மரணத் தருவாயில் இருந்த கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அடுத்த கலீஃபாவை நியமிக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. சற்று யோசித்த உமர் (ரலி), ஆள்வதற்கு அனைத்துத் தகுதிகளும் நிரம்பப்பெற்ற ஆறு
தோழர்கள் அடங்கிய குழுவொன்றை நியமித்தார். “உங்களுக்குள் நீங்கள் ஆலோசனை புரிந்து கொள்ளுங்கள். உங்களுள் ஒருவரை கலீஃபாவாகத் தேர்ந்தெடுங்கள். அப்படித் தேர்ந்தெடுக்காமல் நான்காவது நாள் விடியக் கூடாது” என்று கண்டிப்பாகத் தெரிவித்துவிட்டார்.
மூன்று நாள்களுக்குள் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டே ஆக வேண்டும் என்பது கட்டளை. தவிர அது தொடர்பாக வேறு சில கட்டளைகள், கண்காணிப்பாளர்கள் என்றெல்லாம் அவர் நியமித்தது சற்று விரிவான நிகழ்வுகள். இங்கு அதைத் தவிர்த்துவிடுவோம். அவ்விதம் அவர் நியமித்த குழுவில் உள்ளடங்கிய ஆறு தோழர்கள் இவர்கள்தாம் – அலீ இப்னு அபீதாலிப், உஸ்மான் இப்னு அஃப்பான், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஸஅத் இப்னு அபீவக்காஸ், ஸுபைர் இப்னுல் அவ்வாம், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹும்).
அந்த அறுவர் குழு பேசி, ஆலோசனை புரிந்து, கருத்துகள் பரிமாறி இறுதியாக உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி) கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களும் அவருக்குப் பிரமாணம் அளித்தனர். பின்பு, அவர் மக்களிடம் உரையாற்றினார்.
“எனக்கு இந்தப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. நான் அதை ஏற்றுக்கொண்டேன். கவனிக்கவும், நான் பின்பற்றுபவனேயன்றி புதிதாகக் கண்டுபிடித்து புகுத்துபவனல்லன். அல்லாஹ்வின் வேதத்தையும் அவனுடைய தூதரின் வழிமுறையையும் பின்பற்றுவேன். அது மட்டுமன்றி, மூன்று விஷயங்களில் நான் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன். எனக்கு முன் வந்தவர்களின் நடைமுறையில் எதையெல்லாம் நீங்கள் ஒப்புக்கொண்டு அவற்றை உங்களுடைய வழியாக ஆக்கிக்கொண்டீர்களோ அவற்றை நான் பின்பற்றுவேன். நல்லோர் பகிரங்கமாகப் பின்பற்றும் நல்வழியைப் பின்பற்றுவேன். சட்டப்படி அளிக்கப்படும் தண்டனைகளைத் தவிர வேறு வகையில் தண்டனை அளிக்கமாட்டேன்.
இவ்வுலக வாழ்வு செல்வ வளமானது, கவர்ச்சிகரமானது. பலர் அதன்பால் சாய்ந்து விடுகின்றனர். ஆனால், இவ்வுலக வாழ்வின்மீது சார்ந்திருக்க வேண்டாம். அது நம்பிக்கைக்கு உரியதன்று. நாம் அதை விட்டு விலகும் வரை அது நம்மை விட்டு விலகாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.”
தோழர்கள் நேர்மையாளர்களாகவும் தூய்மையானவர்களாகவும் இருந்ததால் சொல்ல வரும் விஷயத்தைச் சுற்றி வளைத்து, வார்த்தைகளால் தோரணம் கட்டி, பளபளப்பாக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. சொன்னதைச் செய்வோம், செய்வதையே சொல்வோம் என்பது அவர்களுக்கு எழுதப்படாத விதி. அதனால் சுருக்கமாகத் தெளிவாக இருந்தது கலீஃபா உஸ்மானின் உரை.
