தீயோருக்கு அஞ்சாதே

முஸ்தபா குடும்பத்தினர் இருக்கும் தெரு அன்று பரபரப்புடன் இருந்தது. போலீஸ்காரர்கள் வந்திருந்தனர். மக்கள் கூட்டம் கூட்டமாய் நின்று பேசிக்கொண்டிருந்தனர். சிலர் செல்ஃபோனில் படம் பிடித்துக்

கொண்டிருந்தனர். மாலை முஸ்தபா வீட்டிற்கு வந்ததும் அப்துல் கரீம் அவரிடம் ஓட்டமாய் ஓடினான்.

“அத்தா! நம்ம பக்கத்து வீட்டுல என்ன நடந்துச்சு தெரியுமா?”

கரீமின் உம்மா மதியமே தம் கணவருக்குப் ஃபோன் செய்து தகவல் தெரிவித்திருந்தார். இருந்தாலும் ஒன்றும் தெரியாததுபோல், “என்னாச்சு?” என்று விசாரித்தார் முஸ்தபா.

“மைமூன் பாட்டி இருக்காங்களே, அவங்க வீட்டில் தனியா இருந்திருக்காங்க. தன் ரூமில் தனியா தூங்கிட்டு இருந்திருக்காங்க. அப்போ பால்கனி வழியா ஒரு திருடன் நுழைஞ்சுட்டானாம்.”

“அல்லாஹ்வே! அப்புறம்?”

“பெட்ரூமில் அவன் பீரோவை உடைக்கும்போது மைமூன் பாட்டிக்கு சப்தம் கேட்டிருக்கு. வீட்டில் நடப்பதற்கு மெட்டல் வாக்கிங் ஸ்டிக் வெச்சிருக்காங்களே, அதை எடுத்துட்டுப்போய் அந்தத் திருடன் மண்டையில் ஸ்ட்ராங்கா அடிச்சிருக்காங்க. அவன் ரத்தம் வந்து மயங்கிட்டான். பிறகு ‘திருடன் திருடன்’ என்று கத்தியதும் எல்லோரும் ஓடிப்போய் அவனைப் பிடிச்சு, கட்டிப்போட்டுட்டாங்க. அப்புறம் போலீஸ்லாம் வந்துடுச்சு அத்தா.”

மைமூன் பாட்டி மிகவும் வயதானவர். சரியாக நடக்க முடியாததால் ஊன்றுகோல் உதவியுடன்தான் வீட்டில் நடப்பார். அதனால் ஸாலிஹா மிகவும் கவலையுடன், “அத்தா! உடனே சப்தம் போடாமல் மைமூன் பாட்டி இப்படி செஞ்சுட்டாங்களே. அவங்க வீக்கான லேடியாச்சே. அந்தத் திருடன் அவர்களை ஏதாச்சும் பண்ணியிருந்தால் என்னாவது?” என்று கேட்டாள்.

அன்பாக மகளைப் பார்த்தார் முஸ்தஃபா. “ஆணோ, பெண்ணோ பொதுவா நாம கெட்டவர்களிடம் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் நமக்கும் நம்முடைய குடும்பத்துக்கும் உயிருக்கும் உடைமைகளுக்கும் ஆபத்து வந்துவிட்டால் தற்காப்புக்காக நாம உடனே ஏதாவது நடவடிக்கை எடுக்கலாம். எடுக்கத்தான் வேண்டும்.”

பிள்ளைகள் தந்தையை ஆச்சரியமுடன் பார்த்தார்கள். “ஒரு நிகழ்ச்சி சொல்கிறேன் கேளுங்கள். மதீனாவுக்கு ஒருமுறை எதிரிகள் போர் புரிய வந்துவிட்டார்கள். அந்தப் போரின் பெயர் அகழ் போர். முஸ்லிம் பெண்களையும் பிள்ளைகளையும் உயரமான ஒரு கோட்டையில் பத்திரமாக இருக்கும்படி ரஸூலுல்லாஹ் அனுப்பிவிட்டார்கள். பிறகு முஸ்லிம் வீரர்களுடன் போர்களத்திற்குச் சென்றுவிட்டார்கள். அந்தக் கோட்டைக்குச் சென்ற பெண்களுடன் ஸஃபிய்யா (ரலி) என்ற பெண்மணியும் இருந்தார்கள்.”

