“எங்கள் பள்ளியிலிருந்து இரண்டு மாணவர்களை உங்கள் பள்ளிவாசலில் சொற்பொழிவாற்ற அழைத்து வரவா?” என்று அபூஅப்துல்லாஹ் கேட்டதும் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தார் டாக்டர்.
செவித்திறன், பேச்சுத்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கான பள்ளிக்கூடத்தைச் சேர்ந்தவர் அபூஅப்துல்லாஹ். அந்தப் பள்ளியிலிருந்து, பேச இயலா இருவரை அழைத்து வந்து சொற்பொழிவு என்றால்? “உங்கள் பள்ளியிலிருந்தா?” என்று வியப்புடன் கேட்டார் டாக்டர்.
“ஆம். வரும் ஞாயிற்றுக்கிழமை அழைத்து வருகிறேன்”
அந்த வருகை, அதிகப்படியான வியப்பை அளிக்கப் போகிறது என்பதை அவர் அப்பொழுது அறியவில்லை.
டாக்டர் முஹம்மது அப்துர் ரஹ்மான் அல்-ஆரிஃபீ சவூதி அரேபியாவைச் சேர்ந்த மார்க்க அறிஞர், எழுத்தாளர். களப்பணி, பாடம், சேவை என்று சுறுசுறுப்பாய் இயங்கி வருபவர். அவரிடம்தாம் அவருடைய நண்பர் அபூஅப்துல்லாஹ் தம் மாணவர்களை அழைத்து வருவதைப் பற்றித் தெரிவித்தார்.
சொன்னபடி அடுத்த ஞாயிறு இரு மாணவர்களுடன் காரில் வந்திறங்கினார் அபூஅப்துல்லாஹ். முகமன் கூறி வரவேற்கும்போது அவர்களைக் கவனித்தார் டாக்டர். ஒரு மாணவர் செவித்திறன், பேச்சுத்திறன் இழந்திருந்தவர். மற்றொருவரோ கண் பார்வையும் இல்லாமலிருந்தார். ‘முன்னவராவது நம்மைக் காண முடியும், சைகை மொழியில் பேச முடியும். ஆனால் இவர்?’ என்று யோசனை ஓடியது டாக்டருக்கு.
தம்மைப் பார்த்துப் புன்னகைத்த முதலாம் மாணவரிடம் டாக்டர் கை குலுக்கினார். அவர் அஹ்மது என்று அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டாமவர் ஃபாயிஸ். “இவருக்கும் வரவேற்பு அளியுங்கள்” என்றார் அபூஅப்துல்லாஹ்.
முகமன் தெரிவித்த டாக்டரிடம் , “கேட்காது. கையைப் பிடித்துத் தெரிவியுங்கள்” என்றார். குலுக்கிய டாக்டரின் கையை அழுத்தமாகப் பிடித்துக் குலுக்கி தம் பதிலை சைகையால் உணர்த்தினார் ஃபாயிஸ்.
பள்ளிவாசலில் கூட்டம் நிரம்பியிருந்தது. தொழுகைக்குப் பின் நிகழ்வு ஆரம்பித்தது. அபூஅப்துல்லாஹ்வின் இருபுறமும் நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த மாணவர்களை மிகுந்த வியப்புடன் மக்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். அஹ்மதை முதலில் சொற்பொழிவாற்ற கேட்டுக்கொண்டார் டாக்டர். அவர் எப்படி உரையாற்றுவார்? துவங்கியது சைகை மொழி. நிசப்தம் பரப்பியிருந்த பார்வையாளர்களுக்கு அதை மொழிபெயர்க்க ஆரம்பித்தார் அபூஅப்துல்லாஹ்.
