“வானிருள் பெறுவதேன்? தானென்று மறைவதேன்?” என்னும் மகுடத்தையுடைய துண்டுப் பிரசுரமொன்று ‘சற்புத்தி கூறுவோ”னால் எழுதப்பெற்று,

ஈரோட்டிலிருந்து வெளிவரும் “தாஜுல் இஸ்லாம்” என்னுமோர் மாதாந்தச் சகோதரத் தமிழ்ப்பத்திரிகையின் சென்ற செப்டம்பர் சஞ்சிகை 32-வது பக்கத்தில் “மகுடஜோதி” என்று வரையப்பட்டிருக்கும் ஒரு விஷயத்துக்கு மறுப்பாய் வெளியிடப்பட்டு எமக்கொரு பிரதியும் அனுப்பப்பட்டிருக்கிறது.

இதன் உள்விஷயத்தைப் பற்றி யாமொன்றும் கூறவில்லை. ஆனால், இப்படிப்பட்ட முறைகளாலெல்லாம் பத்திரிகைகளுக்குள்ளும் பொதுமக்களுக்குள்ளும் பிளவும் பெரிய வேற்றுமையும், குரோதமும் கோபமும், மதமும் மாற்சரியமும் உண்டாகுமேயல்லாது, மனித வர்க்கத்துக்குள் ஒன்றும் ஒற்றுமை உண்டாகமாட்டாது. இந்து முஸ்லிம்களுக்குள் பிளவு உண்டாகக்கூடாதென்று பெருமகான்கள் எல்லோரும் பாடுபட்டுவரும் இக்காலத்தில் முஸ்லிம்களுள் விகற்பமுண்டாவதை யாம் விரும்பவில்லை.

அபிப்ராயபேதம் இருப்பது முஸ்லிம்களுக்கொரு நன்மையான காரியமாகுமென்று நபிகள் பிரான் கூறியிருக்கும் போதும், சிறு சிறு அபிப்ராயபேத காரணத்தினால் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டுவது உசிதமான காரியமாய்க் காணப்படவில்லை. இப்படிப்பட்ட வீண் சண்டை சச்சரவுகளுக்குச் சமாதானம் சொல்வதாயின் வீண் பகைமையே அதிகரிக்கு மென்றே, எம்மைக் குறித்துப் பலரும் பத்திரிகைகளில் திட்டுவதற்கு செவி சாய்ப்பதில்லை யென்றும், எவரேனும் சந்தேகங்கொண்டவர் எம்மிடம் வர நேர்ந்தால் அவருக்கு நேரில் சமாதானம் கூறுகிறதென்றும் அகிம்சா தர்மத்தை மேற்கொண்டு ஒழுகிவருகிறோம்.

(தாருல் இஸ்லாம், நவம்பர், 1924)

Related Articles

Leave a Comment