மெடிக்கல் ஷாப் முதலாளியாகத்தான் அவரை நான் அறிய வந்தேன். அது என் உயர்நிலைப்பள்ளி மாணவப் பருவம். திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை – பைகிராஃப்ட்ஸ் சாலை சந்திக்கும் மூலையில் அவரது ஜம் ஜம் ஃபார்மஸி இயங்கி வந்தது.

எங்கள் ஊர்ப் பகுதியைச் சேர்ந்தவர், என் தந்தையை அறிந்திருந்தவர் என்று மட்டும் அப்போது அவரைத் தெரியும். பிறகு நாங்கள் வாடகைக்கு வீடு தேட ஆரம்பித்தபோது மேலும் சற்று அதிகமாக அவரது பரிச்சயம் ஏற்பட்டது.

சைக்கிளில் வருவார். தன்மையான, இலகுவான சுபாவம். அதிராத, இரையாத பேச்சு. புன்னகைப் பூசிய முகம். இவைதாம் என் இளவயதில் அவரைப்பற்றி மனத்தில் பதிந்த பிம்பம். வாடகைக்கு வீடு பிடித்துத் தருவதிலிருந்து சொந்தமாக வாங்க விரும்புவர்களுக்கு வீடு தேடித் தருவது என்று அவரது தொழில் சேவை முன்னேறியது. சைக்களிலிருந்து TVS50-க்கு மாறினர் பத்ருத்தீன் பாய். கடையின் பெயர் இனிஷியல்போல் அவரது பெயருக்கு முன் இணைந்து, ஜம் ஜம் பத்ருத்தீன் பாய் என்பதுதான் எல்லோருக்கும் அவரது அடையாளம்.

அவரது சொந்த ஊரான அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர்கள். மலேஷியா, சிங்கப்பூர் என்று வாழ்ந்து வந்தவர்கள், இந்தியாவில் ஏதேனும் சொத்து வாங்கிப் போட நினைத்தபோது, அவர்கள் சென்னையில் முதலீடு செய்ய ஜம்ஜம் பாய் உதவ ஆரம்பித்தார். வாங்கியவர்கள் வீட்டை வாடகைக்கு விட்டு அதன் நிர்வாகத்தைக் கவனிக்க வேண்டும் அல்லவா? அச் சேவையையும் புரிய ஆரம்பித்தார் ஜம் ஜம் பாய். மெதுமெதுவே அது அபிவிருத்தி அடைந்து, ஒரு கட்டத்தில் ஃபார்மஸி மூடப்பட்டு, ஜம் ஜம் ரெண்டல் ஏஜென்ஸி அவரது முழு நேரத் தொழிலாக மாறிப்போய்விட்டது.

பலரும் தொழில் புரிகிறார்கள்தாம். உழைக்கிறார்கள்தாம். முன்னேறுகிறார்கள்தாம். ஆனால் இவர் என் மனத்தில் அழுத்தமாகப் பதிந்து போனதற்கு வேறொரு முக்கியக் காரணம் உள்ளது. நானும் தஞ்சையின் அப்பகுதியைச் சேர்ந்தவன், அவரும் நாங்களும் சென்னையில் ஒரே பேட்டையைச் சேர்ந்தவர்கள், எங்கள் குடும்பத்துடன் அவருக்கு நல்ல தொடர்பும் நட்பும் இருந்தது என்பதெல்லாவற்றையும் விட முதன்மையான காரணம் அது.

துபை, அரபு நாடுகள் என்ற பகுதியெல்லாம் மேப்பைத் தாண்டி முஸ்லிம்களுக்கு அறிமுகமாகி, விஸா, வேலை என்று அந் நாடுகளுக்கு மக்கள் செல்ல ஆரம்பித்த காலம் ஒன்று உண்டு – அது 1970-களில் என்று நினைக்கிறேன். அதற்கான ஏஜென்ட்டுகள் பெருகி அத் தொழில் அவர்களுக்கு ஏராள இலாபத்தை அளித்து வந்த காலம். சப் ஏஜென்ட்டுகளும் பெருகி ஆள்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அதற்கேற்ற கமிஷன்.

ஒருநாள் மாலை வீடு திரும்பிய என் தந்தை அன்றைய இரவு உணவின்போது, “இன்று வரும் வழியில் ஜம் ஜம் பத்ருத்தீன் பாயைப் பார்த்தேன்” என்று விவரிக்க ஆரம்பித்தார். ஜம் ஜம் பாயும் சப் ஏஜென்ட்டாகச் செயல்பட்டு பலரிடம் விஸா பணத்தைப் பெற்று ஏஜென்ட்டிடம் கொடுத்துள்ளார். அந்த மெயின் ஏஜென்ட் கம்பி நீட்டிவிட, இவரை நம்பிப் பணத்தைக் கட்டிய உறவினர்கள், நண்பர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் அனைவருக்கும் இவர் பொறுப்பாகிவிட நேர்ந்தது. தகிடுதத்தம், பொய், புரட்டு இவையெல்லாம் பரிச்சயமில்லாததால் ஜம் ஜம் பாய் ஒரு காரியம் செய்தார். சென்னை புதுப்பேட்டையில் அவருக்கு ஒரு சொந்த வீடு இருந்தது. ஏறத்தாழ ஒன்றரை இலட்ச ரூபாய்க்கு அதை விற்று தம்மிடம் பணம் கொடுத்தவர்களுக்குத் திருப்பித் தந்துவிட்டார். அந்த காலத்தில் ரூ. 60 ஆயிரத்துக்கு அரை கிரவுண்ட் வீடு எங்கள் பகுதியில் வாங்கி விட முடியும் என்றால் அந்த ஒன்றரை இலட்சத்தின் இன்றைய மதிப்பைப் புரிந்து கொள்ள முடியும்.

சிறுகச் சிறுக முன்னேறியிருந்த ஜம் ஜம் பாய்க்கு அது பலத்த அடி. அப்பட்ட நஷ்டம். என் தந்தையைச் சந்திக்க நேர்ந்தவர் இவ்விஷயத்தைக் கூறி தமது சோகத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அதைக் கேட்டு எனக்குப் பெரும் ஆச்சரியம். ஏனெனில் சப் ஏஜென்ட்டுகள் எல்லாம் தெரிந்தே ‘அல்வா’ கொடுத்துக்கொண்டிருந்த காலம் அது. ஆனால் நேர்மையும் படைத்தவன் மீதான இறையச்சமும் ஜம் ஜம் பாய் மேல் பெரும் மதிப்பை அன்று எனக்கு உருவாகிவிட்டது.

அவருடைய தொழிலுக்கு வெகுகாலம் வக்கீலாக இருந்து உதவிய அங்கிள் சையத் இஸ்மாயீல் எங்களுக்கு மிகவும் அணுக்கமான குடும்ப நண்பர். மிலிட்டரி டிஸிப்ளின் பேணுபவர். அவரிடம் ஒருமுறை மேற்சொன்ன நிகழ்வைப் பரிமாறிக்கொண்டபோது, “நூருத்தீன், ஜம் ஜம் பாய் அமீன். அல்-அமீன் வெகு நேர்மையானவர்” என்று வெகு அழுத்தமான குரலில் உரத்து ஆமோதித்தது இன்றும் பசுமையாய் நினைவிருக்கிறது.

முஸ்லிம் லீக் கட்சியுடனும் அதன் தலைவர்களுடனும் ஜம் ஜம் பாய்க்கு வெகு நெருக்கம்; ஆழமான அரசியல் ஈடுபாடு. தம் இரண்டாவது மகனுக்கு அவரிட்ட பெயர் மில்லத் இஸ்மாயீல். இன்று மில்லத்தும் அக்கட்சியின் ஒரு முக்கிய நிர்வாகியாக இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

முதுமையில் சிறுகச் சிறுக தளர்ச்சி ஏற்பட்டு பல ஆண்டுகளாய் வீட்டோடு, படுக்கையோடு ஜம்ஜம் பாயின் பொழுதுகள் கழிய ஆரம்பித்தன. ஜம் ஜம் நிறுவனத்தை மூத்த மகன் குத்புத்தீன், மில்லத், பேரன் இம்ரான் மூவரும் நிர்வகிக்க ஆரம்பித்து, அவர் கட்டியெழுப்பிய தொழிலை அதே நேர்மையுடனும் கறாருடனும் பின்பற்றுவதாகவே நம்புகிறேன். பல நூறு கணக்கில் அவர்களிடம் வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பது எனக்குத் தெரியும். ஆனால், இதுவரை எத்தகைய குறையும் என் செவிக்கு எட்டியதில்லை. அபிவிருத்தியடைந்துள்ள அவர்களது தொழில் ரகசியம் அந்த நேர்மைதான் என்று எனக்குத் தோன்றுகிறது.

ஆறு ஆண்டுகளுக்குமுன் விடுப்பில் சென்றிருந்தபோது ஜம் ஜம் பாயை அவரது வீட்டில் சந்தித்தேன். ஜப்பார் பாயின் மகன் என்று என்னை அவருக்கு நன்றாக அடையாளம் தெரிந்திருந்தது. மாறாத அதே பிரியத்துடன் பேசினார்.

அவரது நீண்ட ஆயுள் வெள்ளிக்கிழமை நவம்பர் 3ந் தேதியுடன் முடிவுக்கு வந்தது என்று தகவல் வந்தது. சோகம் தவிர்க்க இயலாமல் சூழ்ந்தது. 87 ஆண்டு கால வாழ்வை முடித்துக்கொண்டு தம் இறைவனிடம் மீண்டார் ஜம் ஜம் ஹாஜியார் பத்ருத்தீன் பாய். தவறவிடாத தொழுகை, பல ஹஜ், பற்பல உம்ரா, அவர்களது நிறுவனம் சார்பாய் நடைபெறும் தான, தர்மம் என்று நானறிந்தவரை அவரின் ஆன்மீகப் பக்கமும் சிறப்பானவையே. உள்ளும் புறமும் அனைத்தும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.

அவன் அவரது பாவமும் பிழையும் பொருத்தருள போதுமானவன். அவரது கப்ரு வாழ்க்கையையும் மறுமை வாழ்க்கையையும் அவன் சிறப்பானதாக்கி வைக்கவும் அவரது பிரிவைத் தாங்கும் பொறுமையை அவருடைய குடும்பத்தினருக்கு அவன் அருளவும் எளியவன் என்னால் ஆனது துஆ. இறைஞ்சுகிறேன்.

-நூருத்தீன்

Related Articles

Leave a Comment