“பிறக்கும்போதே இந்தக் குறைபாடுகளுடன் பிறந்தவன் நான். ஜித்தா நகரில்தான் வளர்ந்தேன். என் பெற்றோருக்கு என்னிடம் அலட்சியம். என்னைக் கவனிப்பதில் அவர்களுக்கு ஆர்வம் இருந்ததில்லை. மக்கள் மஸ்ஜிதுக்குச் செல்வதையும் தொழுவதையும் கண்ட எனக்கு,, அவை ஏன் எதற்கு என்று அன்றை இளம் பருவத்தில் புரிந்ததில்லை. என் தந்தை குனிந்து, நிமிர்ந்து தொழுவதையெல்லாம் பார்த்திருக்கிறேனே தவிர அவர் ஏன் அவ்விதம் செய்கிறார் என்று தெரியவில்லை. அவர்களிடம் விசாரித்தால், யாரும் அதைப் பொருட்படுத்தி பதில் அளித்ததில்லை. அவர்களுக்கு நான் ஓர் அற்பம்.“
மொழிபெயர்ப்பாளர் முடிப்பதற்குக் காத்திருந்துவிட்டு சைகைப் பொழிவைத் தொடர்ந்தார் அஹ்மது. விரல்கள் நர்த்தனமாட, ஆட, பழைய நினைவுகள் தாக்கி அவரது கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர். அவர் என்ன சொல்கிறார் என்று புரியாமல் அமைதியாய் நெகிழ்வுடன் பார்த்துக்கொண்டிருந்தது கூட்டம். “வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட திருப்புமுனையை விவரித்தார் அஹ்மது” என்று அவற்றை மொழிபெயர்க்க ஆரம்பித்தார் அபூஅப்துல்லாஹ்.
“தெருவிலிருந்த ஓர் அந்நியர் மூலமாகத்தான் எனக்கு அல்லாஹ்வைப் பற்றியும், தொழுகையைப் பற்றியும் தெரிய வந்தது. வாஞ்சையோடு அவர்தாம் எனக்கு ஒவ்வொன்றையும் கற்றுக்கொடுத்தார். தொழ ஆரம்பித்தவுடன்தான், எனது இப் பிறவி இன்னல்களுக்கெல்லாம் எத்தகு வெகுமதி காத்திருக்கிறது, ஈமானின் சுவை என்பது என்ன, நான் அல்லாஹ்வுக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறேன் என்பதையெல்லாம் உணர்ந்தேன்”.
அஹ்மதின் வாழ்கையை மேலும் அவர் விவரித்துக்கொண்டேயிருக்க, மக்கள் அதில் கட்டுண்டு இருக்க, டாக்டரின் கவனமோ, ஃபாயிஸின் மீது குவிந்திருந்தது. ‘அஹ்மது நம்மைக் காண்கிறார். சைகை மொழி பயின்றிருக்கிறார். தகவல் தொடர்பு நடைபெறுகிறது. இவர்… ‘ என்று மீண்டும் மீண்டும் அவருக்கு அதே எண்ணம். அடுத்து ஃபாயிஸின் முறை வந்ததும் நிமிர்ந்து அமர்ந்தார் டாக்டர்.
‘இப்பொழுது நீ ஆரம்பிக்கலாம்’ என்பது போல் ஃபாயிஸின் முழங்காலைத் தமது விரல்களால் தட்டினார் அபூஅப்துல்லாஹ். ‘அட! தொடுமொழி‘
அபூஅப்துல்லாஹ் தமது கரங்களை ஃபாயிஸின் இரு கைகளுக்கு இடையே வைத்துக்கொண்டார். குறிப்பிட்ட வகையில் ஃபாயிஸ் அதைத் தொடுவதும் அவற்றின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு அபூஅப்துல்லாஹ் உரைப்பதுமாக சொற்பொழிவு தொடங்கியது. முன்னதைப் போலன்றி, இதற்கு அதிக நேரம் பிடித்தது. தவிரவும், மொழிபெயர்ப்பாளர் விவரித்து முடித்ததும் அமைதியாக அமர்ந்திருக்கும் ஃபாயிஸின் முழங்காலைத் தொட்டு சமிக்ஞை அளிக்கவேண்டும். அங்கு என்ன நடக்கிறது என்று எதுவுமே ஃபாயிஸிற்குத் தெரியாது; உணர முடியாது.
மக்கள் வியந்துபோய் ஃபாயிஸையும் மொழிபெயர்ப்பாளரையும் தொடுமொழியையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இறுதியில் ஃபாயிஸ் தம் காதுகளைப் பிடித்துக்கொண்டார்; பிறகு நாக்கைப் பிடித்தார்; பிறகு உள்ளங்கையைக் கண்களில் பதித்துக்கொண்டார்.
அவற்றை விவரித்தார் அபூஅப்துல்லாஹ். “அல்லாஹ்விடம் உங்களது பிழை பொறுக்க இறைஞ்சுங்கள், செவிகளையும் கண்களையும் தடுக்கப்பட்டவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்கிறார்”
சுப்ஹானல்லாஹ்! என்று முணுமுணுப்பும் வியப்பும் கலந்த விசும்பல் அலை மஸ்ஜிதில் பரவியது. நெகிழ்ச்சியின் உச்சத்தால் வெட்கம் உடைந்து ஆண்களின் அழுகுரல்கள். டாக்டரின் உணர்ச்சிகளோ கட்டின்றி பரந்துகொண்டிருந்தன. பார்வையற்ற, காதுகேளாத, பேச இயலாத ஃபாயிஸ் அங்கிருந்த அனைவரை விடவும் மிகமிக உசத்தியாய், பிரம்மாண்டமாய் அவருக்குத் தோன்றினார்.
‘எனக்கென்ன குறைச்சல்?’ என்று இஸ்லாத்திற்காகப் போரிடும் வீரனைப் பார்ப்பதைப் போலிருந்தது அவருக்கு. அவற்றையெல்லாம் உணராமல் ஃபாயிஸ் ஆர்வத்துடன் கைகளை ஆட்டி ஆட்டி ஏதோ சமிக்ஞை புரிந்தபடியிருக்க, அங்கிருந்தவர்களிடம் அவர் வினாக்களைத் தொடுப்பதைப் போலிருந்தது டாக்டருக்கு.
“இன்னும் எத்தனை காலத்திற்கு நீங்கள் தொழுகையை சரிவர நிறைவேற்றாமல் இருப்பீர்கள்? இன்னும் எத்தனை காலத்திற்கு விலக்கப்பட்டவைகளில் பார்வையைச் செலுத்துவீர்கள்?, இன்னும் எத்தனை காலத்திற்கு அநாகரீகத்தில் உழன்று கிடப்பீர்கள்? இன்னும் எத்தனை காலத்திற்கு தடுக்கப்பட்ட வழிகளில் பொருள் ஈட்டி உண்பீர்கள்? இன்னும் எத்தனை காலத்திற்கு இறைவனுக்கு இணைவைப்பீர்கள்? மக்களே! இன்னும் எத்தனை காலத்திற்கு? எதிரிகள் நம்மீது தொடுத்திருக்கும் போர் போதாதா? நீங்களுமா?”
விசும்பலும் அழுகையுமாய்க் கூட்டம் சலசலத்துக் கிடக்க, அவர்களைப் பார்க்காமல் ஃபாயிஸையே கவனித்துக்கொண்டிருந்தார் டாக்டர். குறைவற்ற புலன்கள், நிறைவான பொருள்கள், செல்வம், சேமிப்பு என அனைத்தும் நிறைந்திருந்தாலும் எப்போதும் கவலையும் குறையுமாய் உலவும் மக்கள் மத்தியில் புலன்களுக்கு அப்பாற்பட்ட மனிதராய்த் தெரிந்தார் அவர்.
அவர்கள் விடைபெறும்போது மக்கள் ஃபாயிஸைச் சூழ்ந்து அரவணைத்தும் கைகுலுக்கியும் தங்களது அன்பைத் தெரிவித்துக்கொண்டிருக்க, அனைவரிடமும் ஒரே இன்முகத்துடன் பாரபட்சமற்ற கனிவுடன் அவர் புழங்கிக்கொண்டிருந்தார். பாகுபாடும் பேதங்களும் பார்வையுள்ள கண்களுக்குத்தாம். அவரது பார்வை ராஜபார்வை.
(டாக்டர் முஹம்மது அப்துர் ரஹ்மான் அல்-ஆரிஃபியின் “Enjoy Your Life” எனும் நூலிலுள்ள மெய் நிகழ்வின் தழுவல்.)
சமரசம் 1-15 நவம்பர் 2017 இதழில் வெளியான கட்டுரை
அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License