அன்புச் சகோதரர் நூருத்தீன் அவர்கள் எழுதிய எழுபது நபித்தோழர்களின் வரலாறு குறித்த ஒற்றைத் தொகுப்பான தோழர்கள் – புனிதர்களின் அற்புத வரலாறு வெளிவந்து வேகமாக விற்பனையாகி வருகிறது.
தமிழில் நபித்தோழர்கள் குறித்து இப்படி ஒரு பெரிய தொகுப்பு இதுவரையும் வெளி வரவில்லையே என்கிற ஏக்கம் எனக்கு இருந்தது. உடல்நலக் குறைவால் இந்தப் பெரும் பணியை நம்மால் ஆற்றிட முடியவில்லை என்றாலும் வேறு எவராயினும் இப்பணியைச் செய்து முடித்தால் நன்றாயிருக்குமே என்று நான் நினைப்பதுண்டு!
எனென்றால், முழு மனித சமுதாயத்திற்கும் முன்மாதிரியான சமுதாயம் நபித் தோழர்களின் சமுதாயம்தான் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்! அத்தகைய சிறப்புமிகு சமுதாயத்தினரான நபித்தோழர்களின் வாழ்க்கை எவ்வாறிருந்தது என்பது நாம் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய ஒன்றாகும்.
நபித்தோழர்களின் வாழ்க்கை குறித்த இந்த அறிவைப் பெறுவது நேர்வழி எது என்று புரிந்து கொள்வதற்கு முழு மனித குலத்திற்கே அவசியமானதாகும். இஸ்லாமிய அழைப்புப் பணி ரீதியாகவும் நபித் தோழர்களை முன்மாதிரியாகக் கொண்டு தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்வதற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் மிகவும் அவசியமாகும்.
இந்த அம்சங்களைக் கருத்தில் கொண்டால், நபித்தோழர்களின் வரலாறு எத்தகைய பாரிய முக்கியத்துவம் கொண்டது என்பதை நம்மால் உணர முடியும்.
இத்தகைய அரும்பணியைத்தான் சகோதரர் நூருத்தீன் அவர்கள் மேற்குலகில் மிகுந்த பணிச் சுமைகளுக்கிடையே வாழ்ந்தபடி ஆற்றியுள்ளார். அதுவும் பேரறிஞர்கள் பலர் ஆங்கிலத்தில் எழுதிய ஆதாரப்பூர்வமான நூல்கள் பலவற்றையும் இன்னும் சிலபல அரபு மூல நூல்களையும் துணையாகக் கொண்டு அழகிய நடையில் எழுதியுள்ளார்.
தாருல் இஸ்லாம் இதழின் ஆசிரியராகப் பணியாற்றி பல பதின்மங்களுக்கு முன்பே தமிழகத்தில் திருக்குர்ஆனை தமிழாக்கம் செய்து தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சுதந்திரப் போராட்ட வீரரும் முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களையே தனது வாசகராகக் கொணடிருந்தவருமான பா. தாவூத்ஷா அவர்களின் பேரரான நூருத்தீன் அவர்களுக்கு அழகிய தமிழில் எழுதக் கற்றுத் தரவா வேண்டும்? மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுத்தரத் தேவையில்லையே!
உள்ளத்தை அள்ளிச் செல்லும் வகையில் அழகு தமிழ்நடையில் இந்த நபித்தோழர்கள் வரலாற்றை அவர் எழுதி ஒரு வரலாற்று சாதனை புரிந்துள்ளார்!
மார்க்க அறிஞர்கள் நிறைந்த நம் தமிழகத்தில் என் ஆசிரியர் கண்ணியமிக்க சையித் முஹம்மத் அன்வாரீ ஃபாஸில் பாகவி அவர்கள் எழுதி முப்பத்தைந்தாண்டுகளுக்கு முன்பாக IFT இஸ்லாமிய நிறுவனம் வெளியிட்ட நபித்தோழர்கள் வரலாறு மற்றும் மஸ்தான் அலீ பாகவி அவர்கள் எழுதி அதே நிறுவனம் வெளியிட்ட ‘நபித் தோழியர் வரலாறு’ ஆகிய நூல்கள் தவிர இந்த மிக முக்கியமான கருப் பொருளில் குறிப்பிடத்தக்க வேறு நூல்கள் ஏதும் இல்லை என்கிற பெருங்குறையைப் போக்கும் விதத்தில் ஹழ்ரத் சயீத் பின் ஆமிர் (ரலி) அவர்களிலிருந்து ஹழ்ரத் பிலால் பின் ரபாஹ் (ரலி) அவர்கள் வரை எழுபது சஹாபாக்களின் வரலாற்றைத் துடிதுடிப்பான நடையில் உயிரோவியமாக வரைந்துள்ளார் நூருத்தீன்!
இஸ்லாமிய வரலாற்றின் முன்மாதிரி சமுதாயத்தின் மிக முக்கிய நபித்தோழர்கள் அனைவரின் திருவாழ்வையும் விறுவிறுப்பான நடையில் சுவைபடப் பதிவுசெய்துள்ளார் அவர்!
நபித்தோழர்கள் பாடிய அரபுக் கவிதைகளை வெறும் உரைநடையில் தமிழாக்கம் செய்துவிடாமல் அவற்றை இனிய தமிழில் மரபுக்கவிதைகளாகவே உயிரோட்டத்துடன் மொழிமாற்றம் செய்திருப்பது பாராட்டுக்குரியது!
இந்நூலில் நபித்தோழர்களின் உறுதி மிளிரும் இறைநம்பிக்கை, இறைவழியில் துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் பண்பு, நிலைகுலையாத் தன்மை, தியாக உணர்வு, வீரம், இறைத்தூதர் மீதான அவர்களின் நிகர்காணமுடியாத அன்பு, இறைவனுக்கும் இறைத் தூதருக்கும் முற்றிலுமாகக் கீழப்படியும் குணம் ஆகிய அனைத்தும் நெஞ்சை ஈர்க்கும் விதத்தில் சொல்லப்பட்டுள்ளன!
இந்நூலை எழில்மிகு வடிவில் 1070 பக்கங்களில் வயது வித்தியாசமின்றி எவரும் வாசிக்கக் கூடிய அழகிய பெரிய எழுத்தில் அச்சிட்டிருப்பதோடு, பெருநூலாக இருப்பினும் நேர்த்தியாக பைண்டிங் செய்து நல்ல காகிதத்தில் அழகுற வெளியிட்டுள்ள சீர்மை பதிப்பகத்தார் நமது மனமார்ந்த வாழ்த்துக்குரியவர்கள்!
இந்நூலுக்குப் பொதுவாக தோழர்கள் என்று பெயர் சூட்டியிருப்பதை விட ‘நபித்தோழர்கள்’ என்று பெயர் சூட்டியிருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.
இப்படி நான் கருதிடக் காரணம் நபித்தோழர்கள் என்னும் பெயரைப் பார்த்தே கருப்பொருளை சட்டெனப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்; மேலும் இப்பெயர் நம் உள்ளத்திற்கு நெருக்கமானது என்பதால் சட்டென நம்மை ஈர்த்துக் கொள்ளும் என்பதாகும்.
இந்த அரிய நூலை பொதுவாக தமிழ் கூறும் நல்லுலகம் சாதிமத பேதங்களின்றி வாசித்துப் பயனடைய வேண்டுகின்றேன். குறிப்பாக, முஸ்லிம்கள் தம் வாழ்வை இறைவனோடும் இறைத்தூதரோடும் பிணைத்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதி இந்நூலை வாங்கி மிகுந்த ஆர்வத்துடனும் கவனத்துடனும் வாசித்துப் பயனடைய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்!
தோழர்கள் – புனிதர்களின் அற்புத வரலாறு என்னும் பெயர் கொண்ட , 1070 பக்கங்கள் கொண்ட இந்த ஹார்ட் பௌண்ட் Hard Bound நூலின் விலை ரூ. 1800 ஆகும். ஒவ்வொரு தோழரின் அற்புத வரலாற்றையும் முப்பது ரூபாய்க்கும் குறைவான விலையில் வாசிக்கும் வாய்ப்பைத் தவறவிட வேண்டாம் என்றும் உங்கள் முஸ்லிமல்லாத நண்பர்களுக்கும் முஸ்லிம் நிறுவனங்கள், அரபிக் கல்லூரிகள், முஸ்லிம்களின் பிற கல்வி நிறுவனங்கள், மக்தபுகள், மத்ரஸாக்கள், மற்ற பொது வாசகசாலைகள் அனைத்தின் நூலகங்களிலும் இந்த அரிய நூலை இடம்பெறச்செய்து ஆக்கபூர்வமான, தூய்மைமிக்க சமூக அமைப்புக்கு வித்திட உதவுங்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
நூலின் பெயர்: தோழர்கள்- புனிதர்களின் அற்புத வரலாறு
விலை : Rs. 1800
பக்கங்கள்: 1070
நூல் கிடைக்குமிடம்:
சீர்மை Seermai
New No 280, Old No 238/2, 2nd Floor,
Quaide Millath Road, Triplicane, Chennai-600005
Email: seermainoolveli@gmail.com
Phone: 0091-8072123326
Website: www.seermai.com
-காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி