1. இவர் “மகாத்மா” என்றழைக்கப்பட்டார்.
இதில் ஒரு பலருக்குப் பொறாமை இருந்துவந்தது.
2. இவர் ஒரு “பன்யா” – வைசிய – இனத்தவராய் இருந்தார்.
இவருக்கென்ன மற்றிரு வருணத்தினும் மேம்பட்ட பெருமை என்று புழுக்கங் கொண்டனர் மிகப் பலர்.
3. இவர் ஒரு தாராள மனப்பான்மையுள்ள ஹிந்துவாய் இருந்துவந்தார்.
இவர் சரியான சனாதனியல்ல; “உண்மை ஹிந்து” வுக்கு இருக்க வேண்டிய உறுதியான இதர இன வெறுப்பில்லை இவர்பால் என்றெண்ணி ஏங்கினர் வைதிகர் அநேகர்.
4. இவர் ஓர் உண்மை வருணாசிரம தர்மியாக-அவரவர் தொழிலுக்கேற்ற வருணத்தவராக அவரவரும் இருக்க வேண்டுமென்ற மகானாக – இருந்தார்.
ஆனால், இக்காலத்தில் கணிக்கப்பட்டு வருவதே போன்ற, பெயரளவினாலோ, பிறவியினாலோ மட்டுமே வருணாசிரம மென்பதை இந்தப் “பன்யா” ஏற்கவில்லையே என்று வெகுவான “வருணாசிரம தர்மி” கள் என்னப்படுபவர்களால் காந்தியடிகள் வெறுக்கப்படலாயினார்.
5. காந்திஜி “பஞ்சமர்” என்றழைக்கப்பட்ட தீண்டப்படாதாரை “ஹரி ஜனம்” என்றழைத்து, தீண்டாமையை ஒழிக்கவேண்டுமென்று பாடுபட்டார்.
வருணாசிரமம் பிறவியாலே வருங்கால், “பஞ்சமர்” என்ற ஐந்தாம் வருணத்தவரையும், “சூத்திரர்” என்ற நான்காம் வருணத்தவரையும் எவ்வாறு இவர் – திரு காந்தியார் – உயர்த்தப் பாடுபடலாமென்று அந்த “வருணாசிரமதர்மி”கள் எண்ணியெண்ணி மனம் புழுங்கலாயினார்கள்.
6. இம்மகாத்மா, ஆலயப்பிரவேசம் அனைவர்க்கும் உரித்தென்று அரும்பாடு பட்டுத் தேவாலயங்களையெல்லாம் ஆதிதிராவிடர்க்கு எல்லாமும் தாராளமாய்த் திறந்துவிட வேண்டுமென்று வாதாடி வந்தார்.
காந்திக்குத்தான் ஆலயமில்லையே, உருவவழிபாடு இல்லையே, இவனுக்கேன் இந்தக் கொழுப்பு? புனித ஆலயங்களுள்ளே தீண்டப் பெறாதவரையும் பார்க்கப் பெறாதவரையும் எவ்வாறு நுழையவிடலாம்? என்று ஓலமிடலாயினர் ஒரு பல “கோவிற் பெருச்சாளி”கள்.
7. விக்ரஹ ஆராதனையை வெறுத்து, இவர் “என் கடவுள் இராமன், ‘ஈஸ்வர் அல்லாஹ் தேரா நாம்’!” என்று சமரஸதர்மம் போதித்து வந்தார்.
இராமாயணத்தில் – உத்தரகாண்டத்தில் – வர்ணிக்கப்பட்டுள்ள, சம்புகனென்னும் சூத்திரனை வருணாசிரம தருமத்தினிமித்தம் வதை புரிந்த “அந்த ராமனைக்” காந்தி பின்பற்றவில்லையே என்று “ராமதாசர்”கள் என்னப்பட்டவர் பலர் வெறுத்தொதுக்கத் தலைப்பட்டார்கள்.
8. இந்திய மக்களெல்லாம் ஏக சகோதரர்களே என்று வாதித்து வந்தார் திரு காந்தியார்.
இந்தியா வென்னும் இப் புண்ணிய பூமி இந்துக்களுக்கு மட்டுமே உரியதாயிருக்க, இவர் எப்படி இப் பரதகண்டத்தில் “துலுக்கனாகிய மிலேச்ச” னுக்கு இடங் கொடுக்கலாம்? ஏனைக் கிறிஸ்தவர், பார்சீகள் போன்ற சிறு பான்மையோருக்கும் இங்கென்ன வேலை? என்று வினவத் துவக்கினர் “புண்ணிய பூமிவாசிகள்” என்றழைக்கப்படும் மிகப்பல “வைதிக ஹிந்துக்கள்”.
9. காந்தி மகான் ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக அல்லு பகல் அனவரதமும் அரும்பாடு பட்டுவந்தார்.
ஆனால், ”மிலேச்சர்” களை ஹிந்து சனாதனிகளுடன் இணைத்து வைப்பது மஹா பாதகமென்று ”வைராக்கிய ஹிந்துக்கள்” என்பார் பலப் பலர் வெறுத்துவரத் துணிந்து நின்றார்கள்.
10. பாக்கிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டிய ரூபா 55 கோடியைக் கொடுத்துவிடச் சொன்னார் இந்த ”மஹாத்மா”.
“ஐந்து ரூபாய்க்கெல்லாம் எத்தனையோ உயிர்கள் மாள்கின்றன. 55 கோடி ரூபாயை அள்ளிக் கொடுக்கச் சொன்னானே பாவி; இவன் ஒரு மகாத்மாவா? ஒரு ஹிந்துவா? எனக்கு மட்டும் வசதியிருந்தால் டில்லிக்குச் சென்று அவனைச் சுட்டுக் கொன்று விடுவேனே. அந்த அயோக்கியன், ‘மகாத்மா’ என்னப்படுவோன் சுட்டுக் கொல்லப்படவேண்டும், இந்தியாவின், இந்துக்களின் நன்மைக்காக,” என்று ஓர் “இந்து வென்பான்” அன்றொரு நாள் சென்னை மெரீனாவில் உளறியதே போல் (இச் சம்பாஷணையை இக்கட்டுரையாளர் காந்தியடியின் உண்ணாவிரத காலத்திலே நேரில் பார்த்தார்) மிகப்பலர் உளறத் துணிந்துவிட்டார்கள்.
11. இறுதியாக இம்மகான் ஆறு நாள் உண்ணா விரதமிருந்து, டில்லி முஸ்லிம் களுக்கு ஏழு அம்சங்களில் இந்துக்கள் விட்டுக்கொடுக்க வேண்டுமென்று கூறி வெற்றிகண்டார்.
இதுதான் அநேருக்குப் பிடிக்கவில்லை. முஸ்லிம் ‘மிலேச்சர்’ களை இந்தியாவிலே இல்லாமல் ஒழிக்க வேண்டியதிருக்க, அவர்களுக்குக் காந்தியடிகள் விட்டுக்கொடுக்கவாவது? என்று வெகு பலர் தங்கள் வெறுப்பை முற்ற வைத்து முடிவுசெய்து விட்டனர்.
12. இந் நாட்டில் சிறுபான்மையோருக்கு எல்லாம் இருக்க இடமுண்டென்று காந்தி தாத்தா கரிசனம் காட்டி வந்தார்.
சிறுபான்மையோருக்கு எல்லாம் சலிகை காட்டும் காந்தியை ஒழித்து விட்டால், அப்பால் இந்திய நாடு ஹிந்துக்களுக்கு மட்டுமே சொந்தமாயிருக்குமாறு மிக எளிதில் செய்துவிடலாம். சிறுபான்மை மிலேச்சருக்கெல்லாம் பாதுகாப்பளிக்கும் காந்தி இனி உயிருடனிருக்கத் தகுதியில்லையென்று அந்தச் சதிகாரக் கும்பல், 30-1-48 வெள்ளியன்று மாலை 5-12 மணிக்கு அம் மகானுபாவரை வீரசுவர்க்கம் புக்கு மறையுமாறு சடுதியில் வழியனுப்பிவிட்டது. ஐயகோ! ஐயகோ !! ஐயகோ !!!
“இவ்வுலகில் மிகவும் நல்லவராயிருப்பது எத்துணைப் பெரிய அபாயமாய் இருக்கிறதென்பதை இச்சம்பவம் சுட்டிக்காட்டுகிறது,” என்று ஜார்ஜ் பெர்னார்ட்ஷா கூறியபடிதான் காந்திஜியின் கொலை இருந்துவருகிறது.
(கோபால கிருஷ்ண கோக்கலே, பால கங்காதர திலகர் போன்ற “மராட்டா பிராமணர்களால்” வளர்க்கப்பட்டுப் பயிரேற்றப்பெற்ற அகில இந்திய காங்கிரஸ் மகா சபையை ஒரு பன்யா கைப்பற்றி ”ஏக போகத் தலைவனா” யிருப்பது குறித்து அம் மகாராஷ்ட்ர பிராம்மணர்க்கெல்லாம் பொதுவாகவே வெறுப்பிருந்து வந்ததாம் என்று சிறப்பாகச் சொல்லிக் கொள்ளப்படுகிறது. – தாருல் இஸ்லாம் பதிப்பாசிரியர்.]
எழுதியவர்: கடலோரத்தான்
தாருல் இஸ்லாம், மார்ச் 1948, பக்கம் 31, 32
அச்சுப் பிரதியை வாசிக்க க்ளிக்கவும்