சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 28

by நூருத்தீன்
28. ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும்

சிரியாவில் அலீ இப்னு தாஹிர் அஸ்-ஸுலைமி என்றொரு மார்க்க அறிஞர் வாழ்ந்து வந்தார். முஸ்லிம் உலகை ஈசலாய்ச் சூழ்ந்த சிலுவைப் படை, புனித நகரைக் கைப்பற்றி, இப்பொழுது சிரியா உட்பட முஸ்லிம்களின் நிலப் பகுதியை ஆக்கிரமிக்கத் திட்டங்களும் வியூகங்களும் வகுக்கின்றது, பேராபத்துச் சூழ்ந்துள்ளது என்பதை உணர்ந்து விரைந்து செயல்பட ஆரம்பித்த மார்க்கப் போராளி அவர். ஜிஹாது வேட்கையை மீளெழுச்சியுற வைக்கக் களமிறங்கிய மார்க்க அறிஞர்களுள் முதலாமவர் அவர். சிலுவைப் படையினரின் வெற்றிக்கு அவர்களது வலு காரணமன்று; மாறாக, தங்களுக்குள் ஒற்றுமை இன்றி, பிரிந்து நின்று அடித்துக்கொண்டு, பலவீனப்பட்டுக் கிடக்கும் முஸ்லிம் ஆட்சியாளர்களின் அவலம்தான் எதிரிகளின் சாதகம் என்பதை அவர் தெளிவாகக் கணித்தார்.

தாம் வாழ்ந்த சிரியாவில் நிலவி வந்த அரசியல் பிளவுகளை நோக்கி அவரது கவனம் குவிந்தது. மக்கள் ‘ஜிஹாது’ என்ற ஒன்றையே மறந்து, அதில் நாட்டமின்றிச் சோம்பிக் கிடந்ததைப் பார்க்கப் பார்க்க அவருக்குள் பெரும் மன வேதனை உருக்கொண்டது. எதிரிகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்து மக்கள் போரில் ஈடுபட வேண்டிய அவசியத்தை முழு வீச்சில் பரப்ப, சிரியாவிலும் ஃபலஸ்தீனிலும் உள்ள பள்ளிவாசல்களுக்குப் பயணப்பட்டு, ஜிஹாது குறித்துச் சொற்பொழிவு, பாடங்கள் என்று மூச்சும் பேச்சுமாக ஆகிப்போனது அவரது பணி. சூழ்ந்துள்ள ஆபத்தைச் சுட்டிக்காட்டி, அறப் போரின் முக்கியத்துவத்தை விளக்கி ‘அல்-ஜிஹாது’ என்றொரு நூலையும் எழுதி வெளியிட்டார் அஸ்-ஸுலைமி.

இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தங்களது பகுதிகளைக் காப்பாற்றிப் பாதுகாக்க வேண்டிய அவசியம், அதற்கென அவர்கள் எடுக்க வேண்டிய போர் நடவடிக்கை, அது குறித்த சுட்டல், குட்டல், நினைவூட்டல்; பொதுமக்கள் அந்தப் போரில் தங்களது ஆட்சியாளர்களுக்கு அளிக்க வேண்டிய பங்களிப்பு, ஒத்துழைப்பு, ஆரம்ப காலத் தலைமுறையான முன்னோடி முஸ்லிம் சமுதாயம் போர்களில் ஈடுபட்ட உதாரணங்கள் என்று மிக விரிவாய்ப் பேசியது அந்நூல். ஜெருஸலம் பறிபோய், அதன் புனிதம் மாசுற்றுப் போனதன் வலியும் ஆற்றாமையும் அவரது வரிகளில் இழையோடின. முஸ்லிம்கள் அழித்தொழிக்க வேண்டிய முதல் விஷயத்தை அதில் மிகத் தெளிவாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார். முஸ்லிம்களைப் பிளவு படுத்தி அவர்களது ஒற்றுமைக்கு ஊறு விளைவித்து நின்ற விஷயம் அது.

“உங்கள் எதிரிகளுக்கு எதிராக ஜிஹாது புரியுங்கள். அதற்குமுன், ‘தான்’ எனும் உங்கள் அகங்காரத்தை ஒழிக்கும் ஜிஹாதுக்கு முன்னுரிமை கொடுங்கள். ஏனெனில், உங்களது அகங்காரம் உங்களுடைய எதிரிகளைவிட உங்களுக்கு மிகவும் தீங்கு விளைவிப்பதாகும். படைத்தவனுக்குக் கீழ்ப்படியாமல் செயல்படும் உங்களது அகங்காரத்திடம் அதைத் தவிர்த்துக்கொள்ளும்படிக் கட்டாயப்படுத்துங்கள். பின்னர் அவர்களுக்கு எதிராக நீங்கள் எதிர்பார்க்கும் அல்லாஹ்வின் ஆதரவைப் பெற முடியும்”.

