அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி

முஸ்தபாவுடன் சேர்ந்து நோன்பு திறப்பதற்காக பள்ளிவாசலுக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தான் அப்துல் கரீம். நுழையும்போதே, “அம்மா! இன்னிக்கு என்னென்ன தந்தாங்க தெரியுமா?

நிறைய இருந்துச்சு” என்று மகிழ்ச்சியுடன் கத்திக்கொண்டே கிச்சனுக்குள் ஓடினான்.

“என்னென்ன இருந்துச்சு?” என்று ஆவலுடன் கேட்டாள் ஸாலிஹா. சிரிப்புடன் அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே தம் காரியத்தில் மும்முரமாக இருந்தார் கரீமின் அம்மா.

“கஞ்சி, ரோஸ் மில்க், சமூசா, வடை, முட்டை போண்டா, வாழைப்பழம் எல்லாம் தந்தாங்க.”

“நாங்களும் இங்கே கஞ்சி, ஜுஸ் சமூசா சாப்பிட்டோம், தெரியுமா?” என்றாள் ஸாலிஹா.

“சரி, சரி, சீக்கிரம் டேபிளுக்கு வாங்க. உணவு ரெடி” என்று குரல் கொடுத்தார் அவர்களின் அம்மா.

அதற்குள் டிரஸ் மாற்றிக்கொண்டு டேபிளுக்கு வந்தார் முஸ்தபா. “இங்கே என்ன நடக்குது?” என்று கேட்டார்.

“உங்க பிள்ளைங்க இன்னிக்கு நோன்பு திறந்த ஐட்டத்தை பட்டியல் போட்டுட்டு இருக்காங்க” என்று சிரித்துக்கொண்டே பதில் அளித்தார் ஸாலிஹாவின் அம்மா.

இரவு உணவு சூடாக டேபிளில் வைக்கப்பட்டு, அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். “ஹை! எனக்குப் பிடிச்ச பட்டர் சிக்கன்” என்று குதூகலித்தாள் ஸாலிஹா.

எல்லோரும் சாப்பிட ஆரம்பிக்க, “நீ பிஸ்மில்லாஹ் சொல்லாம சாப்பிட ஆரம்பிச்சுட்டே” என்று ஸாலிஹாவிடம் கூறினான் கரீம்.

சற்று யோசித்த ஸாலிஹா, “இல்லே. நான் சொல்லிட்டேன்” என்றாள்.

“இல்லே. நான் பார்த்தேன். உனக்குப் பிடிச்ச பட்டர் சிக்கன் என்ற ஆசையில் மறந்துட்டே” என்றான் கரீம்.

“பிஸ்மில்லாஹ் சொல்லாமல் உண்ண ஆரம்பித்தால் அதை ஷைத்தான் சாப்பிட்டு விடுவான் தெரியுமா?” என்று கேட்டார் அவர்களின் அம்மா.

அதைக் கேட்டு ஸாலிஹாவின் முகத்தில் இலேசான அச்சம் தெரிந்தது. “அப்படி மறந்துட்டா, உடனே பிஸ்மில்லாஹி அவ்வலஹூ வ ஆஃகிரஹூ என்று சொல்லிவிட்டால் போதும்” என்றார் முஸ்தபா. ஸாலிஹா அதை முணுமுணுத்தாள்.

“நாம் எந்த வேலையைச் செய்வதாக இருந்தாலும் பிஸ்மில்லாஹ் என்று சொல்லி அல்லாஹ்வின் பெயரால்தான் ஆரம்பிக்க வேண்டும். அப்படி வாய்விட்டு பிஸ்மில்லாஹ் சொல்லியதைக் கேட்டே ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு முஸ்லிமாகிவிட்டார் தெரியுமா?” என்று கேட்டார் முஸ்தபா.

பிள்ளைகள் தெரியாது என்று தலை ஆட்டினார்கள். அவர்களின் அம்மா கேள்விக் குறியுடன் முஸ்தபாவைப் பார்த்தார்.

“என்ன? உனக்கும் தெரியாதா? எல்லாம் உனக்குத் தெரிந்த நிகழ்ச்சிதான்” என்றார் முஸ்தபா.

“அத்தா! அதை எங்களுக்குச் சொல்லுங்க” என்றாள் ஸாலிஹா.

“மக்காவிலிருந்து கொஞ்சம் தூரத்தில் இருக்கும் தாயிஃப் என்ற ஊருக்கு நபி (ஸல்) போனார்கள். அங்குள்ள மக்களிடம் அல்லாஹ்வைப் பற்றிச் சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளச் சொன்னார்கள். ஆனால் அங்கிருந்த மக்கள் மக்காவில் இருந்த குரைஷிகளைவிட மோசமானவர்களாக இருந்தார்கள்.” முஸ்தபா சொல்ல ஆரம்பித்ததுமே, “இப்போ நினைவுக்கு வந்துடுச்சு” என்று சிரித்தார் கரீமின் அம்மா.

“மோசமானவர்கள்னா… அப்படி என்ன செஞ்சாங்க?” என்று கேட்டான் கரீம்.

“ரஸூலுல்லாஹ் சொன்னது பிடிக்கவில்லை என்றால் ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பியிருக்கலாம் இல்லையா? ஆனால், சிறுவர்கள், பெரியவர்கள் என்று ஊர் மக்கள் வரிசையாக நின்று கல்லால் நபியவர்களைத் தாக்கினார்கள். அது அவர்களின் கால்களைத் தாக்கி, பெயர்த்து ஏகப்பட்ட இரத்தம் வெளியேறியது. வலி அதிகமாகி அவர்களால் நடக்கவே முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டார்கள்.”

“அப்புறம் என்னாச்சு?” சாப்பிடுவதை நிறுத்திவிட்டுக் கேட்டாள் ஸாலிஹா.

“சாப்பிடு சொல்றேன்” என்று தொடர்ந்தார் முஸ்தபா. “மெதுமெதுவாக நடந்து, அங்கே இருந்த ஒரு பழத் தோட்டத்திற்குள் சென்று நபி (ஸல்) உட்கார்ந்து கொண்டார்கள். அந்த தோட்டத்தின் முதலாளி ஏதோ இரக்கப்பட்டு, தன்னுடைய அடிமையைக் கூப்பிட்டு, கொஞ்சம் திராட்சைப் பழக்கொத்துகளைக் கொடுத்து, இதை அவரிடம் கொடு என்று அனுப்பி வைத்தான். அந்த அடிமையின் பெயர் அத்தாஸ். அவர் கிறிஸ்தவர்.”

“அவர் நபியவர்களிடம் வந்து பழத்தைக் கொடுத்தார். அதை வாங்கி ‘பிஸ்மில்லாஹ்’ என்று சொல்லி ரஸூலுல்லாஹ் சாப்பிடுவதை ஆச்சரியத்துடன் பார்த்தார் அத்தாஸ். அதற்கு என்ன அர்த்தம் என்று அவர் விசாரிக்க, நாங்கள் எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் சாப்பிட ஆரம்பித்தாலும் ‘பிஸ்மில்லாஹ்’ என்று அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித்தான் தொடங்குவோம் என்று நபி (ஸல்) சொன்னார்கள். அத்தாஸ் மேலும் விவரங்கள் கேட்டு, இஸ்லாத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு, அங்கேயே அப்போதே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.”

“ஒரு ஊரே துரத்தி அடிச்சிருக்கு. ஆனால் எதிர்பாராமல் ஒருத்தர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாரா?” என்று ஆச்சரியப்பட்டாள் ஸாலிஹா.

“ஆமாம். நமக்கு கற்றுத் தரப்பட்டிருக்கும் ஒவ்வொரு துஆவிற்கும் பின்னால் பெரும் அர்த்தமிருக்கு. முஸ்லிமான நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் எல்லோரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் நாம் எந்த விஷயத்தையும் சின்னது, பெரிசு என்று ஒதுக்காமல் நம்மால் முடிந்த அளவு செய்து வந்தால் நமக்கும் பலன் இருக்கு. நம்மை கவனிக்கும் பிறருக்கும் அதில் பலன் இருக்கு.” என்று சொல்லி முடித்தார் முஸ்தபா.

“அல்ஹம்துலில்லாஹ்” என்றாள் ஸாலிஹா. “அல்ஹம்துலில்லாஹ்” என்றான் கரீம்.

-நூருத்தீன்

புதிய விடியல் – மே 16-31, 2019

அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்

<–முந்தைய அத்தியாயம்–>  <–அடுத்த அத்தியாயம்–>

<–நூல் முகப்பு–>

 


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment