மொழிமின் விமர்சனம் – அனீஃப்

by admin

ங்கு முகநூலில் நடக்கும் சண்டை சச்சரவுகளைக் கண்டு கொதித்தெழுந்து, “இந்த ஃபேஸ் புக் ரொம்ப மோசம் பா… இங்க வந்துதான் எனக்கு நிம்மதி போச்சு… சமூக ஒற்றுமை போச்சு…” என்று யாராவது அளவுக்கதிகமாக பொங்கினால், மனதுக்குள் அவர்கள் அறியாமையைக் கண்டு சிரித்துக் கொள்வேன்.

‘கருத்துருவாக்கம்’ என்பது இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் மிக முக்கியமான ஒன்று. கருத்துகளை அரசின் ஊடகமும் பண முதலைகளின் பத்திரிகைகளும் மட்டுமே உருவாக்க முடியும் என்ற நிலையை மாற்றி, கைப்பேசி வழியே ஒவ்வொரு தனி மனிதனும் கருத்தை முன்வைக்கவும் விவாதிக்கவும் பரப்பவும் முடியும் என்ற உன்னத நிலையை சமூக ஊடகங்கள் உருவாக்கி இருக்கின்றன.

அப்படிப் பதியப்படுகின்ற சாமானியர்களின் கருத்துகள் சில நேரம் சச்சரவுகளைக் கிளப்பும்போது, அது சமூக சிக்கலாகப் பார்க்கப் படுகிறது. ஆனால், சமூக ஊடகத்தின் வயதைக் கருத்தில் கொண்டால் இந்தச் சமூக சிக்கல்கள் அதன் பதின் பருவ பிரச்சினைகள் மட்டுமே. கால ஓட்டமும் நல்ல வழிகாட்டலும் சமூக ஊடகத்தை மேலும் சீர்தூக்கும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.

எனது நம்பிக்கைக்கு ஊக்கம் தரும் தூரத்து விண்மீனாக மின்னுகிறது எழுத்தாளர் நூருத்தீன் அவர்களின் “மொழிமின்”.

சமூக ஊடகத்தின் குற்றம் குறைகளை மட்டும் சொல்லி குட்டு வைக்காமல். திரைகளுக்குப் பின்னாலும் இருக்கும் மனிதர்களுக்கு, அவர்கள் கையில் இருக்கும் ஊடக உன்னதத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று பாடம் எடுக்கிறார் நூருத்தீன்.

பாடம் என்றதுமே போர் அடிக்குமோ என்று நினைத்துவிடாதீர்கள். ஃபேஸ்புக்கை scroll செய்தால் ஓடுவது போன்ற தங்கு தடையற்ற வசீகர எழுத்து நடை, உங்கள் வாசிப்பை வேகமூட்டும்.

எதைப் பேச வேண்டும்? எப்படிப் பேச வேண்டும்? எதைத் தவிர்க்க வேண்டும்? எது கூடவே கூடாது? என்ற கேள்விகளுக்கு நச் விடைதான் இந்த புத்தகம்.

புத்தகத்தைப் படித்து முடிக்கும் போது உரையாடலின் ஒழுக்கத்தையும் வார்த்தைகளின் வலிமையையும் நிச்சயம் உணர்ந்து கொள்வீர்கள்.

40 பக்கங்கள் என்ற அளவு குறையாகத் தோன்றினாலும் அடிக்கடி வாசிக்க வேண்டிய கையேடு என்பதால் எழுத்தாளர் சுருக்கிக்கொண்டு இருக்கலாம்.

சமூக ஊடகத்தில் கம்பு சுற்றுபவர்கள் மட்டுமல்லாது வாய் இருக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய மிக முக்கியமான நூல் “மொழிமின்”.

பயில்வோம்.! மொழிவோம்!

-சே. ச. அனீஃப் முஸ்லிமின்

Related Articles

Leave a Comment