலிருந்த அனைத்தும் உடைத்துச் சிதைக்கப்பட்டன. தேவாலயங்களும் கன்னியாஸ்திரிகளின் மாடங்களும்கூட விலக்கின்றிப் பாதிப்புக்குள்ளாயின. புனிதம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் அங்கும் புகுந்து கொள்ளையடித்தது மட்டுமின்றிக் கன்னியாஸ்திரிகளையும் அக்கொடூரர்கள் வன்புணர்ந்த அக்கிரமம் அவர்களுடைய பேயாட்டத்தின் உச்சம். தங்கம், வெள்ளி எல்லாம் மூட்டை மூட்டையாகக் கட்டப்பட்டன. வயல்களும் பயிர்களும் தீயில் கருகி, சாம்பலானது விவசாயம். பிராணிகளெல்லாம் கண்டதுண்டமாக வெட்டப்பட்டன. வறியவர்கள் தலைகள் இழந்து முண்டமாயினர். முதியவர்களும் சிறுவயதுப் பிள்ளைகளும் படுகொலை செய்யப்பட்டனர்.

அடுத்து அங்கிருந்த கிரேக்க பாதிரியார்களையும் துறவிகளையும் ஓரிடத்தில் ஒன்று திரட்டினான் ரேனால்ட். அவர்கள் அனைவரின் மூக்கையும் அறுத்து எறிந்துவிட்டு, சிதைந்த அம்முகங்களுடன் அவர்களை கான்ஸ்டண்டினோபிளுக்கு சக்கரவர்த்தியிடம் அனுப்பி வைத்தான். மூன்று வார காலம் ஆடித் தீர்த்துக் களைத்த பின், கொள்ளைப் பொருள்களின் மூட்டைப் பொதிகளைக் கப்பலில் ஏற்றிக்கொண்டு, செல்வந்தர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்துக்கொண்டு அந்தாக்கியா திரும்பினான் ரேனால்ட். வெந்து தணிந்தது சைப்ரஸ்.

அந்தப் பேரழிவிலிருந்து மீள சைப்ரஸுக்குப் பல தலைமுறை காலம் ஆனது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

வந்து சேர்ந்த தகவல்களும் மூக்கறுபட்ட பாதிரிகளின் வருகையும் பைஸாந்திய சக்கரவர்த்திக்கு எத்தகு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கும்?முகம், கரம், புஜம் எல்லாம் துடித்திருக்குமா இல்லையா? தமது பெருமைக்கும் ஆளுமைக்கும் சவாலாக அமைந்துவிட்ட இந்த அக்கிரமத்தை எதிர்த்து , தகுந்த எதிர்வினை ஆற்றாவிட்டால் அவரது ராஜாங்கத்துக்கே இழுக்கு அல்லவா? பைஸாந்தியத்திலிருந்து பிரம்மாண்ட சேனை ஒன்று புறப்பட்டது. அந்த ரேனால்டைத் தண்டித்து நசுக்கி ஒழிக்க அந்தாக்கியாவை நோக்கி அணிவகுத்தது. அதன் அருகே பாடி இறங்கியது.

இத்தகவலை அறிந்ததுமே தோரஸ் தப்பி ஓடி ஒளிந்தான். ஆனால் ரேனால்ட்? அதுதான் திருப்பம்

அந்தாக்கியாவின் பதவியை உதறிவிட்டு ஓட முடியுமா? செல்வத்தையும் செல்வாக்கையும் இழந்துவிட்டுத்தான் வாழ முடியுமா? அதற்காக பைஸாந்திய சேனையை எதிர்த்துப் போரிடுவது என்றால் அது நடக்கிற காரியமா? எனவே ஒரு முடிவெடுத்தான். அது வியப்புக்கும் ஏளனத்துக்கும் உரிய திட்டம். அதனால் என்ன? காரியம் ஆக வேண்டுமென்றால் கழுதையின் காலையே பிடிக்கலாம் எனும்போது இவரோ மகா சக்கரவர்த்தி. என்ன குறைந்துவிடப் போகிறது?

தனது ஆடை, ஆபரணங்களைக் களைந்துவிட்டு, யாசகனைப் போல் உடை உடுத்திக்கொண்டு, வெற்றுக்காலுடன் தவழாத குறையாகக் குறுகி நடந்து, சக்கரவர்த்தி மேனுவெல் வீற்றிருந்த கூடாரத்திற்குள் நுழைந்தவன் அவரது காலில் அப்படியே நெடுஞ்சாண்கிடையாகப் புழுதியில் விழுந்தான். அலெப்போவிலிருந்து வந்திருந்த நூருத்தீனின் தூதுவர்கள் அச்சமயம் அங்குச் சக்கரவர்த்தியுடன் அமர்ந்திருந்தனர். நிகழ்ந்தவற்றின் நேரடி சாட்சியாக அவர்கள் அனைத்தையும் குறித்து வைத்துள்ளனர். வந்தவனை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காமல், கவனித்தும் கவனிக்காமல், சக்கரவர்த்தி அப்படியே அவனைக் கிடக்க விட்டார். எதுவுமே நடவாததுபோல், வெகு அமைதியாகத் தம்முடைய விருந்தினர்களிடம் தமது உரையாடலைத் தொடர்ந்தார். நெடு நேரம் கழிந்தது. அதுவரை ரேனால்டும் அசையவில்லை; எழவில்லை. அப்படியே கிடந்தான். ஆளுமைக்கும் நயவஞ்சகத்திற்கும் இடையே அங்கு மௌன யுத்தம் நடந்தது.

இறுதியில் ஒருவாறாக, சக்கரவர்த்தி மமதையுடன் ரேனால்டைப் பார்த்து, கேவலப்படுத்தும் வகையில் அலட்சிய சமிக்ஞை செய்த பிறகுதான் அவன் எழுந்தான். அவன் எதிர்பார்த்து வந்தது நடந்தது. உயிர்ப் பிச்சை அளிக்கிறேன்; பிழைத்துப் போ; இனி மேலாவது அடங்கி ஒடுங்கி இரு என்பதைப்போல் மேனுவெல் ரேனால்டை மன்னித்தார். அப்படியே ஆகட்டும் எசமான் என்று பல வாக்குறுதிகளை அளித்தான் அவன். ‘கைப்பற்றிய கோட்டைகளை எல்லாம் திருப்பித் தந்துவிடுகிறேன்; தங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் சேவைக்கு எனது படையினர் உதவிக்கு ஓடோடி வருவர்; இனி அந்தாக்கியாவில் கிரேக்க பாதிரியாரைத் தலைமைப் பாதிரியாக நியமிப்பேன்’ என்று அவர் கேட்டதும் கேட்காததும் என்று அனைத்து நிபந்தனைகளுக்கும் ஒத்துக்கொண்டான்.

பேரணியைப் போல் தம் படை அணிவகுத்து வர, அந்தாக்கியாவினுள் நுழைந்தார் சக்கரவர்த்தி மேனுவெல். மிகவும் அடக்க ஒடுக்கத்துடன் ஒரு பணியாளனைப் போல் அவரது குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு வந்தான் ரேனால்ட். தமது ஆளுமையை அந்தாக்கியாவில் பறைசாற்றி விட்டு, கான்ஸ்டண்டினோபிள் திரும்பினார் சக்கரவர்த்தி.

oOo

ஓராண்டு கழிந்திருக்கும். வாளும் போருமாக இருப்பவனுக்கு அமைதியாகவே இருப்பது ஒத்து வருமோ? அதைக் கலைப்பதற்காக ரேனால்டிடம் சிலர் வந்தார்கள்; தகவலொன்றைத் தெரிவித்தார்கள்.

‘கிளம்பி 150 கி.மீ. வடக்குப் பக்கம் வா. அங்கு விவசாயக் குடும்பங்கள் கொழுத்த மந்தைகளுடன் வசிக்கிறார்கள். பாதுகாப்போ வலிமையோ இல்லாதவர்கள்; தலையில் தட்டி எளிதில் பிடுங்கலாம்’ என்றதும் ரேனால்டின் கை துறுதுறுத்தது. அந்த உழவர்கள் கிறிஸ்தவ சமுதாயத்தினர் என்பதும் அவர்கள் அளித்த தகவல். சைப்ரஸில் கன்னியாஸ்திரிகளின் மானத்தைப் பறித்தவனுக்கு, சுயமதத்தினர் என்பது சலுகைச் சீட்டா என்ன? தன் படையிலிருந்து சிறு குழுவைத் திரட்டினான். சென்றான்; தாக்கினான்; கொள்ளையடித்தான்.

அந்த மேய்ச்சல் நிலங்கள் செல்ஜூக்கியர்களின் எல்லைப் பகுதியிலிருந்தவை. அவனை அங்கு வரவழைத்தவர்கள் அவனுக்கு வைத்திருந்தது ஒரு பொறி. ரேனால்டு வந்ததையும் கொள்ளையடித்துத் திரும்புவதையும் அலெப்போவில் நூருத்தீனின் ஆளுநரிடம் அவர்கள் வந்து தெளிவாகத் தெரிவித்துவிட்டார்கள். துரிதமாகச் செயல்பட்டார் அவர். ரேனால்டும் அவன் குழுவும் திரும்பும் வழியில் தாக்குவதற்குப் பதுங்கியிருந்தது அலெப்போவின் படைக்குழு.

இந்த விஷயம் ரேனால்டுக்கு எப்படியோ கசிந்து விட்டது. அவர்களுடன் சண்டையிடுவதா, தப்பித்து ஓடுவதா என்று தன் படையினருடன் ஆலோசித்தான். கொள்ளையடித்த ஆடு, மாடு, ஒட்டகங்களை விட்டுவிட்டு ஓட்டாண்டியாய் ஊர் திரும்புவதை ரேனால்ட் விரும்பவில்லை. எதிர்ப்போம் என்று முடிவானது. சண்டையிட்டார்கள். அவர்களை வெகு எளிதாகத் தாக்கி வென்றது அலெப்போவின் படை. ரேனால்டும் அவனுடன் வந்தவர்கள் முப்பது பேரும் கைதானார்கள். அனைவரும் முக்கியஸ்தர்கள்; பெருந்தலைகள். பார்த்தார் அலெப்போ ஆளுநர். தேவைப்படும் போது பரங்கியர்களுடன் அரசியல் பேரம் பேச, பணயத் தொகையாகப் பெரும் பணம் ஈட்ட அவர்கள் பயன்படுவார்கள் என்று முடிவெடுத்து அவர்களின் தலைகளைக் கொய்யாமல் பத்திரமாக அலெப்போவிற்கு அவர்களைக் கட்டி இழுத்து வந்து சிறைக் கொட்டடியில் அடைத்தார்.

பணயத் தொகை வரும்; விடுவிக்கப்படுவோம் என்றுதான் ரேனால்ட் நம்பியிருந்தான். ஆனால், அவனால் துன்புறுத்தப்பட்டு ஜெருசலத்திற்கு ஓடிப்போனாரே பாதிரியார் அமோரே, அவர் திரும்பி வந்து அந்தாக்கியாவின் தலைமை பாதிரியாகி, நிர்வாகத்தைத் பார்த்துக்கொண்டு, அலெப்போவிலேயே கிடந்து மடியட்டும் துஷ்டன் என்று விட்டுவிட்டார்.

அங்கேயே அவன் மரணமடைந்திருக்கலாம். அல்லது நூருத்தீன் அவனுக்கு மரண தண்டனை விதித்திருக்கலாம். இரண்டுமே நடக்கவில்லை. பின்னர் பதினாறு ஆண்டுகள் கழித்து, அமைச்சர் குமுஷ்திஜின் என்பவர், சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபியிடமிருந்து தம்மைக் காப்பாற்றிய பரங்கியர்களுக்கு நன்றியுதவியாய் ரேனால்டை விடுவிக்க, கட்டப்பட்டிருந்த சாத்தான் வெளிக் கிளம்பி வந்தது. சுல்தான் ஸலாஹுத்தீனுக்கும் முஸ்லிம்களுக்கும் தொல்லைகளின் உச்சமாக ஆகிப் போனது அது.

அந்தப் பதினாறு ஆண்டுகளுக்கு முன் நாம் காண வேண்டியவை நிறைய உள்ளன என்பதால் நாம் மீண்டும் நூருத்தீனிடம் திரும்புவோம். அடுத்து நாம் எகிப்துக்குப் பயணிக்க வேண்டி இருக்கிறது.

oOo

(தொடரும்)

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் 8 டிசம்பர் 2022 வெளியானது


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment