“ஏ, மைமூனா! உன்மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது தெரியுமா?” என்று ஷஜருத்துர் கர்ஜித்த கடுமையான குரலைக் கேட்டு நடுநடுங்கிப் போய்விட்ட நூருத்தீன் தன்னுடைய தாயின் மேலாடையை இறுகப் பற்றிக் கொண்டு, முகத்தைப் புதைத்து ராணியை வெறிக்கப் பார்த்தான்.

“என்ன குற்றம் சுமத்தப்பட்டிருப்பினும் சரியே! நான் இதற்கெல்லாம் பயந்தவலல்லள். என் கணவர் சுல்தானாக இருக்கிறவரை என்னைப்பற்றி குற்ற விசாரணை புரிகிற உரிமை இவருக்கு மட்டுமே இருக்கிறதன்றி, உனக்கொன்றும் அதிகாரமில்லை. நீ முன்னொரு சமயம் திருடியேபோல் கைது செய்யப்பட்டுக் கொணர்ந்து இவ்விடத்திலேயே நிறுத்தப்பட்டாயென்பதும் உன்னை அப்போதிருந்த சுல்தான் ஸாலிஹ்தாம் விசாரித்தாரன்றி, சுல்தானா மூனிஸ்ஸா வாய் திறக்கவில்லையென்பதும் எனக்குத் தெரியாதென்று நீ நினைக்காதே! தீரர் ஸலாஹுத்தீனின் புத்திரிக்கே இல்லாத உரிமை, அற்பப் படைப்பாகிய, பெற்ற தாய் தந்தையின் பெயர் ஊர் தெரியாத உனக்கு மட்டும் எங்கிருந்து வந்துவிட முடியும்?” என்று மைமூனா அறைகூவினாள்.

ஷஜருத்துர்ரின் நெஞ்சு சுறுக்கென்று தைத்தது. எனினும், விட்டுக்கொடுக்கவில்லை.

“என்ன சொன்னாய்? பெரிய அரசியல் நுணுக்கமெல்லாம் தெரிந்த அசகாய தந்திரியென்று உன்னை நீ நினைத்துக்கொண்டாயோ? மூனிஸ்ஸாவுடன் என்னையும், சுல்தான் ஸலாஹுத்தீனுடனே இவரையும் ஒப்பிட்டுப் பேசுகிற உன் புத்தியைப் பார்த்து நீயேதான் மெச்சிக்கொள்ள வேண்டும்! ஸாலிஹ் சுல்தானாய் இருந்தபடியால்தான் மூனிஸ்ஸாவை எவரும் திரும்பிப் பார்த்தனர். ஆனால், நான் சுல்தானாவாய் இருப்பதால்தான் இவர் தம்மை ‘சுல்தான்’ என்று அழைத்துக்கொள்கிறார். அன்று மூனிஸ்ஸா இருந்த ஸ்தானத்தில் அவர் இருப்பதால்தான் அந்த அம்மையைப் போலே இவர் வாய்மூடி இருக்கிறார்…”

“அந்த சுல்தான் ஸாலிஹ் இருந்த இடத்தில் மீசை முளைக்காத பெட்டைச்சியாகிய நீ இருந்துகொண்டு, உன் கொள்ளிவாய்ப் பிசாசின் குணத்தைக் காட்டுகிறாய் போலும்! – ஏ, பெண்ணென்று பெயர் படைத்த பெரிய படைப்பே! வேண்டாம்; என் பொறுமையை நீ இன்னம் சோதிக்க வேண்டாம்! இப்பொழுது நான் உன்னிடம் இந்த ராஜ்ஜியத்தையோ, கஜானாவிலுள்ள சகல ஆஸ்திகளையுமோ யாசிக்க வரவில்லை. ஆனால், எனக்கே உரிய, என் சொந்தக் கணவரை உன்னிடமிருந்து நியாய பூர்வமாகப் பெறவே வந்திருக்கிறேன். உன்னுடைய கணவரை நான் கேட்கவில்லை; என் கட்டிய கணவரையே என்னிடம் மீட்பிக்கச் சொல்லுகிறேன். நான் என்ன குற்றம் செய்திருந்தாலும், என்னைத் தண்டித்துவிடு. ஆனால், ஒரு குற்றமும் இழைக்காத என் கணவரைத் தண்டிக்காதே! மனைவியை இழந்த ஸாலிஹை நீ மயக்கிய வரையில் சரிதான். ஆனால், கட்டிய பெண்டாட்டியாகிய நானும், பெற்ற பிள்ளையாகிய இவனும் உயிருடனிருக்கும்போதே என் கணவராகிய இவரை நீ மயக்கியதுதான் தவறென்கிறேன். நான் ஒன்றும் பேராசை பிடித்துப்போய் உன்னைக் கெஞ்சவில்லை; என் உரிமையையே நான் கேட்கிறேன்.

“இஸ்லாத்தில் பலதாரத் திருமணம் என்பது அனுமதிக்கப்பட்ட உரிமைதான். ஆனால், ஒரு மனைவிக்கும் மற்றொரு மனைவிக்கும் இடையே பாரபக்ஷம் பாராட்டுகிறவர்களுக்கு அவ்வனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. நீ சுல்தானாவாயிருக்கலாம்; அல்லது இன்னம் உயர்ந்த பதவியும் வகிக்கலாம். ஆனால், என் கணவரை என்னிடமிருந்து பறிப்பதற்கு உனக்கு உரிமை கிடையாது. நீ சுல்தான் ஸாலிஹுடனே வாழ்க்கை நடாத்தியபோது, நான் உன்னுடன் போட்டியிட்டு இப்படி முன்றானையை ஏந்தி நிற்கவில்லை. தூண்டில் முள்ளிலே இனிய பண்டத்தை மாட்டிப் பெரிய மீனைப் பிடிப்பவனேபோல், நீ சஷ்னிகீர் உத்தியோகத்தை என் கணவருக்குக் காட்டி உன் பைக்குள்ளே போட்டுக் கொண்டு விட்டாய். உன்னைப் போன்ற பெண்மணிகள் எத்தனை பேர் உன்னினும் பெரிய மாயக்காரிகளாகவெல்லாம் இந்த எகிப்திலேயே நடனம் புரிந்துவிட்டு, இப்போது இருக்கிற இடம் தெரியாமல் மண்ணோடு மண்ணாய் மாறிப் போய்விட்டார்கள், தெரியுமா? உனக்குப் பேராசையிருக்கலாம். அதற்காக நீ எங்களை வருத்தாதே. ஏழையழுத கண்ணீர் கூரிய வாளையொக்கும் என்பதை நீ மறவாதே!…

“நாதா! ஏன் இன்னம் பேசாமல் பதுமைபோல் மெளனம் சாதிக்கிறீர்கள்? இந்த மோஹினியின் மோஹனாஸ்திரம் உங்களை இவ்வளவு தூரத்துக்கா சுய உணர்ச்சியை இழக்கச் செய்து விட்டது? நான் ஏதோ துரோகக் குற்றம் இழைத்துவிட்டதாகவல்லவோ இவள் கற்பிக்கிறாள்! தங்களை இத்தனை நாட்களாக இவளிடம் விட்டுவிட்டு அல்லும் பகலும் அறுபது நாழிகையும் கண்ணீரும் கம்பலையுமாகவே என் ஆவியையெல்லாம் பொழிந்து தள்ளியதற்காகவா என்மீது குற்றச்சாட்டு? நாதா! நான் அழவில்லை. என்நெஞ்சம்….” என்று ஐபக்கை நோக்கியவண்ணம் ஓவென்றலறினாள் அபலை மைமூனா.

“இஃதென்ன ஒப்பாரி மேடையென்று நீ கருதிவிட்டாயோ! உன் ஜால வித்தையெல்லாம் இங்கே செல்லாது! – ஏன் மரத்தைப்போல் வாளா உட்கார்த்திருக்கிறீர்கள்? இவளைத் தாங்கள் இப்போதே தலாக்குச் சொல்லிவிடப் போகிறீர்களா, இல்லையா?” என்று ஷஜருத்துர் ஓர் அதட்டு அதட்டினார். 

தலாக் – விவாகரத்து – என்னும் வார்த்தையை ஷஜருத்துர் உச்சரித்ததை மைமூனா கேட்டவுடனே அடிவயிற்றிற் ‘சொரேர்’ என்று பெருந்திகில் புகைந்தது. “ஆ!” என்று அலறித் துடித்துக்கொண்டே நெருப்பை மிதித்தவள்போலே துள்ளினாள். எநத உரிமைக்காக வழக்காட இவள் இவ்வரண்மனைக்குள் வருவதாக எண்ணிக்கொண்டு வழிநெடுகத் திட்டமிட்டுக் கொண்டுவந்து, இவ்வளவு நேரம் ஷஜருத்துர்ரை எதிர்த்துப் பேசிவந்தாளோ, அந்த உரிமை என்னும் இல்லத்துக்குரிய வெளிவாயிற் கதவே இப்படித் தடாலென்று சார்த்தப்பட்டு விடுமென்பதை இவள் எங்கே எதிர்ப்பார்த்தாள்? தன் கணவரைத் திருப்பிப்பெற வேண்டுமென்னும் ஒரே நோக்கத்துடனே வந்தவள், தன்னையே அக் கணவர் விவாக விலக்குச் செய்யப் போகிறாரென்பதை எப்படி முற்கூட்டியுணர முடியும்? இவள் கண்ணெதிரே இருந்த திரை கிழிந்தது. முஈஜுத்தீன் இதுவரை வாய்மூடி ஊமையாய்ப் பேசாதிருப்பதையும் ­ஷஜருத்துர் பண்ணுகிற அட்டகாசங்களையும் கவனித்துவந்த இவளுக்கு எல்லாம் விவரமாய்ப் புரிந்துவிட்டன. தன்மீது ஏதோ இல்லாததையும் பொல்லாததையுமெல்லாம் எடுத்துச் சொல்லித் தன்னைத் தலாக்குச் சொல்லி விட்டுவிடக் கூடிய அளவுக்குக்கூட ஐபக்கை ஆட்டிப் படைத்து வைத்திருக்கிறாள் ஷஜருத்துர் என்பதை மைமூனா ஓர்ந்துகொண்டு விட்டாள்.ஓர்ந்தவுடனே கைகால்கள் நடுநடுங்கின. இடுப்புக்கு மேலேயிருந்த சுமையைத் தாளமுடியாமல் இவளுடைய கால்கள் தாமே வளைந்து மண்டியிட்டு விட்டன. உடம்பு போனாலம் போகட்டும்; விரல் தப்பினால் போதுமென்கிற உணர்ச்சி வந்துவிட்டது மைமூனாவுக்கு.

“யா மலிக்கா! யான் தங்களுக்கு என்ன குற்றம் இழைத்திருப்பினும், என்னை அந்த ஆண்டவனுக்காக மன்னித்து விடுங்கள்! அடியேனை இந்த மாதிரியான சித்திரவதைக்கு ஆளாக்கி விடாதீர்கள்! என் அறியாமையாலும் சின்னஞ் சிறிய புத்தியாலும் முன்பின் யோசியாமலும் தங்களை மிகவும் அவமரியாதையாகப் பேசிவிட்டேன். என் கணவரை இத்தனை வருஷங்களாகப் பிரிந்திருந்த வருத்தத்தால் ஏதேதோ உளறி விட்டேன். என் கணவரைத் தாங்களே எடுத்துக் கொள்ளுங்கள்! எனக்குத் தலாக் மட்டும் கொடுக்கச் சொல்லாதீர்கள். என் உயிர் உள்ள மட்டும் தங்களிடமே தொண்டூழியம் புரிந்து கொண்டு, தாங்கள் காலாலிடுகிற வேலையை யான் என் தலையாலேயே செய்து முடிக்கிறேன். என்னை மணந்தவர் உயிருடனிருக்கிறார் என்னும் அந்த ஒரே ஆறுதல் மட்டும்தான் என் உயிர் போகாமல் இத்தனை நாட்களாகப் பாதுகாத்து வந்தது. தாங்கள் அந்த ஒரே ஆறுதல்மீதும் மண்ணையள்ளிப் போட்டுவிடாதீர்கள்! என்னை என்னவிதமான தண்டனைக்கு வேண்டுமானாலும் உட்படுத்துங்கள்; யான் புன்முறுவலுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், உலகினர் பார்த்து என்னைப் பரிசிக்கும்படியான ‘தலாக் வாங்கியவள்’ என்னும் இடிச்சொல்லுக்கு என்னை இரையாக்கி விடாதீர்கள். தாங்கள் இவ்வளவு பெரிய பாணத்தை என்மீது பிரயோகிக்கும்படியான அவ்வளவு பெரிய குற்றம் என்ன யான் செய்துவிட்டேன்? யான் தங்களுக்கு அப்படியே என்னையறியாமல் ஏதும் தவறிழைத்திருப்பின், அந்த அல்லாஹ் ரசூலுக்காக…”

“போதும், போதும்! உன் நடிப்பு மிகவும் அபாரமாயிருக்கிறது. தெருக் கூத்துக்களில் நடிப்பதற்கு ஏற்ற பாத்திரம் கிடைக்காமல் யார் யாரோ உன்னைத் தேடிக்கொண்டு திரிகிறார்களாம். அடுத்த முறை அப்படி அவர்கள் தேடினால், உன் பெயரை நாம் சிபாரிஷ் செயகிறோம். அவர்கள் நடிக்கச் சொல்லும்போது நீ நடிக்கலாம்! இப்போது உன்னுடைய நடிப்புத் திறனுக்கு நற்சாட்சி வழங்குவதற்காக நாம் இந்த அதிகாலையில் இங்கு வந்து குந்தவில்லை. – நாதா! நான் நேற்றிரவு கூறினேனே, நீங்கள் நம்பவில்லையல்லவா? பார்த்தீர்களா, இவளுடைய மார்ஜாலத் தந்திர வித்தையை! இதுகூட அந்த வித்தையின் ஒருபாடமே; கெஞ்சினால் மிஞ்ச வேண்டியது; மிஞ்சினால் கெஞ்ச வேண்டியது! சரி, சரி! நேரமாகிறது. இவளுடைய படலத்தைச் சீக்கிரம் முடியுங்கள்!” என்று ஷஜருத்துர் வச்சிரம் போன்ற நெஞ்சுறுதியுடனே வலிய நவிலலுற்றார்.

“நாதா! வேண்டாம்! வேண்டாம்! யானொன்றும் சோரம் போய்விடவில்லை; அல்லது தங்களுக்கெதிராகச் சூழ்ச்சி செய்துவிடவில்லை; அல்லது தங்களை திரஸ்கரித்து ஓடிப் போய்விட வில்லை! என்னைத் தாங்கள் தலாக் சொல்லிவிடுவதால் தாங்கள் என்ன லாபத்தைப் பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள்? ஏற்கெனவே கட்டிய கணவனிருந்தும், இல்லாதவளாகத்தானே யான் இருந்து வருகிறேன்? என்னைத் தாங்கள் விவாக விலக்குச் செய்துவிடுவதால்மட்டும் என்ன பெரிய இலாபத்தைப் பெற்றுக்கொண்டு விடப் போகிறீர்கள்? அல்லது நான்தான் என்ன பெரிய நஷ்டத்தை அடைந்துவிடப்போகிறேன்? என்னரும் நாதா! தாங்கள் என்னை வீணேதள்ளிவிடாதீர்கள். இங்கேயே வேண்டுமானாலும் இருந்து கொண்டு, நான் தங்களுக்குக் கீழே ஓரிழிய அடிமையாகவாவது குற்றேவல் புரிகிறேன். என்னைத் தாங்கள் தலாக்குச் சொல்லிவிடுவதால் நான் வேறு யாரையாவதுபோய் மறுமணம் புரிந்துக்கொள்ளப் போகிறேனா? அல்லது தாங்கள் எனக்குத் திருமணத்தன்று கொடுத்த மஹர்த் தொகையை வைத்துக்கொண்டு பெரிய சுல்தானாவாக உயர்ந்துவிடப் போகிறேனா?

“நாதா! ஏன் ஊமையாய் உட்கார்ந்திருக்கிறீர்கள்? தாங்கள் என்னை விவாக பந்தத்தினின்று நீக்க வேண்டிய அவ்வளவு பெரிய பெருந்தவறு என்ன யான் இழைத்து விட்டேன்? தாங்கள் என்ன தூங்குகிறீர்களா? அல்லது விழித்திருந்தேதான் எல்லாவற்றையும் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறீர்களா?” என்று மைமூனா தெளிவாகவும் தேம்பாமலும் செறுமாமலும் உள்ளுணர்ச்சியோடு உறுத்திப் பேசினாள்.

உத்தேசம் ஒருமணி நேரத்துக்கு மேலாகவே பிணம் போலக் குந்தியிருந்த முஈஜுத்தீன் இப்பொழுதும் வாய் திறக்கவேயில்லை. புதிதாக வீடு கட்டினால், போவார் வருவாரின் கண்திருஷ்டி விழாமலிருப்பதற்காகப் பொம்மை ஒன்றை வெளியே கட்டித் தொங்கவிடுவார்களே, அந்தத் திருஷ்டி பரிகாரப் “புல்லுரு” மாதிரி திருட்டுவிழி விழித்துக்கொண்டு அந்த சுல்தான் வெறுமனே அமர்ந்திருந்தார். அவர் பேச வேண்டியதுதான் என்ன இருந்தது? அல்லது என்னதான் பேசுவார்? எதைத்தான் பேச முடியும்?

“ஏ, மைமூனா! நீ உன்னுடைய வயோதிகத் தந்தையின் சூழ்ச்சிகளைப் பயன்படுத்திக்கொண்டு, உன்னுடைய மைந்தனே இம் மிஸ்ரின் பட்டத்துக்குரிய இளவரசனென்னும் மனப்பால் குடித்துக்கொண்டும், எமக்கும் எம் நாட்டின் சுபிக்ஷ­த்துக்கும் எதிராகச் சதியாலோசனை புரிகிறாயென்று எமக்கு நம்பிக்கையான தகவல் கிடைத்திருக்கிறது. ஆகவே…” என்று ஷஜருத்துர் அதிகாரமிக்க ஆணவத்துடன் மந்தண தொனியில் பயங்கரமான குரலுடன் பேசும்போதே மைமூனா இடைமறித்தாள்:

“பொய், பொய்! முழுப்பொய்! முற்றிலும் பொய்!”

“ஆகவே, உன் குற்றத்துக்கேற்ற தண்டனையாகிய தலாக்கை வழங்க எம் சுல்தான் முடிவு செய்திருக்கிறார்,” என்று ஷஜருத்துர் மைமூனா இடைமறித்து அலறியதைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல், தொடர்ந்து பேசி முடித்தார்.

“என் ஆருயிர் நாதா! இந்த ஏழையேன் என்ன பாபம் செய்தேன்? ஏன் இப்படிக் கல்லாய்ச் சமைந்து போனீர்கள்? நான் இத்தனை நாட்களாகப் பட்ட….” அதற்குமேல் மைமூனாவால் பேச முடியவில்லை. தொண்டை விக்கிக் கொண்டு விட்டது பெரிய மதகிலுள்ள சிறிய துளைவழியே குபுகுபுவென்று பொங்கிப் பாய்ந்து வருகிற வெள்ளமேபோல் கரை யுந்தி வந்தது அவளுடைய சோகம். பாபம்!

ஷஜருத்துர் இச் சந்தர்ப்பத்திலே மிகக்கொடிய ஆத்திரத்துடனே முஈஜுத்தீனைத் திரும்பி முறைத்துப் பார்த்தார். அப்பார்வை வந்த வேகத்தில் அந்த சுல்தான் தம்மையறியாமலே திடுக்கிட்டெழுந்தார். குனிந்த தலையை நிமிர்த்தாமல், சேவற் கோழி தீனியைக் கொத்தித்தின்னும் வேகத்தில், “தலாக்! இரு தலாக்! முத்தலாக்!” என்று ஒரே மூச்சில் முணுமுணுத்துவிட்டு, வேகமாய் எழுந்து ஓடி மறைந்துவிட்டார். அவர் தலாக்குக் கொடுத்த வேகத்தில், இரு மனைவியருள் யாருக்குத் தலாக்குக் கொடுத்தார் என்பதைக்கூடச் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட சுத்த உதவாக்கறையான உளுத்துப்போன தலாக் அதுவாகும்.

என்னவாய் இருந்தாலென்ன? நபிபெருமான் (ஸல்) கட்டளைக்கு அது முற்றும் மாறறமாய் இருந்தால்தானென்ன? ஷஜருத்துர் எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்து முடிந்தன. சாவி கொடுக்கப்பட்ட பொம்மை மாதிரி கொஞ்சங்கூட உணர்ச்சியே இல்லாமல் முஈஜுத்தீன் தலாக், தலாக், தலாக் என்று கத்திவிட்டுப் போனபோதினும், தலாக்குத்தானே என்பர் இற்றை நாள் மார்க்க நிபுணர் சிலர். மண்டியிட்டு நின்றுகொண்டிருந்த மைமூனா இப்பொழுது மயக்கமுற்று வீழ்ந்துவிட்டாள். பக்கத்தில் நின்றுக்கொண்டிருந்த சிறுவனும், ஒன்றும் புரிந்துகொள்ளக்கூடிய அறிவோ வயதோ நிரம்பப்பெறாதவனாய் இருந்தும், தன்னையறியாமலே தேம்பி தேம்பி அழுதான். துக்கமென்பது கொடிய தொற்று நோயன்றோ?

“ஆண்டவன் அனுமதித்திருக்கிற – (ஹலாலாக்கி இருக்கிற) எல்லாக் காரியங்களுள்ளும் மிகவும் வெறுக்கத்தக்கதாய் இருப்பது விவாக விமோசனமென்னும் தலாக்கேயாகும்!” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருவாய் மலர்ந்தருளியுளளார்கள் என்பது மெய்யான ஹதீதாயே விளங்கி வருகிறது. என்னெனின், கருத்தொருமித்துக் காதலுடன் கணவன்-மனைவி இல்லறமென்னும் நல்லற வாழ்க்கை நடாத்தி வரும்போது, அவர்களுக்கிடையில் நிரந்தரப் பிளவேற்படும்படியான கொடிய மனஸ்தாபம் ஏற்படவே கூடாதென்பதுதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அந்தரங்கக் கருத்தாக இருந்து வந்திருக்கிறது. அப்படியிருக்க, இப்பொழுது ஷஜருத்துர் ராணியார் மைமூனாவுக்கு வலிய வாங்கிக்கொடுத்த மாபெரிய அக்கிரமமான அனாவசியத் தலாக்கை நாம் என்னென்று கூறுவது? ஷஜருத்துர் எத்துணை அருமையான சுல்தானாவென்று புகழப்பட்ட போதினும், அவ் வம்மையார் மைமூனாவைத் தம் சுயநலத்துக்காகவென்று அநியாயமாய்ப் பலி கொடுத்த பெரும் பாபமிருக்கிறதே, அதை எவரும் மன்னிக்கவும் முடியாது; அல்லது மறக்கவும் இயலாது. ஹலாலாக்கப்பட்ட தலாக்கை ஹராமான வழியில் பிரயோகிக்க ஷஜருத்துர் ஐபக்கைத் தூண்டிவிட்ட பெருங் குற்றத்தின் காரணத்தாலேதான் இனி எதிர்காலத்தில் நிகழப் போகும் அத்தனை தண்டனைக்கும் பரிதாபகரமாய்ப் பலியாக வேண்டிய நிர்ப்பந்தத்துள் வீழ்ந்து விட்டார். அரசன் அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்.

ஷஜருத்துர்ரின் வின்னியாசமிக்க விசித்திர வாழ்க்கைச் சரித்திரத்தில் தோன்றிய பற்பலவிதமான அதிசய கட்டங்களுள், இன்று அரண்மனையின் அந்தப்புரத்தில் நடந்த அற்புதக் காட்சியும் ஒன்றாகவே இருந்துவருகிறது.

ஷஜருத்துர்ரை மட்டும் நாம் குறைகூறிப் பயனில்லை. ஆனால், அவ்வம்மையை மணந்துக்கொண்டட ஐபக்கைத்தான் நாம் கண்டிக்கக் கடமைப்பட்டுள்ளோம். என்னெனின், ஒரு மனிதன் எவ்வளவு தூரத்துக்குத் தன்னுடைய மனைவியின் பேச்சையும் புத்திமதியையும் நியாயமாகக் கேட்கலாமோ, அவ்வளவேதான் கேட்கவேண்டுமேயன்றி, சோளக் கொல்லையிலும் கத்தரித் தோட்டத்திலும் பறவை மிரட்டலுக்காகக் கட்டிவிடப்பட்டிருக்கும் “புல்லுருப்” பொம்மைபோல், அறிவை அடகு வைத்துவிட்ட வெறும் பாவையாகச் சிக்கிச் சுழல்வது இஸ்லாமிய தர்மமன்று. முஈஜுத்தீன்மட்டும் சற்று நேர்மையான தைரிய குணம் படைத்தவராயிருப்பின், ஒரு பாபமுமறியாத அபலை மைமூனாவைக் கடைசிவரை தலாக் சொல்லியிருக்கமாட்டார். அப்படி அவரால் ஷஜருத்துரரைத் திருத்த முடியாமற் போய் விட்டமைக்காக அவர் மரியாதையாய்த் தம் பதவியைத் துறந்து, ஷஜரை விவாக விலக்குச் செய்துவிட்டு, மைமூனாவுடன் வெளியேறியிருத்தல் வேண்டும். அல்லது இரு மனைவிகளையும் சமமாய் நடத்தி ஒழங்கான, பாரபக்ஷமில்லாத உத்தமக் கணவராகக் குர்ஆனிலே கூறியாங்கு ஒழுகியிருத்தல் வேண்டும். எல்லாவற்றையம் காற்றில் பறக்கவிட்டு, ஷஜருத்துர் பீறியெறிகிற பீற்றற் றுணியேபோல் முஈஜுத்தீன் கேவலமாய் இழிந்துவிட்டது எவர் குற்றம்? எருது இளைத்துவிட்டால், பசு பத்தினித்தனந்தான் கொண்டாடுமன்றோ?

குற்றம் யாருடையது, பாபம் எவரைச் சாரும் என்பனவற்றை நாம் ஈண்டு ஆராய்ந்து பயனில்லை. கணவன் உயிருடனிருக்கையிலே, மைமூனா கணவனையிழந்த “கைம்பெண்”ணாக, அல்ல, தலாக்கு வாங்கிய வாய்ப்புகேடான மாதாக மாறிவிட்டாள். விதிசெய்த சதிதான் இது.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment