ம்! இது கனவல்லத்தான்! உலகாயத உத்வேகத்தால் கீழ் வானத்திலெழுந்த மேகக் கூட்டத்துள் தாற்காலிகமாக மறைந்திருந்த நுங்கள் “தாருல் இஸ்லாம்” இப்போது இதோ வெளிவந்து மிளிர்கின்றது. பகலெல்லாம் நோன்பிருந்து மாலையில் நோன்பு திறந்தவர்க்கு உணவில் ஏற்படும் உருசிக்கு ஒப்பாகவே, இத்தனை நாட்களாக எம்மையும் எம் எழுத்துக்களையும் “தாருல் இஸ்லாம்” வாயிலாகக் காணப் பேரவா்த தங்களெல்லார்க்கும் தமிழ்ப் பத்திரிகையுலகில் அறுசுவை யுணவளிக்க இச் சஞ்சிகை புதுப்பிறவி யெடுத்திருக்கிறது. எனவே, எமது ஊக்கத்துக்கு ஆக்கம் விளைக்கும் உங்களெல்லீர்க்கும் எமது மனமார்ந்த நன்றியைச் சமர்ப்பிக்கிறோம்.

தமிழுலகில் “தாருல் இஸ்லாம்” என்னும் இச்சூரியன் சென்ற 1919-ஆம் ஆண்டில் உதயமாயிற்று. கால அடைவில் துண்டுபிரசுரங் களாகவும், மாதசஞ்சிகைகளாகவும், வாரப் பிரதிகளாகவும், வாரமிருமுறைப் பிரசுரங்களாகவும், தினப்பதிப்புக் களாகவும், தினமிருமுறை வெளியீடுகளாகவும் இது மிளிர்ந்தது. இறுதியிலே முழுச் சுடருடனும் பூரண ஒளியுடனும் இது திகழ்ந்தது. நம் அபிமானிகள் அனேகர் இதன் வரவைப் பேராவலுடன் எதிர்பார்த்துத் தபாலாபீஸ்களில் பலமணி நேரங்களும் காததிருந்தது முண்டு. இத்தன்மைத்தாய புகழ்பெற்று உங்கள் மனத்துள் பேருற்சாகத்துடன் பொலிந்து விளங்கிய இந்தத் “தாருல் இஸ்லாம்” இத்தனை நாட்களாக மறைந்திருந்தது வாஸ்தவந்தான். அதே போன்று இது மீண்டும் தன் பூரண ஒளியுடன் பிரத்தியேகப் புதுத் தேஜஸைப் பெற்றுப் புனருத்தாரணம் எடுத்திருப்பதும் உண்மையே. இது கனவல்ல.

நண்பர்களின் ஞாபகத்துக்காகச் சில வரிகளை எழுத நாம் ஆசைப்படுகிறோம். சென்ற 21-2-1942 சனிக்கிழமையன்று “தாருல் இஸ்லாம்” நின்றது. எனவே, இன்றுடன் 5 ஆண்டுகளும், 8 மாதங்களும் இது சேற்றிற் புதைந்த தாமரையாயிருந்தது. இனி, ஆண்டவன் உதவியால் இச் சஞ்சிகை மேலும் மேலும் புதுக் கியாதி பெற்றுப் பெருகி வளருமென்றே முற்றும் நம்பலாம். சென்ற ஐந்தாண்டுகட்கு முன்னர் நம் முஸ்லிம்கள் இருந்த நிலைமை வேறு; இப்போது அவர்கள் பதினாறு காதம் பாய்ந்து முன்னேறி நிற்கும் நிலைமை வேறு. பண்டைக் காலத்தில் அவர்களின் பொருளாதாரம் பொன்றிக் கிடந்தது; இன்றோ, அது மல்கிக் கிடக்கின்றது. முன்பெல்லாம் பத்திரிகைகளைப் படிப்பது ஓர் அசாதாரண வழக்கமா யிருந்தது; இப்போதோ, அத்தகைய மனப்பான்மை அடியோடு மாறிவிட்டதுடன், இலக்கியம் நிரம்பிய வியாசங்களையும் மக்கள் மிக்க மகிழ்வுடன் விரும்பிக் கற்க முனைந்து விட்டனர். சுருங்கக் கூறின், இன்றைய நிலைமை எப்படி முற்றும் முன்னேற்றமடைந்து காட்சி யளிக்கிறதென்றால், நுமது இப் பத்திரிகை களங்கமற்ற நீல வானில் கண் சிமிட்டும் விண்மீன் கூட்டத்திடையே தன் பூரண கலைகளும் ஒருங்கே அமையப்பெற்ற முழுமதிச்சந்திரன் ஒய்யாரமாய் மிதந்து வருவதே போல் இருக்கிறது.

“ஊரைச் சுடுமோ உலகந் தனைச் சுடுமோ, ஆரைச் சுடுமோ அறியேனே…இந்த, நெருப்பு வட்டமான நிலா!” என்று ஒரு கவிஞர் பூரண சந்திரனை நோக்கி வியந்து பாடினார். அவ்வண்ணமாக இந் நிலவெனும் உங்கள் பிரியசஞ்சிகை தனக்கென்றே உரிய சில பெருமைகளுடன் உங்களிடையே சஞ்சரிக்கக் கிளம்பிவிட்டது. நாளேற ஏற, இதன் ஒளியும் பெருமையும் மேலும் மேலும் வளர்ந்தே வருமன்றி, சற்றும் தன் குணங்குன்றாதென்றே முழு மனத்துடன் நம்புகிறோம். ஆண்டவனும் அந்த அருட்கொடையைத் தந்து, நீங்களும் நுங்கள் பாசத்தைப் பல்கச் செய்தால், இதேமாத வெளியீடு மாதம் இருமுறை வெளியீடாகச் சீக்கிரத்தில் உயர்ந்தும் விடும்.

சென்ற 1927-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் (அஃதாவது, இன்றைக்குச் சரியாக இருநூற்று நாற்பது மாதங்களுக்கு முன்னர்) மாத வெளியீடாக இருந்த இந்தத் “தாருல் இஸ்லாம்” வார வெளியீடாக உயர்ந்தது. ஆனால், இன்றோ, சென்ற சில காலமாகத் தாற்காலிகமாய் மறைந்திருந்த இது மீண்டும் மாதச் சீரிய செந்தமிழ்ச் சஞ்சிகையாக ஆரம்பித்திருக்கிறது. இதில் விசேஷ மென்ன வென்றால், காலத்தின் கடுவேகந்தான் இந்த இருபத்தைந்து ஆண்டுக ளென்னும் இடைக்காலத்தை ஏற்படுத்தியுள்ளது; ஆனால், “தாருல் இஸ்லாம்” மட்டும் உங்களைவரின் உள்ளத்துள்ளும் செல்லக் குழவியாகவே பசுமரத் தாணியே போல் என்றென்றும் நின்று பதிந்து கிடக்கின்றது.

எம்மைப்பற்றி யாமே பறைசாற்றிக் கொள்ள விரும்பவில்லை. எனினும், உங்களெல்லீரின் ஞாபகத்தையும் சற்று விசாலப் படுத்த விழைகிறோம். தமிழுலகில் “தாருல் இஸ்லாம்” என்னும் நாமமே தனிப்பெரும் கியாதி பெற்றது; உங்களுக்கெல்லாம் ஊக்கத்தை ஊட்டியது; இலக்கியத்தைக் கற்பித்தது; இஸ்லாததையும் இதன் பெருமை மிக்க கலைகளையும் எடுத்தியம்பியது; பொய் வேஷதாரிகளின் மெய்யுருவத்தை வெளிக்காட்டியது; போலிகளை விரட்டியது; அனாசாரங்களை அழித்தது; நேரான நல்வழி காட்டியது; அசுசிகளை அகற்றியது; அஞ்ஞானத்தைப் போக்கியது; சுஞ்ஞானத்தை வளர்த்தது; அரசியலைக் கற்பித்தது; ஆழ்ந்து உறங்கியவர்களைத் தட்டி யெழுப்பியது; நல்லவற்றைப் போதித்தது; தீயவற்றை ஒழித்தது; முஸ்லிம் வாலிபர்களுக்கு வீரத்தை ஊட்டியது; தீரத்தைத் தந்தது. ஆக்கத்தைப் பொழிந்தது; ஊக்கத்தை உயர்த்தியது.

தனித்துக் கிடந்தோர்க்குத் தக்க துணைவனாகவும், கூட்டத்தினர்க்கு நேர்வழி காட்டியாகவும், முற்போக்காளருக்கு முன்னணி விளக்கமாகவும், பிற்போக்காளரைப் பிடர் பிடித்து முன்தள்ளும் போதகாசிரியனாகவும் தமிழ் நாட்டின் திக்கெட்டும் முரசு கொட்டித் திகழ்ந்து பொலிந்த அதே அமுதமெனும் அருமருந்து இதோ மீண்டும் உங்கள் கரத்திடை வந்தேறிக்கொண்டது. பிரிந்த தாயைக் கண்ட சேயின் உள்ளத்தைப் போல், உங்களை யெல்லாம் இத்தனை நாட்களாய்ப் பிரிந்திருந்த ஏழையோன் களங்கமற்ற நெஞ்சுடன் உங்களைக் கட்டித் தழுவத் தொடங்கிவிட்டான். “அடித்த கையே அணைக்கும்” என்பார்கள். எப்போதும் அணைத்துக்கொண்டேயிருந்த நீங்கள் நிச்சயமாகக் கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர்தானே சொரிவீர்கள்?… இது கனவல்ல; உண்மையே.

அன்பர்கள் நினைப்பார்கள், அல்லது நினைக்கிறார்கள்: (1) “தாருல் இஸ்லாம்” என்ன கொள்கையை அனுசரிக்கப் போகிறது? (2) வாயுவேக மனோவேகத்தில் நடவடிக்கைகள் மின்னலைப் போல் பாயும்போது, ஒரு நாளில் பல முறை ரேடியோ மூலமாகவும் தினசரி பத்திரிகைகள் மூலமாகவும் செய்திகள் பறந்துகொண்டிருக்க, இந்தத் “தாருல் இஸ்லாம்” மாதம் ஒருமுறை மட்டும் வெளிவருவதால் நமக்கென்ன பயன்?

ஆம். இவை யிரண்டும் நியாயமான ஐயங்களேயாம். யாம் பதிலும் கூறிவிடுகிறோம்:- (1) “தாருல் இஸ்லாம்” எல்லாத் துறைகளிலும் – அரசியல், பொருளாதாரம், சமூகம், ஆசாரம், கல்வி, கலை, மதம் முதலிய எந்தத் துறையிலும் ஒரே கொள்கையைத்தான் கடைப்பிடிக்கப் போகிறது: அதுதான் “ஜனநாயகக் கொள்கை.” ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்டோர், ஜனங்களின் நன்மைக்காக, ஜனங்களாலேயே நடத்ததப்படுவது எப்படி “ஜனநாயக” ஆட்சிமுறை யென்று அழைக்கப்படுகிறதோ, அதேபோல, இப்பத்திரிகை உங்களுக்காகவும், உங்கள் நலத்துக்காகவும், உங்கள் விருப்பத்துக்கு ஒப்பவுமே உங்களால் நடத்தத் தக்கவாறு திகழும்.

(2) “தாருல் இஸ்லாம்” செய்திப் பத்திரிகை யன்று. மாத நடவடிக்கைகளின் செய்திகளில் காணப்படும் உண்மைகளை உருட்டித் திரட்டி, மெருகிட்டு விளக்கிக் காட்டும் விளக்கமாகும். செய்திகள் எந்தப் பத்திரிகை வாயிலாகவும் உங்களுக்குத் தெரிந்துவிடும். ஆனால், அச் செய்தியுள் பொதிந்து புதைந்துகிடக்கும் உண்மைகளை எடுத்துப் புடைத்துச் சலித்து மாசறக் கொடுக்கும் துலாக்கோல் இது. கட்டுக் கதைகளில் கூறப்படும் அன்னப் பறவை போல் பாலைத் தண்ணீரிலிருந்து பிரித்தெடுத்துக் கொடுக்கும் பெற்றிவாய்ந்தது இப் பத்திரிகை. வெறும் செய்திகளைப் படிப்பது மட்டும் போதாது; அவற்றை அலசிப் பார்க்க வேண்டும். அவ்வாறு அலசுதற்கு உதவி புரியவே நாம் காத்து நிற்கிறோம்.

துயி லெழுங்கள் பழைய அன்பை மீண்டும் காட்டுங்கள். உங்கள் மாசற்ற உயர் நோக்குக்குத் “தாருல் இஸ்லாம்” என்றும் உதவி புரிவான். ஆண்டவனே யாவர்க்கும் அருள் புரிவான். ஆமீன்!

– என். பீ. அப்துல் ஜப்பார்,
பொறுப்பாசிரியர்


தாருல் இஸ்லாம், அக்டோபர் 1947
பக்கம்: 2 – 4

Related Articles

Leave a Comment