ஆட்சியின் அடிப்படை என்ன? குர்ஆனும் ஸுன்னாவும். அதனால் தாமொன்றும் புதிதாக எதையும் கண்டுபிடித்துப் புகுத்தப் போவதில்லை, குர்ஆனையும் ஸுன்னாவையும் பின்பற்றுவேன் என்பது முதல் வாக்குறுதி. தமக்கு முன் இரு கலீஃபாக்கள் நடைமுறைப்படுத்தி மக்களின் அங்கீகாரம் பெற்ற நற்செயல்களும் முன்னுதாரனங்களும் பின்பற்றப்படும் என்பது அடுத்தது.
தம் இஷ்டத்திற்கு மக்களை இழுத்தடிக்காமல், தண்டிக்காமல், குற்றங்களுக்கு மட்டுமே இஸ்லாமிய சட்டப்படி தண்டனையும் கடுமையான போக்கும். மற்றபடி மக்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என்பதை எச்சரிக்கையுடன் உறுதிப்படுத்தியது மூன்றாவது. அதைத் தொடர்ந்து மக்களுக்கு உபதேசம் புரிந்தது அவரது உரை.
உலக விஷயங்களில் மூழ்கி அதன் கவர்ச்சியில் வசீகரிக்கப்படுவதைக் குறித்து எச்சரித்தார் கலீஃபா உஸ்மான் (ரலி). ஏனெனில் அதுதானே போட்டி, பொறாமை, வெறுப்பு ஆகியனவற்றுக்கு மக்களை இழுத்துச் செல்கிறது. பிரிவுகளுக்கும் வேறுபாடுகளுக்கும் வழி ஏற்படுத்துகிறது. மறுமை வாழ்விற்கு பெரும் கேடாக அமைந்துவிடுகிறது. எனவே அது குறித்து அவருக்குப் பெரும் அச்சம். அதுவே அவரது உரையில் வெளிப்பட்டது.
இன்றும் அந்த எச்சரிக்கை நமக்குப் பொருந்தவில்லை?
பிறிதொரு சந்தர்ப்பத்தில் கலீஃபா உஸ்மான் (ரலி) மக்களுக்கு ஆற்றிய உரையை ஹஸனுல் பஸரீ ரஹிமஹுல்லாஹ் அறிவித்துள்ளார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். துதித்தார்கள். பிறகு, “மக்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அதுவே பெரும் ஆதாயம். யாரெல்லாம் தங்களைக் கண்காணித்து மரணத்திற்குப் பின் வரப்போவதை எண்ணி உழைக்கிறார்களோ, அவர்களே கூர்மதியாளர்கள். தங்களது மண்ணறையை பிரகாசப்படுத்த அவர்கள் அல்லாஹ்விடமிருந்து ஒளியை ஈட்டுகிறார்கள். பார்வை அருளப்பெற்ற பின் அல்லாஹ் தங்களைப் பார்வையற்றவர்களாக எழுப்பவுதைப் பற்றி அனைவரும் அஞ்சிக்கொள்ளட்டும். அறிவாளிகளுக்கு சுருக்கமான வார்த்தைகள் போதுமானவை. ஆனால் செவிடர்களால் அவற்றைக் கிரகிக்க முடியாது. கவனிக்கவும், யாரெல்லாம் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறார்களோ, அவர்கள் வேறு எதற்கும் அஞ்சத் தேவையில்லை. ஆனால், அல்லாஹ் அவர்களைக் கைவிட்டால் வேறு யார் மீது அவர்கள் நம்பிக்கை வைக்க முடியும்?”
இதுவும் சுருக்கமான உபதேசம்தான். ஆனால் எவ்வளவு ஆழம்! நம் செவி அதை உள்வாங்குவதைப் பொறுத்து இருக்கிறது நம் அறிவின் தரம்.
-நூருத்தீன்
வெளியீடு: அல்ஹஸனாத் நவம்பர் 2017
அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License