இவை எக்காலத்திற்கும் பொருந்தும் வாசகங்கள் அல்லவா?

குறிப்பிட்ட ஆட்சியாளர், தலைவர் என்றில்லாமல் சிரியா, மெஸபடோமியா, எகிப்து என்று அனைத்து முஸ்லிம்களுக்குமான பொது அழைப்பாகத்தான் அவரது செயல்பாடுகள் அமைந்தன. முஸ்லிம்கள் தங்களது பாவங்களை விட்டொழித்து, ஒருவரை ஒருவர் மன்னித்து, ஒற்றுமையாய் ஜிஹாது புரிவதன் தேவையை அவரது அழைப்பும் நூலும் விளக்கின. அப்பொழுதுதான் ஆக்கிரமிப்பாளர்களை வெல்ல முடியும் என்று அறிவுறுத்தின.

மற்றொரு மார்க்க அறிஞர் அபு முஹம்மது அப்துல்லாஹ் இப்னு மன்சூர். காழீ எனப்படும் இஸ்லாமிய நீதிபதி அவர். அவருடைய தந்தை மன்சூர் இறந்ததும் ஜப்லாஹ் எனும் கோட்டைக்கு, ஹி. 494 / கி.பி. 1100ஆம் ஆண்டு அவர் ஆட்சியாளர் ஆனார். ஜப்லாஹ் கோட்டையின் காழீ இப்னு ஸுலைஹா என்று அவருக்கு மக்கள் மத்தியில் சிறப்புப் பெயர் ஏற்பட்டிருந்தது. மார்க்க அறிஞர், காழீ என்பதோடு அவருக்குச் சிறந்த இராணுவ அனுபவம் அமைந்திருந்தது. ஜெருஸலத்தைக் கைப்பற்றிய அடுத்த ஆண்டு, சிரியாவின் இப்பகுதியில், சிலுவைப் படையின் ஒரு பகுதியினர் அவர் வசம் இருந்த ஜப்லாஹ் கோட்டையை முற்றுகை இட்டனர்.

போதுமான இராணுவ பலம் இல்லாத காரணத்தினால் தமது தற்காப்பை முதலில் உளவியல் போராக அமைத்துக்கொண்டார் இப்னு சுலைஹா. சுல்தான் பர்க்யாருக் தமது உதவிக்கு வருகிறார், அவர் சிரியா நோக்கிப் புறப்பட்டு விட்டார் என்று ஒரு செய்தியை அவர் பரப்பிவிட்டார். சுல்தான் மாலிக்-ஷாவின் மகன்களுள் ருக்னுத்தீன் பர்க்யாருக், முஹம்மது ஆகிய இருவர்; அவர்கள் ஆட்சிக்குப் போட்டியிட்டுப் பன்னிரெண்டு ஆண்டுகள் போரிட்டுக்கொண்டனர் என்று எட்டாம் அத்தியாயத்தில் பார்த்தோமே அந்த ருக்னுத்தீன் பர்க்யார்தாம் இவர் குறிப்பிட்ட சுல்தான். அதைக் கேள்விப்பட்டதுமே பரங்கியர்களிடம் அச்சம் பரவிப் பின்வாங்கிச் சென்று விட்டனர். ஆனால் அது வெறுமே ஒரு வதந்தி என்பதை அவர்கள் உணர நீண்ட நாள் ஆகவில்லை. திரும்பி வந்து மீண்டும் நகரத்தை முற்றுகையிட்டனர்.

இம்முறை எகிப்தியர்கள் உதவிக்கு வருகிறார்கள் என்றொரு வதந்தியைக் கிளப்பி விட்டார் இப்னு சுலைஹா. இதையும் சிலுவைப் படை நம்பிவிட்டது. பின் வாங்கிச் சென்றவர்கள், பிறகுதான் புரிந்துகொண்டார்கள். இந்த காழீ ‘புலி வருகிறது’ என்று கதை பரப்பி நம்மை மடையர்களாக்கி வருகிறார்; நாமும் ஏமாறிப் போனோம். இனி அவரா?, நாமா? பார்த்துவிடுவோம் என்று ஒரு முடிவோடு மூன்றாம் முறை வந்து ஆக்ரோஷமாக முற்றுகையிட்டார்கள். இம்முறை ‘புலி வருது’ கதையும் பலிக்காது, வெளியிலிருக்கும் சுல்தான்கள் எவருக்கும் செய்தி எட்டி அவர்கள் உதவியும் அப்படி ஏதும் சடுதியில் வந்துவிடப் போவதில்லை என்பதை அறிந்திருந்த இப்னு சுலைஹா தமக்குக் கிடைத்த அவகாசத்தைப் பயன்படுத்தி மளமளவென்று திட்டங்கள் வகுத்திருந்தார்.

ஜப்லாஹ் கோட்டைக்குள் கிறிஸ்தவ குடிமக்களும் வசித்து வந்தனர். அவர்களிடம் ஓர் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டு கிறிஸ்தவர்களின் குழுவொன்றை ஏற்பாடு செய்தார். அவர்கள் சிலுவைப் படையினரிடம் வந்து, ‘உங்கள் படையிலிருந்து முந்நூறு சேனாதிபதிகளை அனுப்புங்கள். அவர்கள் கோட்டைக்குள் ஊடுருவ நாங்கள் கயிறு ஒன்றை இறக்கி உதவுகிறோம். நீங்கள் பிறகு கோட்டையை எளிதாகக் கைப்பற்றி விடலாம்’ என்று பேசினர். ‘இது பிரமாதம்’ என்று மகிழ்ந்த சிலுவைப் படையினர் சிறந்த சேனாதிபதிகளாகத் தேர்ந்தெடுத்தனர். இரவோடு இரவாக அவர்கள் ஒவ்வொருவராய்க் கோட்டையின் சுவரில் ஏறினர்.

அங்கே சுவரின் மறுபுறம் சுலைஹாவின் படை தயாராக நின்றிருந்தது. வந்து குதிக்கும் ஒவ்வொரு சேனாதிபதியையும் சப்தமின்றித் தலையைக் கொய்து கொன்றது. ஒருவர் பாக்கியின்றி அந்த முந்நூறு சேனாதிபதிகளின் கதையும் கனக்கச்சிதமாக முடித்து வைக்கப்பட்டது. மறுநாள் பொழுது புலர்ந்ததும் முந்நூறு மண்டைகள் கோட்டையின் உச்சியிலிருந்து சிலுவைப் படையின் மீது தொம், தொம் என்று வந்து விழுந்தன. தாங்கள் பொறி வைத்து ஏமாற்றப்பட்டோம் என்பதை அப்போதுதான் பரங்கியர்கள் உணர்ந்தார்கள். திகைப்பும் ஆத்திரமும் உச்சத்தை எட்டின. இனியும் பொறுத்துப் பயனில்லை. எப்பாடு பட்டாவது அந்தக் கோட்டையைப் பிடித்தே தீர்வது என்று முடிவெடுத்து மளமளவென்று மரக் கோபுரம் ஒன்றை உருவாக்க ஆரம்பித்தார்கள்.

சிலுவைப் படை அத்துடன் பின்வாங்கிச் சென்றுவிடாது என்பதை காழீ இப்னு சுலைஹாவும் நன்றாக அறிந்திருந்தார். அதனால் அவரும் தமது அடுத்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பித்தார். இதுவும் எதிரிகளுக்குப் பெரும் சேதத்தை உருவாக்கவல்ல திட்டம். நகரின் பின்புறச் சுவரில் ஆட்கள் நுழைந்து வெளியேறும் அளவிற்கு ஓட்டைகள் ஏற்படுத்தப்பட்டன. அவை தயாரானதும் இப்னு சுலைஹாவும் அவரது படையினரும் கோட்டை வாயில்களிலிருந்து திரண்டு வந்து சிலுவைப் படையுடன் மோதினர். கடுமையான சண்டை ஏற்பட்டதும் அஞ்சிப் பின்வாங்கி ஓடுவதைப் போல் கோட்டைக்குள் ஓடியது முஸ்லிம்களின் படை. அதைக் கண்டு மகிழ்ச்சிக் களிப்பில் பேரிரைச்சலுடன் கோட்டையின் வாயில்களுக்குள் அவர்களைத் துரத்திக்கொண்டு ஓடியது சிலுவைப் படை.

அதற்குள் பின் சுவர்களின் ஓட்டைகள் வழியாய் வெளியேறிய முஸ்லிம் படையினர் கோட்டையைச் சுற்றி வளைத்து ஓடிவந்து சிலுவைப் படையினரின் பின்புறமிருந்து தாக்க, முன்னேறி ஓட வழியின்றிச் சிக்கிக்கொண்ட சிலுவைப் படை சின்னாபின்னமாகிப் போனது. கோட்டையைக் காப்பாற்றியது மட்டுமின்றி, சிலுவைப் படையினருக்குப் படு மோசமான தோல்வியைப் பரிசாக அளித்தார் காழீ இப்னு சுலைஹா.

சுல்தான்கள், ஆட்சியாளர்கள் ஒற்றுமையின்றிச் சிதறிக்கிடந்தாலும் அவர்களுக்கும் மக்களுக்கும் ஜிஹாதை நினைவுறுத்திப் பரப்புரை செய்ய ஆரம்பித்த மார்க்க வல்லுநர்கள், பேச்சளவில் மட்டுமின்றிக் களத்திலும் தங்களது வீரத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளனர் என்பதற்கு ஓர் உதாரணமாய் காழீ இப்னு சுலைஹாவின் இந்தப் போர் நிகழ்வை வரலாறு பாதுகாத்து வைத்துள்ளது.

oOo

ஐரோப்பாவில் அடுத்த சிலுவைப் படை தயாராகிறது, அதைப் பார்ப்போம் என்று சென்ற அத்தியாயத்தின் இறுதியில் சொல்லிவிட்டு, அதே காலத்தில் இங்கு சிரியாவில் நிகழ்ந்தவற்றை இடையே பார்க்கும்படி ஆகிவிட்டது. எனவே, இப்பொழுது ஐரோப்பாவிற்குச் சென்று அவர்களுடன் சேர்ந்து இங்கு வருவோம்.

கிழக்கில் மாநில ஆட்சியை ஏற்படுத்திவிட்ட சிலுவைப் படையின் கிறிஸ்வர்களுக்குப் பலவிதத் தேவைகள் இருந்தன. முஸ்லிம்களுடன் தொடர்ந்து போர் இருக்கத்தான் போகிறது; அதற்குப் படை வீரர்கள் தேவை என்பது ஒன்று. இதற்குத்தானே ஆசைப்பட்டோம், கிடைத்துவிட்டதே ஜெருஸலம் என்று இத்துடன் விட்டுவிட முடியுமா? வளம் பூத்துக் குலுங்கும் இந்த இஸ்லாமிய நிலங்களை இயன்ற மட்டும் அபகரிக்க வேண்டும் என்ற பேராசை அடுத்தது. ஆக்கிரமித்துள்ள நிலங்களைப் பாதுகாத்துத் தக்க வைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் மூன்றாவது. மட்டுமின்றி, முஸ்லிம் சுல்தான்கள் விழித்தெழுந்து வந்துவிடாமல் தடுக்க வேண்டிய தந்திரங்கள் என நீண்டன காரணங்கள்.

அதற்கேற்றார் போல் ஜெருஸத்தைப் பிடித்துவிட்டோம், மூன்று மாநிலங்கள் உருவாகிவிட்டன என்ற செய்தி ஐரோப்பாவில் பரவியதும் பல இளவரசர்களும் போட்டி போட்டுக்கொண்டு, தாங்களும் அடுத்த போருக்குச் செல்ல வேண்டும் என்று வரிசை கட்ட ஆரம்பித்துவிட்டனர். புதிதாகப் பதவியேற்றிருந்த போப் பேஸ்கல் II அடுத்த படை உருவாக முழு மூச்சாகப் பரப்புரையில் ஈடுபட்டார். சிறப்புச் சலுகை, தள்ளுபடி விற்பனை என்றால் ஆர்வம் பொங்குமே, பொது மக்கள் மனத்தில் அப்படி ஒரு வேட்கை உருவாகி, சிலுவையுடன் ஏராளமானோர் திரண்டு விட்டனர். மத வெறி முலாம் பூசப்பட்ட அவர்களது நோக்கமெல்லாம் நிலம், பொருள், வேட்கை.

ஹி. 494 / கி.பி. 1101ஆம் ஆண்டு பெரும் படை திரண்டது. அதில் பெரும்பாலானோர் இத்தாலியைச் சேர்ந்த லோம்பார்டு (Lombards) குழுவினர். கான்ஸ்டண்டினோபிள் வந்து சேர்ந்தது இந்தப் படை. அடுத்து பிரான்சு, ஜெர்மனி நாடுகளிலிருந்தும் படைகள் வந்து இணைந்தன. ஏறத்தாழ மூன்று இலட்சம் பேர் வந்து சேர்ந்திருந்தனர். எண்ணிக்கையும் பிரமாதம், பெயரும் படையே தவிர போர் வீரர்கள், சேனாதிபதிகள் ஆகியோரின் எண்ணிக்கை அதில் வெகு சொற்பம். குடியானவர்கள், கும்பலாகக் கிளம்பிய குடிமக்கள் போன்றோரே அந்தச் சிலுவைப் படையில் பெரும்பான்மையினர்.

சென்ற அத்தியாயத்தில் முந்தைய சிலுவைப் படைத் தலைவர்களை மீள் அறிமுகம் செய்து கொண்டோம் இல்லையா? அதில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். அவர்கள் அனைவரும் ஆளுக்கொரு பகுதியைப் பிடித்துக்கொண்டு ஆட்சியாளர்கள் ஆகிவிட்டார்கள் – ஒரே ஒருவரைத் தவிர. அவர், துலூஸின் ரேமாண்ட். மற்றொரு தலைவரான டான்க்ரெட்டும் எந்த நிலத்தைப் பிடிக்கலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தாலும் பொஹிமாண்ட் முஸ்லிம்களால் சிறை பிடிக்கப்பட்டதால், அந்தாக்கியாவின் ஆட்சி அவரது பொறுப்பில் வந்து சேர்ந்தது. ஆகவே, நிராசையுடன் பைஸாந்தியச் சக்கரவர்த்தி அலெக்ஸியஸிடம் வந்து அமர்ந்திருந்தார் ரேமாண்ட்.

இப்பொழுது அடுத்த கட்டமாகப் பல பிரிவாகப் படையினர் வந்து சேர்ந்ததும் அவர்கள் அனைவருக்கும் ரேமாண்டை முதன்மைத் தளபதியாக நியமித்தார் அலெக்ஸியஸ். “ஆசியா மைனரிலிருந்து தெற்கே எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்; இவர்களை வழி நடத்திச் செல்லுங்கள்” என்று உபதேசித்தார். ரேமாண்டும் அப்படித்தான் பாதை அமைத்தார். ஆனால் நாம் முன்னரே முதலாம் சிலுவைப் படையினரிடம் பார்த்ததைப்போல் இந்தக் கூட்டமும் சொல் பேச்சைக் கேட்கவில்லை. முக்கியமாய் லோம்பார்டுகள். படைத் தலைவர் தெற்கு நோக்கிக் கையைக் காண்பித்தால், வடக்கு நோக்கித்தான் முதலில் செல்வோம் என்று அடம் பிடித்தனர் அவர்கள். அதற்கு முக்கிய காரணம் – பொஹிமாண்ட்!

இத்தாலியைச் சேர்ந்த லோம்பார்டுகள், ‘தங்கள் நாட்டைச் சேர்ந்த பொஹிமாண்ட், டானிஷ்மெண்த் காஸி குமுஷ்திஜினால் கைது செய்யப்பட்டு அங்குச் சிறைக் கொட்டடியில் கிடக்க அவரை மீட்காமல் மேற்கொண்டு எந்த வேலையும் பார்க்க முடியாது’ என்று சொல்லிவிட்டனர். இழுபறி தொடர்ந்து இறுதியில் முதல் இலக்கு டானிஷ்மெண்த் என்று முடிவாகி வடக்கு நோக்கித் திரும்பியது இந்தச் சிலுவைப் படை.

அதே நேரத்தில் முஸ்லிம்கள் தரப்பில் ஒரு முக்கியத் திருப்பம் நிகழ்ந்திருந்தது. ரோம ஸல்தனத்துக்குப் போட்டியாக டானிஷ்மெண்த் வம்சாவளி உருவாகியிருந்தது என்றுதானே சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். எதிரும் புதிருமாக இருந்த அவர்கள் இருவர் மத்தியில் புது உறவு உண்டாகியிருந்தது. ரோம ஸல்தனத்தின் சுல்தான் கிலிஜ் அர்ஸலானும் டானிஷ்மெண்த் பகுதியின் மாலிக் காஸி குமுஷ்திஜினும் கூட்டாளிகளாகித் தோளோடு தோள் கைபோட்டுக் கொண்டனர். இரு தரப்புப் படைகளும் நட்புப் படைகளாகின.

அந்த பலத்தை அறியாமல் வடக்கு நோக்கி முன்னேறியது சிலுவைப் படை. வரவேற்றுக் காத்திருந்தது அங்கு அவர்களின் விதி.

(தொடரும்)

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் 03 ஜூலை 2020 வெளியானது


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment