முஸ்தபா அலுவல் முடிந்து மாலை வீட்டிற்கு வரும்போது பிள்ளைகள் ஸலாம் சொல்லி ஓடிவந்து கட்டிக்கொள்வார்கள். ஒருநாள் மாலை, அப்துல் கரீம் மட்டும்தான் எப்பொழுதும் போல் ஓடிவந்தான். ஸாலிஹா வரவில்லை. கேள்விக்குறியுடன் தம்
மனைவியைப் பார்த்தார் முஸ்தபா. ஸாலிஹா ரூமில் ஹோம்வொர்க் செய்து கொண்டிருப்பதாகக் கூறினார் அவர். ஆச்சரியத்துடன் தம் ரூமிற்குச் சென்று கை, கால் கழுவி ஆடை மாற்றிக்கொண்டு ஹாலில் வந்து அமர்ந்தபோதும் ஸாலிஹா ரூமிலிருந்து வரவில்லை.
மனைவி கொடுத்த டீயைக் குடித்துவிட்டு ஸாலிஹாவின் ரூமிற்குச் சென்றார் முஸ்தபா. வாடிய முகத்துடன் ஹோம்வொர்க் நோட் புக்கையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் ஸாலிஹா.
“அஸ்ஸலாமு அலைக்கும் ஸாலிஹா” என்றார் முஸ்தபா.
“வஅலைக்கும் ஸலாம் டாடி” என்று பதில் அளித்த ஸாலிஹாவின் முகத்தில் சோர்வு.
ஒருவேளை உடல்நலம் சரியில்லையோ என்ற கவலையுடன் அவளது நெற்றி, கழுத்தில் கைவைத்துப் பார்த்தார். நார்மலாகவே இருந்தது.
“செல்லத்துக்கு என்னாச்சு? டயர்டா?” என்று விசாரித்தார்.
“இல்லை டாடி. இந்த காம்போஸிஷனை முடிக்க வேண்டும். நாளைக்குக் காலையில் டீச்சர் கேட்பாங்க. நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. நிறையப் படிச்சுட்டு எழுத வேண்டும். இன்னும் இரண்டு நாளாவது எனக்கு டைம் வேண்டும்” என்று வாட்டமுடன் பதில் அளித்தாள் ஸாலிஹா.
“அவ்வளவு வேலை இருக்கிற காம்போஸிஷனை இன்னிக்குக் கொடுத்துட்டு நாளைக்கு ஏன் கேட்கிறாங்க?”
“இந்த ஹோம்வொர்க்கை அவங்க போன வாரமே கொடுத்துட்டாங்க.”
“ஓ! அப்ப நீதான் லேட்டா ஆரம்பிச்சியா?”
“ஆமாம் டாடி! எனக்கு இது ஈஸியாக இருக்கும்னு அப்போ நினைச்சேன். அதனால அப்புறமா செஞ்சுக்கலாம்னு இருந்தேன். இடையில் ரமீஜா மாமி வந்திருந்தாங்க இல்லியா. அதுல வேற டைம் போயிடுச்சு. அப்புறம் செய்யலாம், அப்புறம் செய்யலாம் என்று தள்ளிப்போட்டு இப்போ மாட்டிக்கிட்டேன்.”
முந்தைய வார இறுதியில் முஸ்தபாவின் சகோதரி ரமீஜா தம் இரு பிள்ளைகளுடன் வந்து இரண்டு நாள் தங்கிவிட்டுச் சென்றார். அச்சமயம் நான்கு வால்களும் சேர்ந்துகொண்டு வீடே அமர்க்களப்பட்டது. யோசனையுடன் மகளைப் பார்த்தார் முஸ்தபா.
“முக்கியமான வேலைகளைக் கடைசி நேரம் வரை தள்ளிப்போடக் கூடாது. சரி போகட்டும். இன்னிக்குள் ஹோம்வொர்க் முடியாது என்றால் நாளை டீச்சரிடம் சொல்லி டைம் கேட்டுக்கோ ஸாலிஹா.”
“அதான் பயமா இருக்கு டாடி. அந்த டீச்சர் ரொம்ப ஸ்ட்ரிக்ட். எனக்கு உடம்பு சரியில்லை, அதனால் எக்ஸ்ட்ரா டைம் வேண்டும் என்று லெட்டர் எழுதித் தாங்க டாடி.”
“அப்படி பொய் சொல்லக் கூடாது ஸாலிஹா. உடனே செய்யாமல் லேட்டாகிடுச்சு என்று உண்மையைச் சொல்லி, டைம் கேளு. அநேகமா அவங்க தருவாங்க. முக்கியமா அல்லாஹ்விடம் துஆ கேட்டு ஹோம்வொர்க்கை ஆரம்பி. அல்லாஹ் இலேசாக்குவான்” என்று மகளுக்கு ஆறுதல் சொன்னார் முஸ்தபா.
அடுத்த நாள் அலுவலக வேலையாக முஸ்தபா மூன்று நாள் வெளியூர் செல்லும்படி இருந்தது. பயணம் முடிந்து வீட்டிற்குள் நுழையும்போதே பிள்ளைகள் இருவரும் வழக்கம்போல் ஓடிவந்து அத்தாவைக் கட்டிக்கொண்டனர். ஸாலிஹா முகத்தில் வாட்டம் களைந்து சிரிப்பு, மகிழ்ச்சி.
“டாடி! நான் ஹோம்வொர்க் எழுதி சப்மிட் பண்ணிட்டேன்” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினாள்.
“அன்னிக்கு நைட்டேவா?”
“இல்லை டாடி. நீங்கள் சொன்னதைப்போல் மறுநாள் டீச்சரிடம் டைம் கேட்க நினைத்திருந்தேனா, ஆனால் டீச்சர் வரவில்லை. அவங்களுக்கு உடம்பு சரியில்லை என்று இரண்டு நாள் லீவ் போட்டுவிட்டார்கள். அந்த இரண்டு நாளில் எழுதி முடிச்சு இன்று விட்டேன்” என்றாள்.
“வெரிகுட்” என்று பாராட்டிவிட்டுப் பயணக் களைப்பு நீங்க குளித்துவிட்டு, அவர் உணவு மேசைக்கு வந்தபோது அனைவரும் தயாராகக் காத்திருந்தனர். அதன்பின் ஓய்வாக அமர்ந்தபோது பிள்ளைகள் அவரின் இரு தொடையில் தலைவைத்துப் படுத்துக்கொண்டனர்.
“ஸாலிஹா! எதையும் கடைசி நேரம் வரை தள்ளிப்போடக் கூடாது. அப்படி ஒரு முக்கியமான வேலையைத் தள்ளிப்போட்டு, சஹாபி ஒருவர் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக நேர்ந்த செய்தி தெரியுமா?” என்று கேட்டார்.
“தெரியாது” என்றாள் ஸாலிஹா. அத்தா கதை சொல்லப் போகிறார் என்று தெரிந்துகொண்டு எழுந்து அவரது முகத்தைப் பார்த்தபடி ஆவலுடன் அமர்ந்துகொண்டான் கரீம்.
“ரஸூலுல்லாஹ் (ஸல்) ரோமர்களுடன் போர்புரிய தபூக் என்ற ஊருக்கு படையெடுத்துச் செல்ல திட்டமிட்டார்கள். அந்த ஊர் மதீனாவிலிருந்து ரொம்பத் தூரம்.”
“எவ்வளவு தூரம் டாடி?” என்று கேட்டான் கரீம்.
“பல நூறு கி.மீ. தூரம். பல நாள் பயணம். தவிர, அது கடுமையான வெயில் காலம். மிகவும் கஷ்டமான பயணம். நிறைய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதனால் முற்கூட்டியே சஹாபாக்களிடம் தம்முடைய திட்டத்தை முஹம்மது நபி சொல்லி விட்டார்கள். எல்லோரும் ரெடியாக ஆரம்பித்தார்கள்.”
“ரெடி ஆவது என்றால் என்ன செய்வார்கள்?” என்று கேட்டாள் ஸாலிஹா.
“பயணத்திற்கு குதிரை ஒட்டகம் ரெடி செய்வது, செலவுக்குப் பணம், தேவையான உணவு, எதிரிகளுடன் போர் புரிய ஆயுதம் என்று நிறைய ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு சில நாள்களாவது தேவைப்படும். அதனால்தான் ரஸூலுல்லாஹ் முன்னாடியே சொல்லிவிட்டார்கள். கஅப் இப்னு மாலிக் (ரலி) என்ற சஹாபாவிடம் பணம், பயணத்திற்குத் தேவையான ஒட்டகம் போன்றவை இருந்தன. அதனால் பிறகு ரெடியாகலாம், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று அவர் ரெடியாகாமல் நாளைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார்.
கடைசியில் அவர் தயாராகமல் போனதால் முஸ்லிம்களின் படை புறப்பட்டுச் சென்றுவிட்டது. அவர் மதீனாவில் தங்கிவிட்டார். அதன் பிறகுதான் அவருக்கு தம்முடைய தவறு புரிந்தது. நபியவர்கள் பேச்சை மீறி பாவம் புரிந்துவிட்டோம் என்று புரிந்தது.”
“அப்புறம் என்னாச்சு டாடி?” என்று கேட்டாள் ஸாலிஹா.
“படையெடுப்பு முடிந்து ரஸூலுல்லாஹ் திரும்பி வந்ததும் தம்முடைய தவறை மறைத்துப் பொய் சொல்லாமல் தன்னுடைய சோம்பலையும் அதனால் கிளம்ப முடியாததையும் சொல்லிவிட்டார் கஅப். அல்லாஹ்வுக்கு மாற்றமான செயலாக அது ஆகிவிட்டதால் ரஸூலுல்லாஹ் எதவும் பதில் சொல்லாமல் அதை அல்லாஹ்விடம் விட்டுவிட்டார்கள். அல்லாஹ் தீர்ப்பு அளிக்கும்வரை மற்றவர்களும் கஅபிடம் பேசக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.
“கஅபுக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. தாம் ஒதுக்கி விடப்பட்டோம் என்று மிகவும் துன்பப்பட்டார். ஐம்பது நாள் கழிந்தது. அதன் பிறகு அல்லாஹ் குர்ஆன் வசனத்தை இறக்கி அவருக்கு மன்னிப்பு வழங்கிய பிறகுதான் நிலைமை சகஜமானது. முக்கியமான விஷயத்தை தள்ளிப்போட கூடாது என்பதற்கு உதாரணமாக நிலைத்துவிட்ட சம்பவம் அது.”
பிள்ளைகள் புரிந்துகொண்டு தலையை ஆட்டும்போது உள்ளே கிச்சனிலிருந்து ஸாலிஹாவின் அம்மா பேசினார். “ஏங்க! இந்த கிரைண்டர் ரெண்டு வாரமா சரியா ஓடாமல் மக்கர் பண்ணுது. நானும் சொல்லிட்டே இருக்கேன். நாளைக்கு நீங்க ரிப்பேர் செய்ய ஆளை கூட்டிட்டு வரலைன்னா இனிமே இட்லி, தோசையே கிடையாது. தினமும் பிரட்தான்.”
“ஓக்கே! ஓக்கே! தள்ளிப்போடாமல் நாளைக்கு முதல் வேலை அதுதான்” என்று முஸ்தபா பதட்டமாகப் பதில் அளிக்க, பிள்ளைகளும் அவர்களின் அம்மாவும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.
-நூருத்தீன்
புதிய விடியல் – ஏப்ரல் 16-30, 2019
அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்
<–முந்தைய அத்தியாயம்–> <–அடுத்த அத்தியாயம்–>
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License