எழுபது அத்தியாயங்கள், ஆயிரத்து அறுபத்தி நான்கு பக்கங்கள், துவக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான தமிழ் நடை, இடைஇடையே ‘உச்சுக் கொட்ட’ வைத்தும், உடலை சிலிர்க்க வைத்தும், கண்ணீரை சிந்த வைத்ததுமாய்ப் பல தருணங்கள். எட்டு ஆண்டுகால உழைப்பை மொத்தமாக உள்வாங்கிய ஆத்ம திருப்தி…
‘கொஞ்சம் நில்லுங்க.. ஏன் இத்தன பீடிகை, என்னேன்னு சொல்லுங்க பாஸ்’ என்பது தானே உங்க கேள்வி?
தோழர்கள் என்ற புத்தகம் படித்து நிறைவு செய்திருக்கும் இந்த நேரத்தில், ஏதாவது நாலு வார்த்தை அது பத்தி சொல்லனுமே… அதான் நாலு வரி எழுதலாம்னு நினைச்சேன்.
ஒரு புத்தகத்தை முழுசா படித்து முடிக்கும் முன்பே ‘இதையும் படிச்சறலாமே’ன்னு வேற ஒரு புத்தகத்தை கையில் எடுப்பது என்னோட கெட்ட பழக்கம். (அதனாலயே பல புத்தகங்கள் படிச்சும், படிக்காமலும் அரைகுறையா அலமாரில இருப்பது தனிக்கதை). ஆனால் கடந்த ஒரு மாதமாக தோழர்கள் என்னை, இல்ல இல்ல ‘அவர்களை’ நான் விடவே இல்லை.
ஒரு புத்தகத்தின் ஏதாவது சில பக்கங்கள் அல்லது ஒன்னு ரெண்டு வரிகள் நம்முள் புகுந்து ஏதோ செய்துவிடும். தோழர்கள் மொத்த புத்தகமும் படிப்பவர்களை என்னென்னவோ செய்துவிடும். காரணம் அது ‘புனிதர்களின் அற்புத வரலாறு!’
வரலாறு என்றாலே ‘செம்ம போர்’ என்று நினைப்பவர்கள் கையில் எடுத்தாலும் திகட்டாத பேரின்பத்தை தருகிறது தோழர்கள். காரணம் அது ‘புனிதர்களின் அற்புத வரலாறு!’
பொதுவாக சாதனையாளர்களின் வாழ்வை, வரலாற்றை வாசிக்கும் போது ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தரலாம். ஆனால் தோழர்கள் இலக்கை சுட்டிக்காட்டி, இறைநம்பிக்கையைக் கூட்டித் தருகிறது. காரணம் அது ‘புனிதர்களின் அற்புத வரலாறு!’
தெவிட்டாத தேன் தமிழ், படித்து பரவசமடையும் விதத்தில் நடை, கைகளைப் பிடித்து, காலாற நடமாடிக் கொண்டே இருவர் உரையாடுவது போல் தோழர்களின் வரலாற்றை எடுத்துக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் சகோதரர் நூருத்தீன் ஸாஹிப்.
பொதுவாகவே வரலாறு என்றாலே ஏதோ சலிப்பூட்டும் ஒன்று என்ற தவறான கருத்திலிருந்து முதலில் நாம் வெளியே வரவேண்டும். உண்மை வரலாற்றைத் தேடிப் படிக்கும் போது தான், ‘நாம் யார்? நமது பெருமைகள் என்ன? நமது பலம் எத்தகையது? நமது முன்னோர்களின் தியாகங்கள் எவ்வளவு உன்னதமானவை’ என்பதைப் புரிய முடியும்.
அந்த வகையில் நூலாசிரியர் தோழர்களின் வரலாற்றை விரிவாகவும் விறுவிறுப்பாகவும் தந்திருக்கிறார். தோழர்கள் வாசிப்பின் ஊடாக ஸஹாபாக்கள் வாழ்ந்த அந்த காலத்திற்கே அழைத்துச் சென்றுவிடுகிறார் நூலாசிரியர்.
நூலாசிரியர் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தந்திருந்தாலும் அவருடைய ‘மாஸ்டர் பீஸ்’ தோழர்கள் என்று நான் கருதுகிறேன். ஆங்காங்கே தோழர்களின் வாழ்வை விவரிக்கும் போது நம்முடைய எதார்த்த நிலையை ஒரிரு வரிகளில் நறுக்கென்று சொல்லியிருப்பது, உள்ளபடியே ஒரு நிமிடம் யோசிக்க வைப்பதோடு, நம்மையே விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து நிறுத்துகிறது.
பிலால் (ரலி) நபிகள் நாயகத்தின் முஅத்தின், ‘அஹதுன் அஹதுன்‘ என்ற முழக்கத்தால் மக்கத்துத் தலைவர்களின் தூக்கத்தைக் கலைத்தவர் என்பதைத் தாண்டி, ஜனாதிபதி அபூபக்கர் (ரலி) சிரியாவில் நடைபெற்று வந்த போர்களத்திற்குத் துணை ராணுவப் படையை அனுப்பி வைத்த நேரம், “பிலால்! நீங்கள் எம்மோடு மதீனாவில் இருந்து கொள்ளுங்கள்” என்ற போது தாமும் போர்க்களத்திற்குப் போக வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை பிலால் (ரலி) அவர்களின் வாழ்வின் வீரதீரமான மறுபக்கமாக, தத்ரூபமாகக் காட்டுகிறார் ஆசிரியர்.
ஜனாதிபதி உமரின் (ரலி) ஆற்றல் மிக்க ஆட்சியின் வரலாற்றுத் துணுக்குகளைப் பக்கத்திற்கு பக்கம் என்று சொல்லும் அளவுக்கு அநேக தோழர்களின் வரலாற்றிலும் சொல்லி இருப்பது உள்ளபடியே புருவங்களை உயர்த்தச் செய்கிறது. மொத்தத்தில்–
தோழர்கள் இறை நம்பிக்கையை மேம்படுத்தும் குறியீடு.
படித்து, பாதுகாத்து, சமூகத்தின் உள்ளங்களுக்குக் கடத்த வேண்டிய அற்புத வரலாற்றுக் களஞ்சியம் தோழர்கள்.
வாசிக்கும் தலைமுறையை வார்த்தெடுக்க, உன்னத ஸஹாபாக்களின் வாழ்வின் மூலம் சமகால சிக்கல்களுக்குத் தீர்வு காண தோழர்கள் மிகச் சிறந்த உதவியையும், பலனையும் தரும் என்று நான் நம்புகிறேன்.
வல்ல அல்லாஹ்விடம் நூலாசிரியரின் சேவைகள் அங்கீகாரம் பெற துஆ செய்வோம்.
-A.S.ஸதக்கத்துல்லாஹ் பாகவி (கல்லிடைக்குறிச்சி)
இமாம்: மஸ்ஜிதே ரஹீமா, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம்.
தோழர்கள் – புனிதர்களின் அற்புத வரலாறு
விலை : Rs. 1800
பக்கங்கள்: 1070
நூல் கிடைக்குமிடம்:
சீர்மை Seermai
New No 280, Old No 238/2, 2nd Floor,
Quaide Millath Road, Triplicane, Chennai-600005
Email: seermainoolveli@gmail.com
Phone: 0091-8072123326
Website: www.seermai.com