“ஸஃபிய்யா யார் அத்தா?” என்று கேட்டான் கரீம்.

“நபி (ஸல்) அவர்களின் அத்தைதான் ஸஃபிய்யா. என் அக்கா, உங்கள் ரமீஜா மாமி இருக்காங்களே அதைப்போல் அவர்கள் ரஸூலுல்லாஹ்வுக்கு உறவு. ஆண்கள் களத்திற்குச் சென்றதும் பெண்களுக்குப் பாதுகாவலாய் ஆண்கள் யாரும் கோட்டையில் இருக்க மாட்டார்கள் என்று எதிரிகளான யூதர்களுக்குத் தெரிந்துவிட்டது. அதனால் அந்தக் கோட்டைக்குள் சென்று வேவு பார்க்க சிலரை அவர்கள் அனுப்பிவிட்டனர்.”

தந்தை சொல்வதை அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய் குழந்தைகள் கேட்டுக்கொண்டிருந்தனர்.

“அதிகாலை நேரம் அந்த எதிரிகள் பதுங்கிப் பதுங்கிச் சென்று கொண்டிருப்பதை ஸஃபிய்யா (ரலி) கவனித்துவிட்டார்கள். பெண்கள் பாதுகாவல் இன்றி இங்கிருப்பதை இந்த ஒற்றன் தெரிவித்துவிட்டால் ஆபத்தாச்சே! எதிரிகள் திரண்டுவந்து நம்மைத் தாக்கி அடிமைப்படுத்தி விடுவார்களே என்று அவர்களுக்கு அச்சமும் கவலையும் ஏற்பட்டுவிட்டது.“

“அதானே. ஸஃபிய்யா (ரலி) என்ன செய்தார்கள்?” என்று கேட்டான் கரீம்.

“அவர்கள் உடனே, தம் மேலாடையை இறுகக் கட்டிக்கொண்டார்கள். இடுப்பு ஆடை விலகாமல் இருக்க அதை வாரால் பலமாய்க் கட்டிக்கொண்டார்கள். நீண்ட தடிமனான வேல்கம்பு ஒன்றை எடுத்துக்கொண்டு கதவின் பின்புறம் மறைந்து நின்றுகொண்டார்கள்.

எதிரி நெருங்கி வந்ததும் மின்னல் வேகத்தில் ஒரு பாய்ச்சல் பாய்ந்தார்கள். தமது அத்தனை பலத்துடனும் அந்த யூதனின் மண்டையில் ஒரே போடாய்ப் போட்டார்கள். அவன் தரையில் சரிந்து விழுந்தான். அடுத்து சரமாரியாக தன் ஆயுதத்தால் அவனைக் குத்தினார்கள். தனியாக இருக்கும் பெண்களுக்குத் தீங்கு புரிய வந்த எதிரி என்பதால் அவனைக் கொன்றே விட்டார்கள். அது தெரிந்ததும் அவன் உடன் வந்திருந்த அவன் நண்பர்கள் அனைவரும் உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடியே போய்விட்டார்கள்.”

“வாவ்! பிரேவ் லேடி” என்று உற்சாகமாகக் கூறினாள் ஸாலிஹா.

“அதனால்தான் நாம் ஆண், பெண் என்று பார்க்காமல் நமக்கான தற்காப்புக்கு உரிய பலத்துடனும் விவேகத்துடனும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான், பக்கத்து வீட்டிற்கு வந்த திருடனைப்போல் எதிர்பாராத ஆபத்து ஏற்படும்போது, உடனே போலீஸின் உதவி பிறரின் உதவி கிடைக்காதபோது, நம்மைத் தற்காத்துக்கொள்ள முடியும்” என்றார் முஸ்தபா.

“சொல்வதோடு நிறுத்திவிடாதீர்கள். பிள்ளைகளை செல்ஃப் டிஃபென்ஸ் வகுப்புகளில் சேர்த்துவிடுங்கள்” என்றார் ஸாலிஹாவின் தாயார். ஆமோதித்துச் சிரித்தார் முஸ்தபா.

-நூருத்தீன்

புதிய விடியல் – பிப்ரவரி 16-28, 2019

அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்

<–முந்தைய அத்தியாயம்–>  <–அடுத்த அத்தியாயம்–>

<–நூல் முகப்பு–>

 


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment