காலியாகக் கிடந்த மனைக்கு அன்று திடீரென்று எழில் தொற்றியது. கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு, மண்வெட்டியும் கடப்பாரையும் அரிவாளுமாகப் பத்து பேர் இரைந்து பேசிக்கொண்டு இயங்கிக்கொண்டிருந்தார்கள்.

மண்டிக் கிடந்த புதரும் முள்களும் வெட்டிச் சாய்க்கப்பட்டு மாட்டு வண்டியில் லோடு ஏறின. கரை வேட்டியும் வெள்ளைச் சட்டையுமாய் இரண்டு பேர் அந்த வேலையாட்களைப் பரபரவென்று வேலை ஏவியபடி நின்றிருந்தார்கள்.

“தலைவர் வர்றதுக்குள்ளே ரெடியாக வேண்டும். மாரிமுத்து மசமசன்னு அங்கே என்ன பேச்சு?”

வியர்வையை வழித்துபடி, “சுருக்கால முடிஞ்சிடுங்க” என்றான் மாரிமுத்து.

ஒரு மணி நேரத்தில் வெள்ளை ஹோண்டா காரில் வந்தார் பரந்தாமன். ஏவலிட்டபடி நின்றிருந்த இருவரும் பவ்யமாக ஓடிவந்து கதவைத் திறந்தனர். “இதோ எல்லாம் முடிஞ்சுடுச்சு ஐயா” என்றான் ஒருவன் முந்திக்கொண்டு.

கூலிங்கிளாஸைக் கழற்றாமல் மனையைப் பார்வையிட்டார் பரந்தாமன். என்றோ, யாரிடமோ அவருடைய தகப்பனார் எழுதி வாங்கியிருந்த மனை. வட்டிக்குக் கடன்பட்டவனின் முதலுக்கும் வட்டிக்குமாய்ச் சேர்த்து பறிமுதல் செய்யப்பட்டிருந்தது அது. ஊரெங்கும் இப்படி அவருக்குப் பல மனைகள், வீடுகள், வயல்கள். ஆளும்கட்சியின் முக்கியப் பதவியில் இருந்தபடி பல்லாண்டு காலமாய் ஆட்டம் போட்டுச் சேர்த்ததை எல்லாம் அப்படியே போட்டுவிட்டு ஒரு கார் விபத்தில் போய்ச் சேர்ந்தார் பரந்தாமனின் தந்தை. அவரின் ஒரே வாரிசான பரந்தாமனுக்கு அந்த மொத்தச் சொத்தும் வந்துசேர, அப்படியே கட்சியில் தந்தைக்கு இருந்த பதவியையும் தனதாக்கிக்கொண்டார்.

மெயின்ரோட்டை ஒட்டியிருந்த இந்த மனையில் கட்சிக்கும் தமது நடவடிக்கைகளுக்கும் தோதாய் பெரிதாய் ஒரு ஆபீஸ் கட்ட வேண்டும் என்று பரந்தாமனுக்கு நெடுநாளாய் ஓர் ஆசை. அதற்கு ஏற்றார்போல் அவருடைய சோதிட நண்பன் ஒருவன், “பரந்தாமா! அந்த மனையின் ராசி, உன்னை எட்டாத உயரத்துக்குத் தூக்கிட்டுப் போயிடும். எண்ணி அஞ்சு வருஷத்திற்குள் நீ மந்திரியாகலேன்னா என்னை ஊரைவிட்டுத் துரத்திடு” என்று போட்ட தூபம் வேலை செய்ய ஆரம்பித்தது.

நாக்கில் சுரந்த நீரை மேல் துண்டால் துடைத்தபடி உடனே அந்த மனையைச் சுத்தம் செய்ய உத்தரவுபோட, வேலை மளமளவென்று நடைபெற ஆரம்பித்துவிட்டது. காரை விட்டு இறங்கி மனையைச் சுற்றிப் பார்த்தார் பரந்தாமன். எப்படியும் இரண்டாயிரத்து நானூறு சதுர அடி இருக்கும். இடது புறமும் பின் புறமும் முள்வேலி தடுப்புக்கு அப்பால் தென்னந்தோப்புகள். வலது புறத்தின் முன் பகுதியில் வீடு. பின்புறம் மரங்கள் அடர்ந்த தரிசு நிலம். அந்த வீட்டை ஒட்டியிருந்த சுவர் இவரது மனையையும் அந்த வீட்டையும் பிரித்தது. சுவருக்கும் வீட்டிற்கும் இடையே செடிகொடிகள் அடர்ந்த சிறு சந்து.

அந்தச் சுவரை மட்டும் தட்டிவிட்டால் அந்த சந்தும் சேர்ந்து தம் கட்டடத்தின் முன்பகுதி விசாலமாக அமையுமே என்று தோன்றியது பரந்தாமனுக்கு. யோசனையுடன் நின்றிருக்கும்போது வீட்டிலிருந்து வெளியே வந்தார் ஷம்சுத்தீன்.

“அட அஸரத் நீங்களா? உங்க வீடா?” என்றார் பரந்தாமன். ஷம்சுத்தீன் அந்த ஊர் பள்ளிவாசலின் தலைமை இமாம். மக்களிடம் மதம் கடந்த நேசம் கொண்ட பிறவி. அதனால் ஊரில் அனைவரிடமும் அவருக்கு நல்ல பெயர். நன்மதிப்பு.

“இது என் அக்காள் வீடு. உங்களுக்குத்தான் அந்த செய்தி தெரியுமே. இப்ப அவங்க மகன் மட்டும்தான் இருக்கான். டவுன் காலேஜில் படிக்கிறான். நான்தான் பார்த்துக்கிறேன். மனையைச் சுத்தம் பண்றாப்ல இருக்கே. என்ன விசேஷம்?”

உரிமையாளர்கள் என்று பெரியவர்கள் இல்லாத வீடு அது என்பது பரந்தாமனின் குறுக்கு புத்திக்குள் மின்சாரம் பாய்ச்சியது. “நமக்கு ஆபீஸ் போடனும்னு ரொம்ப நாளா எண்ணம். இப்பத்தான் கைகூடி வந்திருக்கு. வேலையை ஆரம்பிச்சிருக்கேன். சந்தும் சுவரும்கூட உங்க வீட்டோடு சேர்ந்தது தானா?”

“ஆமாம். மச்சான் சஊதியில் இருக்கும்போது இந்த இடத்தை வாங்கி வீடு கட்ட ஆரம்பிச்சார். விஸா முடிஞ்சு ஊர் திரும்பும்படி ஆனதால, அப்போ இருந்த காசை வெச்சு முக்கால்வாசி வீட்டை கட்டி, மிச்ச இடத்தை அப்படியே விட்டுட்டார். பின்னால் அவர் மகன் தலையெடுத்து விரிவாக்கிக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான். என்ன செய்ய? எல்லாம் அல்லாஹ்வின் நாட்டம்.”

முகவாயைச் சொறிந்தபடி நின்றிருந்த பரந்தாமன், “ஹஸரத். அந்த சுவரைத் தட்டிட்டு சந்து அளவுக்கு நம் ஆபீஸின் முகப்பை விரிவாக்கிக்கொண்டால் நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்” என்று சர்வ சாதாரணமாகச் சொன்னதும் இமாமின் இதயம் நொறுங்கிப் போனது.

பரந்தாமன் ‘நினைக்கிறேன்’ என்று சொன்னால், அது பேச்சுக்குத்தானே தவிர, பதிலையோ, ஒப்புதலையோ எதிர்நோக்கி அல்ல என்பது அவருக்கும் தெரியும். ஊருக்கும் தெரியும். சனநாயக நாட்டில் ஓர் ஊரில் ஆளுமை செலுத்துவதற்கு, கட்டப் பஞ்சாயத்துப் புரிவதற்குத் தேவையான அத்தனையையும் கொண்டிருந்த பரந்தாமனை எதிர்ப்பது சாத்தியமே இல்லை என்பது அந்த ஊரில் அனைவருக்கும் தெரியும்.

“ஐயா! அப்படி எதுவும் செஞ்சுடாதீங்க. அவனுக்கு வேறு எந்தச் சொத்தும் இல்லை, பணமும் இல்லை. அவனுடைய அத்தா, அம்மா விட்டுட்டுப் போனதெல்லாம் அவங்க சேர்த்து வெச்ச இந்தக் குருவிக்கூடு மட்டும்தான். மாஷா அல்லாஹ், உங்க மனைதான் விசாலமாக் கிடக்கே. அல்லாஹ் அதில் பரக்கத் செய்வான்.”

அமைதியாக அவரைப் பார்த்தபடி நின்றிருந்தார் பரந்தாமன். பிறகு, “கவலைப்படாதீங்க. தம்பி படிப்பை முடிக்கட்டும். நல்ல வேலைக்கு நான் ஏற்பாடு செய்யாமலா போய்விடுவேன். இது சின்ன விஷயம். ஒன்னும் சஞ்சலப்படாதீங்க” என்றார்.

இதுவா சின்ன விஷயம்? பக்கத்து இலையில் இருந்து லட்டை எடுத்து முழுங்குவதுபோல், அடுத்த வீட்டின் ஒரு பகுதியை எவ்வித உரிமையும் இன்றி சர்வ அலட்சியமாய்ப் பிடுங்கிக்கொள்வது சாதாரண விஷயமா?

“இல்லீங்க. இது என்னங்க நியாயம்?” என்று கோபப்படவும் வழியின்றி விக்கித்துக் கேட்டார் ஷம்சுத்தீன்.

“நாளைக்குப் பார்ப்போம் ஹஸரத்” என்று சொல்லிவிட்டு காரில் ஏறிச் சென்றுவிட்டார் பரந்தாமன்.

“அல்லாஹ்வே!” என்று வியர்க்க விறுவிறுக்க நின்றிருந்தார் ஷம்சுத்தீன்.

அவருடைய சகோதரி சபூரம்மா தம் தாய்மாமன் மகன் அப்துல் ரவூபை திருமணம் புரிந்திருந்தார். இனிய இல்லறம். பயனாக ஒரே மகன் தல்ஹா. உள்ளூரில் சிறு தொழில் புரிந்துவந்த அப்துல் ரவூபின் வருமானம் நாள் செலவுக்கு மட்டுமே போதுமானதாக இருந்ததே தவிர, மேல் மிச்சமாக எதுவும் இல்லை. அந்நிலையில், ரியாதில் நல்ல கம்பெனி ஒன்றில் சூப்பர்வைசர் பணி ஒன்று அவருடைய உறவினர் தயவில் கிடைத்தது. விமானமேறி கடல் கடந்து சென்று திரவியம் தேடியதில் சிறு சேமப்பு உருவானது. அப்படி சேமித்த காசில் மனையை வாங்கி வீடு கட்ட ஆரம்பித்தபோது, கம்பெனியில் பணி ஒப்பந்தம் முடிவுற்று ஒன்வேயில் திரும்பிவிட்டார் அப்துல் ரவூப். அதற்குமேல், குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு செல்ல அவருக்கும் பிரியமில்லை. சபூரம்மாவும் விரும்பவில்லை. மீண்டும உள்ளூரில் தொழில் தொடங்கி நடத்திவந்தார்.

சிறு குடும்பம், அளவான வருமானம் என்றாலும் இருவரின் மனமும் கொடையில் அளவற்ற விசாலம். அவர்களிடம் உதவி என்று வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்பியதே இல்லை. நல்லது, கெட்டது என்று ஊரில் எந்தக் காரியம் நடந்தாலும் அதைத் தங்கள் வீட்டுக் காரியம்போல் இழுத்துப் போட்டு உதவுவதில் இருவரும் சளைப்பதே இல்லை. துளி பிரதியுபகாரம்கூட எதிர்பாராத சேவை மனது. வாரத்தின் திங்களும் வியாழனும் நோன்பில் கழியுமென்றால், இரவுகளில் பின்னிரவுத் தொழுகை இருவருக்கும் தவறுவதில்லை. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இவற்றை எல்லாம் பெரும் முனைப்புடனோ, சிரமத்துடனோ அவர்கள் செய்வதில்லை. அன்பும் அறமும் அவர்களது சுபாவத்தில் படு இயல்பாகக் கலந்திருந்தது.

ஊரில் இவ்விதம் மகிழ்வாகக் கழிந்த அவர்களது வாழ்க்கையை சென்னையில் கரைபுரண்ட வெள்ளம் புரட்டிப்போட்டது. உறவினர் ஒருவர் சென்னை மருத்துவமனையில் இதய ஆப்பரேஷனுக்குச் சேர்ந்திருக்கிறார் என்பதற்காக உதவச் சென்றார்கள் இருவரும். அவர்கள் தங்கியிருந்த பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்துவிட, மக்கள் தவிக்க, இந்த இருவரும் என்ன செய்வார்கள்? வரிந்து கட்டிக்கொண்டு இறங்கிவிட்டார்கள். நீரில் தத்தளித்த வீடுகளுக்குள் சென்று அங்கிருந்த பெண்களை, முதியவர்களை வெளியேற்றி, காப்பாற்றி, ஆறுதல்படுத்தி இயங்கிக்கொண்டிருக்கும்போது அது நடந்தது. தண்ணீரில் ஊசலாடிய மின்சார வயரைக் கவனிக்காமல் அப்துல் ரவூபும் அவர் மனைவியும் ஒரு வீட்டினுள் நுழைய சடுதியில் இருவருக்கும் உயிர் பிரிந்தது.

முன்பின் அறியாத அவர்களின் சேவையில் பிழைத்த குடும்பங்கள், கும்பிட்டுக் கொண்டிருந்த தங்கள் கைகள் தாழ்வதற்கு முன், இப்படி அவர்கள் இறந்ததைக் கண்டு, அதே கைகளால் தலையில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்தன. இருவரின் உடலும் ஊருக்கு வந்தபோது, சாதி மதப் பேதமின்றி ஊரே திரண்டு நின்று அழுது தீர்த்தது. ஆளுக்கு ஆறடி மண்ணில் இருவரும் அடங்கிப் போனார்கள். பித்துப் பிடித்தவனைப் போல் நின்ற தல்ஹாவை தாய் மாமன் ஷம்சுத்தீன்தான் அணைத்து, ஆறுதல்படுத்தி, தேற்றி உருமாற்றினார்.

அந்த அதிர்ச்சியிலிருந்து ஓரளவு மீண்டு வரும்போது இப்பொழுது இப்படியொரு சிக்கலா? என்ன செய்வது? யாரிடம் சென்று பேசுவது? சட்டப்படி ஏதும் நடவடிக்கை எடுக்க முடியுமா? அதுவும் பரந்தாமனுக்கு எதிராக? என்று அவர் மனத்தில் குழப்பங்கள். ஒன்றும் தோன்றாமல், நேராகப் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் வீட்டிற்குச் சென்று பேசினார். அவருக்கும் உடனே எந்த யோசனையும் புலப்படவில்லை. ஜமாஅத் நிர்வாகிகளும் ஊர் முக்கியஸ்தர்களுமாகச் சிலர் சேர்ந்து ஒரு குழுவாக பரந்தாமனை மறுநாள் சென்று சந்திக்கலாம் என்று முடிவெடுத்தனர்.

நள்ளிரவு நேரம். டமார் என்று பெரும் இரைச்சல் கேட்டு அலறியடித்து எழுந்து சட்டைகூடப் போடாமல் பணியனும் கைலியுமாய் ரோடுக்கு ஓடினார் ஷம்சுத்தீன். மாருதி கார் ஒன்று அவரது வீட்டுச் சுவரை இடித்து முன்புறம் நசுங்கி நின்றுகொண்டிருந்தது. உள்ளே இருவர் அதிர்ச்சியில் அமர்ந்திருந்தனர். அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்தும் சாலை ஓரம் படுத்திருந்தவர்கள் சிலரும் ஓடி வந்து காரைச் சுற்றி குழுமியிருந்தனர்.

“எங்களுக்கு ஒன்றுமில்லே! வீ ஆர் ஆல்ரைட்” என்றபடி இருவரும் வெளியில் இறங்கினார்கள்.

“நாய் ஒன்னு தீடீர்னு குறுக்கே ஓடுச்சு. சட்டுன்னு திருப்பும்போது ஐ லாஸ்ட் கண்ட்ரோல். ஸ்பீடை குறைச்சுட்டதுனால் வீ ஆர் ஸேவ்ட்” என்றார் ஒருவர். அவர்தான் காரை ஓட்டி வந்திருக்க வேண்டும். அவருடன் இருந்தவர் அதிர்ச்சி விலகாமல் அமைதியாக நின்றிருந்தார். அவர்களுக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்ததும் ஷம்சுத்தீன் சுவரைப் போய்ப் பார்த்தார். சில கற்கள் பெயர்ந்து விழுந்திருந்தன. அதையொட்டி சுவரில் சிறு விரிசல். அதைத் தவிரப் பெரும் பாதிப்பு இருப்பதாய்த் தெரியவில்லை.

“வீட்டுக்கு டேமேஜ் ஆகியிருக்கே! அதுக்கு என்ன சொல்றீங்க?” என்று கூட்டத்தில் யாரோ அந்த இருவரிடம் மிரட்டிக்கொண்டிருப்பது கேட்டது. விரைந்து சென்று, “அதெல்லாம் பெரிய டேமேஜ் ஒன்றுமில்லை. கல்லை வெச்சு சிமெண்ட் பூசிட்டா சரியாயிடும். நீங்க பொழைச்சதே சந்தோஷம். அல்லாஹ்வினுடைய நாட்டம்” என்றார் ஷம்சுத்தீன்.

அச்சமயம் பார்த்து ரோந்து போலீஸின் ஜீப் வர, காரில் வந்த இருவரும் சலனமடைவது தெரிந்தது. “என்னய்யா குடிச்சிட்டு வண்டியோட்டினீங்களா?” என்று மிரட்ட ஆரம்பித்துவிட்டார் காவலர்.

“அதெல்லாம் எங்களுக்குப் பழக்கம் இல்லீங்க. நான் டவுனில் உள்ள காலேஜில் புரொபஸர். இவர் என் மாணவர். ஒரு ஸ்பெஷல் வொர்க்ஷாப். பக்கத்து ஊருக்குப் போயிட்டு வர்ரோம். வர்ற வழியில, நாய் குறுக்கால ஓடி…”

“இருக்கட்டும். வாயை ஊதுங்க” என்று அடுத்த அரை மணி நேரம் போலீஸ் நடவடிக்கையில் கழிந்தது. அவர்களுக்கும் பெரிதாய் காயமில்லை, சொத்துக்கும் சேதமில்லை, காரும் ஓடும் நிலையில் இருந்தது என்பதால் விஷயம் சுமுகமாக முடிந்து, “ரொம்ப தேங்ஸ்ங்க” என்று இருவரும் ஒருவழியாகக் கிளம்பினார்கள்.

“எல்லா டீட்டெயில்ஸும் வாங்கிட்டியா” என்று கான்ஸ்டபளிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு அவர்களுக்கு அனுமதியளித்தார் இன்ஸ்பெக்டர்.

பொழுது விடிந்ததும் ஒன்பது மணிக்கெல்லாம் ஜமாஅத் தலைவர் சில முக்கியஸ்தருடன் வந்துவிட்டார். அனைவரும் பரந்தாமனின் வீட்டிற்குச் சென்றபோது, “ஐயா உள்ளே பேசிட்டிருக்கார். உட்காருங்க பாய்” என்று திண்ணையில் இருந்த நாற்காலியில் உட்கார வைத்தான் ஒருவன்.

“சில்லுன்னு ஏதாவது?” என்று கேட்டவனிடம், ”அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்” என்ற பதிலை பொருட்படுத்தாமல், “மாரிமுத்து, எல்லோருக்கும் இளநீர்” எனறான்.

பரந்தாமனைச் சந்திக்க அவரது ஆஸ்தான ஜோசிய நண்பன் வந்திருந்தான். ஹாலில் அவரிடம் பேசிக்கொண்டிருந்தார் அவர். “என்னடா சொல்றே?”

“ஆமாம் பரந்தாமா! 13 சரிப்படாது. மகா தோஷம். அதுவும் உன் ராசிக்கு படு வினை. பாதாளத்துக்குத் தள்ளிடும்.”

“அந்த வீட்டு நம்பர் 13தான். ஆனாலும் நாம என்ன முழு வீட்டையா கேட்கிறோம். சுவரைத் தட்டிட்டு அங்கே இருக்கிற சின்ன சந்துதானே”

“இருந்தாலும் அந்த சந்து 13ஆம் நம்பருக்குச் சொந்தமானதுதானே. ஒத்துவராதுன்னு சொன்னா கேள். மேல்நாட்டுல 13ஆம் நம்பர் மாடியே வெக்க மாட்டானுங்க தெரியுமா? 12க்கு அப்புறம் பதினாலாவது மாடி வந்துடும்.”

“அப்போ இடையில என்னங்க இருக்கும்?” என்றான் பரந்தாமனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவன். அவனது முகத்தில் குழப்பம்.

அவனை முறைத்துவிட்டு, “அவ்ளோ பயப்படுவாங்க. அதுக்கு த்ரிஸ்கைடேகாஃபோபியா என்று பெயர்” என்றான் ஜோசியன்.

“இப்ப என்ன செய்யலாங்கறே” என்றார் பரந்தாமன்.

“அதை அப்படியே விட்டுட்டு, உன் மனையில மட்டும் வேலையைப் பார். அடுத்த அஞ்ச வருஷத்துல” என்று அவன் முடிப்பதற்குள், “ஐயா! ராத்திரி ஒரு வண்டி அந்த சுவத்துல இடிச்சு டேமேஜ் பண்ணிடுச்சுய்யா. சில கல்லுங்க பெயர்ந்துடுச்சு. இப்பத்தான் பார்த்துட்டு வரேன்” என்றான் உள்ளே நுழைந்த ஒருவன்.

பரந்தாமனின் முகம் இருண்டது. ஜோசியன் முகம் பிரகாசமானது. “பார்! நான் சொன்னேன்ல. தலைக்கு வந்தது சுவரோடு போயிடுச்சுன்னு நெனச்சுக்க. எத்தனை கல்லு விழுந்திருக்குன்னு எண்ணிப் பார்த்தீங்களா? 13 ஆ?”

“இல்லீங்க. நான் எண்ணலே”

அதற்குள், “ஐயா காபி” என்று ஜோசியனிடம் காபியை நீட்டினான் வேலையாள். “இதை இரண்டு டம்ளர்ல ஊற்றிக் கொடு. எனக்கு ஒன்னாம் நம்பர் லக்கியில்லே”

“கல்யாணமாயிடுச்சா?” என்று கேட்டான் பரந்தாமனுக்குப் பக்கத்தில் இருந்தவன்.

“ஆச்சு! ரெண்டு முறை”

“13ஐப் பத்தி எனக்குத் தெரியாது. ஆனால் சுவர் இடிஞ்சது நல்ல சகுனமில்லை. விட்டுருவோம்” என்றார் பரந்தாமன்.

அனைத்தையும் கேட்டபடி திண்ணையில் அமர்ந்திருந்தவர்கள், இளநீர் குடித்த வாயைத் துடைத்துக்கொண்டு, “ஐயாவை நாங்க பிறகு வந்து பாரக்கிறோம்” என்று அங்கிருந்தவனிடம் சொல்லிவிட்டு அவசரமாகக் கிளம்பினார்கள்.

திரும்பும் வழியில், “என் காதை என்னாலேயே நம்ப முடியல. அல்லாஹ் நம்ம வேலையை இவ்வளவு சுளுவா ஆக்கிட்டானே” என்றார் நிர்வாகி ஒருவர். ஜமாஅத் தலைவர், “அல்ஹம்துலில்லாஹ். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அல்லாஹ் நல்லவிதமா இதைத் தீர்த்து வெச்சுட்டான்” என்றார் நிம்மதிச் சிரிப்புடன்.

ஷம்சுத்தீன் மட்டும் அமைதியாக நடந்துகொண்டிருந்தார். “என்னங்க இமாம்? நீங்க ஒன்னும் சொல்லக் காணோமே?”

“இன்னிக்கு வெள்ளிக்கிமை. காலையில்தான் சூரா கஹ்ப் ஓதினேன்…”

“அதுக்கு?”

“அதில் ஒரு வரலாறு இருக்கு. கித்ரு (அலை) அவர்களும் மூஸா (அலை) அவர்களும் ஓர் ஊரைக் கடக்கிறார்கள். உணவும் உதவியும் கேட்கிறார்கள். ஆனால் அந்த மக்கள் அவர்களை உதாசீனப்படுத்துகிறார்கள். ஆனாலும் அங்குள்ள சுவர் ஒன்றைச் செப்பனிட்டு வைக்கிறார் கித்ரு. மூஸா நபி விளக்கம் கேட்கும்போது, அனாதைச் சிறுவர்கள் இருவரின் சொத்து அதன் அடியில் இருக்கிறது. அவர்கள் வளர்ந்து ஆளாகும்வரை அது பத்திரமாக இருக்கும்படி அல்லாஹ் நாடினான். அதனால் நான் அந்த சுவரைக் கட்டிக்கொடுத்தேன். ஏனென்றால், அவர்களுடைய தகப்பனார் ஸாலிஹானவராய் இருந்தார் என்று தெரிவிக்கிறார் கித்ரு. இந்தப் புள்ளை தல்ஹா, அவன் அத்தாவும் அம்மாவும் ஊருக்கு உழைச்சு மடிஞ்சாங்க. எனக்குத் தெரிஞ்சு ஸாலிஹான செயல்களைத் தவிர வேறு எதுவும் நான் அவர்களிடம் பார்த்ததில்லை. அப்படி இருக்கும்போது அல்லாஹ் எப்படி அவர்களுடையப் புள்ளயைக் கைவிடுவான்.”

அழுதார் ஷம்சுத்தீன்.

-நூருத்தீன்

சமரசம் 16-31 ஜுலை 2019 இதழில் வெளியான சிறுகதை

அச்சுப் பிரதியை வாசிக்க க்ளிக்கவும்


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment